Saturday, September 1, 2018

நாளும் அறிவோம் - செப்டம்பர் 1

இன்று மற்றொரு இன்றல்ல  - ஜி.நாகராஜன்.


செப்டம்பர் 1...இன்று!


”அடுத்து வருவது  ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவா என்றெல்லாம் கவலைப்படாது, அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக் கொள்ளும்  அந்த சிறுமியிடத்தே யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது”   - பரத்தையர் பற்றி  ஜி. நாகராஜன்.

        இலக்கிய வெளிச்சம் ஊடுருவாத பகுதிகளுக்குள் இவரது பார்வை நுழைந்தது.  அதற்குள்ளாகவே தானும் நுழைந்து, தன் பேனா மையால் அவர்களின் வாழ்வினை அழியாத சித்திரமாக்கிய எழுத்தாளர் இவர். மதுரை நகர வீதிகளில் அலைந்து திரிந்து, வாழ்வினைத் தான் விரும்பியபடியே சுகித்தவர்.  அழகு, அழகின்மை, நன்மை, தீமை என யாவற்றையும் ருசித்த இவர், நவீனத்துவத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்தாளர் ஜி.நாகராஜன் (1929-1981) பிறந்த நாள் இன்று. 
            
            35 சிறுகதைகள், 4 'நிமிஷக்கதைகள்' என்னும் குட்டிக்கதைகள் , ஆங்கிலக் கதைகள், மற்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.  ’குறத்தி முடுக்கு’, ’நாளை மற்றுமொரு நாளே’ என இரண்டே நாவல்கள் . இவைதான் ஜி.நாகராஜனின் மொத்தப் படைப்புகள். ஆனால், இவை அடர்த்தி மிகுந்தவை; ஆழம் நிறைந்தவை; அறியாத உலகினை வாசகனுக்குக் காட்டி, ஆச்சரியமும்,  அதிசயமும்  தருபவை. மேலோட்டமாகப் பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால், அறம் சொல்லும் படைப்புகள் இவை என்பதை அறிந்து கொள்ளலாம். 
                மதுரையில் கணேச அய்யருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார் நாகராஜன். தனது நான்காவது வயதிலேயே,  தாயை இழந்தார். திருமங்கலத்தில் தாய் மாமா வீட்டில் வளர்ந்தார். பழநியில் இருந்த தந்தை வீடு,  மதுரையில் மாமா வீடு என மாறி மாறித் தங்கியதில்,   இவரது பள்ளிக்கூடங்களும் மாறிக் கொண்டே இருந்தன.    பதினொன்றாம் வகுப்பிற்குப் பிறகு, மதுரைக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.  கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, அறிவியல் மேதை  சர் சி.வி.ராமன் கையால் விருது  வாங்கினார். தொடர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்து, முதல் வகுப்பில் தேறினார். காரைக்குடி கல்லூரியில் சில காலம் பணியாற்றிய பிறகு, சென்னையில் சில காலம் கணக்கர் பணி.  பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
               திடமான தேகம், தடிமனான மீசை, மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, விரல்களுக்கிடையே சார்மினார் சிகரெட் என ஜி.நாகராஜனின் தோற்றமே, மாணவர்களுக்கு வசீகரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கணிதப் பாடம் நடத்துவதிலும், ஆங்கிலப் பாடத்திலும்  தனிதன்மையும் , அபார ஆற்றலும் கொண்டிருந்த இவரது கற்பித்தல் முறை அனைவரையும் காந்தம் போல இவர் பக்கம் ஈர்த்தது.
          அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றும் போதுதான், கம்யூனிச சித்தாந்தங்களுக்குள் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். மாலை வேளைகளில், கம்யூனிசக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில்,  அமெரிக்கா சென்று ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் வாய்ப்பை, கல்லூரி நிர்வாகம் இவருக்கு வழங்கியது. வாய்ப்பை மறுத்த நாகராஜன்,  தனது வேலையை ராஜினாமா செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்டார். 
           ந.வானமாமலை , திருநெல்வேலியில் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக சிலகாலம் கழித்தார்.   கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை நகரக் கமிட்டிச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒருமுறை,  மேலப்பாளையத்தில் ஜப்தி நடவடிக்கைகளுக்கெதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார்.  சிறவாசமும் அனுபவித்திருக்கிறார். 
         திருநெல்வேலியில் இருந்தபோது தான், தன்னை தீவிர இலக்கியத்திற்குள் ஆட்படுத்திக் கொண்டார். கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி போன்றோருடன் எப்போதும் தொடர்பில் இருந்தார். 1957ஆம் ஆண்டு, இவரது முதல் சிறுகதை, 'அணுயுகம்' , ஜனசக்தி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல்வேறு இதழ்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். பித்தன் பட்டறை வெளியீடான, 'குறத்தி முடுக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாவலில், வேசியர் உலகினை வாசகன் கண்முன்னே நிறுத்தினார் ஜி.நாகராஜன். அவரது படைப்புகளில், "நாளை மற்றுமொரு நாளே" சிறப்பான ஒன்றாகும். கந்தன் என்பவனின் ஒருநாள் வாழ்க்கை அது. துணிந்திருந்தால், அவ்வாழ்வு நம்மையும் தொற்றியிருக்கக் கூடும்.! அது ஒரு ரணம் நிறைந்த வாழ்வு.
    திடீரென்று, 1956 ஆம் ஆண்டு , கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து , தன்னை முழுவதுமாக துண்டித்துக் கொண்டார். அந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்தர் மேல், அவருக்கு அதீத ஈர்ப்பு எற்பட்டதாகத் தெரிகிறது. பிறகு, மீண்டும் மதுரை திரும்பினார். விருப்பமும், வாழ்வும் அழைத்துச் செல்லும் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார். தனிப்பயிற்சிப் பள்ளியில் இவர் நடத்துகிறார் என்ற விளம்பரம் திரையரங்குகளில் வெளிவந்த காலம் அது. ஆனால், இவரோ மீளாத போதையில் மாட்டி கொண்டார். விதியின் கரங்களில் இவரது வாழ்வு ஒப்படைக்கப்பட்டது.  
             1959ல் ஆனந்தா என்ற பெண்ணுடன் திருமணம். நான்கே மாதங்களில், வீட்டில் நடந்த விபத்தொன்றில் முதல் மனைவியைப் பறிகொடுக்கிறார் ஜி.நாகராஜன். 1962ல் நாகலெட்சுமி என்ற பள்ளி ஆசிரியரை மறுமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஆனந்தி, கண்ணன் என இரண்டு பிள்ளைகள். ஆனால் வாழ்வின் பிற்பகுதியில் , தனியாகவே சுற்றித் திரிந்தார். மனைவியும் , மகளும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். மகன் கண்ணன் மாமா வீட்டில் தங்கியிருந்தான்.
            மெலிந்த தேகம், அழுக்கு வேட்டி, கிழிந்த ஜிப்பா, விரல்களுக்கிடையே கஞ்சா சுருட்டப்பட்ட சிகரெட் - இப்படிப்பட்ட நிலையில் தான், 1981 ஆம் ஆண்டு, எழுத்தாளர் சி.மோகன் உதவியுடன்,  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார் ஜி.நாகராஜன். தான் சொல்லியிருந்தபடியே,  சாவை எதிர்கொள்ள தன்னை தயார் படுத்திக் கொண்டாரோ என்னவோ, “ ரொம்ப குளிருது, சிதையில் போய்ப் படுத்தால் தான் , இந்தக் குளிர் போகும்” என முதல் நாள் இரவு சொன்னவர், மறுநாள் காலையில் எழவில்லை.  1981- பிப்ரவரி 19 ஆம் நாள் அதிகாலை , தானே ஆட்படுத்திக் கொண்ட துன்பச் சிலுவையிலிருந்து நிரந்தர விடுதலை பெற்றார் ஜி.நாகராஜன். 
               மனைவிக்கும் , பிள்ளைகளுக்கும் தகவல் தரப்பட்டது. நெருங்கிய நண்பர்கள் வந்திருந்தனர். மொத்தத்தில்,  15க்கும் குறைவான மனிதர்கள் மட்டுமே வந்துசேர,   மதுரை தத்தனேரி மயானத்தில் இவரது உடல் எரியூட்டப்பட்டது. சாகாவரம் கொண்ட படைப்புகளை மட்டும், அவர் இங்கே விட்டுச் சென்றிருக்கிறார். ஆம், அவையெல்லாம்   தன்னை இழந்து, அவர் எழுதிய படைப்புகள் அல்லவா ?. 
                  விளிம்பு நிலை மனிதர்களின் ஒரு பிரிவான பரத்தையர் உலகம், அவர்களின் வாழ்வு, தேடி வரும் மனிதர்களின் மனநிலை இவற்றோடு, அவர்கள் அடைந்த அவமானம், பெற்ற நோய்கள், செய்த சின்னத்தனங்கள் என எல்லாவற்றையும் ஒளிவின்றி வெளிப்படுத்தினார் ஜி.நாகராஜன்.  ”ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள், ஏன் இதையெல்லாம் எழுதுகிறீர்கள் என்று மட்டும் கேட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்” என்று கேட்ட ஜி. நாகராஜனின் குரல், தமிழ்ப் படைப்புலகில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.        

   சில இடங்களை ஆழ்ந்து பார்க்கலாம்;       சில தடங்களைக்  கூர்ந்து நோக்கலாம்; 
   மூழ்குதல் சரியாகுமா?

அறியா உலகினை அறிய நினைத்து, அரிய வாழ்வினை இழத்தல் என்பது  முறையாகுமா?. 

No comments:

Post a Comment