Saturday, September 15, 2018

செப்டம்பர் 15

ஜெய்ஹிந்த் முழக்கமிட்ட எம்டன் - செண்பகராமன் பிள்ளை.

செப்டம்பர் 15....இன்று!


  மஹாராஷ்டிராவில் - வாழ வழியின்றி அலைந்து கொண்டிருந்த மணிப்பூர் பெண்மணிதான்  லெட்சுமி பாய். வறுமையில் இருந்த  அவருக்கு கிறித்தவ மிஷினரி ஒன்று உதவிக்கரம் நீட்டியது. அவர்களுடன் இணைந்து, முதலில் ரஷ்யா சென்றார். 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு,  ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு இடம் மாறியது அவரது குடும்பம். பெர்லினில்,  1931ஆம் ஆண்டு, தன்னைப் போலவே இந்திய தேசத்தில் பிறந்து, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த, ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டார். அதே 1931ஆம் ஆண்டு, தனது   காதல் நாயகனைக் கரம் பிடித்தார் லெட்சுமி பாய். மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நிலைக்கவில்லை. மூன்றே ஆண்டுகளில், மர்மமான முறையில் கணவர் இறந்துபோனார். சுதந்திர இந்தியாவையே  தனது சுவாசமாகக் கொண்டிருந்த, தனது காதல் கணவரின் இறுதி ஆசையை நிறவேற்ற 32 ஆண்டுகள்  காத்திருந்தார். இறுதியில்  கணவரின் விருப்பத்தை நிறைவேற்றிக் காட்டினார். பிறகு, மும்பை நகரில்  அநாதையாக இறந்து போனார்.   அவரது கணவர் யார்? அவருக்கு என்ன நேர்ந்தது? அவரது இறுதி ஆசை என்னவாக இருந்தது?

        இந்திய விடுதலை வரலாற்றில், மறக்கப்பட்ட தியாகிகளில் ஒருவர் தான் செண்பகராமன் பிள்ளை.

                 ’ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை பள்ளிப்பருவத்திலேயே தொடங்கியவர்; வெளிநாட்டில், ‘புரோ இந்தியா’, ‘ஐ.என்.வி’ போன்ற அமைப்புகளைத் தொடங்கியவர்; பல விதங்களில் நேதாஜியின் முன்னோடி;  ஹிட்லரிடம் வாதிட்டு,  அவரை மன்னிப்பு கேட்க வைத்த சாகசக்காரர்; 'எம்டன்'  கப்பலை ஓட்டி வந்து, பிரிட்டிஷ் படைகளுக்கு கண்ணாமூச்சி காட்டியவர்; பயமறியாத தமிழ் இனத்தில் பிறந்த,   சுதந்திரப் போராட்ட வீரர்-  செண்பகராமன் பிள்ளை (1891-1934) பிறந்த நாள் இன்று. 

   திருவனந்தபுரம் அருகில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த புத்தன் சந்தை என்னும் ஊரில், 1891ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் நாள் செண்பகராமன் பிள்ளை பிறந்தார்.  சின்னச்சாமிப் பிள்ளை-நாகம்மாள் தம்பதியினருக்கு இவர்தான் மூத்த மகன். இவருக்கு ஒரு தங்கை உண்டு. பள்ளிப்படிப்பை திருவனந்தபுரம் இந்து உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பள்ளி நாள்களிலேயே, இவரிடத்தில்  விடுதலை உணர்வு வீறு கொண்டு எழுந்தது.

         படிக்கும் காலத்தில், சர் வால்டர் ஸ்டிரிக்ட்லேண்ட் என்ற தாவரவியல் அறிஞரோடு தொடர்பு ஏற்பட்டது. அவர் ஜெர்மனிக்காக,  ஆங்கில அரசை உளவு பார்க்க வந்த    உளவாளி என பின்னாளில் சொல்லப்பட்டது. சர் வால்டரோடு இணைந்து கொழும்பு வழியாக ஆஸ்திரியா சென்று சேர்ந்தார் செண்பகராமன்.  பத்மநாபப் பிள்ளை என்ற உறவினரும் இவரோடு சேர்ந்து பயணித்தார். ஆனால், பத்மநாபப் பிள்ளையின் விதி, வேறு மாதிரியாக இருந்தது. அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட பத்மநாபப் பிள்ளையின் கண்ணீர் வரலாறு ஒரு தனி சரித்திரம்.

  செண்பகராமனை ஆஸ்திரியாவிலேயே தங்கிப் படிக்க வைத்தார் சர் வால்டர். செண்பக ராமன்  பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பில் படு ஆர்வமாயிருந்த  செண்பகராமனுக்கு 12 மொழிகளில் நல்ல புலமை இருந்தது. சிலம்பும், வாள் சண்டையும் இவருக்குக் கை வந்த கலை.  ஆனால், எல்லா  அறிவை விடவும் தேசத்தின் மீதான காதல்  உணர்வுதான் இவரிடத்தில்  அதிகமிருந்தது.

      முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் தங்கியிருந்தார். 1914 , ஜூலை 31 ஆம் தேதி, தனது நண்பர்களை இணைத்து, “இந்திய தேசிய தன்னார்வப் படை” ஒன்றை அமைத்தார். இந்திய சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்ட இந்த அமைப்பிற்கு, ஜெர்மனி அதிபர் கெய்சரின் முழு ஆதரவு கிடைத்தது. செண்பகராமன் பிள்ளையின் கூர்ந்த மதிநுட்பமும், ஆற்றலும் கெய்சரைப் பெரிதும் கவர்ந்திழுத்தது.

           முதல் உலகப் போரில், ‘எம்டன்’ என்ற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்,  ஆங்கிலேய அரசு அச்சப்படும் வகையில், சென்னை மற்றும் கேரள கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது. அதில் தலைமைப் பொறியாளராக வந்து, தாக்குதலை நடத்தி, ஆங்கிலேயர்களை கதிகலங்க வைத்தார் செண்பகராமன் பிள்ளை. இன்றும் கூட,  பல நிகழ்வுகளில் திறமையாகச் செயல்படுபவர்களை, நம் மக்கள் ‘எம்டன்’ என்ற பெயர் சொல்லியே அழைக்கிறார்கள்.

    1915ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் தலைநகரில், ஆங்கிலேயருக்கெதிராக, 'போட்டி இந்திய  அரசாங்கம்' ஒன்று அமைக்கப்பட்டது. காபூல் மகேந்திர பிரதாப் அதிபராக நியமிக்கப்பட்ட அந்த அரசில், செண்பகராமன் பிள்ளை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். ஆங்கிலேய அரசு கோபத்தின் உச்சத்திற்குச் சென்றது. இவரை கொல்ல பல சதித் திட்டங்களைத் தீட்டியது. சுவிஸ் நாட்டில் இவரைத் தீர்த்துக் கட்ட, ஒரு சிறப்பு உளவுப் படை அமைக்கப்பட்டது. இக்குழுவில் பிரபல ஆங்கில எழுத்தாளர் சோமர்செட் மாம், மிஸ்டர் ஆர் என்ற பெயரில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவரைக் கொல்லும்  திட்டங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்திய தேசத்தின்  விடுதலைக்கான தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தார் செண்பகராமன் பிள்ளை.

               1931ஆம் ஆண்டு, அக்டோபர் 10ஆம் நாள்,    துரதிருஷ்டம் வேறு வகையில் வந்தது.  ஜெர்மனியின் சர்வ வல்லமை பொருந்திய தலைவராக ஹிட்லர் உருவாகியிருந்த நேரம் அது. “பிரிட்டிஷ்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்பது,  இந்தியர்களின் தலைவிதி” என்று இந்தியர்களைப் பற்றி ஏளனமாக  ஹிட்லர் கருத்து வெளியிட்டார். கோபமடைந்த செண்பகராமன், கடுமையாக எதிர்வினையாற்றினார். ’கருத்த இதயமுடையவன்’ என  ஹிட்லரைப் பற்றிச் சொன்னார். வாதத்தின் முடிவில் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஆனால், எழுத்துப் பூர்வ மன்னிப்பு தான் வேண்டும் என உறுதியாக நின்ற செண்பகராமனிடம், ஹிட்லர் அடக்கியே வாசித்தார். எழுத்துப் பூர்வ மன்னிப்பும் கோரினார்.  இந்த நிகழ்வுக்குப் பிறகு, செண்பகராமன் மீதான  நாஜிக்களின் கோபம்  தீரவே இல்லை.

            நாஜி படை வீரர்களால் அடித்து உதைக்கப்பட்டதாலும், மெல்லக் கொல்லும் மருந்துகள் உணவில் கலக்கப்பட்டதாலும் 1934 ஆம் ஆண்டு, மே மாதம் 26 ஆம் தேதி இத்தாலி மருத்துவமனை ஒன்றில் இறந்து போனார் செண்பகராமன் பிள்ளை.  தனது உடலின் சாம்பல், கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல் வெளிகளிலும் தூவப்பட வேண்டும் என்ற தனது இறுதி விருப்பத்தை மனைவி லெட்சுமி பாயிடம் சொல்லிய படியே கண்மூடினார். இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் கப்பலில் பயணித்து, பாரத மண்ணை முத்தமிட்டு , பின் பாதம் பதிக்க வேண்டும் என்ற அவரது சுதந்திரக்  கனவு  நிறைவேறவில்லை.

             ஆயினும், 1966 ஆம் ஆண்டு, 'ஐ.என்.எஸ். டெல்லி' என்ற போர்க்கப்பல் செண்பகராமனின் அஸ்தியைச் சுமந்தபடியே மும்பையிலிருந்து கேரளா வந்தது. தனது கணவரின் கடைசி ஆசையையும், 32 ஆண்டு காலக் கனவையும் மனதில் தேக்கிய படியே, அக்கப்பலில் லெட்சுமி பாயும் வந்தார். செண்பகராமனின் இறுதி  ஆசை நிறைவேற்றப்பட்டது.  அஸ்தி கரைக்கப்பட்ட, 1966, செப்டம்பர் 19 ஆம் தேதி செண்பகராமன் பற்றிய தலையங்கம், மனோரமா இதழில் எழுதப்பட்டது.

             சில நாட்களில்,  லெட்சுமி பாயும் மறக்கப்பட்டார். 1972ஆம் ஆண்டு, மும்பை குடியிருப்பொன்றில், யாருமற்ற அனாதையாக, புடவையில் சாவிக் கொத்துக்களுடன்  இறந்து கிடந்தார். இவரது உடலை அடையாளம் காட்டிய மூத்த பத்திரிக்கையாளர் பி.கே.ரவீந்திரநாத்  எழுதிய குறிப்புகள், படிப்பவர்  கண்களில் குருதியை வரவழைப்பவை.  ஆம், செண்பகராமன் பிள்ளையின் ரகசியங்கள் அடங்கிய 17 பெட்டிகளைக் கடைசி வரை பாதுகாத்து வந்த லெட்சுமி பாய், வறுமைக்கு இரையானார். அவர் உடல் மெலிந்து, உள்ளம் நலிந்து கோரமாய்  இறந்தவுடன், அந்த ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. அவை யாவும்,  தற்போது மஹாராஷ்டிரா தேசிய ஆவணக் காப்பகத்தில், நிம்மதியற்று  உறங்கிக் கொண்டிருக்கின்றன.

             அருகிருக்கும் நட்சத்திரங்களின் ஒளி  வெள்ளம் காரணமாக, வானில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற விண்மீன்களை,  நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். ஆம்,  ஆகாய நட்சத்திரங்களின் நீள அகலங்களை - அவற்றின்   அருகில் சென்று பார்க்கும்போது தானே அறிய முடிகிறது.       நமது தேசத்தின் விடுதலை வீரர்களும் அப்படித்தான். சில தலைவர்களின் வெளிச்சத்தில் மறைந்து போனவர்களும் , மறைக்கப்பட்டவர்களும் இம்மண்ணில் ஏராளம்.

       தியாகத்தை நாம் மறந்தாலும், அதன் தழும்புகள் - அழியாத தடத்தை ஏற்படுத்தியே செல்கின்றன. என்றாவது ஒரு நாள், அந்தத்  தழும்புகள் நம் உள்ளத்தை நிச்சயம் உலுப்பும் - 'ஏன் மறந்தாய்' என்ற கேள்வியையும்  எழுப்பும்!.

  

No comments:

Post a Comment