Friday, May 3, 2019

மே 3

ராஜதந்திரி - வி.கே.கிருஷ்ண மேனன்

மே 3...இன்று!


       "India has been fortunate to have had not only a glorious heritage and of culture and civilisation           but a succession of great men from the Buddha to Gandhi, from Ashoka to nehru, from                         Kautilya  to Krishna Menon"  -  K.R.Narayanan (1984)
   
                   1962 ஆம் ஆண்டு,  இந்தியப் பொதுத் தேர்தல் தொடர்பாக அட்டைப் படத்துடன் செய்தி வெளியிட்டது, புகழ்மிக்க  “டைம்” இதழ்.  அந்த இதழின் அட்டைப் படத்தை அலங்கரித்தது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அல்ல. மாறாக,  வி.கே.கிருஷ்ண மேனனின் படம்.    அதற்குக் காரணம் இருந்தது.          

              1961ஆம் ஆண்டு, நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில், வட மும்பைத் தொகுதி தனித்த கவனம் பெற்றிருந்தது. அத்தொகுதியில், காந்தியின் அணுக்கச் சீடராக இருந்த ஆச்சார்ய கிருபாளினிக்கும், அந்நாளைய ராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனனுக்கும் இடையே நேரடிப் போட்டி இருந்தது. பிரச்சாரம் தனி நபர் சார்ந்து , தரம் தாழ்ந்ததாக இருந்தது. உலகமே தேர்தல் முடிவுகளுக்காக காத்துக் கிடந்தது. முடிவில், கிருஷ்ண மேனன் மாபெரும் வெற்றி பெற்றார். கிருபாளினியை விட இரு மடங்கு ஓட்டுக்கள் அதிகம் பெற்று, இந்திய அரசியலில் நேருவுக்கு அடுத்த முக்கிய ஆளுமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 

                    அப்போது, சோவியத் அரசை ஆட்டுவித்த ரஸ்புடீன் போல, நேருவின் வழியாக இந்திய அரசை ஆட்டுவிக்கிறார் கிருஷ்ண மேனன் என்ற சொற்கள் உலக அரங்கில் சத்தமாக பேசப்பட்டன. அதனால் தான்,  இவர்   இந்தியாவின் செல்வாக்கு மிக்க இரண்டாவது மனிதர்  என்றும், இந்தியாவை ஆட்டுவிக்கும் பாம்பாட்டியும் (Snake-Charmer) இவர்தான் என்றும் கட்டுரை வெளியிட்டது Time Magazine. மேற்கத்திய நாடுகள், கிருஷ்ண மேனன் மீது, வெறுப்பை உமிழ்வது எப்போதுமே நடக்கக்கூடியது தான். ஏனெனில் தனது வாதத் திறமையால், சர்வதேச அரங்கில்  இந்தியாவின் கருத்தை வலிமையாகக் கூறி, உலக நாடுகளின் வாயை அடைப்பதில் இவர் சிறந்த ராஜதந்திரியாகத் திகழ்ந்தார்.
                  இவரது வாழ்வு, சுயநலமிக்க ஏனைய அரசியல்வாதிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. போற்றுதலையும், தூற்றுதலையும் பொருட்படுத்தாமல் , தனது சிந்தனை என்ன சொல்லுகிறதோ, அதையே தைரியமாகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.  ’இவர் ஒரு எரிமலை’, என்று பொருத்தமாகவே  இந்திரா காந்தி குறிப்பிட்டார். ஆம், வி.கே. கிருஷ்ண மேனன்(1896-1974) இந்தியா ஈன்றெடுத்த மிகச் சிறந்த ஆளுமைகளுள்  ஒருவர்.

            கேரள மாநிலம், கோழிக்கோடு அருகில் உள்ள பன்னியங்கரா என்னும் ஊரில், 1896 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி வி.கே.கிருஷ்ண மேனன் பிறந்தார். இவரது பெற்றோர் கோமத் கிருஷ்ண க்ரூப் - வேங்கலில் லெட்சுமிக் குட்டி அம்மா. தந்தை ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார்.  இவரது குடும்பப் பெயரான வேங்கலில் என்பதை இணைத்து, இவர் வி. கே. கிருஷ்ண மேனன் என்று அழைக்கப்படுகிறார். 
              தலச்சேரியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற கிருஷ்ண மேனன், கோழிக்கோட்டில் உள்ள சாமுத்திரி கல்லூரியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு, 1918 ஆம் ஆண்டு, சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில், வரலாறு மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படித்தார். கல்லூரிப் படிப்புக் காலத்தில் தான், அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கிறது. தியாஸஃபிகல் சொசைட்டியில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொள்கிறார். “Brothers of Service ” அமைப்பில் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்குகிறார். இவரது அறிவும், ஆற்றலும், செயல்பாடும் ஏனையோரிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டின.  
                        அன்னிபெசண்ட் அம்மையாரின் அன்பிற்குப் பாத்திரமான கிருஷ்ண மேனன், அம்மையாரின் உதவியால்  1924ஆம் ஆண்டு லண்டன் புறப்படுகிறார்.  லண்டன்  பல்கலைக்கழகக் கல்லூரியில், உளவியல் பாடத்தில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற கிருஷ்ணமேனன்,  அரசியல் அறிவியல் பாடத்திலும் எம்.எஸ்சி   பட்டம் பெற்றார். க்ளாஸ்கோ சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்.   
                 ஆலன் லேன் என்பவருடன் இணைந்து, பென்குயின் மற்றும் பெலிகன் நிறுவன  புத்தக வெளீயீட்டுப் பணியாளராக சில காலம் வேலை பார்த்தார். ”Bodley Head" மற்றும்   "20th Century Library"    ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் , இவர் லண்டனில்  வேலை செய்திருக்கிறார். 
                      1934ஆம் ஆண்டு, இங்கிலாந்து தொழிலாளர் கட்சியில் இணைந்த  கிருஷ்ண மேனன், புனித பான்கிராஸ் பகுதியின் கவுன்சிலராக இரண்டு முறை  தேர்வு செய்யப்பட்டர். 1934-1939 மற்றும் 1944-1947 ஆகிய இரு காலப் பகுதியில் கவுன்சிலராகப் பணியாற்றிய கிருஷ்ண மேனன், அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்க மனிதராக வலம் வந்தார்.  அதே வேளையில், லண்டனில் செயல்பட்டு வந்த, இந்தியா லீக் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றி, இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார்.
  அப்போதுதான், ஜவஹர்லால் நேருவுக்கும் இவருக்குமான அழியாத நட்பு ஏற்பட்டது. காந்திக்குப் பிறகு, இந்தியாவை வழிநடத்த, மிகச் சரியான நபர் நேருதான் என்பதை கிருஷ்ண மேனன் எல்லாக் காலங்களிலும் வலியுறுத்தி வந்தார்.
     ஒரே நேரத்தில், இங்கிலாந்தின்  ஏகாதிபத்தியத்தையும், ஜெர்மனியின் நாசிசத்தையும் எதிர்த்துப் பேசி, இரு தரப்பையும் வியப்பில் ஆழ்த்தினார். 
                1947ல் இந்தியா விடுதலை அடைந்த போது, பிரிட்டனுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக கிருஷ்ண மேனன் நியமிக்கப்பட்டார். 1952 வரை அப்பதவியில் இருந்த அவரை,  இங்கிலாந்து அரசாங்கம்  ஒரு தொந்தரவு தரும் மனிதனாகவே பார்த்து வந்தது. இவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கிலாந்தினை மட்டம் தட்டிப் பேசும் வேலையையே செய்து வந்தார். 
             1952ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற இந்தியக் குழுவிற்கு கிருஷ்ண மேனனே ,  தலைமை தாங்கினார். பல்வேறு வகையான அரசியல் சிக்கல்களுக்கு தனது சாதுர்யமான செயலால், முக்கியத் தீர்வினை ஏற்படுத்தித் தந்தார்.  எல்லா நேரங்களிலும், நேருவின் வலதுகரமாகச் செயல்பட்ட கிருஷ்ண மேனன், 1953 ஆம் ஆண்டு, ராஜ்ய சபை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். 1956ஆம் ஆண்டு, இலாகா இல்லாத கேபினட் மந்திரியாக பெறுப்பேற்கிறார். பிறகு,  1957ஆம் ஆண்டு, வலிமை மிக்க பதவியான, இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். நாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதன்படி செயலாற்றினார் கிருஷ்ண மேனன்.
                    1962ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் ஏற்பட்ட தோல்வி, இவருக்கு பலவிதமான நெருக்குதல்களைத் தந்தது. கம்யூனிச, சோஷலிச சிந்தனை கொண்ட இவர் மேல், சந்தேகப் பார்வை வீசப்பட்டது. கிருஷ்ண மேனன் தனது  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  நேருவின் மறைவிற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்.
         1967 தேர்தலில் வட கிழக்கு மும்பைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால், 1969ஆம் ஆண்டு மிட்னாப்பூர்(மே.வங்காளம்), 1971ஆம் ஆண்டு திருவனந்தபுரம் (கேரளா) தொகுதிகளில் சுயேட்சையாக நின்று மகத்தான  வெற்றி பெற்றார். 
                 தனக்குச் சரியென்று மனதில் பட்டதை, மறைக்காமல் நேரிடையாகப் பேசிவிடுவதுதான் கிருஷ்ண மேனனின் சுபாவம். இதன் பொருட்டு, பலவிதமான எதிர்ப்புகளை தனது வாழ்நாள் முழுதும் சந்தித்துக் கொண்டே இருந்தார். அதற்காக தனது இயல்பினை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. உலக அரங்கத்தில், இந்தியாவின் கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக எடுத்து வைத்தார். இவரது பேச்சு,  கேட்போரை வசியம் செய்யும் மாயம் மிக்கதாக இருந்தது.
                   1957ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 23ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டம் கூடியது. விவாதத்திற்கான தலைப்பு “காஷ்மீர் பிரச்சனை”. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிபடப்  பேசும் வாய்ப்பு கிருஷ்ண மேனனுக்கு வழங்கப்பட்டது. இந்தியத்  தரப்பின் நியாயத்தை எடுத்துச் சொல்லிய  இவரது பேச்சை, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தன. 7 மணி நேரம், 48 நிமிடங்கள் இடைவிடாது பேசினார் கிருஷ்ண மேனன். களைப்பின் காரணமாக, மூர்ச்சையடைந்து கீழே விழுந்த பிறகுதான் பேச்சை நிறுத்தினார். ஐ.நா.சபை இந்தியத் தரப்பின் நியாயத்தைப் புரிந்து கொண்டது. அப்போது, கிருஷ்ண மேனன் என்ற பெயருடன், ’காஷ்மீர் நாயகன்’ என்னும் பட்டம் இணைந்து கொண்டது. இன்று வரைக்கும் ஐ.நா.சபையின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட  மிக நீண்ட உரை அதுதான்.
              1961ஆம் ஆண்டு, நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,  ராணுவத்திற்காக சைனிக் வகைப் பள்ளிகளைத் தொடங்கினார் கிருஷ்ண மேனன். தற்போது, நாடெங்கும் 26 சைனிக் வகைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இராணுவ அமைச்சராகப் பணியாற்றிய போதும்கூட, அணு ஆயுதங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடினார். எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸலுடன் இணைந்து,  அணு ஆயுதப் பயன்பாட்டிற்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுத்தார்.  
                           
       1948ல், இங்கிலாந்தில் தூதரக அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், இராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் கிருஷ்ண மேனனுக்கு பங்கிருந்தது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நேரு அரசின் மீதான குற்றச்சாட்டு அது. இதனை விசாரிக்க, தனியாக விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள்  நிரூபிக்கப்படவில்லை. மக்கள் மன்றமும் அதனைப்  பொருட்படுத்தவில்லை.  இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், நேரடி மக்கள் அரசியலில் நுழைந்தார் கிருஷ்ண மேனன். காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், சுயேட்சையாகவும் நின்று வெற்றிகளைக் குவித்த இவர், 1974ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தனது 78 வது வயதில் இறந்து போனார். 
                  
                  சில நேரங்களில், கோபம் நிறைந்த, நயமற்ற வார்த்தைகளுக்காக - பலரால்  இவர் வெறுக்கப்பட்டாலும் இவரது தேசப் பற்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. இந்தியாவின் விடுதலைக்காகவும், விடுதலைக்குப் பின் இந்தியாவினை வலிமைமிகு தேசமாக கட்டமைப்பதற்காகவும் தனது வாழ்நாள் முழுக்கப் பாடுபட்ட கிருஷ்ண மேனன், இன்று மறக்கப்பட்ட மனிதராகி விட்டார்.  
                               தனது துடுக்குத்தனமான வார்த்தைகளின் வழியே, எண்ணற்ற விரோதிகளைச் சம்பாத்தித்தவர் கிருஷ்ண மேனன். ஆனால், வாழ்நாள் முழுக்க  சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க நேர்மையாளராகவே இருந்திருக்கிறார்.  தூதரக அதிகாரியாகப் பதவி வகித்த கிருஷ்ண மேனன் அதற்காக ஊதியமேதும் பெற்றுக் கொள்ளவில்லை. சில காலம், ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாக வாங்கிய மேனன், பின்னாளில் அதனையும் மறுத்து விட்டார். அதிகாரிகளுக்குரிய மாளிகையைத் தவிர்த்து விட்டு, எளிய ஓர் அறையிலேயே தங்கினார். இயன்ற வரைக்கும், பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்.  எளிய சைவ வகை உணவுகளையே சாப்பிட்டார். புகை, மது, காஃபி போன்றவைகளை அறவே தவிர்த்தார். 
     கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல், தேசத்திற்காக உழைத்த கிருஷ்ண மேனன் -  கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பெருமைப்படுத்தப்பட வேண்டிய மனிதர்களுள் ஒருவர் என்பதில் மாற்றமில்லை.
                         புகழ்ச்சியும், இகழ்ச்சியும் தருவதில், ஒரு மனிதன்  பயன்படுத்தும் வார்த்தைகள் தான் முக்கியப் பங்காற்றும் என்பதற்கு கிருஷ்ண மேனன் வாழ்வு ஒரு நல்ல உதாரணம்.  அவர் அடைந்த உயரங்களும், புகழும் அவரது  நாவன்மையால் வந்தன. அதேபோல, பிரச்சனைகளையும் வெறுப்பையும் அதே நாக்குதான், அவருக்குப்  பெற்றுத் தந்தது. 
                
                     ஆம், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். ஏனெனில், வாழ்வதும், தாழ்வதும் நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் தான் இருக்கிறது.!
                     
        

No comments:

Post a Comment