சிறுகதை மன்னன் - மாப்பசான்.
"Our memory is a more perfect World than the Universe: It gives back life to those who no longer exist."
- Guy de Maupassant.
தனது எழுத்துக்களால் உலகப் புகழ் பெற்ற ஓர் அற்புதக் கலைஞன்; 43 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும், இலக்கிய உலகில் நிரந்தர இடம் பிடித்த, ஒரு மகா கலைஞன்; இறுதியில், பாரிஸ் நகரத்தின் மனநல மருத்துவமனை ஒன்றில், தற்கொலை செய்து கொண்ட பரிதாபக் கலைஞன்; அவர்தான், ‘நவீன சிறுகதை உலகின் மன்னன்’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் பிரெஞ்சு தேசத்து எழுத்தாளர்,கவிஞர் கை-டி- மாப்பசான் (1850-1893). அவரது பிறந்த நாள் இன்று.
ஹென்ரி ரெனே ஆல்பெர்ட் கை டி மாப்பசான், இதுதான் அவரது முழுப்பெயர். கஸ்டவ் மாப்பசான் மற்றும் லாரி லி பொய்டிவின் தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தவருக்கு, வாழ்நாள் முழுக்க சிக்கல்களும், அலைக்கழிப்புகளுமே காத்துக் கிடந்தன. 1850ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, பிரான்சு நாட்டின், துறைமுக நகரொன்றில் பிறந்த மாப்பசானின் இளமைப் பருவம், மிகவும் சிக்கலாகத்தான் இருந்தது. . சில காலங்கள் மட்டுமே மகிழ்சியாய்க் கழிந்தன இவரது பொழுதுகள். கருத்து வேறுபாடு காரணமாக, பெற்றோர் மணமுறிவு பெற்ற போது, இவரது வாழ்வில் கசப்புகளின் காலம் தொடங்கியது.
தனது 11 ஆவது வயதிலிருந்து, மாப்பசான் - தாயின் வளர்ப்பிலேயே வளரத் தொடங்கினார். அவரது தாய், இலக்கிய ஆர்வம் மிக்க ஒரு நல்ல படிப்பாளி. ஷேக்ஷ்பியரின் எழுத்துக்களில் அதீத ஆர்வம் கொண்டவர். தனது மகனுக்கு, வேண்டியமட்டும் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். உலகெங்கும் இருந்த செவ்வியல் இலக்கியங்கள் யாவும், மாப்பசானுக்கு கற்றுத்தரப்பட்டன. சொற்களஞ்சியமும், எழுதும் முறையும் இவருக்கு எளிதாய் வந்து சேர்ந்தன.
மாப்பசான், 1867ஆம் ஆண்டு, உயர்நிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்குதான், எழுத்தாளர் கஸ்டவின் நட்பு இவருக்குக் கிடைத்தது. பள்ளியின் சார்பில் நடைபெற்ற நாடகங்களில் மாப்பசான் தொடர்ந்து பங்கு பெற்றார். அதன் வழியாக , கவிதைகள் மீது, இவருக்கு ஈடுபாடு வளரத் தொடங்கியது. அதுபோல, கடற்கரை ஒன்றில் எதிர்பாராதவிதமாக, கடலில் மூழ்கி, தத்தளித்துக் கொண்டிருந்த, சார்லஸ் ஸ்வின்பர்ன் என்ற கவிஞரை, காப்பாற்றினார் மாப்பசான். இதன் வழியே, அவரது நிரந்தர அன்பையும் பெற்றார். எழுத்துத் துறையில் காலடி வைக்கும் பாதையை இந்த நிகழ்வுகள் யாவும் எளிதாக்கின.
மாப்பசான், 1869ல் , சட்டம் படிக்க முடிவு செய்து, கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், இராணுவ வீரனாகும் ஆசை அவரைத் துரத்தியதால், இராணுவத்தில் இணைந்து கொண்டார். ப்ரஷ்யாவுக்கெதிரான போரில், ஆர்வமுடன் கலந்து கொண்டார். பின், 1872ல் அரசாங்க அலுவலக எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். குடும்ப நண்பர் கஸ்டவ், இவருக்கு எழுத்துத் துறையில் குருவாக இருந்து வழிநடத்தினார். இவரது தொடர்பின் மூலம், துர்கனேவ் போன்ற மிகப் பெரும் எழுத்தாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார் மாப்பசான். இலக்கிய உரையாடல்களின் வழியே, தனது எழுத்தாற்றலை பட்டை தீட்டிக் கொண்டார்.
சிறுகதைகளில், கதையை மட்டும் சொல்லிச் செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை, உளச்சிக்கல்கள், மீளும் தன்மை போன்றவற்றை தெளிவாக எழுதினார். இதன் மூலம் சிறுகதைகளின் கூறுமுறை மாறத் தொடங்கியது. சிறுகதைகளின் இந்த புதிய கூறு முறை, இவருக்கு, ’நவீனச் சிறுகதைகளின் தந்தை’ என்னும் பெயரைப் பெற்றுத் தந்தது. போர்க்காலத்தில் பாதிக்கப்படும் சராசரி குடிமகனின் வேதனை, பெண்களின் உடல் மற்றும் உளச் சிக்கல்கள் என பல்வேறு தலைப்புகளில் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். மனித மனம் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல்களையும் நுட்பமாக எழுதிக் காட்டினார். ஒரு கட்டத்தில், ஆபாசப் பத்திரிக்கைகள் இவரது பெயரை மட்டும் அட்டையில் போட்டு , ஆபாசக் கதைகளை வெளியிட்டு, பணம் சம்பாதித்த நிகழ்வும் நடந்தது. ஆனால், இவரது கதைகள் வெறும் பாலியல் கதைகள் மட்டும் அல்ல. மாறாக, உளச்சிக்கல்களை, தெளிந்த நீரோடை போல் காட்டும் செவ்வியல் கதைகள் இவருடையவை.
பெரும்பாலான இவரது கதைகள் Semi Autobiographical வகையைச் சார்ந்தது. Ball of Fat, The Necklace, Bell Ami போன்ற படைப்புகள், காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவை. மொத்தத்தில் இவரது அனைத்து கதைகளும் , பிரான்ஸில் மட்டுமல்ல, உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது கதைகளையும், கதை சொல்லும் முறைகளையும் உலக எழுத்தாளர்கள் பலரும் முன் மாதிரியாகக் கொண்டனர். ஓ ஹென்றி, சோமெர்செட் மாம், ஹெச்.ஜேம்ஸ் போன்ற பெரிய எழுத்தாளர்களும் இவரைப் போலவே எழுத முயற்சித்தனர். லியோ டால்ஸ்டாய் , மாப்பசானின் கதைகளையும், எழுத்தாற்றலையும் வெகுவாகப் பாராட்டி கட்டுரை எழுதினார். புகழின் உச்சிக்கே சென்றார் மாப்பசான்.
1880 ஆம் ஆண்டு, ஜிஸிலி எஸ்டாக் என்ற பெண்மணியைச் சந்தித்தார். அவளிடத்தில் ஆறு ஆண்டுகள் கழிந்தன. அதன்பிறகே, தனது காதல் மனைவியான, ஜோசபைனைச் சந்தித்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அன்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த மாப்பசானுக்கு, அழகான புதிய உலகம் ஒன்று கிடைத்தது. ஆனால், அது நிலைக்கவில்லை. மன அழுத்தமும், நோய்களும் அவரை மன நல மருத்துவமனையில் கொண்டு போய் படுக்க வைத்தது.
வாழ்வில் அவர் எதிர்கொண்ட மனக்கவலைகளும், குழப்பங்களுமே அவரை, தொடர்ந்து எழுத வைத்தன. அனைத்தையும் எழுத்தில் வடிக்க முடிந்த அவரால், மனச்சுமையை மட்டும் இறக்கி வைக்க முடியவில்லை. நாம் செய்யும் எல்லாத் தவறுகளும், ஒரு கட்டத்தில் ஒன்று கூடி , நம்மை நிம்மதியிழக்கச் செய்கின்றன. மாப்பசானின் உடல் மற்றும் சூழல் அவருக்கு எதிராக, உறுதியாகச் செயல்படத் தொடங்கியது. இளம் வயதில் இவரை பாதித்த ‘சிபிலிஸ்’( Syphilis- A kind of Sexually Transmitted disease) எனப்படும் ஒருவகை பால்வினை நோய், இவரை விடாமல் துரத்தியது. கூடவே, மனச்சிதைவு காரணமாக மனமும் சமநிலையில் இருக்க மறுத்தது. துயரங்கள் எழுந்து நின்று, இவரை அமிழ்த்திய போதும் கூட, வெள்ளைத்தாளில் கறுப்பு மை கொண்டு அவர் எழுத ஆரம்பித்து விட்டால், எழுத்துக் கடவுளாக மாறிவிடுவார். ஆம், அவரது எழுத்துத்திறன் மட்டும் கடைசி வரை குறையவே இல்லை.
1892, ஜனவரி மாதத்தின் அதிகாலைப் பொழுதொன்றில், கூரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டார். உலகோடும், உறவுகளோடும் அதுவரை அவர் கொண்டிருந்த வாழ்வு, அவருக்குப் போதுமானதாக இருந்தது. இந்த முறை, வெள்ளைத் தாளோடு பேசுவதற்குப் பதிலாக, மனதோடு பேசிக்கொண்டே, கழுத்தினை அறுக்கத் தொடங்கினார். மரணமும் அவருக்கு மனதுக்கு எதிராக வேலை செய்தது. மாப்பசான், அரை உயிரோடு காப்பற்றப்பட்டு, பாரிஸில் உள்ள ஒரு மன நல மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார். ஆம், அவர் உயிர் பிழைத்தார். ஆனால், மனநலம் மட்டும் மீண்டும் சரியாகவே இல்லை. சரியாக ஓராண்டு கழித்து, 1893ஆம் ஆண்டு, ஜூலை 6ஆம் தேதி, தனது, 43 ஆம் வயதில், சிறுகதைகளின் மன்னன், தனித்த அறையினுள் , ஓரிடத்தில் இறந்து கிடந்தார். சிறுகதை போலவே, அவரது சிறிய வாழ்வும் முடிந்து போனது, ஆனால், அழுத்தமாக. (இக்கட்டுரை எழுதும் இந்த நேரம், புதுமைப்பித்தன் நினைவில் வந்து வந்து போகிறார். )
தற்போது, பாரிஸ் நகரத்தில், மாண்ட்பார்னஸி கல்லறைத் தோட்டத்தின் 26ஆவது பிரிவில், குழப்பங்கள், மனச்சிக்கல்கள் ஏதுமின்றி இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் மாப்பசான். வாழ்க்கை என்பது என்னவென்று கேட்க, நாம் அவரை எழுப்பவேண்டியதில்லை. ஏனெனில் தனது கல்லறை வாசகத்தையே, கேள்விக்குப் பதிலாக தந்து விட்டுப் போயிருக்கிறார் மாப்பசான். அவர் விரும்பிச் சொன்னபடியேதான் , கல்லறை வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
“I have coveted Everything and taken pleasure in Nothing".
ஒளியை விடவும் வேகமாய் நீள்கின்றன மனதின் ஆசைகள். அப்படி என்றால், வாழ்வெனும் கோப்பையை நிரப்புவதும், முழுதாய் சுகிப்பதும் இங்கே சாத்தியமாகுமா?
ஆம், நடப்பவை யாவும் நடக்கட்டும் - எனக் கடந்து செல்லும் மனம் மட்டுமே - கடைசி நொடி வரை இங்கே வாழ்கிறது.
No comments:
Post a Comment