Tuesday, April 2, 2019

ஏப்ரல் 2

மூழ்காத தமிழருவி - வ.வே.சு.


ஏப்ரல் 2…இன்று!                  

                        கம்பரையும், திருவள்ளுவரையும் தமது வழிபடும் தெய்வங்களாகக் கொண்ட தமிழ் பக்தன்; தமிழ், ஆங்கிலம்,லத்தின் உள்ளிட்ட ஏழு மொழிகளில் புலமை மிக்க மிகச் சிறந்த   தமிழறிஞர்;  தமிழ்ச் சிறுகதை உலகின் பிதாமகன்களில் ஒருவர்; பாரத நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட ,  தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்; திருச்சியில் பிறந்து, அம்பாசமுத்திரம் அருவிக்குள் மூழ்கி - அகாலமான வ.வே.சு.(1881-1925),  தமிழுலகம் மறக்கக் கூடாத, மறக்க முடியாத  - மாமனிதர்களுள் ஒருவர்.             
                   திருச்சிராப்பள்ளி நகருக்கு அருகில் உள்ள வரகனேரியில், 02.04.1881 ஆம் நாள் வ.வே.சு. பிறந்தார். இவரது பெற்றோர் வேங்கடேச ஐயர் – காமாட்சியம்மாள். தாய் காமாட்சியம்மாள் கரூர் அருகே உள்ள சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர்.    அழகும், அறிவும் நிறைந்த தன் பிள்ளைக்கு,  சுப்ரமணியன் எனப் பெயரிட்டார் வேங்கடேச ஐயர். வரகனேரி வேங்கடேச சுப்ரமணியன் என்ற பெயரே, பின்னாள்களில்  வ.வே.சு என அழைக்கப்படலாயிற்று.

                    திருச்சியில் உள்ள புகழ் பெற்ற புனித ஜோசப் கல்லூரியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார் வ.வே.சு.. பட்டப் படிப்பை நிறைவு செய்வது வரை, அங்கேயே தொடர்ந்து படித்தார். 1895ஆம் ஆண்டு, மெட்ரிகுலேஷன் தேர்வில், ஒட்டுமொத்த சென்னை மாகாணத்தில், ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். வரலாறு, லத்தீன், பொருளாதாரம் பாடங்களை முதன்மையாகக் கொண்டு, பி.ஏ. பட்டம் பெற்றார். பி.ஏ. பட்டப் படிப்பில், சென்னை மாகாணத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றார். லத்தீன் பாடத்தில் முதன்மைச் சிறப்பில் வெற்றி பெற்றார்.

                            பிறகு சென்னை சென்று, வக்கீலுக்குப் படித்து, சில காலம் , சென்னை மாவட்ட வழக்கறிஞராகப் பணியாற்றினார். வ.வே.சு.வின் மைத்துனர் பசுபதி அவர்களின் ஆலோசனைப்படி, 1907ஆம் ஆண்டு, ரங்கூன் வழியாக லண்டன் புறப்பட்டார் வ.வே.சு. பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்ற வ.வே.சு, அங்கே இருந்த “இந்தியா ஹவுஸில்” தங்கினார். அங்கிருந்த போது தான், வ.வே.சு.வின் உள்ளத்தில் சுதந்திர நெருப்பு, சுடர்விடத் தொடங்கியது. அங்கே தங்கியிருந்த முப்பது மாதங்களும், இந்திய சுதந்திரத்திற்காகவே இவரது கண்கள் விழித்துக் கொண்டிருந்தன.

                 ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா என்ற  தேச பக்தரால்,  இந்திய இளைஞர்களுக்காக லண்டனில் நடத்தப்பட்ட விடுதி தான் “இந்தியா ஹவுஸ்”.  வ.வே.சு. அங்கிருந்த போதுதான், வீர சாவர்க்காரின் நட்பைப் பெற்றார். பிபின் சந்திர பால், காமா அம்மையார், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

                      லண்டனில் ரகசியமாக இயங்கிய “அபிநவ பாரத் சங்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டார்.  சங்கத்தில் இருந்த இளஞர்களுக்கு முறையான போர்ப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. வ.வே.சு.வும் ஒரு ராணுவ வீரருக்குரிய அனைத்து பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே, இயக்க உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நபராக மாறினார்.

             வ.வே.சு.வால் பயிற்சி அளிக்கப்பட்ட மதன்லால் திங்க்ரா, 1909ல் இந்தியர்களை துச்சமாக மதித்த கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்று விட, இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த புரட்சி வீரர்கள் பலரும் தலைமறைவாகினர். வீர சாவர்க்காரின் ஆலோசனைப்படி, வ.வே.சு., நாடு திரும்பினார். இவரை பிடிக்கக் காத்திருந்த பிரிட்டிஷ் உளவாளிகளின் கண்களை ஏமாற்றி,  பிரான்ஸ், துருக்கி, கொழும்பு வழியாக, 1910ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். லண்டனில், பாரீஸ்டர் பட்டமளிப்பு விழாவில், ’பிரிட்டிஷ்  ராஜ விசுவாசப் பிரமாணம்’ எடுத்துக் கொள்ள மறுத்ததால், இவர் மீது ராஜ துரோக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.  

                   புதுச்சேரி வந்த வ.வே.சு, ’தர்மாலயம்‘ என்ற இல்லத்தை அமைத்தார். அங்கே, சுதந்திர தாகம் உள்ள இளைஞர்களுக்கு, சிலம்பம், கத்திச் சண்டை, குஸ்தி, துப்பாக்கி சுடும் பயிற்சி என எல்லாக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.  மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மாச்சாரி, வ.ரா., மகான் அரவிந்தர் போன்றோருடன் இணைந்து இந்திய விடுதலைக்காகத்  தொடர்ந்து பாடுபட்டார்.

                  காந்தியடிகளை இரண்டாம் முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு, புதுச்சேரியில் இவருக்கு வாய்த்தது. லண்டனில் காந்தியடிகளை முதன் முறை சந்தித்த  போது இருந்த தீவிரத்தன்மை , தற்போது இல்லை.  வ.வே.சு கனிந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். தன்னிடமிருந்த துப்பாக்கியை காந்தியிடம் ஒப்படைத்த வ.வே.சு., அஹிம்சை முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

             முதல் உலகப் போர் நிறைவடைந்த பிறகு, வ.வே.சு.வுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்த மண்ணை மிதிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது.  1920ஆம் ஆண்டு, தனது ஞான பூமியான, திருச்சி- வரகனேரி வந்து சேர்ந்த போது, மிகவும் நெகிழ்ந்து இருந்தார் வ.வே.சு..       

            பாரதியார் ஆசிரியராக இருந்த , ‘இந்தியா’ பத்திரிக்கைக்கு இவர் எழுதிய கட்டுரைகள், மிகத் தீவிரமானவை. அவை வாசிப்பவர் நெஞ்சில்,  சுதந்திர நெருப்பை கனன்றெழச் செய்தன. 1920ஆம் ஆண்டு, தேசபக்தன் இதழில் எழுதிய கட்டுரைக்காக, இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கட்டுரை எழுதினால், எழுதியவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவது என்பது, ஆட்சியளார்கள் காலம்காலமாக செய்து வருவதுதானே! இவரும் பெல்லாரி சிறைச்சாலையில்  இரண்டு  ஆண்டுகளைக் கழித்தார்.  

              சிறையில் இருந்த போது, Kamba Ramayana – A Study என்ற விமர்சன நூல் ஒன்றை எழுதினார் வ.வே.சு. 400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நூலில், உலகின் தலைசிறந்த இலக்கிய நூல்களோடு கம்பராமாயணத்தை ஒப்பிட்டு எழுதினார். பத்து கதாபாத்திரங்களை விரிவாக ஆய்வு செய்து கட்டுரைகளாக்கினார். ஏறக்குறைய 4000 கம்பராமாயணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில்  எழுதப்பட்ட இந்த தமிழ் இலக்கிய விமர்சன நூல், இவ்வகை நூல்களில் முன்னோடியானது மற்றும் முக்கியமானது.

                  1916ஆம் ஆண்டு, வ.வே.சு எழுதி வெளியிட்ட, The Kural or The Maxims of Thiruvalluvar என்ற திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் மிகவும் சிறப்பானது. 44 பக்க முன்னுரையுடன் வந்த இந்த நூல், வள்ளுவர் சந்த நயத்துடன் தமிழில் எழுதியதைப் போன்றே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒன்றாகும். மேலும், சங்க இலக்கியப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

               தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்திற்குக் கொண்டுசென்றது போலவே, பிற நாட்டு இலக்கியங்களை தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். இத்தாலியைச் சேர்ந்த புனித அகஸ்டஸின் நூல், எமர்சனின் கட்டுரைகள் போன்றவற்றை  தமிழுக்குக் கொண்டுவந்தார்.
                   மொத்தமாக,  தமிழில் இவரது நூல்கள் ஏழு புத்தகங்களாக வந்துள்ளன. இவரது, ’மங்கையற்கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை , தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் எனலாம். சிறுகதை வடிவத்திற்கு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய தமிழின் முதல் சிறுகதை, ‘குளத்தங்கரை அரச மரம்’, இத்தொகுப்பில்தான் உள்ளது.
         
                 1897 ஆம் ஆண்டு,  வ.வே.சு.வின் பதினாறாவது வயதில், அத்தை மகள் பாக்கியலெட்சுமியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள் பட்டம்மாள் இளம் வயதிலேயே இறந்து விட்டார். இரண்டாவது மகள் சுபத்ரா. மகனின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.  இரு பிள்ளைகள் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார். 

         1923 ஆம் ஆண்டு, கல்லிடைக்குறிச்சியில் குருகுலம் ஒன்றைத் தொடங்கினார். பொருளாதாரக் காரணங்களால் ,  அடுத்த ஆண்டே, குருகுலத்தை சேரன்மாதேவி ஊருக்கு மாற்றினார். தனது இரு பிள்ளைகளையும் அங்கே தான் படிக்க வைத்தார். குருகுலத்தில்  அனைத்து சாதியினரையும் சேர்த்துக் கொண்டார். வேதங்களுடன் உபநிடதங்கள், பைபிள், குரான், தமிழிலக்கியங்கள் யாவும் அங்கே அனைத்து மாணவர்களுக்கும் கற்றுத் தரப்பட்டன. 

     பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவர் மீது, களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றம் சாட்டுவதும், திரும்பத் திரும்ப அதனைச் சொல்லி, குற்றத்தை உண்மையாக மாற்ற முயல்வதும் வரலாற்றில் எப்போதும் உண்டு. விளையாட்டு. வ.வே.சு.வின் குருகுலம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு தனி உணவும், ஏனைய மாணவர்களுக்கு தனியாகவும் உணவு வழங்கப்படுகிறது. இப்படியாக வ.வே.சு. ஐயர், மாணவர்களிடையே  சாதிய வேறுபாடு காட்டுகிறார் என காங்கிரஸ் கட்சிக்குள் பூசல் வெடித்தது.

       ஆசிரமம் நடக்க பொருளுதவி செய்து, தன் பிள்ளைகள் இருவருக்கும் தனிப் பந்தி வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குருகுலத்தில் சேர்க்கப்பட்ட  இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே தனிப்பந்தி முறை அங்கு இருந்தது. கடுமையான வைதீக குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு அளித்த வாக்குறுதியைக்  கைவிட அவர் விரும்பவில்லை. அரசியல் பூசல்களை புறந்தள்ளிச் செல்லவே வ.வே.சு. விரும்பினார். ஏனெனில் அவர் மனதில் சாதிய வேறுபாடுகள் ஒருபோதும் இருந்ததில்லை. 

           தனது இரு பிள்ளைகள் சுபத்ரா மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரையும் எல்லா மாணவர்களுடன் சேர்ந்தே உணவு உண்ணச் செய்தார். குருகுலத்தில் கைத்தொழில், ஒழுக்கம் மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக,  அனைவருக்கும் பொதுவாகவே கற்பிக்கப்பட்டன. தனக்குப் பிறகு, ஆசிரமத்தை வழிநடத்த , சாதி பார்க்காமல்  சித்பவானந்தர் என்பவரையே   நியமித்தார். தனது மகனை நியமிக்கவில்லை!.

          1925 ஆம் ஆண்டு, குருகுல மாணவர்களோடு அம்பாசமுத்திரம் அருவிக்குச் சென்றார். அங்கிருந்த சுனை ஒன்றினைத் தாண்டும் போது, மகள் சுபத்ரா தவறி விழுந்து விட, மகளைக் காப்பாற்ற தானும் குதித்தார். இருவருமே மீண்டு வரவில்லை. 03.06.1925 அன்று, தமிழையும், தேசத்தையும் உயிராய் நினைத்த வ.வே.சு.வின் உயிர் நீருக்குள் அமிழ்ந்தது. 

        புதுச்சேரியில்,   தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரா.கனகலிங்கம் என்பவருக்கு, மகாகவி  பாரதியார் பூணுல் அணிவித்த புரட்சிகர செயலை நாம் அறிந்திருக்கிறோம். அதனைத் தலைமை ஏற்று நடத்தியவர் தான் நமது வ.வே.சு..  அவரை சனாதனவாதி என்றும் சாதி வெறியர் என்றும் குறுக்கிச்  சொல்வது மாபெரும் அபத்தம். 

   'சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர் நமது ஐயர் அவர்கள். அவர் மீதான ஐயங்களுக்கு சிறிதும் ஆதாரமில்லை. உடன் உண்ணுதலையும் , வேற்று சாதியினர் இல்லங்களில் உணவெடுப்பதையும் யாம் நன்கு அறிவோம்' என்று ஈ.வெ.ரா. அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரை மிக முக்கியமானது.

    இனி , வருங்கால    அரசியல் வரலாறு இவரை மறுக்க நினைக்கலாம். அல்லது மீட்டெடுத்து உச்சத்தில் நிறுத்தலாம். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது இடம் கல்வெட்டுத் தடம் போன்றது. 


        ஏனெனில்,  தமிழையும்,  தேசியத்தையும் தோள்களில் சுமந்தவர் உயரம் ஒருபோதும் குறைவதில்லை.


  

2 comments: