Sunday, January 20, 2019

ஜனவரி 19

துயர நதி - எட்கர் ஆலன் போ

ஜனவரி 19....இன்று!

               ”We Loved with a Love that was more than Love" - Edgar Allan Poe
                   
            ஆற்ற முடியாத சோகம், மனச்சமநிலையைக் குலைத்து நம்மை  மீள இயலாத பெருங்குழிக்குள் தள்ளிவிடுகிறது.  1845ஆம் ஆண்டு  New York Evening Mirror இதழில்  வெளிவந்த The Raven கவிதையைப்  படிக்காத  கவிதை வாசகனைக் காண முடியாது. அழையா விருந்தாளியாக வந்தமர்ந்த ஓர் அண்டங்காக்கையோடு, ஒரு மனிதன் நடத்தும் உரையாடல் தான் அந்தக் கவிதை. அந்த அண்டங்காக்கை பேசும் ஆற்றல் கொண்டது. ஆனால், துன்ப தேவதையின் வளர்ப்பில் உருவான அதற்கு, ”Nevermore" என்பதைத் தவிர வேறெதுவும்  தெரியவில்லை.  கவலைகளால் நிரம்பி வழிந்த அந்த மனிதனிடத்தில், வாழ்க்கை குறித்த கேள்விகள் ஏராளம் இருந்தன. ஆனால், அண்டங்காக்கையிடமிருந்து கிடைத்த பதில் என்னவோ அந்த ஒற்றைச் சொல் தான். 
                இழப்பின் துயரம், உயிரான உறவின் பிரிவு, நிலையாமை உருவாக்கும் அச்சம் என இக்கவிதை,  வாசகனின் உள்ளத்தை ஆழ்ந்த சிந்தனைக்குள் இட்டுச் சென்றுவிடுகிறது.  தத்துவம், புராணம், படிமம், குறியீடுகள் நிறந்த இக்கவிதை, இன்றைக்கும் செவ்வியல் தன்மையுள்ள கவிதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. இக்கவிதையைப் போலவே,  இதனை எழுதிய கவிஞனும் பெரும் புகழ் பெற்றான். இக்கவிதை வெறும் 9 டாலர் சம்பளத்திற்காக எழுதப்பட்டது. ஆனால், வறுமையின் கரங்களில் அகப்பட்டுக் கிடந்த கவிஞனுக்கு, இக்கவிதை மன ஆறுதலைத் தந்திருக்கக் கூடும்.  இக்கவிதையை எழுதியவர் எட்கர் ஆலன் போ. 
               வாழ்வின் இன்னல்களை, விருப்புகளை எழுதி, எழுத்தின் வழியே வாழ்வினைக் கடத்திவிட எண்ணிய எட்கர் ஆலன் போ (1809-1849), ஆங்கில இலக்கிய உலகின் வைரங்களுள் ஒருவர்.   கவிதைகள், சிறுகதைகள், புனைவுகள், விமர்சனக் கட்டுரைகள் , துப்பறியும் கதைகள் என பல தளங்களில் இயங்கியவர். எழுத்தாளனாகவே   வாழ்ந்து காட்ட வேண்டுமென்று விரும்பியவர்;  பத்தொன்பதாம் நூற்றாண்டு- கற்பனாவாத புனைவெழுத்தாளர்களுள்   முக்கியமானவர்.
             அமெரிக்காவின் போஸ்டன் நகருக்கருகில், 1809ஆம் ஆண்டு, ஜனவரி 19 ஆம் தேதி எட்கர் ஆலன் போ பிறந்தார். ஒரு அண்ணன், ஒரு தங்கை என இவரோடு சேர்த்து, மொத்தம் மூன்று பிள்ளைகள். நாடக நடிகர்களாக இருந்த பெற்றோர் டேவிட் போ-எலிசபெத் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த போது, இவருக்கு வயது ஒன்று. தங்கை அப்போதுதான் பிறந்திருந்தார். 1811ஆம் ஆண்டு,  காசநோய் தாக்கி தாயும், குடியினால் தந்தையும் இறந்துவிட , இரண்டு வயதில் ஆதரவிழந்து அநாதையானார் எட்கர் ஆலன் போ. 
                ஜான் ஆலனால் வளர்க்கப்பட்ட எட்கர், கல்லூரிப்படிப்பை முறையாக நிறைவு செய்யவில்லை. பள்ளி செல்லும் காலம் தொட்டே, ஜான் ஆலனுக்கும், எட்கருக்கும் பண விஷயத்தில் தகராறு வந்துகொண்டே இருந்தது.  விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிப்பு பாதியிலேயே நின்று போனது. 1827ஆம் ஆண்டு, ராணுவப் பணியில் சேர்ந்தார் எட்கர் ஆலன் போ. அவரது முதல் கவிதைத் தொகுப்பும் அந்த ஆண்டுதான் வெளிவந்தது.
                          தனது பத்தொன்பதாம் வயதில், Tamerlane and other Poems என்ற கவிதைத் தொகுப்பை, ‘போஸ்டன் நகரச் சேர்ந்தவன்’ என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பின்பு, 1829ஆம் ஆண்டு மீண்டும் வீடு திரும்பினார்.  ஜான் ஆலனோடு சமாதானம் ஏற்பட்டது. ஆனால் கொஞ்ச காலம் தான். மீண்டும் தனியே கிளம்பி, பால்டிமோர் நகருக்குச் சென்றார் எட்கர். அங்கு, Philedelphia Saturday Courier , Baltimore Saturday Visiter போன்ற  வார இதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதனைக்  கொண்டு, தனது வாழ்வைக் கடத்தினார்.
                       1833ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு போட்டிக்கு, 6 கதைகளையும், சில கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார். அதில், M S Found in a Bottle என்ற கதை 50 டாலர் முதல் பரிசு பெற்றது. அதன் வழியே பிரபலமான மனிதராக மாறினார் எட்கர். இவருடைய கதைகள், கவிதைகள் புத்தகமாக வருவதற்கு ஜான் கென்னடி என்ற நண்பர் மிகவும் உதவி செய்தார். பத்திரிக்கைகளில் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால், அதீத குடிப் பழக்கத்தால் எந்த வேலையிலும் இவரால் நிலைத்திருக்க முடியவில்லை.
                                     வறுமை அவரை விடாமல் துரத்தியது. எழுத்தினை மட்டுமே கொண்டு, உலகியல் வாழ்வினை நடத்துவதென்பது அவ்வளவு எளிதானதா என்ன? ஆனால், எட்கர் இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். வாரம் பத்து டாலர் சம்பளத்திற்கு , 11 பக்க கதைகளை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார். சில சமயங்களில் கறார் தன்மையோடு கூடிய  விமர்சனக் கட்டுரைகளை எழுதி அனுப்பினார். இவரால் விமர்சனம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். வசை பொழிந்தார்கள். ஆனால் இவரோ, எழுதுவதையும் குடியையும் நிறுத்தவேயில்லை.
                                  துப்பறியும் புனைகதைகளுக்கு இவர் தான் முன்னோடி. 1841ஆம் ஆண்டு, இவர் எழுதி வெளியிட்ட The Murders in the Rue Morgue என்ற துப்பறியும் நாவல், இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றது. ’அகஸ்டே டியூபான்’ என்ற துப்பறிவாளனின் அறிமுகம் , புனைகதை உலகில் புதிய சாளரத்தைத் திறந்து வைத்தது. லார்ட் பைரனை தனது எழுத்துலகின் முன்னோடியாகக் கொண்டு, தொடர்ந்து எழுதினார் எட்கர் ஆலன் போ.
                            துயரங்களாலும் வறுமையாலும் நிரம்பிய அவரது வாழ்க்கையில் தோன்றிய ஒரே மகிழ்ச்சி மின்னல் விர்ஜீனியா க்ளெம்.  1936ஆம் ஆண்டு, விர்ஜீனியாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். விர்ஜீனியா இவருக்கு சகோதரி முறை என்று குற்றம் சொல்லும் விமர்சகர்களும் இருகிறார்கள். எது எப்படியோ, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள் என்பது  உண்மை.  மேலும்,  தனது உள்ளத்தின் மொத்த அன்பையும் அவளுக்கே,  எட்கர் வாரி வழங்கினார் என்பதும் உண்மை.
                     அவளது மடி இவருக்கு ஆறுதல் தந்தது. அவளது இதழ் சொல்லும் சொற்கள் இவருக்கு உயிர் கொடுத்தன. ஆனால், 1842ஆம் ஆண்டு, விர்ஜீனியாவைத் தாக்கிய காசநோயால், இவர் தடுமாறிப் போனார். அவளது தேகம் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைய ஆரம்பித்தது. எட்கரின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக  உடைய ஆரம்பித்தது. எப்படியாவது அவளைக் காப்பாற்றி விட முடியாதா என தவிக்க ஆரம்பித்தார்.
            அந்த சமயத்தில் அவர் எழுதிய கதை தான்  The facts in the case of M Valdemar. காசநோயால் பாதிக்கப்பட்டு, மரணப் படுக்கையில் இருக்கும் வால்டிமர் என்ற எழுத்தாளனின் கதை அது.  எழுத்தாளரின் விருப்பப்படி, மருத்துவர் ஒருவர், அவரை மனோவசியம் செய்கிறார். ஏழு மாதங்கள் மரணமற்று, வசிய நிலையில் இருக்கும் வால்டிமரை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற நினைக்கிறார் மருத்துவர். ஆனால், உடன்பட மறுக்கும் வால்டிமர், சாம்பலாகி காற்றில் கலக்கிறார். வாழ வாய்ப்பில்லை என்று முடிவான பின்பு, சாகாமல் காப்பாற்ற என்ன வழி என எட்கார் ஆலன் யோசித்ததன் விளைவே இந்தக் கதை.
                  நிஜ  வாழ்வில் அப்படியெல்லாம் நடக்கவில்லை. எட்கர்  ஆலன் போவின் உயிராக  இருந்த விர்ஜீனியா, 1847ஆம் ஆண்டு இறந்து போனார். அவளின் பிரிவிலிருந்து இவரால் மீளவே முடியவில்லை. அவள் அடக்கம் செய்யப்பட்ட புதை மேட்டிலேயே , இவரது பகலும், இரவும் கழிந்தன. பனி கொட்டும் இரவெல்லாம், அவளது கல்லறையிலேயே அழுது கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகள் ஈராயிரம் ஆண்டுகளென அவருக்கு இருந்திருக்க வேண்டும். 1849ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி,  பால்டிமர் செல்லும் நகரச் சாலையில், சுய நினைவின்றி மயங்கிக் கிடந்தார்.
                   வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட எட்கர் ஆலன் போ, 1849 - அக்டோபர் 7ஆம் தேதி, இவ்வுலகின் மீளாத் துயரிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அப்போது அவரது வயது நாற்பது.  குடிதான் அவரது மரணத்திற்குக்  காரணம் என பலர் சொன்ன போதிலும், மருத்துவர்களும் நண்பர்களும் அதனை மறுத்தனர். மாறாக, சிறுகச் சிறுகத் தோன்றி, பின் புரையோடிப்போன கவலைகளே,அவரது உயிரை அறுத்தது என உறுதி செய்தனர்.
                இவரது  வாழ்க்கையும், எழுதிய கதைகளும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் இவர் வாழ்ந்த வீடு, வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.   முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்து காட்டியது, துப்பறிவாளர்களை கதாபாத்திரங்களாக்கி, புதிய வகை கதைகளை உருவாக்கியது, காலத்தால் அழிக்க முடியாத கவிதைகளை எழுதியது என-  தனது எழுத்தின் வழியே  இலக்கிய உலகில்  நிலையாய் இருக்கிறார் எட்கர் ஆலன் போ.
                       நினைவுக்கும் மறதிக்கும் இடையில் தான், நமது வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது. பொங்கி வரும் நினைவுகளில் நீந்தி, கரையேறும் வல்லமை பெற்றவர்களுக்கே வாழ்க்கை இனிக்கிறது!.

1 comment:

  1. Edgar was a excellent poet and short story writer in English but you are a excellent
    reader and orator and writer in Tamil. do well sir .

    ReplyDelete