சாகசமும் கருணையும்- ஜிம் கார்பெட்!
இந்தியக் காடுகளில் ஆள் தின்னும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடியவர்; பெருமையின் பொருட்டு ஒரு உயிரியைக் கூடக் கொல்லாதவர்; மாறாக வனவிலங்குகளைப் பாதுகாக்க பெரு முயற்சி எடுத்த ஆங்கிலேய வேட்டைக்கார்- எழுத்தாளர் ஜிம் கார்பெட் (Jim Corbett, 1875-1955) பிறந்த நாள் இன்று.மன்னராக முடி சூட்டிக்கொள்ள இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் , 1911 ல் இந்தியா வந்தபோது, அவருக்காக சிறப்பு கானக வேட்டை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.ஐந்து நாள்கள் நடந்த வேட்டையில் 39 புலிகள்,18 காண்டாமிருகங்கள் உட்பட எண்ணற்ற காட்டு உயிரிகள் அழிக்கப்பட்டன. இந்த வேட்டைக்கு உதவிய 14000 பேருக்கும் தினமும் மான், முயல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.முழுக்க முழுக்க பெருமையின் பொருட்டு நடத்தப்பட்ட அராஜகம் , கொன்று குவிக்கப்பட்ட புலிகளின் முன் படம் எடுத்துக் கொண்டதோடு முடிவுக்கு வந்தது.
இதே காலகட்டத்தில் தான், இமயமலை அடிவாரத்தின் காடுகளில், மனிதர்களை வேட்டையாடிய புலி மற்றும் சிறுத்தையின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற களத்தில் இறங்கினார் ஜிம் கார்பெட். தவறுதலாக மனிதனைப் பிடித்து சாப்பிடும் விலங்குகளை வேட்டையாட மாட்டார். இரைக்காகவே மனிதனைச் சாப்பிடுகிறது என்று விசாரித்த பிறகே, ஜிம் கார்பெட் வேட்டையில் இறங்குவார்.
1875 ஆம் ஆண்டு, ஜூலை 25 ஆம் தேதி, ஜிம் கார்பெட் பிறந்தார். நைனிடால் நகரில் பிறந்து வளர்ந்த ஜிம் கார்பெட்டின் தந்தை வில்லியம் கார்பெட் , இந்தியாவில் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜிம் கார்பெட்டுக்கு பதினைந்து சகோதர சகோதரிகள். எட்டாவது குழந்தையான இவர் முழுப்பெயர் 'எட்வர்ட் ஜேம்ஸ் கார்பெட்'. இவர் தனது ஆறாவது வயதில் தந்தையை இழந்தார். தாய், மேரி ஜேனின் அன்பிலும் அரவணைப்பிலும் இவரது இளமைப் பருவம் கழிந்தது.
காட்டை அறிதல் என்பது இவருக்கு இயல்பிலேயே இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் இருந்தது இவரது வீடு. பெரும்பாலான இரவு நேரங்களில், காடுகளிலேயே சுற்றித் திரிந்தார். உயர்ந்த, ஒல்லியான தேகம்; வசீகரிக்கும் ஊதா நிறக்கண்கள் ; படிப்பில் பெரிய புலி இல்லையென்றாலும் , நைனிடால் கல்லூரி முழுக்க இவர் மிகவும் பிரபலம்.
அப்போது, இவர் தங்கியிருந்த குமாவூன் மாவட்டப் பகுதிகளில், காட்டு விலங்குகளால் மனிதர்கள் பலியாகும் நிகழ்வு தொடர்கதையாக இருந்தது. மக்களைக் காப்பாற்ற முடிவு செய்தார் ஜிம் கார்பெட்.
பகலில் புலியும், இரவு நேரங்களில் சிறுத்தையும் மனிதனை வேட்டையாடுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். காயம்பட்ட புலிகளும், குட்டி ஈனும் பருவத்து புலிகளும் வெகுதூரம் அலைந்து வேட்டையாடுவதில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தினார். கட்டுக்கடங்காமல் சுற்றித் திரிந்து, இரண்டாயிரம் பேருக்கு மேல் கொன்றழித்த புலியையும், சிறுத்தையையும் தனியாளாக எதிர்த்து நின்று வேட்டையாடினார். குமாவூன் பகுதி மக்கள், இவரை தங்கள் உள்ளங்களில் ஏந்தினர்.
கானுயிரிகளையும் , கானகத்தையும் இடைவிடாது ஆராய்ந்தவர் ஜிம் கார்பெட். இமயமலையைவிட காலத்தால் பழமையான சிவாலிக் மலைத்தொடர் முதல் ருத்ரபிரயாகை காட்டுப்பகுதி வரை , வாழ்நாள் முழுவதும் சுற்றித் திரிந்த கார்பெட், தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டார். Man eaters of kumaon, Jungle stories, Jungle lore, Tree tops போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார். மிகவும் பிரபலமான My India புத்தகத்தை , ஜிம் கார்பெட் ஏழை இந்திய மக்களுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். அதில்வரும் முன்னுரைப் பகுதியில், அதற்கான காரணத்தையும் நெகிழ்ச்சியோடு விளக்கியுள்ளார்.
பூமியில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான வாய்ப்பை மனிதனே முன்னின்று உருவாக்க வேண்டும் என்று சொன்ன ஜிம் கார்பெட், இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா உருவாகக் காரணமாக இருந்தார். அவர் நினைவைப் போற்றும் வகையில், 1957ல், அதே பூங்காவிற்கு, "ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா"(உத்தர்கண்ட்) என பெயர் சூட்டப்பட்டது. வங்கப்புலியின் சிற்றினம் ஒன்றுக்கு "கார்பெட் புலி" எனவும் பெயரிடப்பட்டது.
ஜிம் கார்பெட், 1947 ஆம் ஆண்டு, இந்தியாவிலிருந்து புறப்பட்டு, கென்யா சென்று தங்கினார். இயற்கையைப் பாதுகாக்க தன்னால் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். கென்யாவில், மரக்கிளைகளின் உச்சியில், குடிசை கட்டி வாழ்ந்த ஜிம் கார்பெட், திருமணமே செய்து கொள்ளவில்லை. இவரது மர உச்சிக் குடிசையில், இங்கிலாந்து 'இளவரசி எலிசபெத்' இரு நாள்கள் தங்கிச் சென்ற விசித்திர நிகழ்வும் அப்போது நடந்தது.
1955, ஏப்ரல் 19 ஆம் தேதி, தனது 80 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஜிம் கார்பெட்டின் வாழ்வு உணர்த்தும் செய்தி, மிக எளிமையானது.
வைரமாய் மின்னும் ஜிம் கார்பெட் வாழ்வின் முன்பு, சாகச வேட்டை செய்த மன்னன் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு புள்ளியாகவே எஞ்சுவார். வரலாறு அப்படித்தான் குறித்துக் கொள்ளும், நண்பர்களே!
ஏனெனில், சாகசங்களை விடவும், சகமனிதனை நேசிப்பதும், சமூக அக்கறையும் தான் - சரித்திரத்தில் நிலைக்கும்!.
No comments:
Post a Comment