Thursday, July 4, 2019

அக்பரின் நூலகமும், எனது மாணவர்களும்...

           

”சிறந்த போர் வீரன் என்பவன் பலவீனமே இல்லாதவனல்ல. தன்னுடைய பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்.”

                    எழுத்தாளர் மருதன் அவர்கள், இந்து தமிழ் திசை நாளிதழில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை , ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். குழந்தைகளுக்கான ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் வரும் இக்கட்டுரைகள், குழந்தைகளை மட்டுமல்ல, அனைத்து வயதினரையும் வசீகரிக்கும் வண்ணங்கள் நிறைந்தவை.

                 நேற்று (03.07.19),   ‘அக்பரின் நூலகம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை  வெளிவந்தது. அக்கட்டுரை ஆர்வத்தையும், உற்சாகத்தையும் உள்ளத்தில் நிரப்பிச் சென்றது. மேலும் மேலும் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.  

              சிறந்த பண்டிதர்களால் நாள் குறிக்கப்பட்டு, நான்கு ஆண்டு, நான்கு மாதம், நான்கு நாள்  வயது நிரம்பிய நன்னாளில் படிப்பைத் துவக்கிய மொகலாய மன்னர் அக்பருக்கு , படிப்பு மட்டும் ஏறவில்லை. அரசருக்குண்டான அனைத்து கலைகளிலும் முத்திரை பதித்த அக்பருக்கு , படிப்பு வராதது, தந்தை ஹுமாயூனுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.  தான் எழுதிய பாரசீகக் கவிதைகளையெல்லாம் மகனுக்கு சொல்லிக் காண்பித்தார். அக்பருக்கு படிப்பின் மீது மட்டும் பாசம் வரவேயில்லை.

           மிக இளம் வயதிலேயே அரியணை ஏறியவர் அக்பர். தாத்தா பாபர் மற்றும் தந்தை ஹுமாயூனால்  உருவாக்கப்பட்ட மாபெரும் நூலகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இவற்றையெல்லாம் வாசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அக்பருக்கு உண்டாகத் தொடங்குகிறது. 

                  வாசிக்கத் தெரியாத தனது பலவீனத்தை, பலமாக மாற்ற முடிவு செய்கிறார் அக்பர்.  மன்னருக்கு புத்தகங்களை வாசித்துக் காட்ட, 'வாசிக்கும் குழு' ஒன்று உருவாக்கப்படுகிறது. பக்கத்திற்கு இவ்வளவு என வாசிப்பவருக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் தனது மூளையில் நிரப்பி விடுகிறார் அக்பர். எல்லாத் துறை அறிஞர்களுடனும்  ஆழமான விவாதத்தில் ஈடுபடும் அளவுக்கு , அக்பரின் அறிவு விசாலமாகிறது. கற்றலின் கேட்டலே சிறப்பு! ஆம்,   இவை யாவும், 'வாசிப்புக் குழு' மூலம் வாசிக்க வாசிக்க,  கேட்டுக் கற்றவை எனும் போது வியப்பு மேலிடுகிறது. 

           இந்த யோசனை அக்பருக்கு எப்படி வந்தது?  அவர் தனது நூலகத்தை எப்படி மேம்படுத்தினார்? அவர் மனதினை புத்தககங்கள் வாசிக்கும்படி மாற்றிய நிகழ்வு எது? என  பல்வேறு செய்திகளை சுவாரசியமாகச் சொல்கிறது இந்தக் கட்டுரை.

                வாசிக்கத் தெரியாத அக்பர், தனது அரண்மனை நூலகத்தை முழுதுமாகப் படித்து தன்னை பலமுள்ளவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அக்பர் ’மகா அக்பர்தான்’!

                  நேற்று  இக்கட்டுரையைப் படித்த உடனேயே, இதனை   எனது வகுப்பு  மாணவர்களுக்கு  வாசித்துக் காட்ட வேண்டும் , அறிவின் மீதான அக்பரின் ஆசையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்றே அதனை நிறைவேற்றினேன்.

                     ‘கடல் பயணங்கள்’ என்னும் நூலின் வழியாக, எழுத்தாளர் மருதனை எமது மாணவர்கள் கடந்த வாரம் தான் அறிந்திருந்தனர்.  கடலோடிகளின் வாழ்வினைப் பற்றிய கட்டுரை நூல் அது. இன்று அக்பர் பற்றிய மருதனின் கட்டுரை. மாணவர்கள்  ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

              வரலாற்றில் அக்பர் என்னும் மாமன்னரின் பெயரினை மட்டும் அறிந்திருந்த  மாணவர்கள் , அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வினை இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்டனர். அறிவில் சிறந்த மாமன்னர்கள் , வரலாற்றில் பெறும் சிறப்பிடம் பற்றியும் சில நிமிடங்கள் பேசினோம்.  மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

         வரலாற்று நாயகர்களும், அவர்கள் சந்தித்த நிகழ்வுகளும் - மாணவர்கள் வாசித்து வளம் பெறவே , சரித்திர நூல்களில் காத்துக் கிடக்கிறார்கள் அல்லவா?

எங்கள் பள்ளி மாணவர்களின் சார்பில், எழுத்தாளர் மருதன்  அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.





                          

              



         

No comments:

Post a Comment