நூல் அறிமுகம் - 1
வேலுநாச்சியார் - கே. ஜீவபாரதி.
வளநாட்டிலிருந்து பாலகுறிச்சியில் உள்ள எங்களது பள்ளிக்கூடம் செல்வதற்கு , அரசுப் பேருந்து மட்டுமல்லாது
இரண்டு தனியார் பேருந்துகளும் அப்போது இருந்தன. அவையிரண்டும் அரசுப் பேருந்து நிர்ணயித்திருந்த தொகையையே, பள்ளி
மாணவர்களிடம் பயணச் சீட்டுக்கு கட்டணமாக வசூலித்தன. அந்த இரண்டு பேருந்துகளும் எப்போதும்
கூட்டமாகவே இருக்கும். அவற்றில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் திரையிசைப் பாடல்களுக்காக
ஒரு கூட்டம் அதிலே ஏறும். அரசுப் பேருந்தை முந்திச் செல்லும் வேகத்திற்காக மற்றொரு கூட்டம்
ஏறும். அரசுப் பேருந்து நிற்காத நிறுத்தத்தில்
நின்று, தனது தோழியை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்தினை தெய்வமென நினைத்து ஒரு கூட்டம்
வரும்
நானும் தனியார் பேருந்தைத்தான் அப்போது
தேர்வு செய்திருந்தேன். அச்சடிக்கப்பட்டிருக்கும் பயணச் சீட்டுக்குப் பதிலாக , கார்பன்
தாள் வைத்து நடத்துநர் எழுதிக் கொடுக்கும் பயணச் சீட்டு என்னைக் கவர்ந்திழுத்தது. பயணச்
சீட்டினை விடவும், கார்பன் மை ஓரளவு தீர்ந்தவுடன், நடத்துநர் வீசியெறியும் கார்பன்
தாளைக் கைப்பற்றுவதற்காகவே நான் தனியார் பேருந்தை விரும்பினேன். நடத்துநரோடு நட்பு
கொண்டு, புதிய கார்பன் தாளையும் பெற்றிருக்கிறேன். அதனைக் கொண்டு, பாடப்புத்தகத்தில்
உள்ள படங்களை அச்செடுப்பது அந்நாளைய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
எனக்கு வரையத் தெரியாததால், ஆயக் கலைகளின்
பட்டியலில் ஓவியம் இடம் பெறுவதை எதிர்த்து
கனவுகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலம் அது. கார்பன் தாள் என் கவலைகளைப் போக்கியது. அதில் அச்செடுப்பது சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. முதன்முதலில் எந்தப் படத்தை அச்செடுக்கலாம் என பட்டிமன்றம் நடத்தினேன். என் பலதரப்பட்ட வாதங்களுக்குப்
பிறகு, வரலாறு புத்தகத்தில் உள்ள ஜான்சி ராணியின் படத்தை அச்செடுப்பது என்று நானே தீர்ப்பெழுதினேன்.
என் இளவயது வசீகரங்களில் ஒன்று, ஜான்சியின்
ராணி லெட்சுமிபாய். தனது தோளில் பிள்ளையை துணியில் கட்டிக்கொண்டு, வாளேந்தி குதிரையில் அமர்ந்திருக்கும்
அந்த வரைபடம் என்னால் மறக்க இயலாதது. டல்ஹெளசியின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக
, வாளேந்தி வீர மரணமடைந்த ஜான்சி ராணியை அறியாதவர்கள், யாரும் இங்கு இருக்க மாட்டார்கள்.
இந்திய விடுதலை வரலாற்றில் அவரது இடம் நிரந்தரமான ஒன்றாகி விட்டது.
ஆனால், அவருக்கு இணையாக மாபெரும் வீராங்கனையாக
இருந்த சிவகங்கைச் சீமையின் ராணி வேலுநாச்சியாரை நான் நூலகப் புத்தகங்களில் இருந்துதான்
பின்னாள்களில் கண்டு கொண்டேன். தமிழ் மண்ணில் பிறந்து, வெள்ளையரை ஓட ஓட விரட்டிய வீரப்
பெண்மணி வேலுநாச்சியார் 1730ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஜான்சி ராணியின் காலத்திற்கு முக்கால் நூற்றாண்டு முந்தையவர். தற்போதைய சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் வேலுநாச்சியார் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளதுதான் ஒரே வரலாற்று ஆறுதல்!
கடந்த வாரம், சகோதரர் தமிழ்மணியிடம்,
வாசிப்பதற்காக நூல் கேட்டபோது, கவிஞர் கே.ஜீவபாரதி எழுதிய 'வேலுநாச்சியார் ' என்ற வரலாற்றுப்
புதினத்தைத் தந்தார். அதன் அட்டையில், வலதுகை வாளேந்தியிருக்க, இடக்கை கேடயத்தையும்,
கடிவாளத்தையும் பிடித்தபடி குதிரை மீது அமர்ந்திருக்கும்
வேலுநாச்சியாரின் படம் தான் எனது பழைய நினைவுகளைக் கிளறி எடுத்தது.
நந்தன் இதழில் தொடராக வெளிவந்த
இந்நாவல், 2004ஆம் ஆண்டு குமரன் பதிப்பகத்தால்
புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
வரலாற்று ஆதாரங்களோடு புனையப்படும் நாவல், ஒரு நல்ல
வாசகனை பல கோணங்களில் சிந்திக்க வைக்க வேண்டும். மேலும், கடந்த காலத்தினை மட்டுமே பதிவு
செய்து நகராமல், இன்றைய சமூகத்திற்கு அது வழங்கும் செய்தி என்ன என்பதை அழுத்தமாகவும்
சொல்ல வேண்டும். இப்படி ஒரு வரலாற்று நாவலை எழுதும் முன்பு, ஆசிரியர் கள ஆய்வு செய்திருந்தால்
மட்டுமே , பின்னாள்களில் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களோடு பதிலளிக்கவும் முடியும்.
தமிழக அரசின் பரிசு பெற்ற இந்நாவலை
எழுதிய கே.ஜீவபாரதி , தனது கள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி
இருக்கிறார். நாவல் நிகழ்ந்த களங்களுக்குப் பயணம் செய்த நூலாசிரியர், அதன் படங்களையும் இடையிடையே
இணைத்துள்ளார். (கறுப்பு வெள்ளையில் நகல் எடுக்கப்பட்ட படங்களைத் தவிர்த்து , வண்ணப்படங்களை
பதிந்திருக்கலாம்! ).
இராமநாதபுரம் அரண்மனையில் பிறந்த
வேலுநாச்சியார் சிலம்பப் போட்டியில் தனது ஆசிரியருடன் சண்டையிட்டு வெல்வதில் நாவல்
தொடங்குகிறது. இளம் வயதில் தாயை இழந்த வேலுநாச்சியாரை தன் உயிர்போல நினைத்து, எல்லா
கலைகளையும் கற்றுத் தந்து மகன் போல வளர்த்து
வருகிறார் இராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி.
சிவகங்கைச் சீமையின் இளவரசர் முத்துவடுகநாதருக்கு மணமுடித்துக் கொடுத்தபோது, செல்லமுத்து
சேதுபதிக்கு பேரானந்தம் ஏற்படுகிறது.
தேனிலவுக்கு குற்றாலம் செல்லும் வேலுநாச்சியார்-முத்துவடுகநாதர்
இணை அங்கே எதிர்கொள்ளும் சவால்கள் சுவாரஸ்யமானவை. வேலுநாச்சியார் புகுந்த வீட்டுக்குச்
செல்லும் போது, சிலம்ப ஆசிரியர் வெற்றிவேல் கண்கலங்குவதும், தானும் அவருடன் சென்று
சிவகங்கையில் தங்க விரும்புவதும் அழகான பகுதிகள். பிற்பகுதி கதையில் வெற்றிவேல் முகம்
மாறுவதும் எதிர்பாராத திருப்பம்.
வரி கொடுக்க மறுக்கும் சிவகங்கை,
இராமநாதபுரப் பகுதிகளை நயவஞ்சகமாகக் கைப்பற்ற நினைக்கும் வெள்ளையரின் சூழ்ச்சியில் முத்துவடுகநாதர்
மரணமடைகிறார். சிவகங்கை வெள்ளையரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. வெள்ளச்சி
அம்மாள் என்ற தனது ஒற்றை மகளுடன், வேலுநாச்சியார்
ஆங்கிலேயரை வீழ்த்தி, பத்து ஆண்டுகளுக்குள் இழந்த மண்ணை மீட்டெடுப்பதைத்தான் நாவல் விவரித்துச்
செல்கிறது.
முத்து வடுகநாதருக்கு ஆசை நாயகியாக
இருந்த கவுரி என்ற வேற்று சாதிப் பெண்ணை, தனது கணவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்
வேலுநாச்சியார். அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையிடம் காரணத்தை விளக்கும் போது, சாதியை
மறுத்துப் பேசும் உரையாடல்கள் சிறப்பு.
திண்டுக்கல் சென்று ஹைதர் அலியைச் சந்தித்து
உதவி கோரும் போது, உருது மொழியில் பேசுகிறார்;
வெள்ளையர்களிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார் என நூலாசிரியர் குறிப்பிடும் இடங்கள்
எல்லாம் வேலுநாச்சியார் என்ற மகத்தான ஆளுமையை உயர்த்திப் பிடிக்கின்றன. எதிரிகளை ஒழிக்கும்
பயணத்தில், கூட இருக்கும் துரோகிகளையும் கட்டம் கட்டி வீழ்த்துகிறார். மருது சகோதரர்கள்
துணையுடன் , ஹைதர் அலி கொடுத்தனுப்பிய ஆள் மற்றும் ஆயுதங்களின் உதவியுடன் இழந்த மண்ணை
மீட்டெடுக்கிறார்.
அரியாக்குறிச்சியில் இருக்கும்
வெட்டுடையாள் காளி யார் என்பதும், ஆயுதக் கிடங்கை
மனித வெடிகுண்டாக மாறி தகர்த்தெறிந்த குயிலியின் வரலாற்று ஆதாரம் என்ன என்பதும் இன்று
விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்நாவலில்,
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து புறப்பட்டு, வேலு நாச்சியாருக்குத் துணையாக
இருந்து, ஆங்கிலேயரை எதிர்க்க தனது உயிரை வழங்கிய இரு கதாபாத்திரங்கள் உடையாள் மற்றும்
குயிலி. நூலாசிரியர் நூலின் முன்னுரையில், இந்நாவல் வேலுநாச்சியார், உடையாள், குயிலி ஆகிய முப்பெருந்தேவியர் கதை என்றே குறிப்பிட்டு,
இக்கதாபாத்திரங்களின் உண்மைத் தன்மைக்கு உறுதி கூறுகிறார். வரலாறு விவாதப் பொருளாவது
நல்ல செய்திதான். புதியன பிறக்கலாம்.
ஒரு நாவலை, இதழொன்றில்
தொடராக எழுதும்போது உருவாகும் சிக்கல்கள் சில இருக்கின்றன. குறிப்பாக, நாவலின் அளவு,
கதாபாத்திரங்களின் விரிவு, ஒவ்வொரு அத்தியாயத்தின் நீளம், எதிர்பார்ப்பைத் தூண்டும்
கடைசி பத்தி என சில வரையறைகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இந்நாவலிலும் தொடருக்காக
சில சமரசங்கள் செய்திருப்பது தெரிகிறது.
மேலும், நாவலில் வரும் காலம்,
நில அமைப்பு, புள்ளி விபரங்கள், பொருள்கள் யாவும் வாசகனின் உள்ளத்தில் இயல்பாகச் சென்றமர்தல்
வேண்டும்; வெறும் தரவுகளாக அமைந்து விடக் கூடாது. அவை வரலாற்றுப் புரிதல்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக,
வெற்றி, தோல்வி என்பது, கோட்டையில் பறக்கும் கொடியைக் கொண்டே முடிவு செய்யப்பட்ட
காலம் அது. சிவகங்கைச் சீமையின் ’அனுமன் கொடி’ பறக்கும் காட்சி நாவலில் எங்குமே இல்லை. இராமநாதபுரம் அரசின் கொடி பற்றியும் தகவல்கள்
இதில் வரவில்லை. ஒரு நாவலுக்கு இவையெல்லாம்
அதிக நம்பகத் தன்மையையும் , வாசிப்பின்பத்தையும் வாசகனுக்குத் தரக் கூடும் என்பதால்
இச்செய்திகளும் இடம் பெற்றிருக்கலாம். நான் வாசித்த இரண்டாம் பதிப்பிலும் எழுத்துப் பிழைகள் இருந்தன. தவிர்த்திருக்கலாம்!
நாவலின் இறுதிப் பகுதியில், தனது படையில்
இருந்த வைரவன் என்ற கவிஞர் தொட்டுத்தர மணிமகுடம்
தரிக்கிறார் வேலுநாச்சியார். தந்தையை இழந்து, மாமனாரை இழந்து, தனது ஆசைக் கணவனை
இழந்து நின்ற போதிலும், வீரம் இழக்காமல் எதிரியை
விரட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார். நாவல் முடிந்த அடுத்த கணம், களம் கண்டு, எதிரியை விரட்டும் போது, உயிர் துறந்த
படு மகன் படுக்கை கண்டு, ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்த புறநானூற்றுத் தாய் நினைவில் வந்து
போனாள். ஆம், வீரத்துடனும் விவேகத்துடனும்
செயல்பட்டு, ஆங்கிலேயரை விரட்டிய வரலாறு நமக்குப் பெருமிதம் தருகிறது. வேலுநாச்சியாரின்
வீரமும் பன்முக ஆளுமைத்திறனும் எதிர்வரும் தலைமுறைகளும் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி
ஒரு அறிமுகத்தை இந்த நாவல் நிச்சயம் தரும்.
எளிய நடையில், சுவையாகப் பின்னப்பட்டுள்ள
இந்த நாவல் , முதல் பாகம் தான். பதவியேற்ற பின்பு, மகாராணி வேலுநாச்சியார் சந்தித்த சவால்கள், மகள் மற்றும் பேத்தியை இழத்தல்,
அவரது மரணம் பற்றியெல்லாம் இரண்டாம் பாகத்தில்
வரக்கூடும். அதில், குயிலி மற்றும் உடையாள் போன்று மறக்கப்பட்ட கதாபாத்திரங்களும் வரலாம்!
என் மகள்களுக்கும் வேலுநாச்சியாரை பெருமையோடு அறிமுகம்
செய்கிறேன். நுண்ணறிவு, திடமான உடல், ஆழ்ந்த மொழிப்புலமை, தன்னம்பிக்கை இவற்றுக்குச்
சிறந்த உதாரணம் வேலுநாச்சியார். காலம் உருண்டு
கொண்டே இருக்கிறது. தற்போது, படம் நகலெடுக்க கார்பன் தாள் தேவையில்லைதான். ஆனாலும், இன்று ஒரு கார்பன் தாள் கொடுத்து, படம் அச்செடுக்க
வேண்டுமென்றால் பட்டிமன்றமே தேவையில்லை. வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்தைத் தான் நான் அச்செடுப்பேன்!
No comments:
Post a Comment