Wednesday, April 3, 2019

ஏப்ரல் 3

கலாச்சார ராணி - கமலா தேவி சட்டோபாத்யாய். 

ஏப்ரல் 3.... இன்று!


                        ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1926ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கான சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளிவந்த போது, பலத்த சர்ச்சையை அது ஏற்படுத்தியது. காரணம் என்ன தெரியுமா?

                எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், முதன்முறையாக ஒரு பெண் தேர்தலில் போட்டியிட்டதுதான்.  பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தனது கொள்கைகளில் உறுதியாய் இருந்த அந்தப் பெண்மணி , தனது வாழ்நாள் முழுக்க, சமூகத்தில் நிலவிய தேவையற்ற கட்டுக்களை உடைக்கவும், கலை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டார். அவர் தான், கமலா தேவி சட்டோபாத்யாய்.(1903-1988).

                           கமலா தேவி,   அந்தத் தேர்தலில் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், தனது பயணத்திலும் பாதையிலும் உறுதியாய் இருந்தார். பாரத விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகம்  தயாரிக்கப்பட்டது. அப்பிரதியில், அதன்  ஒப்புதலுக்குக் கையெழுத்திட்ட தேசியத் தலைவர்களுள் இவரும் ஒருவர்.  அது மட்டுமல்ல, கையெழுத்திட்ட பெயர்களில் இருந்த,  ஒரே பெண் தலைவரும்  இவரே!

             இந்தியக் கைவினைக் கலை, இந்திய நாடகக் கலை, இந்தியக் கூட்டுறவு சங்க வளர்ச்சி போன்றவற்றில் அவர் ஆற்றிய பணிகள் காரணமாக, ’கைவினைக் கலைகளின் அன்னை’ என்றே அவர் அழைக்கப்படுகிறார்.  யுனெஸ்கோ அமைப்பு, கைவினைக் கலைகளுக்காக தனியொரு பிரிவைத்  தோற்றுவிக்க இவரே முக்கியக் காரணமாக இருந்தார். இவரது சேவையைப் பாராட்டி, 1977 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.

                       1966ஆம் ஆண்டு ராமன் மகசேசே விருது , இந்திய அரசின்  பத்ம பூஷன் , பத்ம விபூஷன் விருதுகள், சங்கீத நாடக அகாடமியின் விருது, கலை மற்றும் கலாச்சாரத்திற்கான இந்திய தேசிய அகாடமியின் விருது என இவர் பெற்ற விருதுகளின்  பட்டியல் மிக நீளமானது.

                             இந்தியப்  பெண்களின் மனதில், தன்னம்பிக்கையையும், முற்போக்கு எண்ணத்தையும் விதைத்த கமலா தேவி  கடந்து வந்த பாதை, போராட்டமும் துயரமும் நிறைந்தது; ஆனால், உறுதியானது.

                   1903ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி,  கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில்  கமலா தேவி பிறந்தார். இவரது தந்தை ஆனந்தையா தாரேஸ்வர், அப்போது  மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில்  இருந்தார். தாயின் பெயர் கிரிஜாபாய்.  தனது மூத்த சகோதரி சகுணா மீது,  கமலா தேவிக்கு அளவு கடந்த பிரியம் இருந்தது. இளம் வயதிலேயே சகுணாவிற்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. சகுணா, கணவர் வீட்டிற்குச் சென்றார். சகோதரியின் பிரிவை கமலா தேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  சில நாள்களில், காரணம் அறியாத வகையில், சகுணா திடீரென்று இறந்தும் போனார்.  கமலா தேவி மனம் உடைந்தார். அதே காலக்கட்டத்தில், கமலாவின்  தந்தை ஆனந்தையாவும் திடீர் மரணத்தைச் சந்திக்கிறார். கமலா தேவியும், அவரது  குடும்பமும் நிலை குலைந்தது. அப்போது கமலாதேவிக்கு ஏழு வயது.!

                        உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறந்து போனதால், சொத்துக்கள் அனைத்தும் ஆனந்தையாவின் உறவினர் மகன் ஒருவருக்கே சென்றது. சட்டப்படி, மனைவிக்கு அப்போது சொத்தில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. ஆனால் கிரிஜாபாய், குடும்பத்தை நடத்த, மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க, நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. கணவரின் சொத்தில் பங்கு இல்லாத போது, தனக்கு வழங்கப்படும் இந்த ஜீவனாம்சத் தொகை தேவையில்லை எனக் கூறிவிட்டார் கிரிஜாபாய். தாயின் மன உறுதியைக் கண்டு, தனது உள்ளத்தை உறுதியாக்கிக் கொண்டிருந்தார் கமலா தேவி.

                      கமலா தேவியின் பாட்டி, தனது பேத்திக்கு இந்திய புராணக் கதைகளையும், கலாச்சார-பண்பாட்டுப் பெருமைகளையும் எப்போதும்  கதைகளாகக் கூறிக் கொண்டே இருப்பார். திடமான உள்ளத்தைப் போலவே, பரந்த அறிவும் கமலா தேவிக்கு இருந்தது.

                  பதினான்கு வயதில் கமலாதேவிக்குத் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த இரண்டாவது ஆண்டில், கணவர் கிருஷ்ணா ராவ் இறந்து போனார். சமூகவியல் பாடத்தில், பட்டப் படிப்பு படிக்க, சென்னை ராணி மேரி கல்லூரிக்குச் சென்றார் கமலா தேவி. ஒரு விதவை கல்லூரிக்குச் சென்று படிப்பதை, அந்நாளைய சமூகம் வெறித்துப் பார்த்தது.

            கல்லூரித் தோழியாக இவருக்கு அமைந்தவர் சுஹாசினி. இவரது தங்கை தான் கவிக்குயில் சரோஜினி நாயுடு. சரோஜினி நாயுடு குடும்பத்துடன் நெருங்கிய நட்பு வளரத் தொடங்கியது. சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அவருக்கும் , கமலா தேவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

                 விதவை மறுமணம் என்பது அசிங்கமாகப் பார்க்கப்பட்ட அந்தக் காலத்தில் , தனது இருபதாவது வயதில், ஹரீந்திரநாத்தை மறுமணம் செய்து கொண்டார் கமலா தேவி. சமூகம் கேலி பேசியதை இந்த இணை சட்டை செய்யவில்லை. இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. அக்குழந்தைக்கு ராமகிருஷ்ண சட்டோபாத்யாய் எனப் பெயரிட்டனர்.   பிறகு, கமலா தேவி தனது மேற்படிப்புக்காக, கணவருடன்  லண்டன் சென்றார். அங்கிருந்த போதுதான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் பற்றி அறிந்து கொண்டார். இந்திய விடுதலைப் போரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும்  விரும்பினார். 

                          நாடு திரும்பிய பின்பு, யாரும் எதிர்பாராத வகையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கன்னடம் மற்றும் சில ஹிந்திப் படங்களில் நடித்தார். கணவருடன் சேர்ந்து, நிறைய மேடை நாடகங்களை அரங்கேற்றினார். பிறகு, சுதந்திரப் போராட்டத்தில் முழு ஆர்வத்தையும் காட்டினார்.

                   1930 ஆம் ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கினார். நாடெங்கும் உப்புச் சத்தியாகிரகத்தை முன்னெடுக்க, ஏழு நபர்களை காந்தியடிகள் தேர்வு செய்திருந்தார். அதில் இடம் பெற்றிருந்த ஒரே பெண்மணி  கமலா தேவி மட்டும் தான்.  மும்பைக் கடற்கரையில் உப்புச் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டார் கமலா தேவி.

                 இரண்டாம் உலகப் போர் சமயத்தில், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, இந்திய விடுதலைக்காக ஆதரவு திரட்டினார். 1947 ஆம் ஆண்டு, இந்திய விடுதலையின் போது, இந்து-முஸ்லீம் இடையே ஏற்பட்ட கலவரங்களால் மிகுந்த மன வேதனை அடைந்தார். பரீதாபாத் நகரில் முகாமிட்டு, ஏறக்குறைய 50000 மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார். அவர்களுக்கு உணவும், இருப்பிடமும், மருத்துவ வசதியும் தந்து உதவினார்.

            1955ஆம் ஆண்டு, பல்வேறு காரணங்களால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , விவாகரத்துக்கு முறையிட்டு, எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார். சமூகமும், உறவினர்களும் வசை பொழியத் தொடங்கினர். ஆனால் கமலா தேவிக்கு  நிறைய பணிகள் காத்துக் கிடந்தன. ஆம், சுதந்திர இந்தியாவின் கைவினை மற்றும் கலாச்சாரத் துறை,  அவருக்காகக் காத்துக் கிடந்தது.

             சுதந்திர இந்தியாவில்,  Indian School of Drama என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.    கைத்தொழில் வளர்ச்சி, பெண் முன்னேற்றம் , பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்காகப் பாடுபட்டார்.  நவீன இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள், நாடகத் துறை போன்றவற்றின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் இவரே ஆதலால், இவர் “இந்தியாவின் கலாச்சார ராணி” என்று அழைக்கப்படுகிறார். 

                   இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள    கமலா தேவி, தனது வாழ்க்கைப் பயண நினைவுகளை,   Inner recesses and Outer Spaces; Memoir என்ற பெயரில் நூலாக எழுதி, 1986 ஆம் ஆண்டு வெளியிட்டார். தனது கடைசி மூச்சு வரை, இந்தியாவின் கலாச்சாரப் பாதுகாவலராக இருந்த கமலா தேவி, 1988ஆம் ஆண்டு, அக்டோபர் 29 ஆம் தேதி, மும்பை நகரில் காலமானார்.  

              கமலா தேவியின் வாழ்வினை நுட்பமாகக் கவனித்தால், ஓர் உண்மை தெளிவாகத் தெரிகிறது. அது,  துன்பத்தில் துவண்டு விடாமல், வசைச் சொற்களை அசை போட்டுக் கொண்டிருக்காமல் - முன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கைப் பயணம் இனிப்பாகத் தித்திக்கும்.

                  ஆம்,       வாதை மிகுந்த வாழ்வினில்  - பாதை சற்றும் மாறாமல் – கடமையை மட்டும் செய்து கிடப்பதே – நிரந்தர  வெற்றியின் ரகசியம்!

                        

No comments:

Post a Comment