Thursday, August 1, 2019

ஹெர்மன் மெல்வில்

திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில்

(இருநூறாவது பிறந்த நாள் இன்று! )

"It is better to fail in originality than to succeed in Imitation" - Herman Melville.

            
     'Call me Ishmael,' என்ற ஒரு நாவலின்  முதல் வரியை, ஆங்கில இலக்கியம் வாசித்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஆம், 'மோபி டிக்' என்கிற அந்த நாவல், அழியாப் புகழை அணிந்து கொண்ட ஓர் அழகிய படைப்பு.!
    எழுத்துக்களின் வழியே வாழ்வின் முற்பகுதியில் பெரும் புகழ் பெற்றவர் , பிற்பகுதியில் மறக்கப்பட்டார்; அடுத்த நூற்றாண்டில் மீண்டும் இலக்கிய உலகத்தால் கொண்டாடப்பட்டார்; 'மோபி டிக்' என்னும், அந்த ஒற்றை  நாவல் வழியே, அவர் என்றென்றும் நினைவில் இருப்பார். அவர் தான் அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில் (1819-1891) .
              சரியாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,    அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 1819 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 1ஆம் தேதி, ஹெர்மன் மெல்வில் பிறந்தார். தந்தை ஆலன் ஒரு வணிகர். ஆண்டின் பெரும்பகுதி நாள்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூரிலேயே, அவர் தங்க வேண்டியிருந்தது. தாய் மரியா மெல்வில் தான் குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் நிர்வகித்து வந்தார். ஏழாவது வயதில், ஹெர்மன் மெல்வில்லை  விஷக் காய்ச்சல் ஒன்று தாக்கியது. அதன் காரணமாக, அவருக்கு நிரந்தர பார்வைத் திறன் குறைபாடு உண்டானது. வாழ்நாள் முழுவதும், அக்குறைபாடுடனேயே, அத்தனை சாதனைகளையும் செய்து காட்டினார்  மெல்வில்.
                    திடீரென்று நிகழ்ந்த  தந்தையின் மரணம் காரணமாக, 13 வயதிலேயே படிப்பை நிறுத்திக் கொள்ளும் துயரம் அவருக்கு  ஏற்பட்டது. வறுமை அவரது குடும்பத்தை விடாமல் துரத்தியது. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும் என்று காத்திருந்த தாயின் நம்பிக்கையும்  வீணானது. குடும்பத்தை நடத்துவதற்கே தாய் மரியா மிகவும் சிரமப்பட்டாள். அதனால்,  வேறு வழியின்றி, 1839ஆம் ஆண்டு, வியாபாரக் கப்பல் ஒன்றில்  மாலுமியாகச் சேர்ந்தார் ஹெர்மன் மெல்வில். பிறகுதான் திமிங்கல வேட்டையாடும் கப்பலில் (1840) இணைந்து கொண்டார்.
                இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கப்பல் பயணம். மனம் தளர்ந்தார் ஹெர்மன் மெல்வில்.  கடும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக, பயணத்தின் இடையில்,  1842ஆம் ஆண்டு,  டைபி பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள  ஒரு தீவுப் பகுதியில்  கப்பலில் இருந்து தப்பினார். கப்பல் உரிமையாளர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க, சில காலம் அங்கேயே தங்கினார் மெல்வில்.  மனம் நிறைய காதலும், மூளை நிறைய அனுபவமும் பெற்ற மெல்வில், புத்துணர்ச்சியுடன்  மீண்டும் போஸ்டன் நகருக்குத்  திரும்பினார்.
                              டைபி பள்ளத்தாக்கில் ,  தான் பெற்ற அனுபவங்களை தனது முதல்  நாவலாக எழுதி வெளியிட்டார். அருமையான நடையில், மென்மையான காதலுணர்வோடு எழுதப்பட்ட  Typee (1845) என்ற அந்த நாவல் , வியாபார ரீதியிலும், விமர்சகர்கள் மத்தியிலும்  பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து , Omoo (1847) என்ற நாவலும்  வெளிவந்து, அதுவும்  பெரிய வெற்றி  பெற்றது. அந்நாளைய  மாபெரும் எழுத்தாளர், ’நாதேனியல் ஹாதோர்னின்’ நண்பரானார் மெல்வில். அவரது வீட்டுக்கு அருகிலேயே, இவரும் சென்று குடியேறினார்.    1850 ஆம் ஆண்டு இவர் எழுதிய,  White Jacket புத்தகம், அமெரிக்க கப்பற்படைஅதிகாரிகளின் வாழ்வை கடுமையாக விமர்சனம் செய்தது. இவரது எழுத்துக்கள் கவனிக்கப்பட்டன.
       அந்த காலக்கட்டத்தில்,  கடலின் அறிவிக்கப்படாத அரசனாக இருந்த திமிங்கலத்தை, வேட்டையாடுவது  என்பது கடலோடிகளின் முக்கிய சாகசச் செயலாக இருந்தது.  கப்பல்களை அழிக்கும் திமிங்கலங்களை வேட்டையாடுவது என்பது, பாதுகாப்பிற்காக மட்டுமல்ல. அதிலிருந்து தயாரிக்கப்படும் திமிங்கல எண்ணெய், மருந்தாகப் பயன்படுவதும் முக்கியக் காரணமாக இருந்தது.
                              1830களில், சிலி நாட்டுத் தீவுப் பகுதியில், ’மோச்சா டிக்’  என்னும் திமிங்கலம் அட்டகாசம் செய்து வந்தது. அதனைக் கொல்ல பல முற்சிகள் நடந்தன. அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன. மெல்விலும் கடலோடியாக இப்பயணத்தில் சென்றிருக்கிறார். அவரது கடல் பயண அனுபவங்களையும் கற்பனையையும் சரியாகக் கலந்து உருவான நாவல் தான் “மோபி டிக்”. இது, தமிழில்  'திமிங்கல வேட்டை' என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      குறியீடுகளையும் அடையாளங்களையும் கொண்டிருந்த இந்த நாவல், நிறுவனமயமான கிறிஸ்துவத்திற்கு எதிரான மெல்விலின் குரல் என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்று உலகமே கொண்டாடும் நாவல் மோபி டிக். ஆனால், இது  1851 ல் வெளிவந்த போது, வியாபார வெற்றியும் பெறவில்லை; விமர்சகர்களின்  ஆதரவையும் பெறவில்லை. 
               அதன் பின்னர் வெளிவந்த நூல்கள் ,கட்டுரைகள், கவிதைகள், அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் என எதுவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மோபி டிக் நாவலுக்குப் பிறகு,  18000 வரிகளுக்கும் அதிகமான வரிகள் கொண்ட கவிதை நூல்களையும் மெல்வில் எழுதி  வெளியிட்டார். அவை யாவும் ஏதேதோ அரசியல் காரணங்களுக்காகப் புறந்தள்ளப்பட்டன. மெல்வில்லின்  புகழும், வருமானமும் குறையத் தொடங்கியது. வேறு வழியின்றி, இறுதியில், சொந்தமாக பண்ணை வாங்கி, விவசாயம் செய்யத் தொடங்கினார் ஹெர்மன் மெல்வில்.
                                       இவரது மனைவி பெயர் எலிசபெத் ஷா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளோடு கவிதைகள் பற்றி பேசிக் கொண்டே இருப்பார் மெல்வில்.  ஒருமுறை, அதிகாலை இரண்டு மணிக்கு, தனது மகளை எழுப்பி, ஒரு கவிதையைத் திருத்தி, எழுதித் தரச் சொன்னாராம்.  இப்படி எழுத்தையே தனது உயிராகக் கொண்ட மெல்வில்,  1891 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி, மன அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால்  இறந்து போனார். அப்போது ’பில்லி பட்’ (Billy Budd) என்னும் நாவலை எழுதிக் கொண்டிருந்தார். அந்நாவல் அவரது இறப்புக்குப் பின்னர் தான் வெளியிடப்பட்டது. அது மாபெரும் வெற்றியையும்  பெற்றது. ஆனால் இறப்பின் போது, வறுமையைத் தவிர அவரிடம் ஏதும் இருக்கவில்லை. புகழ், செல்வம் இரண்டும் அவரை விட்டு நீங்கியிருந்தன. 
                       காலங்கள் கடந்தன.    1919 ஆம் ஆண்டு, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அவரது படைப்புகள் மீண்டும் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டன. ’மோபி டிக்’ உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று என ஒட்டுமொத்த இலக்கிய உலகமும், அவரை  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அதன் புகழ் வெளிச்சம்  இன்றளவும் பிரகாசமாகவே இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வரியும் எழுத்தின் வலிமையையும் மெல்விலின் திறமையையும்  சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
    ”என்னை இஸ்மாயில் என்றே அழையுங்கள்....”, என்னும் முதல் வரி மிகவும் பிரசித்தி பெற்றது. மோபி டிக் நாவல், கடலில் திமிங்கலத்துடனான போராட்டத்தை மட்டும் சொல்லவில்லை. மாறாக, மனித மனத்தின் அகச் சிக்கல்களையும், வாழ்க்கைப்  , போராட்டத்தையும் பற்றிப் பேசுகிறது. நாவலில் வரும் கேப்டன் ஆகாப் தான் நாமெல்லாம். ஆம், அடிபட்ட புலி போல, நாம் ஏதோ ஒன்றுக்காக போராடிக் கொண்டே இருக்கிறோம்.
            மோபி டிக் நாவலில் ஒரு வரி வரும் - ‘எந்த ஒரு மனிதனின் வாழ்வும் சாவும் அவனது மனதில் தான் உள்ளது’. அப்படி எனில்,  மெல்விலின் வாழ்வும் முடிவற்றது. ஏனெனில் அவரது மனம்தான் மோபி டிக். ஆதலால், ’மோபி டிக்’, ஹெர்மன் மெல்வில் -  இந்த இரண்டு சொற்களுக்கும் , இந்த உலகில்  மரணம் என்பதே கிடையாது.
                     ஆம், கடல் எழுப்பும் ஓயாத ஒலியைப் போல, எழுத்தாளனும் தன் படைப்புகளின் வழியே - தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறான். படைப்பாளிக்கும், அவனது படைப்புக்கும் இங்கே  மரணம் என்பது கிடையாது!
               

No comments:

Post a Comment