‘ஒருமவ தானம் ஒருநூறு செய்திந்துப்
பாரில் பகழ்படைத்தப் பண்டிதனைச் - சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பிப் பாவலனை
எந்நாள் காண்போம் இனி.’
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. (பாவலர் மறைவின் போது பாடியது)
“சிரமா றுடையான் செழுமா வடியைத்
திரமா நினைவார் சிரமே பணிவார்
பரமா தரவா பருகா ருருகார்
வரமா தவமே மலிவார் பொலிவார்”
-செய்குத்தம்பி பாவலர்.
ஒரே நேரத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நூறு நிகழ்வுகளைக் கவனித்து, அவை தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்கும் அவதானக்கலை நாயகன் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்த நாள்(1874-1950) இன்று.
நாஞ்சில் நாடு, இடலாக்குடியில் (நாகர்கோயில்- கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்ப் பெருங்கடல் செய்குத்தம்பி பாவலர் 1874 ஆம் ஆண்டு, ஜூலை 31 ஆம் நாள் பிறந்தார். பக்கீர் மீரான் சாகிபிற்கும், அமீனா அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகவும், முத்தமிழ்த் தாயின் முக்கிய மகனாகவும் பிறந்த செய்குத்தம்பி, இயல்பிலேயே கூர்ந்த மதியும், ஆர்வமும் உடையவராக இருந்தார். தனது எட்டு வயது வரை அரபு மொழியை வீட்டிலேயே கற்றுத் தேர்ந்தார். அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த அப்பகுதியில், மலையாளப் பள்ளிகளே அதிகம் இருந்தன. அங்கே, முதல் வகுப்பில் சேர்ந்தார் செய்குத் தம்பி. இவரது அபார அறிவாற்றல் காரணமாக, முதல் வகுப்பு முடிந்தவுடன், நான்கு வகுப்புகள் தாண்டி, இவரை ஐந்தாம் வகுப்பிற்கு முன்னுக்கு அனுப்பியது பள்ளி நிர்வாகம். ஆனால், வறுமை இவரை பின்னுக்குத் தள்ளியது. பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது.
தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையெல்லாம் கற்று, தமிழ்ப்பசி ஆற்றிட வேண்டும் என்ற தணியாத வேட்கை இவருக்குள் கனன்று கொண்டே இருந்தது. இவரை ஆற்றுப்படுத்த, பொருத்தமான ஒரு ஆசிரியர் , மிகச்சரியாக வந்து சேர்ந்தார். ஆம், கோட்டாறு சங்கர நாராயண அண்ணாவி என்ற தமிழ்ப் பெரும் புலவனிடம் தமிழின் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் செய்குத் தம்பிப் பாவலர். ஊதியம் ஏதும் பெறாமல் தமிழ் ஓதிய அண்ணாவியாரின் ஊக்கத்தால், தனது 16வது வயதில் இரு அந்தாதிகளை எழுதி, அச்சிட்டு வெளியிட்டார் செய்குத்தம்பி பாவலர். பாவலரின் தமிழ் ஞானம் விசாலமாகிக் கொண்டே சென்றது.
குறிப்பாக, இவர் கம்ப ராமாயணத்தில் பெரும் புலமை பெற்றிருந்தார். அந்தச் சூழலில் தான், ’மெய்ஞானியார் பாடல் திரட்டு’ என்னும் நூலைப் பதிப்பிப்பதில் , பார்த்தசாரதி நாயுடுவுக்கு தமிழறிந்த இஸ்லாமியர் ஒருவர் தேவைப்பட்டது. செய்குத்தம்பி பாவலர் பொருத்தமாக அங்கு வந்து சேர்ந்தார். பணி செய்ய சென்னை கிளம்பினார் பாவலர். பின்பு, சென்னையிலேயே மாதம் ரூ.60 சம்பளத்தில், ஸ்ரீ பத்மவிலாச பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21.
பாவலர் சென்னையில் இருந்தபோது, வள்ளலாரின் 'அருட்பா' மீது பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அது ஒரு 'மருட்பா' என எதிர்த்தரப்பினர் வாதம் செய்து வந்தனர். பாவலர் அருட்பாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். திருவருட்பாவின் பெருமைகளை மேடை தோறும் பெருமைப்படுத்தினார். இதனால் மனம் மகிழ்ந்த காஞ்சிபுரத்துத் தமிழறிஞர்கள் , பாவலரை யானை மீது அமர வைத்து, ஊர்வலம் நடத்தினர். பூரண கும்ப மரியாதையும் செய்தனர். ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்னும் பட்டத்தையும் வழங்கினர்.
அவதானக் கலை என்பது மாயாஜாலம் போன்ற மோசடி என்னும் எண்ணம் கொண்டிருந்த செய்குத்தம்பி பாவலர், ஓர் நாள் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கண்டப்பத்திரிக்கை என்னும் அவதானத்தை செய்து காட்டினார் கல்யாண சுந்தரம். எண் பிறழச் சொல்லப்படும் செய்யுள் எழுத்துக்களின் எண்ணையும், எழுத்தையும் நினைவில் நிறுத்தி, முடிவில் முழுச் செய்யுளையும் நேர்படச் சொல்வதுதான் கண்டப்பத்திரிக்கை. இதனை கண்டவுடன் செய்குத்தம்பி பாவலருக்கும் அவதானக்கலையில் ஆர்வம் பிறந்தது. அஷ்டாவதானமும் சோடச அவதானமும் செய்து பழகி, தான் பிறந்த இடலாக்குடி மண்ணில் சாதித்தும் காட்டினார்.
மகாவித்துவான் ராமசாமி நாயுடுவின் ஆலோசனையின் பேரில், நூறு செயல்களை அவதானிக்கும் சதாவதானம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. ஒரு பொருள் குறித்த உரை, கண்டப்பத்திரிக்கை, கண்டத்தொகை, இலக்கண வினா, இலக்கிய வினா, நீர்ச் சுவை கூறுதல், கிழமை கூறுதல், ஓசை எண்ணுதல், முதுகில் விழும் நெல்மணி, பூக்கள் எண்ணுதல் , இறைநாமம் உச்சரித்தல், கைவேலை, சதுரங்கம், பாவகை கூறுதல் , ராகம் கூறுதல், வெண்பா புனைதல்...என நூறு வகையான செயல்களை ஒரே நேரத்தில் கவனிக்கும் கவனகக்கலையில் தேர்ச்சி கண்டார். தனது 33 ஆம் வயதில், 10.03.1907, சென்னை விக்டோரியா அரங்கத்தில், தஞ்சாவூர் சதாவதானி சுப்ரமணிய ஐயர் தலைமையில், கா.நமச்சிவாய முதலியார், டி.கே.சிதம்பர முதலியார், திரு.வி.க, இந்து ஆசிரியர் ஜி.சுப்ரமணியன் போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வினை வெற்றிகரமாக செய்து காட்டினார். அந்த மேடையில் தான், “மகாமதி சதாவதானி” என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
சதாவதானியாக மட்டும் அவர் பணி நின்று விடவில்லை. யதார்த்தவாதி, இஸ்லாமியமித்திரன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, வெண்பாக்கள் மாலை என எண்ணற்ற தமிழ் நூல்களைப் படைத்தார். சீறாப்புராணத்திற்கு சீரிய உரை எழுதி, அழியாச் சிறப்பு பெற்றார். சைவ சமய இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த பாவலர், எல்லாத் தலைப்புகளிலும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.
‘கைத்தறி அணிந்தால் மணமகன்;
மில் துணி அணிந்தால் பிணமகன்;
நீ மணமகனா- பிணமகனா?”
என திருமண மேடைகளில் கூட, அந்நிய நாட்டுத் துணிகளுக்கெதிராக துணிந்து பேசினார். தனது வாழ்நாள் இறுதிவரை கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். உடல் நலிவுற்ற வேளையிலும், 1950ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையிலும் தமிழே இவருக்குச் சுவாசமாக இருந்தது. இவருக்குப் பிறகு, சதாவதானம் செய்கிற கலைஞர்கள் இப்போது வரை இல்லை. இப்போதும், கவனகம் நிகழ்த்தி வரும் கலைஞர்களை இந்த சமூகம் கவனத்தில் கொள்வதே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
’சிரமாறுடையான்..’ என்று ஐம்பொருள் சிலேடையில் கடவுள் வாழ்த்து பாடிய செய்குத்தம்பி பாவலர் வாழ்ந்த தெரு- 'பாவலர் தெரு'. பள்ளி- 'செய்குத்தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி' எனப் பெயரிட்டு இவர் பெருமைப்படுத்தப்பட்டார். இடலாக்குடியில் இவரது பெயரில் எம்.ஜி.ஆர். அவர்களால் மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டது. கலைஞர் அவர்களால் இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவை மட்டும் தான், கலைக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்றால் நாம் தேங்கி விட்டோம் என்றே பொருள்படும். கலையை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமல்லவா?
ஐந்திரம் அறிந்த தொல்காப்பியர் அவதானக் கலையில் சிறந்து விளங்கினார் என்னும் குறிப்பு உள்ளது. தொடர்ந்து, காளமேகப் புலவர், ஆறுமுகம் பிள்ளை, இலக்கிய வீதி திருக்குறள் ராமையா, அவரது மகன் கனக சுப்புரத்தினம் என இக்கலையின் நீட்சி இருந்தாலும் அது சுருங்கிக் கொண்டே வருவது தெரிகிறது. தற்போது நண்பர் திருமூலநாதன் (Thirumulanathan Dhayaparan) , பிரதீபா, திலீபன், முனைவர் செழியன் போன்ற சிலரே கவன்கக் கலையை நிகழ்த்தி வருகின்றனர். இந்தக் கலையின் வரலாறும், கவனகர்களின் வாழ்க்கையும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இனியாவது, சான்றோர் சபைகளும், அரசும் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
கவனகரின் பிறந்த நாளில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.
பாரம்பரியக் கலைகளை மறப்பது, இழப்பது;
இனம், மொழி இரண்டினையும் துறப்பது, அழிப்பது;
- இவை இரண்டுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை, ஒன்றுதான்.
ஆதலால்,
கலைகள் காப்போம்.