Friday, August 2, 2019

பிங்கலி வெங்கையா


கொடியின் வடிவம் - பிங்கலி        வெங்கையா.   

           நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வேளாண்மை, தொழில் துறை என எல்லாத் தளங்களிலும் பங்காற்றியவர்; காந்தியடிகளின் பாராட்டைப் பெற்று,  இந்திய மூவண்ணக்கொடியை உருவாக்கியவர்; இன்று இந்திய தேசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்; அவர் தான்  பிங்கலி வெங்கையா (Pinkali Venkaiah, 1878-1963). அவரது  பிறந்த நாள் இன்று.  

                  பிங்கலி வெங்கையா, ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகில் உள்ள பெட்டகல்லேபள்ளி  என்னும் கிராமத்தில், ஹனுமந்தராவ்-வெங்கட ரத்னம்மா தம்பதியரின் மூத்த மகனாகப்  பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.  இவர் மட்டும் ,  தாத்தா சலபதி ராவின்  வீட்டிலேயே வளர்க்கப்பட்டார்.  அவர் கண்காணிப்பில்தான் பள்ளிப்படிப்பையும்  படித்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன்,  கொழும்பு சென்று பட்டம் படித்தார். பின்பு,  லாகூர் ஆங்லோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து, சமஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றார்.

                            பிங்கலி வெங்கையாவுக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவர் பன்முகத் திறன் பெற்றவராக இருந்தார்.    1913ஆம் ஆண்டு, குண்டூர் அருகில் உள்ள பப்பட்லா என்னும் ஊரில், ஜப்பானிய மொழியில், அவர் முழுமையான மேடைப்பேச்சு ஒன்றை நிகழ்த்தினார். தங்கு தடையின்றி இவர் பேசிய சொற்பொழிவு,  “ஜப்பான் வெங்கையா” என்னும் சிறப்பு அடைமொழியை அவருக்குப்  பெற்றுத் தந்தது.

               கொலம்பிய பருத்தி விதைகளில் சில மாற்றங்கள் செய்து , பருத்தி வளர்ப்பில் ஆர்வம் காட்டினார். இவரது உழைப்பின் வெற்றி,  'லண்டன் ராயல் வேளாண்மைக் கல்லூரியில்' இவர்  சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆதலால்,  இந்தியாவில் “பட்டி(பருத்தி) வெங்கையா “ என பெருமையோடு அழைக்கப்பட்டார்.

             சுதந்திரத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து மதிப்பு மிக்க கற்களை எடுக்கும் கலையில் நாட்களைச் செலவிட்டார். அரசும் இவரது அறிவை பயன்படுத்திக் கொண்டது. வைரக் கற்கள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும் என்பதைச் சொன்னார். அதனால்,  அந்த வட்டாரத்தில் “டைமண்ட் வெங்கையா” என்ற பெயர் பிரசித்தி பெற்றது. 

              இப்படி, பல சிறப்பு பெயர்கள் இருந்தாலும், நமது தேசியக் கொடியை வடிவமைத்ததால் கிடைத்த “ஜண்டா வெங்கையா” என்ற பெயரையே அவர் மிகவும்  விரும்பினார். 1921 ஆம் ஆண்டு, விஜயவாடா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இந்திய தேசியக் கொடியை அறிமுகம் செய்ய விரும்பினார் காந்தியடிகள். பிங்கலி வெங்கையாவிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் அந்த ஒரே இரவில் கொடியின் அமைப்பைத் தயார் செய்தார். காந்தியடிகளின் விருப்பப்படி, அதில் வெள்ளை வண்ணம் இணைக்கப்பட்டது. அன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கொடிக்கான ஒப்புதலையும் காந்தியடிகள் பெற்றார். வெங்கையாவைப் பாராட்டி, தனது ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றையும் எழுதினார் காந்தியடிகள். இதன் காரணமாகத்தான், இவருக்கு ‘ஜண்டா வெங்கையா’ என்னும் சிறப்புப் பெயர் கிடைத்தது.

      இந்திய தேசியக் கொடியை உருவாக்க பலரும் தனது பங்களிப்பை -  முயற்சிகளை செய்திருக்கிறார்கள். மேடம் காமா, அன்னி பெசண்ட் அம்மையார், பால கங்காதர திலகர் போன்றோர் தேசியக் கொடியை உருவாக்குவதில் பலவிதத்தில் பங்காற்றினார்கள். ஆனால் முழு வடிவம் கொடுத்தது பிங்கலி வெங்கையாதான்.
           1916 ஆம் ஆண்டில்,  "A National Flag for India" என்னும் புத்தகத்தை எழுதி, அதை காந்தியிடம் காட்டுகிறார். அதன் அடிப்படையில், காந்தி சில ஆலோசனைகளைச் சொல்ல, இந்தியாவுக்கான மூவண்ணக் கொடி தயாராகிறது. 1931ஆம் ஆண்டு, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து, பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவண்ணக் கொடியே ஏற்றப்பட்டு வந்தது.

          1947ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவன்று ஏற்றப்பட்ட,  தேசியக்  கொடியில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.  பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மூவண்ணக் கொடியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக  அசோகச் சக்கரம் வைக்கப்பட்டது. இதனை சுரையா (ICS அதிகாரி பத்தியார் தியாப்ஜியின் மனைவி) என்பவர் சரிசெய்து கொடுத்தார்.  இந்த மாற்றத்திற்கு,   நீண்ட யோசனைக்குப் பிறகே, தனது சம்மதத்தைத் தெரிவித்தார் காந்தியடிகள். இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு மிக நீண்டது; வெகு  சுவாரஸ்யமானது.  அதில் பிங்கலி வெங்கையாவின் பங்கு, எந்தவிதத்திலும் புறந்தள்ள முடியாதது.

        தேசியக்கொடியின் உருவாக்கம் பற்றிய வரலாறு, சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.   ’யங் இந்தியா’ பத்திரிக்கையில் இவரைப் பற்றியும் , தேசியக் கொடியை உருவாக்குவதில் இவரது உழைப்பைப் பற்றியும் காந்தியடிகள் விரிவாக எழுதிய கட்டுரை, எல்லா விவாதங்களுக்கும் பதிலாக உள்ளது. .                             

        பிங்கலி வெங்கையா தனது, 19ஆவது வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்தார். ஆப்பிரிக்கா சென்று போயர் போரில் கலந்து கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். ரயில்வே துறையில் சில காலம் பணியாற்றினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்தும் குழுவில் ஆய்வாளராக சில காலம் பணியாற்றினார். இப்படி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவரான பிங்கலி வெங்கையா,  1963 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி, மிகவும்  வறுமையான நிலையில் இறந்து போனார்.  காந்தியடிகள் மறைவுக்குப் பிறகு,   இந்திய தேசம் அவரை முழுவதுமாக மறந்திருந்தது. 

       விடுதலை பெற்ற இந்தியாவில் அவரைப் பற்றிச் சொன்ன  அதிகாரப்பூர்வமான சொற்கள் மிகவும் குறைவே. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தனது மேடைப் பேச்சில் ஒரு முறை அவரைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ், பிங்கலி வெங்கையாவிற்கு சிலை எடுத்தார்.  அவர் இறந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு , அவரது புகைப்படத்துடன் கூடிய தபால் தலை ஒன்று, 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. பாரத ரத்னா விருதிற்காக, பலமுறை  பரிந்துரை செய்யப்பட்டபோதும், எந்த மத்திய அரசும் இக்கோரிக்கைக்கு  இதுவரை பதில் சொல்லவில்லை.

                   ஆந்திர முதல்வராக இருந்த   என்.டி.ராமராவ்,  ஹுசைன் சாகர் ஏரிக்கரையில், 33 தலைவர்களுக்கு சிலைகள் நிறுவினார். அங்கே பிங்கலி வெங்கையாவிற்கும் சிலை ஒன்று வைக்கப்பட்டது. ஆனால்,  தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட போது, ஏரிக்கரையில் இருந்த 17 சிலைகள் மர்ம நபர்களால்  அகற்றப்பட்டன. அதில் பிங்கலி வெங்கையாவின் சிலையும் ஒன்றாகும். இவர் தெலுங்கானா பகுதியைச் சாராதவர் என்பதே, சிலை அகற்றுவதற்கு , போதுமான காரணமாக மாறியது என்பது  வேதனைக்குரிய நிகழ்வல்லவா?

          "நான் வடிவம் கொடுத்த தேசியக் கொடியால் என் உடலைப் போர்த்தி, அக்கொடியை மரக்கிளையில் பறக்க விடுங்கள்" என்ற அவரது கடைசி ஆசை மட்டும், நண்பர்களால்  நிறைவேற்றப்பட்டது.  மரக்கிளையின் உச்சியில், காற்றில் பறந்த அந்த தேசியக் கொடியில்தான் அவரது ஆன்மா கலந்திருக்கும். ஆதலால், அடுத்த முறை நமது தேசியக் கொடி,  காற்றில் பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும்போது, பிங்கலி வெங்கையாவினை ஒரு வினாடி நினைவில் ஏந்துங்கள். அவரது தியாகங்களுக்கு உளப்பூர்வமாக  நன்றி சொல்லுங்கள். அது போதும், தேசியக் கொடிக்குள்ளே ஊடாடிக் கிடக்கும் அவர், நிச்சயம் சந்தோஷம் கொள்வார்.!  

      ஆம், தேசியக் கொடி என்பது,  வெளிச்சம் படாத  எண்ணற்ற தியாகிகளின் இரத்த நாளங்களால் நெய்யப்பட்டிருக்கிறது. அதனை வணங்குவது என்பது,   முகம் அறியாத எண்ணற்ற தியாகிகளை நாம் வணங்குவதற்கு ஒப்பாகும்.

விண்ணில் பறக்கிறது தேசியக்கொடி - காரணம் காற்றல்ல -
தியாகிகளின் மூச்சு!

No comments:

Post a Comment