கொரில்லாக்களின் காதலி - டியான் ஃபாசே.
இன்று.... ஜனவரி 16!
“ The Man who
kills the animals today is
the man who
kills the people who get in his way tomorrow”
--Dian Fossey.
”இண்டர்நேஷனல் டியான் ஃபாசே கொரில்லா
ஃபண்ட்” என்ற அமைப்பு, உலககெங்கும் இருக்கும் கொரில்லாக் குரங்குகளைக் காப்பாற்ற பாடுபட்டு
வருகிறது. விலங்கின அழிப்பு என்பது மனித அழிவின் தொடக்கம் என்பதை மனித மனங்களில் விதைக்க
முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவில் பிறந்து, ருவாண்டா நாட்டில், கொரில்லா இன பாதுகாப்பிற்காக தன் உயிரையும் கொடுத்த
சூழியல் அறிஞர் டியான் ஃபாசே (1932-1985) என்ற பெண்மணி தான் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார்.
உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற இவரது சாகச வாழ்வு, தீரம் மிக்க ஒன்றாகும்.
1932ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் 16 ஆம் தேதி அமெரிக்காவின்
சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில் டியான் ஃபாசே பிறந்தார். இவர் ஆறு வயதாக இருந்தபோது, இவரது பெற்றோர் ஜார்ஜ் ஃபாசே – கேத்தரின் இருவரும்
விவாகரத்து பெற்று, தனித்தனியே பிரிந்தனர்.
தனது மகளை தன்னோடு அழைத்துச் சென்று வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் கனவு நிறைவேறவில்லை.
தாய் கேத்தரின் பராமரிப்பிலேயே வளர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கேத்தரின்
அடுத்த
ஆண்டே மறுமணம் செய்து கொண்டார். வளர்ப்புத் தந்தை ரிச்சர்ட் பிரைஸ், டியான் ஃபாசேயின்
மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை.
தாயுடனோ, வளர்ப்புத் தந்தையுடனோ ஒன்றாக
உணவு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவதற்குக்கூட இவருக்கு அனுமதி இல்லை. டியான் அன்புக்காக ஏங்கிக்
கிடந்தார். வீட்டில் மீன் தொட்டியில் இருந்த தங்க மீன் மீது , அன்பை வாரி இறைத்தார்.
வளர்ப்புப் பிராணிகள் மீது அவரும், அவர் மீது அவைகளும் காட்டிய அன்புதான் அவரை வளர்த்தெடுத்தது.
வளர்ப்புத் தந்தையின் ஆலோசனைப்படி, வணிகப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், குதிரை ஏற்றத்திலேயே
கவனம் செலுத்தினார். 1954ஆம் ஆண்டு, கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இதனால் வெறுப்படைந்த வளர்ப்புத் தந்தை, இவரது படிப்புக்குச் செய்யும் பண உதவியை முற்றிலுமாக நிறுத்தினார்.
கடை ஒன்றில் எழுத்தர், ஆய்வகத்தில் உதவியாளர்,
தொழிற்சாலை ஒன்றில் இயந்திர உதவியாளர் என பல பணிகளைச் செய்து தனது படிப்பைத் தொடர்ந்தார்.
Occupational Theraphy படிப்பில் பட்டம் பெற்றார். சில காலம், காசநோய் மருத்துவமனையில் பணியாற்றினார். 1956ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஊனமுற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையில் சில காலம்
பணியாற்றினார். அங்கே சக ஊழியராக இருந்த மேரி வைட் என்பவரின் பண்ணையைப் பராமரிப்பதில்
தனது மீத நேரத்தைச் செலவிட்டு வந்தார். விலங்குகள் மீதான அவரது நேசம், தொடர்ந்து அவரை
இயக்கியது.
வன விலங்குகள் மீதான ஆர்வம் காரணமாக
, ஆப்பிரிக்கக் காடுகளுக்குச் செல்ல முடிவு செய்தார். அதற்காக, தனது ஓராண்டு சம்பளத்தை
சேமித்தார். கூடவே, தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும்
கொண்டு (சுமார் 8000 டாலர்), 1963ஆம் ஆண்டு ஏழு வாரப் பயணமாக ஆப்பிரிக்கா கிளம்பினார். சுற்றுப்பயணம் சென்ற டியான் ஃபாசேயின்
வாழ்வும், நோக்கமும் அங்கே முற்றிலுமாக மாறிப்போனது. டாக்டர் லூயிஸ் லீக்கிடம் பேசிய
வார்த்தைகள் இவரது கனவின் நீளத்தை அதிகரித்தன. ஆம், அப்போது முதல்
கொரில்லாக்களைப் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
ஆப்பிரிக்கா பயணத்திற்குப் பிறகு, அமெரிக்கா
திரும்பிய டியான் தனது கடன்களை எல்லாம் அடைத்தார். தனது பயண அனுபவங்களை “த கொரியர்
ஜார்னல்” பத்திரிக்கையில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். நிரந்தரமாக ஆப்பிரிக்கா சென்று கொரில்லாக்கள் பற்றிய
ஆய்வில் முழுமையாக ஈடுபட விரும்பினார். அதற்காக , 1966-67 ஆம் ஆண்டு அமெரிக்காவை விட்டு
வெளியேறினார். காங்கோவில் சிலகாலம் ஆய்வுப் பணிகளைச் செய்த டியான், 1967ஆம் ஆண்டு ருவாண்டோவில்
உள்ள விருங்கா மலைப்பகுதிக்குச் சென்றார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார்
3000 மீட்டர் உயரத்திலிருந்த அந்தப் பகுதியில், "காரிசோக் ஆய்வு மையத்தை" நிறுவினார் டியான்
ஃபாசே. கொரில்லாக்களைப் பாதுகாக்க இவர் மேற்கொண்ட துணிச்சலான முயற்சிகளை, உலகம் பெருமூச்சோடு வியந்து பார்த்தது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அலியெட் டிமுன்ச் என்ற பெண்மணி , விருங்கா மலையில் இவருக்கு
வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். சைகைகள் மூலமும், முக பாவனைகள் மூலமும் அப்பகுதி
மக்களிடம் கொரில்லாக்கள் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து உரையாடினார்.
கொரில்லாக்களை வேட்டையாடுவதையும்,
சுற்றுலா என்ற பெயரில் அவைகளின் வாழ்வினைத் துன்புறுத்துவதையும் தடுக்க, தன்னால் ஆன எல்லா வழிகளையும் பின்பற்றினார்.
நேஷனல் ஜியாகிரஃபி இதழில் ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதினார். இதன் காரணமாக
, வேட்டைக்காரர்கள் மற்றும் சுற்றுலா வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
அதே வேளையில், அந்த அடர் காட்டுக்குள் வசித்து வந்த கொரில்லாக்கள், டியான் ஃபாசே
மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கின. இவரைத் தொட்டுப்
பார்த்து, ஏதேதோ சொல்ல வந்தன. அவைகள் ஒவ்வொன்றையும் இவர், பெயரிட்டே அழைக்கத் தொடங்கினார். பீனட்ஸ் என்ற கொரில்லா
இவரைத் தொட்டுப் பார்த்ததுதான் கொரில்லாவுக்கும் மனிதனுக்குமான முதல் அமைதியான தொடுகை
நிகழ்வாகும். டிஜிட் என்ற கொரில்லா, இவரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேட்டையாளர்கள் டிஜிட் என்ற கொரில்லாவை
திட்டமிட்டுக் கொன்றனர். ஈட்டியால் குத்திக் கிழிக்கப்பட்ட டிஜிட்டின் உடல் பாகங்கள்
தனித்தனியாக வெட்டப்பட்டன. உதாரணத்திற்கு, டிஜிட்டின் கைகள் வெட்டப்பட்டு, அழகிய சாம்பல் கிண்ணமாக (Ash Tray) மாற்றப்பட்டது. அதன் காரணமாக, டியானின் மனம்
மிகுந்த வேதனைக்குள்ளானது. வேட்டையாளர்களில்
ஒருவனைப் பிடித்த டியான், அவன் மூலம் ஏனைய குற்றவாளிகளியும் கண்டுபிடித்து, அனைவரையும்
சிறைக்கு அனுப்பினார்.
அற்ப பணத்திற்காக வேட்டைத் தொழில் செய்யும் இன அழிப்பாளர்களிடமிருந்து,
கொரில்லாக்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்காக, “டிஜிட் ஃபண்ட்” என்ற அமைப்பை நிறுவினார்
டியான் ஃபாசே. 1983ஆம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட,
“Gorilla’s In the Mist” புத்தகம் மிகவும்
முக்கியமான ஒன்றாகும். இப்புத்தகத்தைத் தழுவி,
திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான
சூழியல் அறிஞரான டியான் ஃபாசேயின் சொந்த வாழ்க்கை சிக்கல்களால் நிரம்பிக் கிடந்தது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்துக் கலைத்தது, மூன்றுக்கும் மேற்பட்ட காதல்,
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமை என குழப்பங்களிலேயே அவரது வாழ்வு கடந்தது. சில நேரங்களில், வேட்டைக்காரர்கள் என நினைத்து, அப்பாவிகளைத் தாக்கிய
டியான் ஃபாசே, பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டே இருந்தார். இடைவிடாது புகைக்கும் சிகரெட் பழக்கத்தால், டியானின்
உடல்நிலையும் அவருக்கு எதிராகவே இருந்தது.
1985 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்
27 ஆம் தேதி அதிகாலை, டியானை எழுப்பச் சென்ற அவரது பணியாள் அதிர்ச்சியில் உறந்து போனார்.
காரணம், டியானின் உடல் இரத்த வெள்ளத்தில் மிதந்து
கொண்டிருந்தது. அவரது தலைப்பகுதி, மூலைவிட்டம் போல இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பணியாளர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டிருந்த இமானுவேல்
என்ற மலையேற்ற வீரர் , துக்கிலிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கொலையினைச் செய்தவர்கள்
யார் என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவேயில்லை.
25 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள
காரிசோக் ஆய்வு மையத்தில் , டியானுக்கு மிகவும் நெருக்கமான டிஜிட் என்ற கொரில்லா புதைக்கப்பட்ட
அதே இடத்தில், டியான் ஃபாசேவும் புதைக்கப்பட்டார். சூழியல் மேம்பாட்டுத் துறையில்,
கொரில்லா குரங்குகளுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த
உயிரியல் அறிஞர் டியான் ஃபாசேயின் பங்கு அளப்பரியது மற்றும் ஆச்சரியம் தருவதாகும்.
புதுமைப்பித்தன் சொன்னதுபோல, கருணைக் கிழங்கில் மட்டும்தான் இன்று கருணை என்பது
சொல்லாக எஞ்சிக் கிடக்கிறது. மானுட நேசமே மரித்துப் போய், உலகெங்கும் இனப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், விலங்கின அழிப்பை, நாம் எப்படி சரி
செய்யப் போகிறோம்?
அன்பூறும் இதயங்கள் பெருகட்டும்
!
No comments:
Post a Comment