Friday, April 5, 2019

ஏப்ரல் 5

கணித மகன் - எஸ்.எஸ்.பிள்ளை.

ஏப்ரல் 5....இன்று!


                                1770ஆம் ஆண்டு, எட்வர்ட் வாரிங் என்ற கணித அறிஞர்,  ஒரு புதிர்த் தேற்றத்தை உருவாக்கினார். அது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கணித  மேதை டையோஃபாண்டஸின் எண் தொடர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வாரிங் புதிருக்கு, பொதுவான ஒரு விடை காண, ஒட்டு மொத்த கணித உலகமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததுகூட்டாக அவர்கள் முயன்று, முடிவினைத் தேடிக் கொண்டிருக்கையில், தனியொரு ஆளாக, வாரிங் புதிருக்கு பொதுத் தீர்வினைச் சொல்லி, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தினார் ஓர் இளைஞர்இந்தியாவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு அப்போது 29 வயது. ஐந்து ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு,  10.02.1930 அன்று, வாரிங் புதிருக்கான  தீர்வினை, உலகுக்கு அறிவித்த போது, கணித மேதைகளின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டார் அந்த இளைஞர்.     அவர் தான் எஸ். சிவசங்கர நாராயணப் பிள்ளை (1901-1950).  கணித உலகில் எஸ்.எஸ்.பிள்ளை என்றே இவர் அறியப்படுகிறார்.
                     தென்காசிக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரில், 1901 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, சிவசங்கர நாராயணன் பிறந்தார்.  ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே,  தனது தாய் கோமதி அம்மாளைப் பறிகொடுத்தார். இலந்தூர் என்னும் கிராமத்தில், உறவினர் வீட்டில்,  ஆரம்பக் கல்வியைப் பயின்ற எஸ்.எஸ்.பிள்ளை, செங்கோட்டை நகரில் இருந்த SMSS அரசு உயர்நிலைப் பள்ளியில்,    தனது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது , தந்தை சுப்பையாப் பிள்ளையும் இறந்துவிட, படிப்பு தடைபட்டது. நிலை தடுமாறி நின்றார் எஸ்.எஸ்.பிள்ளை.
                       ஒரு மாணவனின் படிப்பு தடைபடுவதை எந்த ஆசிரியரும் விரும்புவதில்லை. எஸ்.எஸ்.பிள்ளையின் ஆசிரியராய் இருந்த சாஸ்திரியார் என்பவர் , கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டார். தனக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தில் , கணிசமான தொகையை எஸ்.எஸ்.பிள்ளையின் கல்விக்காக ஒதுக்கிய சாஸ்திரியாரை, இவரும் கடைசிவரை மறக்கவில்லை. இண்டர்மீடியட் படிப்புக்காக, நாகர்கோயிலில் இருந்த ‘ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில்’ சேர்ந்த எஸ்.எஸ்.பிள்ளைக்கு, கல்வி உதவித் தொகை கிடைத்தது.
                          பெற்றோரை இழந்த பின்னும், தனது நிலையை உணர்ந்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்திய எஸ்.எஸ்.பிள்ளை , திருவிதாங்கூர் மகாராஜா கல்லூரியில் B.A.(Honours) பட்டத்தை நிறைவு செய்தார். எந்த நேரமும் கையில் நோட்டும், புத்தகமுமாக அலைந்த இவர், இரண்டாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், கணிதத்தில் மட்டும் நல்ல மதிப்பெண்கள் கிடைத்திருந்தது.
                     சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர வேண்டுமானால், பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பிள்ளை அவர்கள் பெற்றதோ இரண்டாம் வகுப்பு. ஆகவே, இவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. பள்ளிப் படிப்புக்கு உதவி செய்த சாஸ்திரியாரைப் போலவே, இங்கும் இவருக்கு உதவி செய்ய ஒரு மனிதர் காத்திருந்தார். அவர் தான் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்த சின்னத்தம்பி.
                  கடந்த காலத்தில், கணித மேதை இராமானுஜத்திற்கு மட்டும் ஒரு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக் கட்டிய, அந்நாளைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி, எஸ்.எஸ்.பிள்ளை அவர்களின் கணித ஆய்வுக்குத் தடை போட்டால், அது நமக்குத்தான் இழப்பு என்று பேசினார். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், விதியைத் தளர்த்தி இவரைச் சேர்த்துக் கொள்ள வெண்டும் என்று பேசிய சின்னத்தம்பியின் வாதத்திற்குப் பலன் கிடைத்தது. 1927 ஆம் ஆண்டு,   சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார் எஸ்.எஸ்.பிள்ளை.
                 ஆனந்தராவ் மற்றும் வைத்திய நாத சாமி ஆகிய இரண்டு பேராசிரியர்களின் வழிகட்டுதலில் ஆய்வினைச் சிறப்பாக நிறைவு செய்த எஸ்.எஸ்.பிள்ளை, தனது கணித அறிவின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இவருக்கு, D.Sc.(மதிப்புறு அறிவியல் முனைவர்) என்னும் பட்டம் வழங்கப்பட்டது.  இந்திய பல்கலைக்கழக வரலாற்றில், கணிதம் படித்த ஒருவர், இப்பட்டத்தைப் பெறுவதென்பது, அதுவே முதல் முறையாக இருந்தது.
               1929 ஆம் ஆண்டு,  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கணிதப்  பேராசிரியராக பணியில் சேர்ந்த எஸ்.எஸ்.பிள்ளை, அங்கே மனநிறைவுடன், 12 ஆண்டுகள் பணியாற்றினார். தனது முக்கியமான, பெருமைக்குரிய அத்தனை ஆய்வுகளையும் அண்ணாமலை நகரில்தான்  செய்தார். இவர் எழுதி வெளியிட்ட, 76 ஆய்வுக் கட்டுரைகளும் கணித உலகிற்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் என அறிஞர்கள் இன்று வரை சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
                   தனியான குன்றின் மீது ஒரு வீடு, மன்னரின் விழாக்களில் கட்டாயமாக கலந்து கொள்வதிலிருந்து விலக்கு, கணித காங்கிரஸ் சபைக்கு பிரதிநிதியாக தன்னையே அனுப்ப வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை விதித்து, அவற்றை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டவுடன், திருவிதாங்கூர் கல்லூரியில் 1942 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஓராண்டிலேயே மனக் கசப்பு ஏற்பட்டு,பதவி விலகினார். பிறகு, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்.
                  வெளிநாடுகளில் இருந்து இவருக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஐன்ஸ்டீன், ஓபென்ஹெய்மர் போன்ற விஞ்ஞானிகள் இவருடன் இணைந்து பணியாற்ற  விருப்பத்துடன் அழைத்தனர். ஆனால், இந்தியாவில் இருந்து ஆய்வு செய்வதே, தனக்கு  மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது என்று சொல்லி, தனக்கு வந்த  வாய்ப்புகளை எல்லாம் மறுத்து விட்டார்.
                      1950ஆம் ஆண்டு,    அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் , ’சர்வதேச கணிதக் கருத்தரங்கு’ ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் முக்கிய விருந்தினராக எஸ்.எஸ்.பிள்ளை அழைக்கப்பட்டார். கருத்தரங்கு முடிந்த பின்பு, ஓராண்டு காலம் அங்கேயே தங்கி, சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றவும் முடிவு செய்திருந்தார். ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றவும்  சம்மதம் தெரிவித்திருந்தார்.   ஆனால், கணக்கிடப்பட்ட  வாழ்வின் விதி வேறு மாதிரியாக இருந்தது.                          
                 அமெரிக்கா கிளம்பத் தயாரானார் எஸ்.எஸ்.பிள்ளை. மும்பையில் சில கருத்தரங்க வேலைகளால், முதல் பயணத் திட்டம் ரத்தானது. இரண்டாவது முறை, விமான நிறுவனம் பயணத்தை ரத்து செய்திருந்தது. மூன்றாவது திட்டமிடலில் தான், இவர் மும்பையில்  விமானமேறினார். அந்த விமானம் எகிப்து மார்க்கமாக  செல்லக் கூடியது.
                       1950, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து, TWA 903 வகையைச் சேர்ந்த Star Of Mary Land  என்ற அந்த விமானம், இரவு 11.35க்குக் கிளம்பியது. மும்பையிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில், 7 பணியாளர்களும் 48 பயணிகளுமாக மொத்தம் 55 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட போது, கால நிலை நன்றாகத்தான் இருந்தது. பயணித்தவர்களின் நேரம் தான் சரியில்லாமல் இருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, எஞ்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக , விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் பயணித்த 55 பேரும் தீக்கிரையாகினர். இறந்த உடல்களை அடையாளம் கூடக் காண முடியவில்லை. செங்கோட்டையில் பிறந்து, கணித உலகினையே திரும்பிப் பார்க்க வைத்த, எஸ் எஸ் பிள்ளையும்  கரிக்கட்டையாகிப்  போனார்அவரின் முகத்தைக் கூட, மீண்டும் பார்க்க முடியாதபடி செய்தது கருணையற்ற காலம்!.
                          தமிழ்நாட்டில் பிறந்த எஸ்.எஸ்.பிள்ளை அவர்களின் கணித மூளை, கருகிச் சாம்பலாகி, எகிப்துக்  காற்றில் கலந்தது.  ’நியூயார்க் சென்று ,கணித மாநாட்டில் இக்குறிப்புகளை வெளியிடுவேன், இதன் மூலம் கணித உலகில் இந்திய தேசம் அழியாத புகழைப் பெறும்’, என்று சொல்லி, மகிழ்வோடு உயர்த்திக் காண்பித்த அந்த நோட்டுப் புத்தகத்தையும் எரிதழல் விழுங்கி விட்டது. இவரது மறைவின் தாக்கம், கணித ஆராய்ச்சிகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை, சர்வதேச கணித மன்றம் நன்றாகவே உணர்ந்திருந்தது.  
                                 ஈடி பெல் என்ற கணித அறிஞர்,  ‘Men Of  Mathematics’ என்ற பெயரில் , தலைசிறந்த கணித அறிஞர்களைத் தொகுத்திருந்தார். அதில் இந்தியாவில் இருந்து இருவர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அந்த இருவருமே தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு.  ஆம்,   ஒருவர்  ராமானுஜம். மற்றொருவர் எஸ்.எஸ்.பிள்ளை.
                  எஸ்.எஸ்.பிள்ளை எழுதிய கட்டுரைகள், அவரது கண்டுபிடிப்புகள் ,எழுதிய கடிதங்கள் என யாவும் தொகுக்கப்பட்டு, ‘Collected Works of  S.S.Pillai’ என்ற பெயரில், 2009 ஆம் ஆண்டு, தொகுப்பு  நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
                                                               வாரிங் புதிருக்கான பொதுத்  தீர்வு கண்டதும், ஃபோரியர் தொடருக்கு விடை கண்டுபிடித்ததும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. பகா எண்களை அடிப்படையாகக் கொண்டு, 1,4,27,1354….என்ற எண் தொடரை உருவாக்கிக் காட்டினார். அத்தொடருக்கு ”எஸ்.எஸ்.பிள்ளை தொடர் ” என பெயரிடப்பட்டது.  ஃபிபனாசி தொடர், லூக்காஸ் தொடர், ஃபோரியர் தொடர் என பல கணித மேதைகளை அறிந்த அளவுக்கு, எஸ்.எஸ்.பிள்ளையின் தொடரையும், அவரது வாழ்வையும் – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யாதது, ஏனோ தெரியவில்லை. 
             காலம் மறந்து கொண்டிருக்கும் - கணித மகனாக மாறிக் கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.பிள்ளை. ஆனால், நாம் நினைவில் நிறுத்த வேண்டிய  முக்கிய மனிதர்களுள் இவரும் ஒருவர். கணிதத் துறையில்,  தமிழகம் கொண்டாட வேண்டிய  அறிவு ஜீவிகளில் இவர் முக்கியமானவர்.                      
                              மறக்கப்பட்ட,  மறைக்கப்பட்ட  மாமனிதர்களை – வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி , வழிகாட்டும் பணியை, ஆளும் அரசு பாரபட்சமின்றி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அதனை ஆன்றோர்களும், ஆசிரியர்களும் முன்னெடுப்பது தானே  நியாயம்!      
                                      

No comments:

Post a Comment