Tuesday, January 15, 2019

ஜனவரி 15

ஒலிம்பிக் நாயகன் - கசாபா தாதாசாகெப் ஜாதவ்.


ஜனவரி 15....இன்று!

        
          
        மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒருர் சிறிய கிராமத்தின் பெயர்  கோலேஷ்வர்.  ஐந்து வண்ண வளையங்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் சித்திரத்தின் அருகில், ”ஒலிம்பிக் நிவாஸ்” என்ற பெயர் தாங்கியிருக்கும் ஒரு வீடு. அங்கே வீடு முழுக்க, பதக்கங்கள், கேடயங்கள், புகைப்படங்கள். சுவரின் மையப் பகுதியில், ஒலிம்பிக் பதக்க  மேடையில் பரிசு பெறும் ஓர் அபூர்வ புகைப்படம். அந்த வீடு, அப்பகுதி மக்களின் கெளரவம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் பெருமிதமும் கூட.!        
      இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில், 1952ஆம் ஆண்டு, பின்லாந்து நாட்டில் உள்ள ஹெல்சின்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி மிகவும் முக்கியமானது. ஹாக்கி போட்டிகளில் மட்டுமே தங்கப்பதக்கம் பெற்று வந்த இந்தியாவுக்கு அந்த ஒலிம்பிக் போட்டி, ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.  ஏனெனில் , தனி நபருக்கான ஒலிம்பிக் பதக்கம் முதல் முறையாக அப்போதுதான் கிடைத்தது. அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி, தொடர் வெற்றிகளைக் குவிக்க இந்தியா தவற விட்டது. விளைவு, மீண்டும் ஒரு பதக்கம் பெற , 44 ஆண்டுகள் (1996-லியாண்டர் பயஸ்) காத்துக் கிடக்க வேண்டியதாயிற்று.   
       நமது தேசத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மல்யுத்தப் போட்டியில், உலகின் முன்னணி வீரர்களையெல்லாம் வீழ்த்தி,   ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று  சாதனை படைத்தார்  26 வயது நிரம்பிய ஓர் இளைஞன். களிமண் தரையில் பயிற்சி பெற்றிருந்தவர், பாய் விரிக்கப்பட்டிருந்த மல்யுத்தக்  களத்திற்குள் புகுந்து விளையாடினார். ஒரு புள்ளியில் இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பைத் தவற விட்ட போதிலும், பார்வையாளர்களின் இதயங்களில் எளிதென நுழந்தார்.  சுதந்திர இந்தியாவில், ஒலிம்பிக் போட்டிகளில்  முதல் முறையாக பதக்கம் வென்று , அழியாத சாதனை படைத்தவர்தான் கசாபா தாதாசாகெப் ஜாதவ் (1926-1984)!
                    1926ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 15ஆம் தேதி, கோலேஷ்வர் கிராமத்தில், எளிய ஏழைக் குடும்பமொன்றில் ஐந்தாவது மற்றும் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார் கே டி ஜாதவ்.  இவரது தந்தை தாதாசாகெப்பும் ஒரு மல்யுத்த வீரர். தனது கடைசி மகனின் உடல் வலிமை மற்றும் மன உறுதி காரணமாக , பிள்ளைக்கும் மல்யுத்தம் கற்றுத் தந்தார் தந்தை. ஐந்து வயது முதலே,  கசாபா ஜாதவ் பெரு விருப்பத்துடன் மல்யுத்தக் கலையை  கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அதுவே பின்னாளில் அவரது  பெருங்கனவாக மாறிப் போனது.
                     மல்யுத்த விளையாட்டைப் போலவே, படிப்பிலும் படு கெட்டியாக இருந்தார் கே டி ஜாதவ். ஆனால், அவற்றை விட, தேசத்தின் சுதந்திரப் போராட்டம் அவரைத் தூங்கவிடாது செய்தது. 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். போராளிகள் தங்க இடம் ஏற்பாடு செய்வது, அவர்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து நிகழ உதவுவது, போராட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது என அவர் அக்காலக்கட்டத்தில் சுறுசுறுப்பாக இயங்கினார்.
                   அப்போதும் உடற்பயிற்சியை மட்டும் அவர்  நிறுத்தியதே  கிடையாது. தினமும் காலை, மாலை என 4 மணி நேரம் கடும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். தொடர்ச்சியாக  1000 Sit-ups, 300 Push-ups செய்யும் உடல் வலிமை அவருக்கு உண்டு என அவரது நண்பர்கள், அவரைப்  பெருமையாக    நினைவு கூறுவார்கள். மனச் சமநிலை தவறாத அமைதி , பிறர் மனம் புண்படாதபடி வரும் மென்பேச்சு – இவை இரண்டும் கே டி ஜாதவின் தனித்த பண்புகள்.
                      சுதந்திரத்திற்குப் பின்பு, 1948ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தப் பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பினார். கோலாப்பூர்  மன்னர் நிறைய வழிகளில் உதவினார். சொந்த கிராம மக்கள் 8000 ரூபாய்க்கும் மேலாக பண உதவி செய்தனர். இறுதியில், போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. துவக்க விழா நிகழ்வில் அணிந்து கொள்ள சாதாரண உடை கூட இவரிடம் இல்லை.  நல்ல உடைகளைக் கடனாகப் பெற்று, அணிந்து கொண்டு – அதன் பின்னர் அந்நிகழ்வில் கலந்து கொண்டார் கே டி ஜாதவ்.
                 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவமின்மை, தொழில் முறை பயிற்சியாளர் இல்லாதது என சில காரணங்களால்,  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவருக்கு ஆறாவது இடமே கிடைத்தது. ஆனால் இவரது தனித்திறன் பளிச்சிட்டது.  ரீஸ் கார்டன் என்ற பயிற்சியாளர் இவருக்குக் கிடைத்தார். இவரது திறமை மெருகேறத் தொடங்கியது. வெற்றிகளும் குவியத் தொடங்கின. 1952-ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் 125lb பாண்டம்வெயிட் பிரிவில் கலந்து கொண்டார். மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள். முதல் போட்டியிலிருந்தே பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார் கே டி ஜாதவ். இறுதியில் பதக்க மேடையில் ஏறி ,வெண்கல விருதுடன்  தனது இரு கைகளையும் உயர்த்தினார்; ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் கொடி, அன்று தான் உயரப் பறந்தது.
             கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் இவருக்கு ஏற்பட்டது.   1955ஆம் ஆண்டு, மஹாராஷ்டிரா காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். காவல்துறையிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்றார். 1983ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற கே டி ஜாதவ், தனது வாழ்நாள் காலத்திற்குள் “மல்யுத்தப் பயிற்சி நிலையம்” ஒன்றை அமைக்க ஆசைப்பட்டார்.  ஆனால், 1984 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி,  எதிர்பாராத விதமாக, சாலை விபத்தொன்றில் இறந்து போனார் . ஓய்வுக்குப் பின்னர் தனது பென்சன் தொகைக்காகப் போராடிய ஒலிம்பிக் வீரன் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமைச் சிறைக்குள் அகப்பட்டுக் கொண்டது.  
             1948ஆம் ஆண்டு, தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக உதவிய ஒவ்வொருவரிடமும் அதற்குரிய ரசீது வழங்கியிருந்தார்.  உதவிய கிராம மக்கள் அனைவருக்கும் பின்னாளில் நன்றியோடு அத்தொகையை திருப்பிச் செலுத்தியவர்தான் கே டி ஜாதவ்.  ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையிலேயே வாடியது. அவரது மகன் ரஞ்சித் ஒரு எளிய விவசாயி. தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் பொருட்டு, தந்தையின் பெயரில் பயிற்சி மையம் ஒன்றை கோலேஷ்வர் கிராமத்தில் அமைத்துத் தருமாறு அரசுடன் போராடி வருகிறார் ரஞ்சித். ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்றுவிடப் போவதாகவும் 2017ஆம் ஆண்டு விரக்தியில் பேசினார்.  ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு என்பது பெரும்பாலும்  வேடிக்கைப் பொருளல்லவா? இவரது கோரிக்கைக் கடிதங்கள் மட்டும்  அதற்கு விதிவிலக்கா என்ன?
                மகன் ரஞ்சித் ஜாதவின் கடும் அலைச்சல்களுக்குப் பிறகு, 2001ஆம் ஆண்டு கே டி ஜாதவிற்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக, தந்தைக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என, ரஞ்சித் ஜாதவ்  தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, பத்ம விருது பெறாத ஒரே வீரர் கே டி ஜாதவ் மட்டும் தான். இன்று வரை , அவரது கிராமத்தில் பயிற்சி மையம் என்பதும், பத்ம விருதும் கனவாகவே இருக்கிறது.  அரசின் பாராமுகமும் தொடர்கிறது.
                   1952ஆம் ஆண்டு, ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பிறகு, 32 ஆண்டுகள் உயிரோடிருந்த கசாபா தாதாசாகெப் ஜாதவின் அனுபவத்தைப் பயன்படுத்தி, எண்ணற்ற  மல்யுத்த வீரர்களை  நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அது போலவே எல்லா துறைகளிலும் வெற்றியாளர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.  அப்படிச் செய்யத் தவறியதால் தான், இன்றுவரை  ஒலிம்பிக்  பதக்கப் பட்டியலில் பாரத்ததின் பெயரைத் தேட வேண்டியிருக்கிறது.           

     மறக்கவோ மறைக்கவோ இயலாத வண்ணம், முதல் ஒலிம்பிக் பதக்கச்  சாதனையைச் செய்திருந்த அவரை , நமது தேசம் உச்சி முகந்து கொண்டாடியிருக்கலாம்; உயரே தூக்கி நிறுத்தியிருக்கலாம்; ஒரு சின்னமென அவரை அடையாளப்படுத்தியிருக்கலாம். துரதிருஷ்டம் - அது மட்டும் நிகழவேயில்லை.
           பயிற்சி மையமாவது, பத்ம விருதாவது?  பிழைப்பு அரசியல் நடத்தவே நேரம் போதாதபோது, இவற்றில் கவனம் செலுத்த ஏது நேரம்? அதிலும்  வாக்கு அரசியலைக் கணக்கில் கொண்டால் ,  நேர்மைக் கனவுகள் கூட இங்கே  பிழையாகிப் போகின்றதோ?

          கவனமாய் இருங்கள்…  வெற்றியாளர்களின் பாதச்சுவடுகள் என்பது , மானுட சமூகத்தை உயரே அழைத்துச் செல்லும் ஏணிப்படிகள்.

ஏணிகளை மதிக்கக் கற்போம்!

No comments:

Post a Comment