Tuesday, August 4, 2020

அன்பின் துளி


அன்பின் துளி! 

            இரண்டு வாரங்களுக்கு முன்பு (15.07.2020) , வளநாட்டில் இருந்து மணப்பாறைக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, மணப்பாறையில் இருக்கும் ஒரு கொரியர் அலுவலகத்தில் இருந்து, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, பேசத் தொடங்கினேன். மறுமுனையில் பேசிய தம்பி, முதலில் எனது பெயரையும் முகவரியையும் உறுதி செய்து கொண்டார். பிறகு எனக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது என்ற தகவலையும் சொன்னார். ஆனால்,   கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருப்பதால், வீட்டிற்கு வந்து பார்சலைத் தர முடியாது என்றும், அலுவலகத்திற்கு வந்து, நேரில்  பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
              எனக்கு சற்றே குழப்பமாக இருந்தது. உடனே, ‘அது என்ன பார்சல் தம்பி? எந்த முகவரியில் இருந்து வந்திருக்கிறது?’ என்று கேட்டேன். ‘புத்தகம் மாதிரி இருக்குது சார்,  ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்திருக்கு’ என்று அந்தத் தம்பி பதில் சொன்னார்.  நன்றி சொல்லி, அலை பேசியைத் துண்டித்த பிறகு, எனக்கு மனம் நிலை கொள்ளவில்லை. இந்தக் காலத்தில், புத்தகம் வேண்டி, எந்தப் பதிப்பகத்திற்கும் நான் பணம் அனுப்பவில்லை. அதுவும் ஒட்டன்சத்திரத்தில் பதிப்பகம் ஏதும் இருப்பதாகவும் நான் அறிந்திருக்கவில்லை. அப்படி என்றால், இது என்ன புத்தகமாக இருக்கும், யார் இதை அனுப்பியிருப்பார்கள் என்ற சிந்தனையிலேயே எனது வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வீட்டிற்குக் கூட போகாமல், நேரே கொரியர் அலுவலகம் சென்றேன்.  கையெழுத்து போட்டுவிட்டு, பார்சலை வாங்கிக் கொண்டேன்.
              பார்சல் அனுப்பப்பட்ட முகவரியைப் பார்த்தேன். ஒட்டன்சத்திரம் கண்ணன் என்று இருந்தது.  ஒரு கணம் மகிழ்ச்சியில் உறைந்து நின்றேன். கொரியர் அலுவலக வாசலிலேயே பார்சலைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே இரண்டு புத்தகங்கள் இருந்தன. எனதுள்ளம் பேரானந்தத்தில் நிரம்பி வழிந்தது. என்னையும் மீறி, மகிழ்ச்சியில் நானே புன்னகைத்துக் கொண்டேன். கைகளைச் சுத்தம் செய்து கொண்ட பிறகு, புத்தகங்களை வண்டியின் ’முன் உறைக்குள்’ வைத்தேன். அலைபேசியை எடுக்க கைகள் எத்தனித்த போது, மிகச் சரியாக அலைபேசி அடித்தது.  ஆம், புத்தகப் பார்சலை அனுப்பிய ஒட்டன்சத்திரம் கண்ணன் தான் பேசினார். எனக்கு உறவினர் அவர். ஆனால், இத்தனை காலம் வரை, நான் அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததில்லை.  முகநூலில் மட்டும் நெருக்கத்தில் இருந்தோம்.
                 ‘நல்லா இருக்கீங்களா? குழந்தைகள் நலமா?’ எனக் கேட்டு விட்டு, ‘ஒரு பார்சல் கொரியர்ல அனுப்பி இருக்கேன்..’ எனச் சொன்ன போது, நான் குறுக்கிட்டு, ‘நான் பார்சலை வாங்கிவிட்டேன், எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, என்ன சொல்றது எனத் தெரியல ’ என்று சொல்லி எனது ஆனந்தத்தை  அவருக்குக் கடத்த முயற்சித்தேன். அவர் நிதானமாக அழகாகப் பேசினார்.
              கடந்த ஏப்ரல் மாதம், எஸ்.எஸ்.கரையாளர் எழுதிய, ’1941 – திருச்சி சிறை’ என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். (http://ssvalanadu.blogspot.com/2020/04/1941.html). மிக முக்கியமான கட்டுரை அது என்று நண்பர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். அப்போது, கண்ணன் அவர்கள், ’இதே பாணியிலான நூல் இன்னொன்று இருக்கிறது. சி.ஏ.பாலன் என்பவர் எழுதிய ‘தூக்கு மர நிழலில்’  என்ற அந்த புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னவுடன், ’அதனை என்.சி.பி.எச் பதிப்பகத்தில் தான் வாங்கினேன், நீங்களும் அவசியம் படியுங்கள், என்னை உலுக்கிய புத்தகம் அது’ என்று சொல்லி இருந்தார். இவற்றை எல்லாம், முகநூல் வழியாவே பரிமாறிக் கொண்டோம், பேசிக் கொண்டதில்லை. உண்மையில், அந்தத் தகவல்களைக் கூட, நான் மறந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
              ’கடந்த ஒரு மாதமாகவே நான்  அந்தப் புத்தகத்தை உங்களுக்காக  தேடிக் கொண்டுதான் இருந்தேன். கிடைக்கவே இல்லை. கடந்த வாரம்,  நூலுலகம் என்ற இணைய வழி விற்பனைத் தளத்தில் ஒரே ஒரு பிரதி மட்டும் இருந்தது. உடனே அதனை ஆர்டர் செய்து விட்டேன். முதலில், உங்கள் முகவரிக்கே அதனை நேரடியாக அனுப்ப எண்ணினேன். ஆனால், புத்தகத்தை  மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டதால்,  ஒட்டன் சத்திரத்திற்கே அதனைத் தருவித்தேன். ஒரே நாளில் அதனை மீண்டும் வாசித்து முடித்தேன்.  நீங்கள் இதனை வாசித்து, நூல் அறிமுகக் குறிப்பு ஒன்று எழுதுங்கள். கூடவே, எஸ்.ரா எழுதிய, ’பெயரற்ற நட்சத்திரங்கள்’ என்ற நூலையும் அனுப்பியிருக்கிறேன்’ என்று சொன்னார். தெளிந்த நீரோடை போல அவரது பேச்சு இருந்தது.
                நான் நெகிழ்ந்து நின்றேன். முன்பெல்லாம், எனது பிறந்த நாளின்  போது, சில பல புத்தகங்கள் பரிசாகக் கிடைக்கும். நானும், ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இன்று என்னென்ன புத்தகங்கள் பரிசாக வரும், யார் யார் தரப் போகிறார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.  ஆனால்,  கால நதியில் - வயதுகள்  நுரையாய்க் கடந்து விட, புத்தகங்களின் வரத்து குறைந்து விடவில்லை - சுத்தமாக நின்று விட்டது. மனதிற்குள் எதிர்பார்ப்பும் தோன்றுவதில்லை. புத்தகங்களைத் தொடர்ச்சியாக நான் வாங்கிக் கொண்டிருந்தாலும், அன்பால் பிறர்வழியாக வரும் நூல்களுக்கு எப்போதும் ஒரு கூடுதல் ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.  
                 புத்தகங்கள் வாங்குவதையே ’ஒரு மாதிரியாகப்’ பார்க்கும் சூழலில், புத்தகத்தை வாங்கி, அதனை இன்னொருவருக்கு வாசிக்க அனுப்பும் உறவினை என்ன பெயர் சொல்லி அழைப்பது?  அன்பு பெருகி நிற்கும் போது, எந்தப் பெயரிலும் அவர்களை அழைக்கலாம் தானே!  நான்,  ’அன்பு நிறை கண்ணன்’ என்றே அவரை உள்ளத்தில் பதிந்து கொள்கிறேன்.
            மறுநாளும் அலைபேசியில் அழைத்து, ‘வாசித்து விட்டீர்களா? புத்தகம் எப்படி இருந்தது?’ என நீண்ட நேரம் உரையாடினார். ஆனந்த விகடன், நடமாடும் புத்தக விற்பனை நிலையங்கள், வார, மாத  இதழ்களில் வெளிவரும் தொடர் கட்டுரைகள் என பல தளங்களில் அவரது உரையாடல் தொடர்ந்தது.   வாசிப்பின் மீது, தீராத காதல் உள்ள மனிதர்களால் மட்டும் தான் இது சாத்தியம்.  பார்சலில் அவர் அனுப்பியது புத்தகங்களை மட்டும் அல்ல, அன்பையும் உற்சாகத்தையும் சேர்த்தே உறையிட்டிருந்தார்.  முற்றடைப்பு காலம் என்றாலும், அன்பை அடைக்குந்தாழ் எங்கும், எப்போதும் இருக்க முடியாது அல்லவா? 
                நண்பர்களே, நான் இங்கே இருக்கிறேன், அவரோ ஒட்டன்சத்திரத்தில் இருக்கிறார், நானும் அவரும் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையில் மிகச் சொற்பமான முறைகளே சந்தித்து இருக்கிறோம். ஆயினும், அவர் காட்டும் அன்புக்கு அடிப்படைக் காரணம், ’புத்தகங்கள்’ அன்றி, வேறு  என்னவாக இருக்கக் கூடும்? ஆம், நானும் அவரும் ’புத்தகங்களின் ராஜ்ஜியத்தில்’ அருகருகே  ஒன்றாய் வகிக்கும் இரண்டு குடிமகன்கள்.              
            மனிதர்களை எந்த வகையிலும் பொதுமைப் படுத்தி விட முடியாது. மானுடத்தின் மீது சலிப்பும் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில்,     அவநம்பிக்கையும் மனத் தவிப்பும் வாழ்வினைப் பாலையாக்கும் போதெல்லாம், அன்பின் துளி -  இத்தகைய மனிதர்களின் வழியே, எங்கிருந்தோ வந்து, நமது வாழ்வினை துளிர்விடச் செய்கிறது. 
          
        


         
             

4 comments:

  1. "புத்தகங்கள் வாங்குவதையே ’ஒரு மாதிரியாகப்’ பார்க்கும் சூழலில்"
    மிக அருமையாகச் சொன்னீர்கள் அண்ணா.
    முன்பெல்லாம் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்றால் வித விதமான நூல்களை, சில நூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் தேடிக் கண்டுபிடித்து வாங்கி அன்பளிப்பேன்.
    இப்போதெல்லாம் 'மொய்' தானே வாழ்க்கை என்றாகிவிட்டது. கூடவே நூல்களை அன்பளிக்கவே தயக்கமாக உள்ளது. ஏனெனில் அதைப் பிரித்துப் படிப்பார்களா என்ற தயக்கமும் எழுகிறது.

    உமக்கும் உம் உறவுக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்... 💐

    ReplyDelete
  2. புத்தக வாசிப்பு இருவரையும் இணைத்திருக்கிறது ஐயா.
    தங்களின் பதிவு கண்டு, எனக்கும் அந்த இரு நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
    அன்பின் துளி வாழ்வை மேம்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா..அன்பு தான் வாழ்வை மேம்படுத்தும் சிறந்த பண்பு.

      Delete