Monday, July 22, 2019

மேரி மாக்டலீன்

இயேசுவின் நிழல் -  மேரி மேக்டலின் திருநாள்!


ஜூலை 22..... இன்று!

        நம்பிக்கையின் திருத்தூதர் என்று போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டவரும்,  திருத்தூதர்களுக்கே திருத்தூதுரைத்தவருமான  மேரி மேக்டலின் திருவிழா (Feast)  நாள் (ஜூலை 22) இன்று.
           இவர்தான், இயேசு நாதரின் சிலுவை மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் - மூன்றிலும் உடனிருந்தார் என்று புனித ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளும் ( மாற்கு , மத்தேயூ, லூக்கா மற்றும் ஜான்) கூறுகின்றன. மேலும், புனித நற்செய்தி நூல்களில், இவரது பெயர் மட்டும், பன்னிரெண்டு முறை நேரடியாக சொல்லப்படுகிறது.
                        இயேசு நாதரின் பாதம் பதிந்த கலீலி கடற்கரையில்,  மக்டலா என்ற மீன் பிடி நகரத்தில் பிறந்தவர்தான் மேரி மாக்டலீன் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவர் இயேசு நாதரின் பயணங்களில் உடனிருந்தார் என்றும், பயணங்களுக்கு உதவினார் என்றும் புனித லூக்காஸின் நற்செய்தி நமக்கு கூடுதல் தகவல் தருகிறது.
          யூதப் பெண்மணியான மேரி மேக்டலின் இயேசு கிறிஸ்துவின் பயணங்களில் இறுதி வரை உடனிருந்தார். மானுடம் தழைக்க, அன்பையே செய்தியாகச் சொன்ன, மானுட குமாரன் சிலுவையில் அறையப்பட்ட நேரத்திலும் மாக்டலீன் உடனிருந்தார். கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று, சூரிய உதயத்திற்கு அரை மணி நேரம் கழித்து, மேரி மேக்டலின் இயேசுவின் கல்லறையை காணச் செல்கிறார். கல்லறை திறந்து கிடக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, அவளின் பெயர் சொல்லி அழைத்து,  அருகே வருகிறார். "குருவே...!" என கதறி அழுதபடி, பாதம் தொட நெருங்குகையில்,             " என்னைத் தொடவேண்டாம், நான் இன்னும் என் பிதாவினிடத்தில் சேரவில்லை, மாறாக நான் உயிர்த்தெழுந்த செய்தியை நம் தூதர்களிடம் சொல்வாயாக" என்று அறிவுறுத்துகிறார். இப்படியாக, உயிர்த்தெழுந்த கிறிஸ்து, முதலில் காட்சி கொடுத்ததும் மாக்டலீனுக்குத்தான் என்று நான்கு நற்செய்திகளும் கூறுகின்றன.                       
             மேரி மேக்டலின் எழுதிய நற்செய்தியில், (Gospel of Mary), திருத்தூதர்களில் ஒருவரான பீட்டர்,  மேரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்புவதும், பதில் பெறுவதுமான காட்சிகள் உள்ளன. பெண் என்பதால், தன்னை ஒதுக்குவதாக மேரி மாக்டாலீன் இயேசுவிடம் முறையிடுவதும் அதில் சொல்லப்படுகிறது.  பீட்டருக்கு லெவி சமாதானம் சொல்கிறார். இவை யாவும், எதிர்காலத்தில் வரப்போகும் புனைவாளர்கள், ஆய்வாளர்களுக்கான  பதிலாக அமைந்தது. 
          ஞானவாத கிறிஸ்துவத்தில் ( Gnostic  christianity) மேரி மேக்டலின் மிகப்பெரிய ஞானியாகவே கருதப்படுகிறார். இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நிரூபிக்கப்பட்ட மேரி மேக்டலின் நற்செய்தியும் (1896ல்), தாமஸின் நற்செய்தியும் (1945ல்) , சிதிலமடைந்த நிலையில் பாப்பிரஸ் ஆவணங்களாகக் கிடைத்துள்ளன.  குறைந்த காலம் மட்டுமே  புழக்கத்தில் இருந்த இவை, ஒற்றை அமைப்பாக  உருவாக்கப்பட்ட நூற்றாண்டுகளில், புதிய ஏற்பாடு உருவாகி வந்த போது, சில காரணங்களால் இவை  இணைக்கப்படவில்லை.  
       பைபிளில் மூன்று மேரிகள் குறிப்பிடப்படுகிறார்கள். பெயர்க் குழப்பம் காரணமாக, பல்வேறு ஊகங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வந்தன.  திருச்சபைக்கு எதிராக எழுந்த மார்டின் லூதர் உட்பட பலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறினாலும், அன்னை மேரி, மேரி மேக்டலின் - இரு மேரிகளுமே, இயேசு கிறிஸ்துவின் நிழல் போல் தொடர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. இன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபை,   லுத்ரன் திருச்சபை, புராட்டஸ்டன்ட்,  ஆதி ஞானவாத சபை என அனைத்தும் மேரி மேக்டலினுக்கு  உரிய, உயரிய  அந்தஸ்தை  வழங்கியுள்ளன.                            
              ’அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலர்’  என்ற அடைமொழியோடு, மேரி மாக்டலின் திருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்று வாடிகன் திருச்சபை, 10.06.2016 ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியிட்டது. ரோமாபுரி வெளியிடும் புனிதர்களின் நாட்காட்டியில், ஜூலை 22 அன்று, ’மாக்டலீன் திருநாள்’ என்று குறிப்பிடப்பட்டது.   போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், மேரி மாக்டலீனை ’நம்பிக்கையின் திருத்தூதர்களில்’ முதன்மையானவர் என்று அறிவித்தார்.                             
             இரண்டாயிரம் ஆண்டுகளாக, மேரி மாக்டலீன் பற்றிய வரலாறும், திரிபுகளும் இங்கே உலா வந்தபடியே இருக்கின்றன. பரபரப்புக்காகவும், புனைவின் பொருட்டும் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீது, ஆழமான பேரன்பும், உறுதியான  நம்பிக்கையும்  கொண்டிருந்த மேரி மாக்டலீன், இன்று  மனம் திருந்தியவர்களின் பாதுகாவலராகவும், பெண்களின் காப்பாளராகவும் வேண்டப்படுகிறார்.  அவரது நற்செய்தி, உலகெங்கும்  பரவலாக வாசிக்கப்படுகிறது.
                                 ஏழு வகைப்  பாவங்களிலிருந்து மனந்திருந்தியவராக காட்டப்படும் புனிதர் மேரிக்கே உயிர்த்தெழுதலின் முதல் காட்சி கிடைத்திருக்கிறது. மேரி மேக்டலின் வழியாகவே அந்த நற்செய்தியும் ஏனைய திருத்தூதர்களுக்குச்  சொல்லப்படுகிறது.  இவற்றின் மூலம் இயேசு கிறிஸ்து வழங்கும் மறைபொருள் என்னவாக இருக்கக்கூடும்?
                                   பாவங்களிலிருந்து மனம் திருந்தி, இறைவனின் பெயரால், மானுட சமூகத்தின் நன்மைக்காக வாழ்பவர்கள் - பால், இன வேறுபாடின்றி - எப்போதுமே உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.  குற்றங்களும், குறைகளும் நிறைந்ததுதான் மானுட வாழ்வெனும் பாத்திரம். அதில் இருக்கும் பாவங்களைக் களைந்துவிட்டு, அதனை  பேரன்பினால்  நிரப்புவது தான், நாம் முன்னெடுக்க வேண்டிய  புனிதமான செயல்.!

No comments:

Post a Comment