Monday, April 8, 2019

நூல் அறிமுகம் - நடுகல்

'நடுகல்' - தீபச்செல்வன்.

தீர்வினைப் பேசும் நாவல்.



என்னைமுன் நில்லன்மின்  தெவ்வீர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர்.  - குறள் 771.
                                
                   2004ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  டிசம்பர் மாதத்தின் பின்னிரவு அது.  நான் ஏற்காட்டில் உள்ள சூசைகிரி பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வெள்ளை நிறத்தாலான பனிப்போர்வைக்குள் முடங்கி, ஏற்காடு  மலை நகரமே உறங்கிக் கொண்டிருந்தது.                 தரைத்தளத்தின் கீழாகத்தான் நான் தங்கியிருந்த அறை இருந்தது. அதில் இருந்த இரண்டு கண்ணாடி சன்னல்களும் மூடப்பட்டு, திரையால்   மறைக்கப்பட்டிருந்தன. அறையின் கதவையும் தாழ் போட்டிருந்தேன்.  முகம் தவிர்த்து, உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் மூடியபடி, வசதியாக கட்டிலின் மேல் அமர்ந்து கொண்டேன்.
                      ஜெயமோகன் எழுதிய ‘சங்கச் சித்திரங்கள்’ என்னும் புதிய நூலை அன்றுதான் வாங்கியிருந்தேன்.  கெட்டி அட்டையுடன், கவிதா பதிப்பகத்தால் வெயிடப்பட்ட நூல் அது.  விகடனில் தொடராக வந்த போதே, அக்கட்டுரைகளில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். என்றாலும், நூல் வடிவில் எல்லாக் கட்டுரைகளையும்,  மொத்தமாகப் படிப்பது,  எப்போதுமே பேரானந்தம் தரக் கூடியது.    புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.
                      சங்கக் கவிதையும், நவீன வடிவில் அதற்கு எழுதப்பட்ட புதுக்கவிதையும், கவிதையின் பொருளை வாழ்வியலோடு இணைத்துச் சொன்ன விதமும்  மனதினை ஏதேதோ செய்து கொண்டிருந்தது. 
      அதிலிருந்த,  ‘கல் நின்றவர்’ என்ற கட்டுரையைப் படித்து போது, மேற்கொண்டு படிக்க -  மனம் மறுத்து விட்டது.  அதிலிருந்த சில வரிகள், மூளைக்குள் சென்று  என்னை அரற்றத் தொடங்கின. ’நடுகல்’ என்ற சொல்லை, முதல் முறையாக,  அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.    
           ’களத்தில் முன் நின்று,  இன்று கல்லாய் எழுந்து நிற்பவர்களால் தான், சரித்திரம் நிரம்பியிருக்கிறது. அவர்கள் இல்லையென்றால் வரலாறே இருந்திருக்காது. ஆனால்,  இறந்தவர்கள் முற்றிலும் இறந்தாக வேண்டும். அவர்கள் நினைவுகளும் மட்கி மண்ணாக வேண்டும், இல்லாவிட்டால், இருப்பவர்கள் உயிர் வாழ்வது சிரமம்’ என்ற வரிகள் மனதை நடுங்கச் செய்தன. நடுகல்லாய்ப் போனவர்களை விட, மிஞ்சி இருப்பவர்கள்  நாளும் சந்திக்கும் வலியை உணர முடிந்தது.  
                       திடீரென்று, குளிர் பனி அறைக்குள் நுழைந்து கொண்டது. ’வெளியே வா’ என ,என்னை அழைப்பது மாதிரி, கம்பளி தாண்டி உள்ளே வந்து நின்றது.  மூளையின் அத்தனை இடுக்குகளிலும் நுழைந்து கொண்ட, ‘நடுகல்’ என்ற சொல்லைப் போலவே,   உடலின் ஆயிரமாயிரம் தோல் துவாரங்களின் வழியாகவும்  வெண்பனி புகுந்து கொண்டது.    
                     நிறைய காற்றும், ஆசுவாசமும் அப்போது தேவையாய் இருந்தது. அறையிலிருந்து வெளியேறி மேல் தளம் வந்தேன். பனிக் காற்றைத் தவிர அருகில் யாரும் இல்லை. நகர்ப் பகுதியை நோக்கி, பார்வையைத் திருப்பினேன்.   பீர்பால் கதையில் வருவது போல, தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் ஏதொவொரு வகையில், உடலுக்கு இதமான சூட்டை வழங்கியபடி இருந்தன. ஒளியால் நிரம்பி வழியும் விளக்குகள், என்  மனதுக்கு நம்பிக்கையைத் தந்தன. சற்றே நிம்மதி அடைந்தேன்.
                        ******************************

"அணிமயிற் பீலிசூட்டி பெயர் பொறித்து

இனி நட்டனரே கல்லும்..." - புறம் 264.
     
                2019 – புதிய ஆண்டை ஒரு நூல் அறிமுகத்துடன்,  தொடங்க வேண்டும், அந்த கூட்டத்தை தனது அறையிலேயே வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னார் வழக்குரைஞர் தமிழ்மணி. ஓரிரு நாள் முன்னதாக, கவிஞர் தீபச்செல்வன் எழுதிய, ’நடுகல்’ என்ற  புதிய புத்தகத்தையும் கையில் கொடுத்தார். நடுகல் - வினைத்தொகையாய் பதிந்து விட்ட அந்தச் சொல், ஆற்று மணல் இழுத்துச் செல்வதைப் போல, என்னை உள்ளே இழுத்துச் சென்றது. 200 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விடத் தூண்டும் வகையில் தான், புத்தகம் எழுதப்பட்டிருந்தது. 
                        
             இலங்கையில், கிளிநொச்சி அருகில் இருக்கும் இரத்தினபுரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனின் நினைவுக் குறிப்புகள் இவை என்று சொல்லலாம். போராட்டத்தில் தனது அண்ணனை இழந்து, தாயையும் தங்கையையும் பிரிந்து அலைந்த  ஒரு தம்பியின் துயரக் கதை என்றும் சொல்லலாம். குறிப்பாக இதனை ,  ஈழப்படுகொலை காலத்திற்கு முன்னும் பின்னுமான 25 ஆண்டு கால இலங்கைத் தமிழர்களின்  வரலாற்றை சில கதை மாந்தர்களின் வழியே சொன்ன, முக்கியப் படைப்பு என்றும்  சொல்லலாம்.        
                       பிரசன்னா, வினோதன் இருவரும்  இரத்தினபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள். இவர்களுக்கு ஒரு தங்கையும் உண்டு. இவர்களது இளம் வயதிலேயே, தந்தை நடராசன் இறந்து விட, தாயின் அரவணைப்பில் வளர்கிறார்கள். தமிழீழத் தாயகத்தை அடைந்து விடும் இலட்சிய வேட்கையோடு இருந்த பிரசன்னா, புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். இயக்கத்தில் சேர்பவர்களுக்கு புதிய பெயர் ஒன்று வைக்கப்படும். அதன்படி, பிரசன்னாவிற்கு வெள்ளையன் என்ற பெயர் சூட்டப்படுகிறது.
                   விடுமுறை கிடைக்கும் நாள்களில், தாய், தம்பி மற்றும் தங்கையைப் பார்க்க வீடு வருவான். வெள்ளையன் இயக்கத்தில் சேர்ந்தது ஒரு நேரம் பெருமையாகவும், மற்றொரு நேரம் பதட்டத்தையும் குடும்பத்தாருக்குத் தந்தது. ஒரு சோகமான நாளில்,  முகமாலைப் பகுதியில் இராணுவத்துடன் நடந்த சண்டையில், மரணத்தைச் சந்திக்கிறான் வீர வெள்ளையன். போரின் பிற்பகுதியில், இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த எல்லா பகுதிகளையும் கைப்பற்றுகிறது. அது எவ்வாறு வெற்றி பெற்றது என்பது, நாம் எல்லாரும் அறிந்ததே.
                  போருக்குப் பிந்தைய காலத்தில், வினோதனின் தாயும் தங்கையும் முள் வேலி முகாமில் அடைக்கப்படுகிறார்கள்.  யாழ் நகரில் கல்லூரிப் படிப்பை முடித்த வினோதன், தனது தாயைத் தேடி,முகாமிற்குள் அலைகிறான். இறுதியில் தேடிக் கண்டடைகிறான்.
                  'மாவீரர்களின் துயில் இல்லம்' பெரும்பகுதி அழிக்கப்படுகிறது. ஒரு பகுதி, இராணுவத்தினரின் விளையாட்டு மைதானமாகிறது. மீதி இடத்தில் எருக்களை மண்டிக் கிடக்கிறது. மாவீரர்களின் நினைவைப் போற்றி நிற்கும் நடுகற்களை அழித்து விட்டதாய் கொக்கரிக்கிறது சிங்கள இராணுவம். 
                   வினோதனின் தாயோ, தனது மகன் வெள்ளையன் நினைவாக, ஒரு கல்லை கையிலேயே வைத்திருக்கிறாள். அதனைக் குளிப்பாட்டி, துடைத்து விடுகிறாள். பூக்கள் வைத்து  விளக்கேற்றுகிறாள். ’பயங்கரவாதியைக் கொண்டாட இங்கே இடமில்லை’ என்று சொல்லி, நினைவுக் கல்லை உடைக்கப் பார்க்கிறான் சிங்க பண்டார.  முக்காலமும் இருக்கும் ’நடுகல்லை’, இல்லாமல் செய்ய முடியாது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
                                                ************************
        “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
         இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா
         குழியினுள் வாழ்பவரே - அன்று
         செங்களம் மீதிலே உங்களோடோடிய தோழர்கள் வந்துள்ளோம்
         ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!”
                          - மாவீரர்கள் துயிலும் இல்லத்தில் ஒலிக்கும் பாடல். (நடுகல் - பக்கம் 188)
         
                             வெள்ளையன்  வீர மரணமடைந்த பத்தாவது ஆண்டில் கதை துவங்குகிறது. வினோதனின் நினைவுகளில் , கால் நூற்றாண்டுக் கதை முன்னும் பின்னுமாகச்  சொல்லப்படுகிறது.  சிறுவனாக இருக்கும்போதே, சிங்கள விமானத்தின் மீது கல்லெறிந்து துரத்தும் பிரசன்னா, இயக்கத்தில் இணையும் காட்சிகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. நாம் சிறுபிராயத்தில் விளையாடிய திருடன் – போலிஸ் விளையாட்டு போல, அங்கே இருந்த ஆமி – இயக்கம் விளையாட்டு, வாசிக்கையில் ரசிக்க வைக்கிறது. 
                      வெள்ளையனாக மாறிய தனது மகனை, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல புலிகள் இயக்க முகாமிற்குச் செல்லும் ஒரு தாயின் வேதனை, புரியும்படி எழுதப்பட்டுள்ளது. அது போலவே, இயக்கம் , வெள்ளையனைத்  திருப்பி அனுப்பிய போதும்,  தமிழீழத் தாயகம் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் அவன் மீண்டும் இயக்கம் நோக்கிச் செல்வதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இது வெள்ளையனுக்கும் அவனது தாய்க்குமான மனப் போராட்டம் மட்டுமல்ல.  ஈழப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு போராளியின் கதையும்  இப்படித்தான் இருந்தது  என்பதை, கிளைக்கதைகளின் மூலம்  உணர வைக்கிறார் தீபச்செல்வன்.
                            விடுமுறைக்கு வரும் வெள்ளையன் மீது, தாய் காட்டும் அதீத பாசம் நமக்குப் புரிகிறது. தலைக்கு நல்லெண்ணை தேய்த்து விடுவதும், தோசை சுட்டுத் தருவதுமான காட்சிகள் நெழ்ச்சியானவை. நடக்கும் நிகழ்வுகளை  அறிந்தும், அறியாமலும் இருக்கின்ற தம்பி, தங்கையோடு வெள்ளையன் பேசிச் செல்லும் பத்திகளும் கனமானவை. 

                           போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஒரு பகுதியிலிருந்து , மற்றொரு பகுதிக்கு மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். வீதியே இடம் பெயரும் மக்களால் நிரம்பியிருந்தது. 
  “திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில் சிலர், வீட்டுக்குள் பொருள்களை வைத்துப் பூட்டிவிட்டு வர, வேறு சிலரோ திரும்ப முடியாமலும் ஆகலாம் என்றெண்ணி, வளவு மண்ணைத் தவிர மற்றெல்லாவற்றையும் அள்ளி ஏற்றினர்”, என்ற வரிகள் மனதை பாரமாக்கியது.  
                 அயல் தேசத்திற்கு அகதிகளாகச் செல்லாமல், என்றாவது ஒருநாள், தாய் மண்ணில் நிரந்தரமாகக் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த  மக்கள், அங்கே எதிர் கொண்ட துயரம் சொல்லில்  அடங்காதது. சொந்த நாட்டில் அகதிகளுக்கு உரிய மரியாதை கூட இன்றி, முள் வேலி முகாமிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
              “சனங்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் முள்வேலி முகாமுக்கு, நலன் புரி நிலையம் என்று பெயர். சொற்களிலேயே வாதை அடர்ந்திருந்தது. மனிதாபிமானப் போர் என்ற பெயரில் இன அழிப்புப் போர். வதை முகாம்களில் இனம் அழிப்பதற்கு புனர் வாழ்வு என்று பெயர்.  இப்படியாகத்தான் விடுதலைக்காகப் போராடிய இனம் அழிந்து கரைகிறது.” – இந்த பத்தியைப் படித்த போது, அரசியல் நிகழ்வுகள் மனதிற்குள் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.
            உலகின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முகாமினைப் பார்வையிட வந்ததும், புனர் வாழ்வு மையங்கள் நன்றாகச் செயல்படுகின்றன என சான்றிதழ் வழங்கியதும் நினைவுக்கு வந்தன. கூடவே, இலங்கை அரசால் அவர்களுக்கு  வழங்கப்பட்ட அன்பளிப்புகளும் மனதில் தோன்றி மறைந்தன. அப்போது,  மிருகக்காட்சிசாலை ஒன்றை, பார்வையிடுவதைப் போல, நம்மை பார்த்துச் செல்கிறார்களே என்று  முகாம் மக்கள்,  எண்ணி வருந்தியிருக்கக் கூடும். 
                    ’6 கி.மீ நீளத்தில் உருவாக்கப்பட்டிருந்த உலகின் மிக நீண்ட சிறைச்சாலை அது’ - என  தீபச்செல்வன் ஒரு வரியில் சொல்வது, ஓராயிரம் கேள்விக் கணைகளை நிகழ்காலத்தின் மீது வீசிச் செல்கிறது.  நேரில் பார்த்து வந்த அரசியல் பார்வையாளர்களும், மெளன சாட்சியாய் இருந்த நிகழ்கால சமூகமும்,  இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.
                    ”இந்தச் சண்டை எல்லாம் எப்ப முடியும். நாங்க எல்லாம் எங்கடை வீடுகளில் ஒன்றாய் வாழுகிற காலம் எப்ப வரும்?” – ஒரு தாயின் வலி மிகுந்த குரல் இது.  போரின் போது, கள்ள அமைதி காத்த உலகம், அவர்கள் யாவரும் ஒன்றாய் வாழுகிற செயலை நியாயமான வழியில் முன்னெடுக்கக் கூடாதா? தரையில் விழுந்த மழை நீர் போல, உடைந்துருகிக் கிடக்கும் அவர்களுக்கு முழு விடியல் எப்போது? தீபச்செல்வனின் நடுகல் கேட்டுக் கொண்டே செல்கிறது.
                   துணைக்தையாக வரும் அன்ரனி கதாபாத்திரம் மறக்க முடியாதபடி இருந்தது. போரின் போது, இரத்தினாபுரத்திலிருந்து அக்கராயன் பகுதிக்கு இடம் பெயர்ந்திருந்தது அன்ரனியின் குடும்பம். பிரியதர்சன், இசைப்பிரியன், ஈழப்பிரியன், பிரதாபன் என நான்கு பிள்ளைகளும் வயிறார சாப்பிட முடியாத நிலையைக் கண்டு வருந்துகிறான் அன்ரனி. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்ட தனது காட்டில், விளைந்து கிடப்பவை கண்ணுக்குள் வந்து போகிறது.  மனைவி ருக்மணியிடம் சொல்லிவிட்டு, இரவோடு இரவாக இரத்தினாபுரம் சென்று, முடிந்த மட்டும் உணவுப் பொருள்களை எடுத்து வருகிறான். இராணுவத்தின் கண்ணில் படாமல் பொருள்களை எடுத்து வரும் சாகசம் அடிக்கடி நடக்கிறது.
                   ஒருநாள் பிரியதர்சனும் உடன் வர, தென்னை மரங்களின் மீதேறி காய்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, சிங்கள ராணுவம் இருவரையும் பிடித்து விடுகிறது. எங்களை வேவு பார்க்க வந்தவர்கள் தானே எனக் கேட்டு துன்புறுத்துகிறது. 'எண்ட பிள்ளைகளின் பசியாற்றவே நான் வந்தேன்' என்ற பதில் அவர்களின் காதில் விழவே இல்லை. இருவரையும் கட்டி வைத்து, அடிக்கிறார்கள். சிகரெட் நெருப்பால் உடலெங்கும் உண்டான காயங்கள், தூண்டில் மீன்கள் போல இருந்தன. ’என்ட  மகனை ஒன்னும் செய்யாதீங்க’  என கதறி அழுகிறான் அன்ரனி.
               ஏதோ யோசனை செய்தவர்கள், பிரியதர்சனின் மார்பில், நெருப்பால் எல்.டி.டி.ஈ என எழுதுகிறார்கள். அவன் கையில் ஒரு பை  மூட்டையைக் கொடுத்து, ’பிரபாகரனிடம் போய் இதைக் கொடு’ என அவனை விரட்டுகிறார்கள்.  ’எண்ட அப்பாவை விட்டு விடுங்க ’ என அவன் அழும் போதெல்லாம், அவனது கன்னத்தில் துப்பாக்கியால் குத்தினார்கள். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அக்கராயன்  பகுதிக்குள், மூடிக்கட்டிய பொதியுடன்  நுழைகிறான் பிரியதர்சன்.
                     போராளிகள் பையை அவிழ்த்துப் பார்த்தனர். அதில், வெட்டப்பட்ட அன்ரனியின் தலை. ஆம், காதலும் சோகமும் நிரம்பி, பிதுங்கிக் கிடந்த விழிகளுடன்  அன்ரனியின் தலை. தனது நெஞ்சில் நெருப்பால் எழுதிய இராணுவத்திற்கு எதிராய் பிரியதர்சன் இயக்கத்தில் சேர்ந்தான் . விரைவில் மூன்று தம்பிகளும் இயக்கத்தில் இணைந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் நான்கு பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்து விட்டு, ருக்மணி புலம்பிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகளின் நடுகல்லும், புகைப்படங்களுமே அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
                        வெள்ளையன் மரணம் ஏற்படுத்திய  அதே அளவு துயரத்தை, அன்ரனியின் மரணமும் உண்டாக்கியது.  தன் பிள்ளைகளின் பசியைப் போக்கச் சென்று, மாட்டிக் கொண்ட அன்ரனியின் மரணம் மையக்கதாபாத்திரத்தை விட அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அன்ரனியின் தியாகமும் எல்லா வகையிலும் உயர்ந்ததே.
                       நாகேஸ்வரியக்கா, பொன்னையாப்பு, ஆனந்தி, அழகுராணி, நாடக நடிகர் மணியண்ணன், அன்பழகன் , பூரணி டீச்சர், பிரா என கதாபாத்திரங்கள் எல்லாம் வினோதனின் நினைவுகள் வழியாக வந்து போகிறார்கள். கவிஞர்  தீபச்செல்வன் தான் வினோதன். கவிதை மனத்தில் காட்சிகள் எல்லாம்  அழகாய் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு பாத்திரமும் இருக்கிறது. துரோகச் செயல் செய்து, இராணுவத்துடன் ஒத்து வாழும் கதாபாத்திரம் பற்றி விரிவாகப் பேச என்ன இருக்கிறது? ஒதுக்கித் தள்ளுவோம்.
                           நாவல் வெறுமனே, நடந்த நிகழ்வுகளை மட்டும் சொல்லிச் செல்லவில்லை. கூர்ந்து நோக்கினால், தீர்வு ஒன்று நாவல் முழுக்கப் பேசப்படுவதை அறியலாம்.
                   மாவீரர் கல்லறையை பார்க்கச் செல்லும் இரு சிறுவர்களிடமும் அங்கிருந்த போராளி, ‘நீங்கள் எல்லாம் நன்கு படிக்க வேணும் என்பதுதான் அவையிண்ட கனவு. உங்களுக்காகவே போராடி, அவை வீரச் சாவடைஞ்சார்கள்.  இடம் பெயர இடம் பெயர நீங்கள் படிக்க வேணும்’, என்கிறார்.
                     படிக்கும் வயதில் இயக்கத்தில் சேரக் கூடாது. பாடசாலைக்குப் போய் நன்கு படியுங்கள் என்று இயக்கத்தார் சொல்வதும், நல்லா படிச்சாத்தான் எல்லாம் நல்லதா மாறும் என தாய் சொல்வதும் மிக முக்கியமான காட்சிகள். யாழ் நகரில், டீச்சராக வரும் பூரணி, “சவால்களைக் கடந்து, முன்னேறுற வாழ்க்கையிலதான் அர்த்தம் இருக்கு”, என வினோதனிடம் சொல்லும் வார்த்தைகள் தான் , அவன் சந்தித்த துயர்களுக்கான ஒரே பதில். ஆம், கல்வியின் மூலம்தான், எந்தஒரு சமூகமும் தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
                            சொந்த நாடின்றி அலைந்து கொண்டிருந்த யூதர்கள், தனது அறிவின் மூலம் தான் உலகை நிரப்பினார்கள். தவிர்க்க முடியாத அளவுக்குச் சாதனைகள் செய்தார்கள். அவர்கள் சந்திக்காத கோரங்கள் இல்லை. ஆனால், அறிவின் துணை கொண்டு நிமிர்ந்தார்கள் . ‘நடுகல்’ நாவலும் படிப்பின் அவசியத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.
                                   எந்தவொரு படைப்பிலும்  புனைவிற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு. இந்தக் கதையிலும், காட்சிகளைத் தீவிரப்படுத்த, நிறைய கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி, இரண்டு தரப்பையும் பேச வைத்திருக்கலாம். தீர்வை வாசகனின் பார்வைக்கு விட்டிருக்கலாம். ஆனால், தீபச்செல்வன்  தான் கண்டவற்றை மட்டுமே பதிவு  செய்து, ஏனையவற்றை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். இயக்கத்தின் நிகழ்வுகள் கூட நாவலில் வரவில்லை. வருபவை எல்லாமே, வினோதனின் காட்சிகள் மட்டுமே. (அன்ரனியின் விரிவு பகுதிகள் தவிர.). 
                    யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட சில  விமர்சகர்கள் சொல்வது போல,  நாவலுக்கான கட்டுக்குள் இது வரவில்லையென்றால், போகட்டும், நினைவுக் குறிப்புகள் என்றே இது இருக்கட்டும்!. எவ்வாறாயினும் இலக்கிய  உலகில், இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுமென்றே தோன்றுகிறது. 
                 மிகச் சிறந்த செவ்வியல்  ஆக்கங்களுள் ஒன்றாக, மாறியிருக்க வேண்டிய நூல் இது. விரிவு கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் இன்னும்  விரிவாக இந்நூல் எழுதப்படலாம்.  
                        நாவல் முழுக்க, தனது  அண்ணனின் புகைப்படத்தைத்  தேடி அலையும் தம்பியின் வேதனையை உணர முடிகிறது. அண்ணனின் நினைவுகளில் வாழும் தம்பிக்கு, அந்தப் புகைப்படம்  கிடைக்கட்டும். ஆனால், ‘நடுகல்’ என்ற நாவலின் வழியே , வெள்ளையன் நிரந்தர உருவம் பெற்றிருக்கிறான். தம்பி உருவாக்கியிருக்கும் இப்புத்தகம் , சிங்க பண்டார போன்ற மனிதர்களால் அழிக்க முடியாத ஒரு நினைவுக் கல். இந்த நடுகல்லின் மீது, எருக்களை மண்டுவதில்லை, மாறாக, நினைவுகள் வழியே, காற்றுக்கு நூர்ந்து போகாத  விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அந்தச் சுடரில்  அண்ணனின் சிரித்த முகம் ஒளி வீசிக் கொண்டே இருக்கிறது.
                               
       ” இல்லா  கியரோ  காலை மாலை
          அல்லா கியர்யான் வாழும் நாளே
          நடுகல் பீலி சூட்டி நாரரி 
          சிறுகலத்து  உகுப்பவுங் கொள்வன் கொல்லோ..” - புறம் 232.
                        இலக்கியம் என்னும் பெரும் கலத்தில் இட்டு நிரப்பப்பட்டுள்ளது இந்த‘நடுகல்’. தம்பி உருவாக்கியிருக்கும் இப்படையலை, அண்ணன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான். 
                   **************************
                      
                    டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணிக்குத் துவங்கிய ’நடுகல்’ நாவல் பற்றிய உரையாடல், 2019, ஜனவரி  அதிகாலை 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. அறையில்,நண்பர்கள் கூடியிருந்த போதும், உள்ளத்தில்  வெறுமையே மிஞ்சியிருந்தது. ஆசுவாசமும், வெளிக்காற்றும் மீண்டும் தேவைப்பட்டது.   வெளியே வந்தோம். புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாண வெடிகள் மின்னிக் கொண்டிருந்தன. புதிய வெளிச்சம் வந்திருந்தது.  விடியல் நெருங்கி விட்டதையும் உணர்ந்தேன். சூடான ஒரு கோப்பைத் தேநீருக்குப் பின்,  நான் வீட்டிற்குப் புறப்பட்டேன். என் மனதில், ’நடுகல்’ ஒன்று முளைத்திருந்தது.
                  
                          






    
                
                            
                               
                    
                   






                    
                                
                    
                  

No comments:

Post a Comment