Friday, January 1, 2021

ஜனவரி 1 - மகாதேவ் தேசாய்




 

தலைவனின் தலைவன் -மகாதேவ் தேசாய்

              “Mahadev Desai has not seen day or night after he joined the Ashram. Consistent work was the only ‘Mantra’ of his life, and the work that Mahadev did was service, in terms of the Bhagvad Gita ‘Yagna’, a mission.”

-       Mahatma Gandhiji.                             

                      1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டு -15,  அதிகாலை நேரம். ‘மகாதேவ்! மகாதேவ்!’ என தனது உதவியாளரின் பெயரினை மகாத்மா காந்தியின் உதடுகள் சத்தமாக உச்சரித்தன. அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. தனது வாழ்நாளில் முதல் முறையாக, காந்தியடிகளின் குரலுக்குப் பதில் தராமல் மெளனமாய்க்  கிடந்தார் மகாதேவ்.  தனது மடி மீது அவரை வைத்துக் கொண்டு, சற்றே நிதானம் இழந்தவராய் காணப்பட்டார் காந்தியடிகள். அங்கே, அருகிலிருந்த டாக்டர் சுசீலா நாயர், நாடித்துடிப்பைப் பார்க்கிறார். உயிர் பிரிந்து விட்டது என்பதை அறிவிக்கிறார். தனது குருவான மகாத்மாவின் மடியிலேயே  மரணிக்கும் பாக்கியம், மகாதேவ் தேசாய்க்கு வாய்க்கிறது. காந்தியடிகளின் உள்ளம் பெருந்துயரில் மூழ்குகிறது.  ஆம், காந்தியடிகளுக்காகவே, அவரின் பரு உடலுக்கு வெளியே துடித்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் தான்  மகாதேவ் தேசாய் - காந்தியடிகளின் தனிச்செயலாளர்.

                       1917ஆம் ஆண்டு முதல் 1942, தனது மரண காலம் வரை, சரியாக ஒரு கால் நூற்றாண்டு காலம், மகாத்மாவின் செயலாளராக இருந்தவர்தான் மகாதேவ் தேசாய். ஒவ்வொரு நாளும் அதிகாலைப் பொழுதுக்கும் முன்னரே எழுந்து, காந்தியடிகளின் அன்றாடப் பணிகளைத் திட்டமிடுதல், பிறகு நாள் முழுவதும்   அவருடனேயே இருந்து பணியாற்றுதல், இரவு காந்தியடிகள் உறங்கச் சென்ற பிறகு அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் எழுதி வைத்தல் என இடைவிடாத இருபத்தைந்து ஆண்டுகாலப் பணி அவருடையது. அவரது எழுத்துக்களை, இந்திய வரலாற்றின் ’முறையான கால் நூற்றாண்டு வரலாறு’ எனத் தயக்கமின்றிச்  சொல்லலாம்.

                           1942ஆம் ஆண்டு, ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்ட காந்தியடிகள், கஸ்தூரிபாய் காந்தி,  சுசீலா நாயர் போன்றோரோடு மகாதேவ் தேசாயும் கைது செய்யப்படுகிறார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி, புனே நகரில் இருக்கும் ஆகாகான் அரண்மனையில் இவர்கள் அனைவரும் அடைக்கப்படுகிறார்கள். ஆகாகான் அரண்மனை என்பது,                           பத்தொன்பதாம் நூற்றாண்டில், கடும் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, டெல்லி சுல்தானால் கட்டப்பட்டதாகும். அங்கே இருந்த நாள்களில், காந்தியடிகள், மகாதேவ் தேசாய் இருவரும்  சிறைச்சாலையையே தங்களது அலுவலகமாக மாற்றிக் கொண்டனர் விடுதலைப் போராட்டத்திற்கான பணிகள் அனைத்தும், எழுத்து வடிவில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. 

            அன்று அதிகாலையும் அப்படித்தான். மகாதேவ் தேசாய்,  ஆகஸ்ட் 15, 1942 அன்று அதிகாலையில் எழுந்தார். அன்றைய நாளுக்கான பணிகளைத் திட்டமிட்டார்.   அப்போது பிரார்த்தனை முடிந்திருந்தது. முகச்சவரம் செய்து, குளித்துவிட்டு வந்த மகாதேவ் தேசாய், அங்கிருந்தவர்களுக்குத் தேநீரும், காந்தியடிகளுக்குப் பழச்சாறும் தயார் செய்து கொடுத்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக  சுருண்டு விழுந்து, மரணம் வழியே தனது செயல்களுக்கு ஓய்வு கொடுத்தார் மகாதேவ் தேசாய்.

                ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று, அரண்மனை வளாகத்திலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையென தன்னை முன்னிறுத்திய  மகாத்மா, மகனாக மாறி,  மகாதேவின் உடலைத் தானே நீரால் கழுவி, இறுதிச் சடங்குகளை உரிமையோடு மேற்கொண்டார். சிதைக்கும் தீ மூட்டினார். அதன் பிறகு, மனம் அமைதி தேடும் நேரங்களில் எல்லாம், மகாதேவ் தேசாயின் சமாதி அருகில் அமர்ந்து, பகவத் கீதை வாசிப்பதையே தனது வழக்கமாக்கிக் கொண்டார் மகாத்மா காந்தி அடிகள்.

                       குஜராத் மாநிலத்தில் சூரத் நகருக்கு அருகில் இருந்த சரஸ் என்னும் கிராமத்தில், 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று  மகாதேவ் தேசாய் பிறந்தார். இவருடைய தந்தை ஹரிபாய் தேசாய், அதே கிராமத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தேசாய் என்பது திஹன் என்ற ஊரைச் சேர்ந்தவர்களின் குல மரபுப் பெயராகும். மஹாதேவ் தேசாயின் தாய் பெயர் ஜமுனா பென். அறிவும், அன்பும் நிரம்பி வழிந்த ஜமுனா பென்னிடம், அந்த ஊர்வாசிகள் அனைவரும் பெரு மதிப்பு வைத்திருந்தனர். ஆனால், தாயின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் மகாதேவ் தேசாய்க்கு நீண்ட நாள்கள் கிடைக்கவில்லை. 1899ஆம் ஆண்டு, தனது ஏழாவது வயதில் அன்னையை இழந்தார் மகாதேவ்.

              நேர்மைமிகு மனிதரான தந்தையின் வளர்ப்பில் மகாதேவின் இளமைப் பருவம் மெல்ல நகர்ந்தது. காலையில் எழுந்தவுடன் பஜனைப் பாடல்கள் பாடுவது, பின்பு குஜராத்தி இலக்கியங்கள் வாசிப்பது என அறிவுத் துறையில் தீவிரமாக இருந்தார் மகாதேவ். ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, வேதங்கள் மற்றும் உபநிடதங்களை விளக்க நூல்களின் துணையுடன் கற்றுத் தேர்ந்தார். அவரிடத்தில் எதையும் அலசி ஆராயும் நுட்பமான அறிவு இருந்தது. கூடவே, நினைவாற்றலும் நிரம்பப் பெற்றிருந்தார். 

           சூரத் நகரில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1905ஆம் ஆண்டு, தனது 13வது வயதில்  துர்கா பென் என்ற 12 வயது சிறுமியுடன் இவருக்குத்  திருமணம் செய்து வைக்கப்பட்டது. பிறகு, 1906ஆம் ஆண்டு,  தான் எழுதிய மெட்ரிகுலேசன் தேர்விலும் உயர் வகுப்பில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1907ஆம் ஆண்டு, குஜராத் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் சேர அனுமதி பெற்றார். ஆனால், தந்தையின் மிகக் குறைந்த வருமானம் கல்விச்செலவுக்குப் போதாது என்பதை உணர்ந்து கொண்டார். எனவே, ’கோகுல்தாஸ் தேஜ்பால்’ தங்கும் விடுதியில் இலவசமாகத் தங்கிப் படிக்க அனுமதி பெற்றார். எதிர்பாராத விதமாக, இவருக்கு கல்வி உதவித் தொகையும் கிடைத்தது. அதற்குக் காரணம் அவரது நண்பர் வைகுந்த.  கல்லூரியில் தனக்குக் கிடைத்த கல்வி உதவித் தொகையை வேண்டாம் என்று சொல்லியதன் மூலம், தனக்கு அடுத்த இடத்தில் காத்திருந்த மகாதேவ் தேசாய்க்கு அந்தப் பணத்தைக் கிடைக்கச் செய்த உயிர் நண்பன் வைகுந்த் லல்லுபாய் மேத்தாவை இவரும் என்றுமே மறந்ததில்லை. இப்படியாக, தந்தைக்கு அதிக செலவு வைக்காமல், உயர்கல்வியை சிறப்பாக நிறைவு செய்தார் மகாதேவ் தேசாய். 1910ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தை முடித்த மகாதேவ், 1913ஆம் ஆண்டு எல்.எல்.பி எனப்படும் சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார்.

            சட்டம் படிக்கும் காலத்தில், சின்னச் சின்ன வேலைகள் செய்து தனக்கான செலவுகளைத் தானே பார்த்துக் கொண்டார் மகாதேவ். உயர்கல்வியின் பொருட்டு, தந்தைக்கு எந்தவித பொருளாதார நெருக்கடிகளையும் இவர் ஏற்படுத்தித் தரவில்லை. அப்போது, மோர்லி பிரபு என்பவர் எழுதிய, ‘சமரசம் செய்வது பற்றி’ என்ற நூலை குராத்தி மொழிக்கு மொழிபெயர்த்துத் தரும் சவாலான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மகாதேவ் கலந்து கொண்டு, முதல் பரிசும் பெற்றார்.  முதல் பரிசு பெற்ற மகாதேவுக்கு, ’குஜராத் பார்பஸ் சங்கம்’, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.    இந்தப் பணம், இவரது கல்விச் செலவுகளுக்குப்  பேருதவியாக இருந்தது.

    சட்டம் படித்து முடித்தவுடன் அகமதாபாத் நகரில் தந்தையுடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போதும் நணபர் வைகுந்த மேத்தா உதவிக் கரம் நீட்டினார். அவரது வழிகாட்டுதலில், பம்பாயில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளர் பணி மகாதேவுக்குக் கிடைத்தது. ஆனால், அந்தப் பணியில் அவரால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. ஆம், அவரது வாழ்வு, மகாத்மாவின் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தது அப்போதுதான்.

        மகாத்மா காந்தி அடிகள், 1915ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார். அதே ஆண்டு, மே மாதம், அகமதாபாத்தில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். ஆசிரமத்தின் நோக்கங்கள், நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்கி நீண்ட கட்டுரை ஒன்றை எழுதி, பொதுவெளியில் வெளியிட்டார். அதன் மீதான விமர்சனத்தையும் எதிர்நோக்கியிருந்தார் மகாத்மா காந்தி அடிகள். அக்கட்டுரைக்கு எதிர்வினையாக, இரண்டு இளைஞர்களின் கையெழுத்துடன் ஒரு கடிதம் காந்திக்கு வந்து சேர்ந்திருந்தது. அவரும் அதனை ஆழமாகப் படித்திருந்தார். அந்த இரண்டு இளைஞர்களுள் ஒருவர் தான் மகாதேவ் தேசாய். மற்றவர் நரஹரி பரிக். 

             அகமதாபாத், பிரேமபாய் கூடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி அடிகளை இளைஞர்கள் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். காந்தி அடிகளும் தனது ஆசிரமத்தின் நோக்கங்களையும் திட்டங்களையும்   விரிவாக எடுத்துக் கூறுகிறார். சுமார் இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பிறகு, இருவரும் வெளியே வருகின்றனர். அப்போது, ‘இந்த மனிதரின் பாதங்களின் கீழ் அமர்ந்து, வாழ்வைக் கடத்த வேண்டும் என்று எனது மனம் விரும்புகிறது’ என மகாதேவ் தேசாய் தனது நண்பர் நரஹரி பரிக்கிடம் உளம் திறந்து பேசுகிறார். காந்தி அடிகளின் மேல் ஈர்ப்பு ஏற்பட்ட முதல் தருணம் அது.

         காந்தி அடிகளுடன் மகாதேவுக்கு கடிதப் போக்குவரத்தும் நேர்ச்சந்திப்பும் தொடர்ந்து நடக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் வசீகரிக்கத் தொடங்குகிறார்கள். தினமும் மகாதேவைப் பார்க்க வேண்டும் என்ற காந்தி அடிகளின் ஆவல் விரைவில் ஈடேறுகிறது. மறுக்கவே முடியாதபடி இருந்த - காந்தி அடிகளின் அழைப்பினை ஏற்று, 1917ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 3ஆம் தேதி தனது மனைவி துர்கா பென்னுடன் சேர்ந்து கோத்ராவில் காந்தி அடிகளைச் சந்திக்கிறார். சம்பரான் பயணத்தில் இருந்த   காந்தி அடிகள், அவர்கள் இருவரையும் உடன் அழைத்துச் செல்கிறார்.

             பயணம் முடிந்து திரும்பியவுடன், மகாதேவ் தேசாய் தனது தந்தையைச் சந்தித்து, காந்தியுடன் செல்லும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். தந்தையின் ஆசியைப் பெற்று, காந்தி அடிகளின் பாதங்களில் தனது வாழ்வினை ஒப்படைக்கிறார் மகாதேவ் தேசாய். சரியாக 25 ஆண்டுகள் - காந்தியுடன் காந்தியின் கரங்களாக, கால்களாக, மூளையாக, அவரின் இணை உடலாக, அவரின் மனதாக, அவரின் செல்ல மகனாக வாழ்ந்து, தனது வாழ்வை பொருளுள்ளதாக மாற்றிக் கொள்கிறார்.  1917ஆம் ஆண்டு, நவம்பர் 13 ஆம் தேதியில் இருந்து காந்தியுடனான தனது நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். 1942,ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு வரை முறையான நாட்குறிப்பை அறுபடாமல் எழுதி வந்தார். அடுத்த நாள் காலை, மகாத்மாவின் மடியிலேயே தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கிறார். மகாதேவ் இளமையில் விரும்பியது அதைத்தானே! அது அப்படியே ஆனது.

       ஏழு வயதிலேயே அன்னையை இழந்திருந்த   மகாதேவ் தேசாய், கஸ்தூரிபாவை தனது தாயாகவே எண்ணி வாழ்ந்து வந்தார். காந்தி அடிகளும்  ஒரு தந்தையாக, பானை உடைத்து நீர்க்கடன் செய்து, மகாதேவின் சிதைக்குத் தானே நெருப்பு மூட்டுகிறார். தனது வளர்ப்பு மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாமல் கதறி அழுத கஸ்தூரிபா காந்தியையத் தேற்றிட அங்கிருந்த யாராலும் இயலவில்லை. மகாதேவின் மனைவி துர்கா பென் மற்றும் அவர்களது ஒரே மகன் நாராயண் தேசாய் இருவருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல்  கஸ்தூரிபா புலம்பிக் கொண்டே இருந்தார்.        

     1920ஆம் ஆண்டு, மோதிலால் நேருவின் வேண்டுகோளை ஏற்று, ‘இண்டிபெண்டண்ட்’ என்ற நாளிதழை நடத்துவதற்காக மாகாதேவ் தேசாயை அலகாபாத் அனுப்பி வைத்தார் காந்தி அடிகள். அந்தப் பத்திரிக்கையில் வெளிவந்த தலையங்கங்கள் ஆங்கிலேய அரசை வெகுவாகச் சீண்டின. அதன் விளைவாக, நாளிதழ் தடை செய்யப்பட்டது. மோதிலால் நேரு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகும், மனம் தளராத மகாதேவ் தேசாய், ‘I Change; But I cannot die’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, மையொற்றுப் பிரதி எடுத்து விநியோகம் செய்தார். அதனால், வெறுப்படைந்த ஆங்கிலேய அரசு, மகாதேவையும் கைது செய்து, ஆக்ரா சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தது.

      1923ல், லக்னோ சிறையில் இருந்து விடுதலை பெற்ற மகாதேவ், ‘நவஜீவன்’(1924)   இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1925ஆம் ஆண்டிலிருந்து, ‘யங் இந்தியா’ இதழில், மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற எல்லா போராட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, சிறைவாசமும் அனுபவித்தார். 1929ஆம் ஆண்டு காந்தி அடிகளுடன் பர்மா பயணம் மேற்கொண்டார். வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார். லண்டனில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்திக்க காந்தி அடிகள் சென்ற போது, அவருடன் மகாதேவ் தேசாய் மட்டுமே உடன் இருந்தார்.

                     காந்தி அடிகள் சொல்லும் கருத்துக்களை அப்படியே செயல்படுத்தவும், மறுத்துப் பேசவும், சில நேரங்களில் தீவிரமாக விவாதித்து அவரை மாற்றிக் கொள்ளச் செய்யவும்  மகாதேவ் தேசாய் உரிமையும் திறமையும் கொண்டிருந்தார்.  காந்தி அடிகளுடனான தனது 25 ஆண்டு காலப் பணியில், ஒரே ஒரு முறை மட்டும் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுத்த நிகழ்வும் நடந்தது. 1938ஆம் ஆண்டு, கஸ்தூரிபா, துர்கா பென் உள்ளிட்ட சிலர், பூரி ஜகந்நாதர் ஆலயத்திற்கு சென்று வந்ததை அறிந்த காந்தி அடிகள் வருத்தப்பட்டார். அவர்களது பயணத்தை தனக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் என மகாதேவ் தேசாயிடம் கோபம் கொள்கிறார். பதிலுக்கு, மனம் வருந்திய மகாதேவ் ராஜினாமா கடிதத்தை  ஒப்படைக்கிறார். அதற்கு மகாத்மா, ‘உன் பிரிவைக் காட்டிலும் ஆயிரம் தவறுகளை நான் பொறுத்துக் கொள்வேன். பக்தன் ஒருவனின் கரங்களில் இறப்பதே எனக்கு மேலானது. எனவே, நீ வெளியேறத் தேவையில்லை.’ என மறுமொழி அளிக்கிறார். ஊடல் கரைந்து, இரு மனங்களின் கூடல் நிரந்தரமாகிறது.

           1933ஆம் ஆண்டு, பெல்காம் சிறையில் இருந்தபோது தான், Gita According to Gandhi என்ற நூலை எழுதினார். தாகூரின் கவிதைகளையும், ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையையும் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இப்படி ஏராளமான நூல்களை ஆங்கிலத்திற்கும், குஜராத்தி மொழிக்கும் எழுதிக் குவித்திருக்கிறார். நாளெல்லாம் பம்பரம் போல், சுழன்று கொண்டே இருந்த மகாதேவ் தேசாய்க்கு , தினந்தோறும்  வாசிக்கவும் எழுதவும் நேரம் இருந்ததை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

           மகாதேவ் எந்த விளையாட்டுக்களிலும் ஆர்வம் இல்லாதவர். ஆனால், அவரது தந்தையைப் போல, கட்டுறுதியான உடலமைப்புக் கொண்டவர். தினமும் அதிகாலையில் எழுந்து, 9 மைல் தூரம் நடந்து சென்று, பிறகு திரும்புவார். சராசரியாக ஒரு நாளைக்கு 18 மைல்கள். சில காலம், சேவா கிராமத்தில் காந்தி அடிகள் தங்கியிருந்த போது, 5.5 மைல் தொலைவில் இருந்த தனது வீட்டிலிருந்து நடந்தே ஆசிரமம் வந்து செல்வார். மதிய உணவுக்கும் வீட்டிற்கே நடந்து வருவார். ஆக, அந்தக் காலக்கட்டத்தில் ஒரு நாளில் 22 மைல்கள் நடந்தார். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார். எல்லாப் பணிகளையும் தானே விரும்பி மேற்கொள்வார். நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருப்பார். அவரிடத்தில் களைப்பின் நிழலைக் கூட கானமுடியாது. தேசியத்தலைவர்கள் அத்தனை பேரிடமும் நட்புடன் பழகினார். அவரைச் சந்தித்தாலே,  உற்சாக வெள்ளம் உடன் வந்து ஒட்டிக் கொள்ளும்.

         ஆகா கான் மாளிகையில் மகாதேவ் தேசாய் இறந்தவுடன், நாடெங்கும் இருந்த தலைவர்கள் பெரும் துயறுற்றனர். துயரத்தை வெளிப்படுத்தும் 300க்கும் மேற்பட்ட இரங்கல் கடிதங்கள் காந்திக்கும், துர்கா பென்னுக்கும் அப்போது வந்து சேர்ந்தன.  தமிழ்நாட்டிலிருந்தும் சில கடிதங்கள் சென்று சேர்ந்திருந்தன.  ’சீடனாக இருந்தபடியே, எனக்கு குருவாக ஆனவர்; அவரை நினைவில் வைக்கவும், அவரைப் போலவே உயரவும் நான் அவருடைய சமாதிக்கு வருகிறேன்’  எனச் சொன்ன காந்தி அடிகளின் உள்ளத்தில் மகாதேவ் தேசாய் நிரந்தரமாகத் தங்கியிருந்தார்.  இந்திய விடுதலை வரலாறு காந்தி அடிகளின் பெயரைத் தாங்கியிருப்பதைப் போல, காந்தி அடிகளின் வரலாறு என்பது   மகாதேவ் தேசாயோடு இணைந்தே இருக்கிறது. ராமனை அகத்தில் ஏந்திய அனுமாரைப் போல, காந்தி அடிகளை இதயத்தில் எற்றிக் கொண்ட மகாதேவ் தேசாயை இந்த நாடு எப்போதும் மறக்கக் கூடாது.

          ஏனெனில், காகா கலேல்கர் தந்த ஊன்றுகோலை விடவும் காந்தியடிகளுக்குத்  துணையாய் இருந்தவர்; உலகின் குரூரங்களுக்கு முன்னால், கருணை பொங்கும் தனது விழிகளின் ஊடாக, சத்திய வாழ்வினை நிகழ்த்திக் காட்டியவர்; திறமையும் அர்ப்பணிப்பும் ஒருங்கே பெற்ற நேர்மையாளர்; தனது தலைவனுக்காக, தன்னை பூஜ்ஜியமாகவே மாற்றிக் கொண்ட பெருந்தலைவர்; எளிதில் காணக் கிடைக்காத  அரிய மனிதர்; தனது செயல்களின் வழியே, தலைவனுக்கே தலைவனாக வாழ்ந்து நிறைந்தவர்- அவர் தான் மகாதேவ் தேசாய். 

                   சிறப்பான கல்விப்புலம், திடமான மனம், அப்பழுக்கற்ற நேர்மை, அயராத உழைப்பு,  கொள்கையில் உறுதி, சக மனிதர்களிடம் நேசம், இருக்கும் இடத்தையே சொர்க்கமாக்கும் ஆற்றல் - இப்படி ஒரு தலைவனுக்குரிய எல்லாத் தகுதிகளும் மகாதேவ் தேசாயிடம் இருந்தன. இருந்தும் அவர் மனம் நாடியது என்னவோ காந்தியடிகளின் நிழல். விரும்பிய வாழ்வினை, புகார்கள் ஏதுமின்றி நிறைவாக வாழ்ந்தார். காந்தியின் நிழலில் தான், அவர் இன்னமும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்.!  

 

 

 

1 comment:

  1. எத்தனை புதிய செய்திகள்.அப்பப்பா....அருமை மணி

    ReplyDelete