Thursday, April 4, 2019

ஏப்ரல் 4

மகத்தான தமிழ்மணி- பெ.சுந்தரம் பிள்ளை.

ஏப்ரல் 4....இன்று!

                    
                 அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
                 கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
                  ஆயினும் நீயே தாய் எனுந் தன்மையின்
                  மெய்ப்பே ராசைஎன் மீக்கொள ஓர்வழி
                  உழைத்தலே தகுதியென்று இழைத்த இந்நாடகம்
                 வெள்ளியதெனினும் விளங்கு நின் கணைக்காற்கு
                  ஒள்ளிய சிறுவிரல் அணியாக்
                  கொள்மதி அன்பே குறியெனக் குறித்தே!


                                          1891 ஆம் ஆண்டு, “மனோன்மணீயம்” என்னும் நாடகத்தை எழுதிய பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897),  ஆசிரியர் சுரிதகத்தில் எழுதிய பாயிரம் இது. 
              ’ நான் கடையன், அறியாத சிறுவன், மலையாள நாட்டில் பிறந்த தமிழன். ஆயினும், தமிழன்னையின் மீது கொண்ட பற்றால், எழுதிய  இந்நாடகம் - வளமற்றது எனினும்,  நினது காலின்  சிறுவிரல் மோதிரமாகவேனும் இதனை அணிந்து கொள்க’  - எனத்  தமிழன்னையிடம் வேண்டி நின்றார் பெ.சுந்தரம் பிள்ளை. தமிழ்ப்பால் அருந்திய யாவருக்கும், அவள் அன்னையல்லவா? பிள்ளையின்  மனோன்மணீயத்தை வாரி அணைத்துக் கொண்டாள். அதனைக்  கை விரல் மோதிரமெனக்  கூறி, முகம் மலர்ந்தாள்.
               தாய்மொழியாம் தமிழுக்கென, ஒரு வாழ்த்துப் பாடலைக் கொண்டு வர, கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசு முடிவு செய்தது. பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு,       மனோன்மணீயம் நாடக நூலில் இடம்பெற்றிருந்த, ”நீராருங் கடலுடுத்த..” எனற   வாழ்த்துப் பாடல்  தேர்வு செய்யப்பட்டது. தமிழின் உயர்வைச்  சொல்லும் போது, பிற மொழிகளின் மீதான விமர்சனம் தேவையில்லை என்பதால்,  பாடலில் இருந்த சில வரிகள் மட்டும் நீக்கப்பட்டன.   
                   1970 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 23 ஆம் தேதி, சுந்தரம் பிள்ளை எழுதிய, ’நீராருங் கடலுடுத்த...’   என்ற பாடல், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக  முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால், மோகன ராகத்தில்  இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல்,  எல்லா அரசு நிகழ்ச்சிகளில்  தமிழகம் முழுதும் இசைக்கப்பட்டு வருவது, சுந்தரம் பிள்ளைக்குக் கிடைத்த பெரும் பேறு என்றே சொல்ல வேண்டும்.
                     1855 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி,  கேரள மாநிலம் ஆலப்புழா நகரில், பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தான் சுந்தரம் பிள்ளை.    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பிள்ளையின் குடும்பம், தொழில் காரணமாக ஆலப்புழா பகுதிக்குச் சென்றிருந்தது.
             அந்நாளில், திருவிதாங்கூர் மன்னர்கள், தங்களது ஆளுகைக்கு உட்பட்ட எல்லா நகரங்களிலும் மலையாளம் போலவே,  தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வந்தனர். ஆலப்புழா நகரில் இருந்த தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தார் சுந்தரம் பிள்ளை. பிறகு, திருவனந்தபுரத்தில் இவரது படிப்பு தொடர்ந்தது. அங்கிருந்த மகாராஜா கல்லூரிக்குச் சென்ற சுந்தரம் பிள்ளை, 1876 ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதல் வகுப்புடன் , கல்லூரியின்  முதல் மாணவராகவும் இவரே வந்தார்.
             பட்டப்படிப்பு முடித்தவுடன், திருநெல்வேலி வந்த சுந்தரம் பிள்ளை, ’இந்துக் கல்லூரி பள்ளியில்’ சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான், கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் நட்பு கொள்கிறார். பன்னிரு திருமுறைகள் உட்பட, சைவ சித்தாந்தம் தொடர்பான எல்லா பாடங்களையும் அவரிடம் கற்றுக் கொள்கிறார். பின்னாளில், 1885 ஆம் ஆண்டு, “சைவப் பிரகாச சபை” என்னும் அமைப்பைத் தோற்றுவிக்க இதுவே தூண்டுகோலாக அமைந்தது.
                        மீண்டும் திருவனந்தபுரம் வந்த சுந்தரம் பிள்ளை, 1880ஆம் ஆண்டு, தத்துவவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். தான் படித்த கல்லூரியிலேயே, ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கிறது. கல்லூரியில் தத்துவம் மற்றும் வரலாறு பாடங்களைக் கற்பிக்கிறார். அப்போது, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சி தொடர்பான நூல்களைத் தேடித் தேடி படிக்கிறார்.
             சுந்தரம் பிள்ளையின்  ஆற்றலைக் கேள்விப்பட்டு வியந்த, திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள், அரண்மனையில்  Commissioner of separate என்னும் பதவியை வழங்கினார். 1882-1885 வரை அப்பதவியில் இருந்த காலத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவை யாவும் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது.
             1888ல் வெளிவந்த நூற்றொகை விளக்கம் (சாத்திர சங்கிரகம்) என்னும் கட்டுரை நூல், 1894 ல் வந்த Some early sovereigns of Travancore  என்னும் ஆய்வு நூல் இரண்டும் முக்கியமான நூல்கள் ஆகும். திருஞான சம்பந்தரின் காலம் 12ஆம் நூற்றாண்டுக்கும் பிந்தையது என்று சொன்ன கால்டுவெல்லின் கருத்தை மறுத்து, சான்றாதாரங்களுடன் 1896ல் இவர் எழுதி வெளியிட்ட , 'திருஞான சம்பந்தரின் காலம்' எனும் நூல், ஆய்வு நூல்களுக்கு ஒரு முன்மாதிரி எனலாம்.
              1890-1891 ஆம் ஆண்டு, பத்துப்பாட்டு திறனாய்வு நூல் ஒன்றை எழுதினார். திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை நூல்களை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். The Ten Tamil Idylls என்ற பெயரிலான அந்தப் புத்தகம், 1957ஆம் ஆண்டுதான் நூல் வடிவம் பெற்றது. நாராயண சாமிப் பிள்ளையிடம் கற்ற  யாப்பும், இலக்கணமும் இவர் தமிழை, செழுமை செய்திருந்தது.   இவரது எழுத்துக்கள் மின்னின.
      வாசிப்பு இன்பத்தை நோக்கமாகக் கொண்டு, சுந்தரம் பிள்ளையால் எழுதப்பட்ட நாடக நூலான  “மனோன்மணீயம்” அவரின் எல்லா ஆய்வுகளையும், படைப்புகளையும் பின்னுக்குத் தள்ளி முன் வந்து நின்றுவிட்டது. 1891ல் வெளியிடப்பட்ட இந்நாடக நூல், Edward Lytton என்பவர் எழுதிய ’ The Secret Way’ என்னும் நூலின் தழுவலாகும். மனோன்மணீயம் என்னும் சொல் , அவரது பெயருடனேயே நிலைத்து விட்டது. அவருக்கு தத்துவவியல் பேராசிரியராக இருந்த, ராபர்ட் ஹார்விக்குத் தான்  தனது நாடக நூலை காணிக்கையாக்கியிருந்தார்  சுந்தரம் பிள்ளை.
             தனது ஓய்வுக்குப் பிறகு,  மகாராஜா கல்லூரியின் பொறுப்புக்குத் தகுதியானவர் சுந்தரம் பிள்ளையே  என எழுதி வைத்துச் சென்றவர் தான் பேரா.ராபர்ட் ஹார்வி. 1892ஆம் ஆண்டு,  சுந்தரம் பிள்ளையின் பணிகளைப் பாராட்டி,  திருவிதாங்கூர் அரசர் 90 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை வழங்கினார். அதில் அழகான வீடு ஒன்றைக் கட்டிய சுந்தரம் பிள்ளை, அதற்கும்  “ஹார்வே புரம்” என்று பெயரிட்டு, தனது ஆசிரியரின் நினைவைப் பெருமைப்படுத்தினார். சுந்தரம் பிள்ளையின் தமிழ்ப் பணிக்குக் கிடைத்த மனைப் பரிசு, ஒரு கால் நூற்றாண்டு கூட நிலைக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, 90 ஏக்கர் நிலமும் பறிமுதல் செய்யப்பட்ட சோகக் காட்சியும்  நடந்தேறியது.
                         சுந்தரம் பிள்ளைக்கு 1877 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சிவகாமி அம்மாள். இவர்களது ஒரே மகன் நடராஜன். வழக்கறிஞர் பட்டம் பெற்ற நடராஜன்,  பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைச்சராகவும் சில காலம் பதவி வகித்தார்.  1916ஆம் ஆண்டு, நடராஜன், திவானுக்கு எதிராகப் போராடியதால், வழங்கப்பட்ட 90 ஏக்கர் நிலமும் மீண்டும் பறிக்கப்பட்டது. அப்போது,  நீதிமன்றத்தை நாடிய நடராஜனின் கோரிக்கைகள் எடுபடவில்லை. நடராஜனின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர், 1968 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த  ஈ.எம்.எஸ் அவர்களிடம் கோரிக்கை வைக்க, அவரும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால், 2018 ஆம் ஆண்டு  வரை, மனை   இன்னும் வந்து சேரவில்லை!.
                     ஹார்வேபுரம் மனையை திவானின் ஆட்கள் கைப்பற்றும் போது, சுந்தரம் பிள்ளைக்கு வந்த கடிதங்கள் யாவும் எடுத்துச் செல்லப்பட்டன. சுவாமி விவேகானந்தர், மறைமலை அடிகள், உ.வெ.சா போன்றவர்கள் எழுதிய விலை மதிப்பில்லாத கடிதங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை. நேரிலும், கடிதங்கள் வழியாகவும் விவேகானந்தருக்கு, சைவ சித்தாந்தத் தத்துவங்களை சுந்தரம் பிள்ளை விளக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
                 சைவம் மற்றும் திராவிடச் சிந்தனைகளை உரத்துப் பேசிய பல்துறை அறிஞர் சுந்தரம் பிள்ளை, 1897-ஏப்ரல் 26 அன்று  தனது  மூச்சினை நிறுத்திக் கொண்டார். சர்க்கரை நோய் தான், சுந்தரம் பிள்ளையின் வாழ்வினை 42 வயதாகச் சுருக்கியது என சொல்லப்படுகிறது.
                   லண்டன் வரலாற்று ஆய்வு மையம் வழங்கிய FRHS பட்டம்,     M.R.A.S. பட்டம்,  ஆங்கில அரசு வழங்கிய ’ராவ் பகதூர்’ பட்டம்,  ஜெர்மனி பல்கலைக்கழகம் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம் என இவர் பெற்ற பெருமைகள் ஏராளம்.
                 ”ஆரா அமுதம் அனைய தமிழ் வளர்த்த
                  பேராசிரியர் பெருமான்”  -  என  கவிமணி தேசிய விநாயகம் சொல்ல, எல்லா தமிழறிஞர்களும் சுந்தரம் பிள்ளையின் அறிவைக் கொண்டாடினர்.  

                       1855 முதல் 1897 வரை, அவர்  உயிர் வாழ்ந்த  42 ஆண்டுகள் மட்டுமே,  பெ.சுந்தரம் பிள்ளை இங்கிருந்தார் என்பது  நிச்சயம் சரியல்ல. ஏனெனில், பார் உள்ளளவும், அதில் ஊர் உள்ளளவும், தமிழ்த் தேரும் இங்கிருக்கும்.  நீராருங் கடலுத்திய  நிலமடந்தையாம் தமிழ்த்தாயின் எழிலைப் பாராட்டும் - வாழ்த்தும் இங்கிருக்கும். அவ்வாழ்த்தெழுதிய பெ.சுந்தரம் பிள்ளையும் இங்கிருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்தென, காற்றில் கலந்த இவரது வரிகள், காலங்கள் கடந்து ஒலித்துக் கொண்டே இருக்குமல்லவா? . 
                            ஆம்,    வாழ்ந்த காலத்தின் அளவல்ல -  வாழ்ந்த போது ஒருவன் செய்த காரியத்தின் அழகே - அவனது காலத்தைத் தீர்மானிக்கிறது. அதுவே  வரலாறாகிறது.!

                                    










             

               

No comments:

Post a Comment