Sunday, August 9, 2020

சர்வதேச பூர்வகுடிகள் நாள்


இனம் காப்போம் ..!

ஆகஸ்ட் 9... இன்று!

         சொந்த நிலத்தில் வாழ்ந்தாலும் , தமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் காப்பாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் - பூர்வ குடி  மக்களைப் பேணவும், அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் உருவாக்கவும்  ’சர்வதேச பூர்வ குடிகள் தினம்’,  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

             1994 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கூடிய, ஐ.நா.சபை , பூர்வகுடிகளின் கலாச்சாரமும் , பண்பாடும் , அவர்களது பொருளாதார வளர்ச்சியும் பேணப்பட வேண்டும் என்பதைக் குறித்த  தனது  கவலையை வெளிப்படுத்தியது. 49/214 வது தீர்மானத்தின் படி,  இரண்டு  பத்து  ஆண்டுகளுக்கென சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு, இந்நாளில் ஆண்டு தோறும் சிறப்பு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

           இன்றைய தேதியில், உலகமெங்கும் 90 நாடுகளில் 370 மில்லியன் பூர்வகுடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் 7000 மொழிகளும், 5000 வகையான கலாச்சார வாழ்க்கை முறையும் காணப்படுகின்றன. இந்தியாவில் இவர்கள் 'பழங்குடி மக்கள்'  என அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 700 குழுக்களாக இருக்கும் இம்மக்களின் சிந்தனைகளையும், பண்பாட்டையும் பேணவேண்டியது நமது கடமையாகும்.   

            சொந்த நிலப்பகுதியில் வசித்தாலும்,  நாகரீக வாழ்வில் இணைந்தவர்களை பூர்வகுடிகள்   என அழைப்பதில்லை. மாறாக, பாரம்பரியச் செயல்பாடுகளை விட்டு விடாமல் , இன்றும் அதே மொழி, பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களே பூர்வ குடிகள் என ஐ.நா அமைப்பு வரையறை செய்துள்ளது.

         கடல் சாகசங்கள், நாடு கண்டுபிடிக்கும் வேட்கை, ஏகாதிபத்திய எண்ணம் இவைகளின் காரணமாக எத்தனை மனித இனங்களை நாம் இழந்திருக்கிறோம்?

          ஆஸ்திரேலியாவின் தென்புறத்தில் இருக்கும் டாஸ்மேனியாவில் 1828 ஆம் ஆண்டு, ஆர்தர் என்னும் வெள்ளை இன  கவர்னர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். அது, “கண்ணில் படும் எந்த ஒரு  கறுப்பின மனிதனையும், வெள்ளையர்கள் தங்கள்  விருப்பப்படி சுட்டுக் கொல்லலாம்”, என்பதாகும்..
       
       ஒரு கறுப்பனைக் கொன்றால் 3 பவுண்ட்,  குழந்தையைக் கொன்றால்  1 பவுண்ட் என பரிசுகளை  அறிவித்தான் ஆர்தர்.  Black Catching என்ற பெயரில் இது பொழுதுபோக்கு விளையாட்டாக மாறிப் போனது. துப்பாக்கியையே பார்த்திராத அப்பழங்குடிகள், ஓடி ஓடி ஒளிவதும், பின் அகப்பட்டுச் சாவதும் வாடிக்கையானது.   1869  ல் யாவரும் அழிக்கப்பட்டு , மூவர் மட்டுமே மிஞ்சினர். இருவர் எலும்பும், தோலுமாய் இறந்துவிட, அவர்களின் உடல் பாகங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக கூறு போடப்பட்டதை மூன்றாமவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆம்,   அந்த இனத்தின் எஞ்சிய  கடைசிப் பெண் 'ட்ரூகானினி' மட்டும் பதற்றத்தோடு மூலையில் முடங்கிக்கிடந்தாள். அடைத்து வைக்கப்பட்டிருந்த தனியறையில் ஏதேதோ பிதற்றினாள்.

            ஆஸ்திரேலியப் பழங்குடிவாசி ஒருவரைக் கொண்டு, அவள் என்ன பேசினாள் என்பதை அக்கறையோடு புரிந்து கொள்ள முயற்சி செய்தது வெள்ளைய அரசு.  ”எங்கள் மரபுப்படி, என் உடலை கடலில் வீசி எறிந்து விடுங்கள், என் உடலைப் பிய்த்துக் கூறு போட்டு விடாதீர்கள்”, என்ற அவளின் கடைசி  மன்றாடல் திமிரோடு மறுக்கப்பட்டது. 1876 ஆம் ஆண்டு, அவள் இறந்து போனாள். டாஸ்மேனியா மியூசியத்தில், ’டாஸ்மேனியாவின் கடைசி பழங்குடிப் பெண்’ என்ற வாசகத்தோடு அவளது  எலும்புகூடு வைக்கப்பட்டது. பிறகு,  1976ஆம் ஆண்டு தான், சமூக ஆர்வலர்களின் போராட்டம் காரணமாக, ட்ரூகானினியின் இறுதி ஆசை , சரியாக நூறாண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. அவளது எலும்புகள் கடலில் வீசப்பட்டன. ஆதிக்க குணம் கொண்ட  மனிதர்களின்,  குரூர எண்ணத்திற்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

    அமெரிக்க நீக்ரோக்கள் பட்ட துயரத்தையும், இங்கா இன மக்கள் அடைந்த இன்னல்களையும்  நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நம் காலத்தில்,  நமது அண்டை தேசமான இலங்கையில், தமிழ் இனப் படுகொலை நடத்தப்பட்டதை நாம் எப்படி மறக்க முடியும்?. நண்பர்களே, எவரும்  இவற்றை எல்லாம் வரலாற்றில் இருந்து மறைத்து விடவும் முடியாது.

          எத்தனை மொழிகள், எத்தனை இனங்கள், எத்தனை விதமான கலாச்சாரங்கள்., மனிதனின் அதிகாரப் பசிக்கு வேடையாடப்பட்ட  நாகரீகங்கள்தான் எத்தனை எத்தனை? அதிலும்,  இனப்படுகொலை என்பது கருவறுக்கும் ஈனச்செயல் அல்லவா?

          இனியாவது -  பூர்வ குடிகளின் பண்பாட்டை அறிவோம்; அவர்களின் வாழ்வைப் போற்றுவோம்; மானுட மாண்பைக்  காப்பாற்றிக் கொள்வோம்.
         
         மற்றொரு இனத்தை வேட்டையாடி, தன் பசியைப் போக்கிக்  கொள்ளும் மிருகங்கள்,   தன் இனத்தை ஒருபோதும் தானே அழிப்பதில்லை.   ஆனால்,  தன் இனத்தைத்  தானே அழிக்கும் அபூர்வ மிருகம் ஒன்றே ஒன்றுதான். அது  மனிதன் என்னும் 'அசிங்க மிருகம்' தான்!   

        இறுதியாக, ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இன அழிப்பு செய்பவர்களை, வரலாறு ஒருபோதும் மறப்பதில்லை; மன்னிப்பதும் இல்லை.

2 comments:

  1. மற்றொரு இனத்தை வேட்டையாடி, தன் பசியைப் போக்கிக் கொள்ளும் மிருகங்கள், தன் இனத்தை ஒருபோதும் தானே அழிப்பதில்லை. ஆனால், தன் இனத்தைத் தானே அழிக்கும் அபூர்வ மிருகம் ஒன்றே ஒன்றுதான். அது மனிதன் என்னும் 'அசிங்க மிருகம்' தான்!

    உண்மை
    உண்மை
    மனித வரலாற்றுப் பக்கங்கள் முழுவதும் நிரம்பி வழியும் இரத்தங்கள் இதைத்தானே உணர்த்துகின்றன.

    ReplyDelete
  2. தங்களின் மேலான கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete