Wednesday, September 12, 2018

செப்டம்பர் 11


குருவுக்கு குருவானவர் - வினோபா ஜி

செப்டம்பர் 11.. இன்று!

"உங்களை எப்படி பாராட்டிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்களின் மதிப்பை அளவிடும் அளவிற்கு , நான் தகுதியானவனும்  இல்லை. உங்களின் தந்தை என்ற நிலையை வேண்டுமானால் நான் ஏற்றுக்கொள்வேன்” - வினோபா பாவேவிற்கு காந்தியடிகள் எழுதிய கடிதத்திலிருந்து. (10, பிப்ரவரி , 1918, வார்தா ஆசிரமம்) .

"இந்தியாவாலும்,காந்தியாலும் மட்டுமே வினோபாக்களை உருவாக்க முடியும்" - எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன்.
             
        தனது 56ஆம் வயதிற்குப் பிறகு, 58,741 கி.மீ. தூரம் தேசமெங்கும் நடந்து அலைந்தவர்; 40,00,000 ஏக்கர் நிலங்களை ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்குப் பெற்று வழங்கியவர்; தன்னலத்தின் நிழல் கூடத் தீண்டாத   காந்தியவாதி;  ஆச்சாரியார்(ஆசிரியர்) என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்; இலக்கியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர்;   ’பூமி தான இயக்கத்தின் தந்தை’   வினோபா ஜி அவர்களின் பிறந்த நாள்   (1895-1982) இன்று.    
                வினோபா ஜி,  1895ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 ஆம் நாள், மஹாராஷ்டிரா மாநிலத்தில், ககோடே என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.  நரஹரி ஷம்பு ராவ் - ருக்மிணி தேவி தம்பதியரின் மூத்த மகன் இவர். இவருக்கு நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரியும் உண்டு. இவரது இயற்பெயர் விநாயக் நரஹரி பாவே. இவரது தாய் மிகுந்த அறிவாற்றல் உடையவர். பகவத் கீதை மற்றும் வேதங்களின் சாராம்சத்தை,  தனது மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒழுக்கம், நேரந்தவறாமை, கடமையுணர்வு என, தாயிடமிருந்த  எல்லா நற்பண்புகளும்  இவரிடத்திலும் வந்து சேர்ந்தன.  
            வகுப்பில், எல்லா பாடங்களிலும் இவரே முதல் மதிப்பெண் பெற்றார். குறிப்பாக, கணிதப் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1916ஆம் ஆண்டு, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் ஆற்றிய உரையைப் படித்த வினோபா, தனது வாழ்க்கைப் பாதை எதுவெனத் தீர்மானித்தார். இண்டர்மீடியட் தேர்வுக்குச் செல்லும் வழியில் , தனது சான்றிதழ்களை எரித்தார். தனிப்பட்ட முறையில் காந்தியடிகள் எழுதியிருந்த  கடித அழைப்பின் பேரில், 1916ஆம் ஆண்டு, ஜூன் 7ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள கோச்ரப்  ஆசிரமம் சென்றார். அங்கே தான், காந்தியடிகளும் வினோபா ஜி யும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.  குருவும், சீடனும்  குருதியும்,சதையுமாய் இணைந்தனர்.
    காந்தியடிகளுக்கு, வினோபாஜியின் மீது, அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகியிருந்தது.   1921ஆம் ஆண்டு, வார்தா ஆசிரமத்தின் செயலராக வினோபாஜி நியமிக்கப்பட்டார்.
           கை ராட்டையில் நூற்பது   முதல்  மலம் அள்ளும் வேலை வரை யாவற்றையும் மன ஒருமையுடன் செய்தார். காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறையும் சென்றார். சிறையில் இருந்த காலங்களில், கைதிகளுக்கு கீதை உபதேசம் செய்தார். இவர் இருந்த சிறைச்சாலைகள் எல்லாம், பாடசாலைகள் ஆயின.   தற்போது, அந்த உரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு,  சர்வோதயா நிறுவனத்தின் மூலம், புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன.
          1940 ஆம் ஆண்டு, தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு, முதல் நபராக வினோபாஜி அறிவிக்கப்பட்டார். 20.10.1940 அன்று, 'ஹரிஜன்' பத்திரிக்கையில், வினோபாஜி யார் என்பது குறித்து, காந்தியடிகள் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிடுகிறார். ஒட்டு மொத்த உலகின் கவனமும்  வினோபாஜியின் மீது குவிகிறது.  ”சீடனாக வந்து சேர்ந்த எனது குரு - வினோபாஜி” என்ற காந்தியடிகளின் குறிப்பு, உண்மையிலேயே பொருத்தமான ஒன்றாக அமைந்தது. மகாத்மாவின் சார்பில்,  வினோபாஜி தான்,   வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், சில காலம் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
            1951 ஆம் ஆண்டு, ஏப்ரல் 18ஆம் தேதி, இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள போச்சம்பள்ளியில், பூமிதான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ராமச்சந்திர ரெட்டி என்பவர் 100ஏக்கர் நிலத்தை தானமாகத் தர முன்வந்தார். அந்த நிலம் முழுவதும் அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரித்துத் தரப்பட்டது. இதனை நாடு முழுவதும் செய்து காட்ட விரும்பினார். நிலச்சுவான்தார்களும், நிலமற்றவர்களும் என பிளவுபட்டிருந்த வர்க்க வேறுபாட்டைக் களைந்திட உறுதி பூண்டார்.
       தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுவார்.  இறைவழிபாட்டிற்குப் பிறகு, 12 மைல்கள் தனது குழுவோடு நடப்பார். நடையின் முடிவில் இருக்கும் ஊரில், தனது உரையை நிகழ்த்துவார். நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பெற்றுத் தருவார். பூமிதான இயக்கம், கிராம தான இயக்கம் என இடைவிடாது 15 ஆண்டுகள் நடந்து கொண்டே இருந்தார். பயணத்தில் இருந்த வினோபாஜியின் ஒருநாள் செலவு 12 பைசாக்கள் மட்டுமே; இதில் உணவும் அடக்கம்.
       வினோபாஜி, எந்த ஒரு செயலையும் அர்ப்பணிப்போடு செய்யவே விரும்புவார். இந்து, முஸ்லீம் சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த தன்னால் முடியும் என்று நம்பினார். அவர்களிடம் உரையாடும் முன்பு, திருக்குர்ரானை முழுவதுமாகப் படிக்க எண்ணினார். மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காக, உருது மொழியினைக் கற்றுக் கொண்டார். சரியாக ஓர் ஆண்டில், இஸ்லாமிய மறையை முறையாகப் படித்து முடித்தார். இவருக்கு, சமஸ்கிருதம், பெர்சி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ,உருது உட்பட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் நிபுணத்துவம் இருந்தது. ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவரின் கிடுக்கிப்பிடி வினாவிற்கு, ‘மொழிகளில்,மெளன மொழியே சிறந்தது’ என்ற பதிலைச் சொல்லி, நகர்ந்து சென்றார்.
           1975 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்திய மக்கள் ஒழுக்கத்தையும் , சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்ள,  இதுவும் ஒரு சரியான வாய்ப்பு என்ற எண்ணம், அவரது இந்த  நிலைப்பாட்டிற்குக்  காரணமாக இருந்திருக்கலாம். அனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
           இது தவிர, நிலம் பெறும் பயனாளிகளில் ஏற்பட்ட குழப்பம், பயனற்ற நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செயல்கள் என அவரது இயக்கங்கள் முழு வெற்றியை அடையவில்லை. ஆனாலும், அவரது நேர்மையும், அர்ப்பணிப்பும் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவராலும் போற்றப்பட்டது.
                1953ஆம் ஆண்டு, டைம் இதழின் அட்டைப்படம் இவரைச் சுமந்து வந்தது. ஆசியாவின் நோபல் என்றழைக்கப்படும் ராமன் மகசேசேயின் முதல் விருது, 1958ல் இவரது தோள்களைத்தான் தேடியது. 1983ஆம் ஆண்டு, இவரைச் சேர்ந்ததால் பாரத ரத்னா  விருது,  தனது மதிப்பை உயர்த்திக் கொண்டது. ஆம், அன்பின் மூலம் மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்த வினோபாஜி, ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் உறுப்பினர் ஆனார்.
              1982 ஆம் ஆண்டு உடல் நலிவுற்ற போது, மரணத்தை இன்முகத்தோடு வரவேற்றார். மருத்துவம் மறுத்தார். உண்ணும் உணவையும், அருந்தும் நீரையும் தவிர்த்தார். 1982ஆம் ஆண்டு, நவம்பர் 15ஆம் தேதி, மெளன மொழியோடு மரணத்தைத் தழுவினார் வினோபாஜி. ஒரு மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.  தன்னலமற்ற காந்தியவாதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு, பிரதமர் இந்திரா காந்தி, தனது  ரஷ்யப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பினார்.
    காந்தியை விடவும் ’காந்தியத்தை’ -உறுதியாகக் கடைபிடித்த மகான்   வினோபாஜி.   ஆம், பதவிகளை விரும்பாமல், பாரதத்தின் சுமையை தன் தோள்களில் ஏற்றிக் கொண்டார். சர்வோதயம் மலர தன்னையே ஒப்புக் கொடுத்தார்.
         உதட்டளவில் அல்ல; உள்ளத்தால் , செயலால் -  தனது வாழ்வை தேச நலனுக்கு  முழுதாக அர்ப்பணிக்கும் மெஸியாக்கள் நிச்சயம் வருவார்கள். நம்பிக்கையோடு காத்திருப்போம்!
              
               
               

No comments:

Post a Comment