Monday, April 1, 2019

ஏப்ரல் 1

வன தேவதை - வங்காரி மாத்தாய்

ஏப்ரல் 1...இன்று!

                        கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா, 1964ஆம் ஆண்டு, ஆங்கிலேயரிடமிருந்து  விடுதலை பெற்று, தனிக் குடியரசு நாடானது. கென்யாவில் அப்போது இயற்கை வளங்கள் மரண விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்தன. மக்களிடம் கல்வி பரவலாக்கப்படவில்லை.  பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. பெண்கள்  தமது விடுதலைக்காக ஏங்கிக் கிடந்தனர்.  காலம் மொளனமாக  நகர்ந்து கொண்டே இருந்தது. 
                        1970களின் பிற்பகுதியில், கென்யாவில் மாற்றத்திற்கான ஒரு விதை முளைத்து மேலெழுந்து வந்தது. ஆம், கென்யத் தலைநகரான நைரோபியில்    சத்தமில்லாமல் ஒர் அமைப்பு வளரத் தொடங்கியது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகள் தரப்பட்டன. அதனை வளர்த்து, சரியாகப் பராமரிக்கும் ஒவ்வொருவரையும் பாராட்டி, அவர்களுக்குப் பரிசாக பணமும் (கென்யா ஷில்லிங்) வழங்கப்பட்டது. வீட்டில் இருந்த பெண்களும், குழந்தைகளும் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்கத் தொடங்கினார்கள். மரங்களை வளர்த்தால் கிடைக்கும் பரிசுத் தொகைக்காக ஆண்களும் இதில் இணைந்து கொண்டார்கள். சில ஆண்டுகளிலேயே கென்யாவெங்கும்  பசுமை பரவத் தொடங்கியது.  கால்நடை வளர்ப்பதற்கும், விறகுக்கும் காடுகளின் முக்கியத்துவம் பற்றி,  கென்யப் பெண்கள் விழிப்புணர்வு அடைந்தனர். வருவாய் பெருகத் தொடங்கியதால், பெண்களுக்கு அதிகாரமும் தானாகவே வந்து சேர்ந்தது.
                      இந்த அமைப்பு வெறும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான அமைப்பு அல்ல என்பதை அன்றைய கென்ய அரசு எளிதில் புரிந்து கொண்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அமைதியான வாழ்வு இவைகளோடு, மக்கள் யாவரையும் இந்த அமைப்பு, தேசிய நீரோட்டத்தில் இணைத்தது.  எந்த ஒரு செயலுக்காகவும் மக்கள் இணைந்திருப்பதை ஆட்சியாளர்கள் எப்போதுமே விரும்புவது  இல்லை. கென்ய அரசும்  அப்படித்தான் இருந்தது.  அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டனர் ஆட்சியாளர்கள்.
                        ஆனால், பசுமையைக் காப்பதற்காக, பெண்களும் குழந்தைகளும் இணைவதை அரசால் தடுக்க முடியவில்லை. அரசின் அடக்குமுறைகளை எல்லாம் எதிர்த்து , ”பசுமைப் பட்டை இயக்கம்” (Green Belt Movement) என்ற அமைப்பை முன்னெடுத்தார் வங்காரி மாத்தாய் (1940-2011).  அரசின் நெருக்கடி, கைது நடவடிக்கை, சிறைச்சாலை, குடும்பப் பிரச்சனைகள்    என எல்லாத் தடைகளையும் மீறி, முப்பது ஆண்டுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான மரங்களை வளர்த்து, உலக மக்களின் மனங்களில் வனதேவதையாக வலம் வந்தார் வங்காரி மாத்தாய்.  
                     உலகின் முக்கிய விருதுகள் எல்லாம் இவரிடம் வந்து மகிழ்ந்தன.   அப்பிரிக்க நாடுகளில், பெண் கல்விக்கான வாசனை -  காற்றில் கூடக் கலந்திடாத அந்த நேரத்தில்,  வங்காரி மாத்தாயின் சுவாசமே கல்வியாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே.  இவரது ஆய்வு உடற்கூறியல் பற்றியது. மேலும்,  நைரோபி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய முதல் பெண் பேராசிரியரும் இவர்தான்.  அதேபோல,  ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும் இவரே. சுற்றுச்சூழல், அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக, 2004ஆம் ஆண்டு, நோபல்  விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், உலகெங்கும் பல்வேறு  நாடுகளில் இருந்து, 49 சர்வதேச விருதுகள் இவரது பணியை அங்கீகரித்தன. கென்ய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் சில காலம் பணியாற்றிய வங்காரி மாத்தாய் , ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். 
                          நைரோபி அருகில் உள்ள இகிதி என்னும் கிராமத்தில்,  1940ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் வங்காரி மியூட்டா.  கென்யாவின் பழமையான கிகியூ இனத்தில் பிறந்த வங்காரி மியூட்டா, தனது பள்ளிப் படிப்பை புனித செசீலியா பள்ளியில்  தொடங்கினார். அப்போது அவர் கத்தோலிக்க மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கே அவரது பெயருடன்  மாத்தாய் என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டது. அதுமுதல் அவர் வங்காரி மாத்தாய் என்றே அழைக்கப்பட்டார்.
         1960ஆம் ஆண்டு, அமெரிக்கா சென்று பட்டம் படிக்கும் வாய்ப்பு, 300 கென்யர்களுக்கு வழங்கப்பட்டது.  அதில் ஒருவராக வங்காரி மாத்தாயும் தேர்வு பெற்றார். அங்கு, உயிரியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் படிதது முதல் வகுப்பில் தேறினார். மீண்டும் தனது சொந்த நாடான கென்யா திரும்பினார்.  அவருக்கு எதிரான சவால்கள் அங்கே காத்துக் கிடந்தன.
          நைரோபி பல்கலைக்கழகத்கில் விலங்கியல் துறைப் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பு இவரிடத்தில் நெருங்கி வந்தது. ஆனால், பணி நியமனம் கைகூடவில்லை.    பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அதிலும் ஒரு  பெண் என்பதாலும் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதை எண்ணி, மாத்தாய் மிகவும் மனம் வருந்தினார். ஆனால் சோர்ந்து விடவில்லை.
       ஆர்.ஹாஃப்மன் என்ற மருத்துவப் பேராசிரியரின்  ஆலோசனைப்படி, நைரோபியில் இருந்த கால்நடை மருத்துவமனையில் உடற்கூறியல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். ஹாஃப்மனின் உதவியோடு ஜெர்மனி சென்ற மாத்தாய் , 1967 ஆம் ஆண்டு , உடற்கூறியல் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.  ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்ற  பெண் என்னும் பெருமை இவருக்குக் கிடைத்தது.
             மீண்டும் நாடு திரும்பிய மாத்தாய், உடற்கூறு அறிவியல் துறையில் முதுநிலைப்  பேராசிரியராக, நைரோபி பல்கலைக்கழகத்தில் சில காலம் பணியில் இருந்தார். அதே நேரத்தில் பல்வேறு வகையான சமூக அமைப்புகளிலும் பங்கெடுத்து , தேச நலனுக்காக தனது ஆற்றலைச் செலவழித்தார்.
          1969 ஆம் ஆண்டு, ம்வாங்கா என்பவரோடு  திருமணம் நடந்தது.  ம்வாங்கா கென்யா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட போது, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க , மாத்தாயின் உதவியை நாடினார். சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, வேலையும் கொடுப்பது என்ற திட்டத்தில் தான், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வங்காரி மாத்தாய் தொடங்கினார். அதன் பொருட்டு,  கல்லூரிப் பணியை ராஜினாமா செய்தார்.
           1977, ஜூன் 5 ஆம் தேதி, 7 மரக்கன்றுகளை நட்டு, பசுமைப் பட்டை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கத்தில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்தினார். மரக் கன்றுகளை முறையாகப் பராமரித்து வளர்ப்பவர்களுக்கு ஊதியமும் தரப்பட்டது. மரங்கள் வளர்ப்பதும், விறகு கட்டி வருவதும என பெண்களின் ஈடுபாடு, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. ஆட்சியாளர்கள் அஞ்சத் தொடங்கினர். ஒன்பது பேர் கூடி நின்று பேசுவது கூட தவறாக அறிவிக்கப்பட்டது. இயக்கத்தின் சார்பில் அனுமதி பெற்று, மக்களிடம்  பேசினார் மாத்தாய்.   கென்யா மட்டுமின்றி, ஆப்பிரிக்கா முழுக்க தனது இயக்கத்தை விரிவுபடுத்தினார்.
            சில சமயங்களில், மரம் வளர்த்தவர்களுக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல நேரங்களில், அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிக்கல் நிறைந்த காலக்கட்டத்தில், கணவர் ம்வாங்கா இவரை விவாகரத்து செய்தார். மூன்று பிள்ளைகளை வளர்க்கக் கூட வசதியின்றி, மூவரையும் கணவருடனேயே அனுப்பி வைத்தார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், தீர்ப்பு ம்வாங்காவுக்கு சாதகமாக வந்தது.
    வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் , வங்காரி மாத்தாய்க்கு தொடர்பு இருப்பதைக் காரணம் காட்டிய ம்வாங்கா, தனது மனைவி உறுதியான இரும்பு உள்ளம் கொண்டவள் என வசை கூறினார்.  தீர்ப்பினை அறிந்து ஆவேசப்பட்ட வங்காரி மாத்தாய், பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நீதித் துறைக்கே  தகுதியற்றவர் என பேட்டி கொடுக்க, இவரை சிறைக்கு அனுப்பினார் நீதிபதி.   ஆனால், எந்தச் சூழலிலும் தனது நம்பிக்கையையும், இலட்சியங்களையும் இழக்காமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் மாத்தாய். 
                        பூமிப் பந்தினை பசுமையாக மாற்றும் மாத்தாயின் பசுமைப் பட்டை இயக்கத்திற்கு, ஐ.நா. சபையின் ஆதரவு விரைவிலேயே கிடைத்தது. பண உதவியும் கிடைத்தது. தனது பிரச்சனைகளையெல்லாம் தூர எறிந்து விட்டு, மரங்களை நடுவதில் தனது மனதினைப் பறிகொடுத்தார் மாத்தாய். மூன்று கோடிக்கும் அதிகமான மரங்களை வளர்த்துக் காட்டினார். இவரது சேவையைப் பாராட்டிய நோபல் கமிட்டி, 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான விருதினை வங்காரி மாத்தாய்க்கு பெருமையோடு வழங்கியது. 2006 ஆம் ஆண்டு, இந்தியாவும் தனது பங்குக்கு,  இந்திரா காந்தி சர்வதேச அமைதி விருதினை இவருக்கு வழங்கி மகிழ்ந்தது.
                             கென்யாவில் உள்ள,   உஹுரு பூங்காவினை அழித்துவிட்டு, அங்கே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவெடுத்த கென்ய அரசிற்கு எதிரான இவரது போராட்டம், வளரும் தலைவர்களுக்கு ஒரு பாடம். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்,  உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் பூங்காவினைக் காப்பாற்றினார்.
                            எய்ட்ஸ் நோய்க்கான ஹெச்.ஐ.வி வைரஸ் என்பது  மேற்குலக விஞ்ஞானிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆப்பிரிக்க மக்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூட அது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று இவர் சொன்னதாக, The standard  பத்திரிக்கை சொன்னது. அதனை முதலில் மறுத்தார் மாத்தாய். பிறகு, டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் , “ எய்ட்ஸ் பற்றிய உண்மையை மக்களுக்கு நாம் அவசியம் சொல்ல வேண்டும். அது எவ்வாறு உருவானது என்பதை மறைக்கக் கூடாது. நிச்சயம் அது குரங்குகளிடமிருந்து வரவில்லை” என்று சொன்னார். தனது வாழ்நாள் முழுக்க , தனக்கு மனதில் பட்டதை சொல்லவும், செய்து முடிக்கவும் அவர் தயங்கியதே இல்லை.
                        2011ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி , மாத்தாய் இறந்து போனார். கர்ப்பப் பையில் உருவான புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சையின் போது, நைரோபி மருத்துவமனையில் இவர் மரணமடைந்தார்.  அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் கென்யா உள்ளிட்ட அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் இவருக்கு நினைவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதும், மரங்களால் சூழப்பட்ட இவரது நினைவு இல்லங்கள் , மரங்களின் அவசியத்தைப் பேசியபடியே அசைந்து கொண்டிருக்கின்றன.
                               வங்காரி மாத்தாய் மண்ணில் புதைந்து, விதைகளுக்கு உரமாகி, மரமாய் வளர்ந்து, வான் பார்த்துக் கொண்டிருக்கிறார். காடுகள் அழிப்பைக் காணும் போதெல்லாம் சுருங்கிக் கொண்டிருக்கிறார். ஏனெனில், ஒரு காட்டை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது அவருக்குத் தெரியும்!.
                   பூமிப் பந்தில் ஈரம் உள்ளவரை தான், இங்கே மானுடப் பறவை உயிர் வாழ முடியும். கருத்தின்றி காலம் கடத்தி,   யாவும் இழந்த பிறகு, ஒரு சொட்டு தண்ணீருக்காக, கடைசி  மனிதன் அலையும் நாள் வந்துவிடக் கூடாது. விரல்கள் அழுகிய பிறகு, வீணையின் இசை சாத்தியமில்லையே!
                     விழித்துக் கொள்வோம் - மரங்களால் பூமித்தாயை அணைத்துக் கொள்வோம்!

                                                                          
                                 
                     
                                     
                 

No comments:

Post a Comment