Sunday, September 2, 2018

நாளும் அறிவோம் - செப்டம்பர் 2

முக்கண்ணன் - உலக தேங்காய் தினம்.


செப்டம்பர் 2... இன்று!



"உடல் மேல் ஓடு உண்டு; ஆமை இல்லை.
‌முக்கண்ணும் உண்டு; சிவனும் இல்லை.
உள்ளமோ வெள்ளை; அது வெண்ணை இல்லை.
நல்லது , கெட்டது எது என்றாலும் நானே வருவேனென்று, 
முதலில் நிற்பவன் யாரெனத் தெரியுமா?”
     - அவன் பெயர் தான் தேங்காய்!
      
         உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என்று அறிவியலும், தேங்காய் ஓட்டை உடைத்தால், வெண் பருப்பு கிடைப்பது போல,  ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால், இறைவன் என்னும் அகப்பொருள் காணலாம் என்று  ஆன்மீகமும் தேங்காய் பற்றி உயர்வாகவே சொல்லி வருகின்றன. நமது உணவிலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறியுள்ளது தேங்காய். அதன்  முக்கியத்துவம் அறியவும்,  உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை பரவலாக எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் உலக தேங்காய் தினம், ஒவ்வொரு ஆண்டும்  செப்டம்பர் 2ஆம் தேதி  கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம்,  இன்று உலக தேங்காய் தினம்.! 
        தென்னை சாகுபடியின் மூலம்,    தனி மனிதனின் பொருளாதாரத் தேவையை வளப்படுத்தவும், நாட்டின் உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் ஏற்படுத்தவும் திட்டங்கள் தீட்டி, அதனை  உரிய வழியில் செயல்படுத்த உருவாக்கப்பட்டதுதான், ”ஆசிய பசிபிக் தேங்காய் குழுமம்” (APCC).. இந்த அமைப்பு 1969ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதன் நினைவாகவே, சர்வதேச தேங்காய் தினம், செப்டம்பர் 2 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் ஜகார்த்தாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை நிறுவிய நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாகும். 
         இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், இலங்கை  போன்ற நாடுகளே தென்னை மரங்கள் வளர்ப்பதிலும், வருமானம் ஈட்டுவதிலும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்த வரையில், தென்னை வளர்ப்பில்,  கேரளா முதலிடத்தில்  உள்ளது. தமிழகம் மூன்றாவது இடம். (2016-2017ஆம் ஆண்டு கணக்கின் படி).  தமிழர்கள் வாழ்வோடு இணைந்துவிட்ட தென்னையை, நாம்  ’பிள்ளை’  என்றே பெயரிட்டு அழைக்கிறோம். 
           தென்னையின் தாவரவியல் பெயர் ’கோகஸ் நியூஸிஃபெரா’.  போர்ச்சுகீசிய மொழியில்,  கோகஸ் என்றால் ’பயத்தை உருவாக்கும் பேய்’ என்று பொருள். மண்டை ஓடு போலவே தேங்காய் ஓடும் இருப்பதாக எண்ணிய போர்ச்சுகீசியர்கள், தேங்காயை கோகஸ் என்று அழைத்தனர். நியூஸிஃபெரா என்றால் ’பருப்பினை கொண்டது’ என்று அர்த்தமாம். 
           தமிழில், தேங்காய்க்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்கள் உண்டு. முதல் நிலை ’குரும்பட்டி’ - இது எதற்கும் உதவாது. அடுத்து, இளநீர் - சுவை நீரும் வழுக்கையும் கொண்டது. மூன்றாவது, முட்டுக்காய் - இதில் இளநீரும் அரைப்பருவத்  தேங்காயும் இருக்கும்.  இறுதியாக,   தேங்காய்  மட்டை - தானாகவே விழும் இதில், நீர் வற்றி, நன்றாக முற்றிய தேங்காய் இருக்கும். இதனைத்தான் தெங்கம்பழம் என்று அழைப்பர். 
                வெப்ப மண்டலத் தாவரமான தென்னை,  சராசரியாக 30 மீட்டர் உயரம் வரை வளரும். தென்னை ஓலை 5-6 மீ நீளம் வரை இருக்கும்.  உலகில் ஏறக்குறைய 100 நாடுகளில் தென்னை வளர்க்கப்படுகிறது. முதுமையைத் தள்ளிப் போடுவதில் கொப்பரையும், கெட்ட கொழுப்பை நீக்குவதில் தேங்காயும் உடலுக்குப் பெருமளவு நன்மை செய்கின்றன.  தாய்ப்பாலுக்கு இணையான புரதச் சத்து, இளநீரில் மட்டும் தான்  உள்ளது என்று மருத்துவத் துறை வலியுறுத்திச் சொல்கிறது.    
                        தொ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்,  இளநீர் என்ற சொல்லை விட இளந்தேங்காய் என்பதே பொருத்தம் என்கிறார். ஏனெனில், கிழக்கிந்திய மொழிகளில் ஒன்றான 'முண்டா' மொழியில், நீர் என்ற சொல்  தேங்காயைக் குறிக்கிறது. எனவே, நாம் இளநீர் என்று சொல்வதற்குப் பதிலாக இளந்தேங்காய் என்றே குறிப்பிட்டுப் பழக வேண்டும்  என வலியுறுத்துகிறார் தொ.ப.மீ. .
          தென்னை மரம்,    வேண்டிய நலனைத் தருமென்பதால், இந்தியாவின் பல பகுதிகளில், இதனை  ’கற்பக விருட்சம்’ என்றே அழைகிறார்கள். இம்மரம், தமிழ் இலக்கியத்தில் தெங்கு (அ) தாழை எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. 
 “........ நாய் பெற்ற தெங்கம்பழம்”  - பழமொழி நானூறு.
 “ கோள் தெங்கின் குல வாழை”  -  பட்டினப்பாலை. 
    தெங்கு என்ற சொல்லில் இருந்தே, தெங்கங்காய், தெங்கம்பழம் எனும் சொற்கள் தோன்றின. 
           தென்னம்பாளையை உட்புறமாகச் சீவி, சுண்ணாம்பு தடவாமல், சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் பானம் தென்னங் கள்;   சுண்ணாம்பு தடவி வைத்துக் காத்திருந்தால், பிறகு கிடைப்பது பதநீர்.  இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பானம் தான் ’நீரா’ (5'C வெப்பநிலையில்).
    கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில், முறைப்படுத்தப்பட்ட "நீரா பானம்" விற்பனை,  தற்போது கோக், பெப்சியை வணிகத்தில் முந்திச் செல்கிறது. ஒரு மரத்தில், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு, தினமும் 5 லிட்டர் என்ற அளவில் நீரா பானம் தயாரிக்கலாம் என்கிறது இந்தியாவின் சி.டி.பி. அமைப்பு.(Coconut Devolopment Board). இதன் தலைமையிடம் கொச்சியில் உள்ளது. கார்பனேற்றம் செய்யப்பட்ட செயற்கை பானங்களைத்  தவிர்த்து, இயற்கை பானங்களையே  பருகப் பழகுவோம்.
               காணி நிலமிருந்தால், பத்துப் பனிரெண்டு தென்னை மரம் பக்கத்தில் கொள்வோம். முத்துச் சுடரொளியை முன்பு வரச் சொல்வோம். சித்தம் தெளிந்திடவே, இளந் தென்றல் வந்து தீண்டச் செய்வோம்.!
                 காடு, கரை இல்லையென்றால், குடியிருக்கும் வீட்டருகே -  தென்னை ஒன்று வளர்ப்போம். அதற்காக இன்றே,  உறுதி ஒன்று எடுப்போம்.!

         தேங்காய் எனும் பெயர்ச்சொல், பல நேரங்களில்   வினைச் சொல்லாய் மாறி, நம்மை விளிக்கிறது.
   ஆம்,  ’தேங்காய்’  நம்மைப் பார்த்து, ’தேங்காய்  மானிடா,  தேங்காய்....!' என,  தேங்கிடாமல் நகர்ந்து கொண்டே இருக்கச் சொல்கிறது. தேங்கி விட்டால், அதன் ஓலை தான், நமைத் தாங்கிச் செல்லும் கடைசி மஞ்சமாகிறது!

தேங்கிடாமல் பயணிப்போம்!



No comments:

Post a Comment