வலி நிவாரண மருந்து - ஃபெலிக்ஸ் காஃப்மன்.
ஜனவரி 21….இன்று!
கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும்
வில்லோ மரப் பட்டைகளே, முன்பொரு காலத்தில் வலி நிவாரணிகளாக பயன்படுத்தப்பட்டு வந்தன.
மருத்துவத் துறையின் தந்தை என்றழைக்கப்படும்
ஹிப்போகிராட்டஸ் காலம் தொட்டே இப்பழக்கம் நடைமுறையில் இருந்தது. பிரசவத்தின் போது,
வலி குறைக்க, கர்ப்பிணித் தாய்மார்கள் வில்லோ மரப் பட்டைகளை வாயில் வைத்து மென்று கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு, வலி குறைவதற்கான காரணம், வில்லோ
மரப்பட்டைகளில் இருந்த சாலிசிலிக் அமிலமே என்பதை, பின்னாள்களில் அறிஞர்கள் உறுதி செய்தார்கள்.
1859ஆம் ஆண்டு, தூய சாலிசிலிக் அமிலம் தயாரிக்கப்பட்டு , வலி நிவாரணியாக பயன்பாட்டுக்கு
வந்தது. ஆனால், இம்மருந்து வயிறு உள்ளிட்ட உள்ளுறுப்புகளை புண்ணாக்கியது. ஒரு கட்டத்தில்
முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை முடக்கத் தொடங்கியது. அப்போதுதான், இம்மருந்தின்
பக்க விளைவை சரி செய்ய , உலகெங்கும் இருந்த விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருந்தார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில், நடைமுறைக்கு உகந்த வலி நிவாரணி உருவாக்கப்பட்டது. அந்த மருந்தின்
பெயர் தான் “ஆஸ்பிரின்(Aspirin)”. இன்று, உலகில் மிக அதிகம் விற்பனையாகும் மருந்தும்
ஆஸ்பிரின் தான்!.
தந்தையின் மூட்டு வலிக்காக,
பக்க விளைவுகளற்ற, ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணி
மருந்தைக் கண்டுபிடித்தவர் ஃபெலிக்ஸ் காஃப்மன்.
வேதியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றிருந்த இவர்தான், தற்போது போதைப் பொருளாகப்
பயன்படுத்தப்படும் ”ஹெராயினையும் (Heroin)”
கண்டுபிடித்து உலகுக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி நாட்டில் உள்ள லுட்விக்ஸ்பர்க்
நகரில், 1868ஆம் ஆண்டு, ஜனவர் மாதம் 21 ஆம் தேதி ஃபெலிக்ஸ் காஃப்மன் பிறந்தார். தந்தை
ஒரு தொழிலதிபர். வசதிக்குப் பஞ்சமில்லை. காஃப்மன் தந்தையைப் போலவே உற்பத்தித் துறையில்
ஆர்வம் காட்டினார். 1890ல் மூனிச் நகரில் ரசாயனத் துறையில் சேர்ந்தார். சிறப்புத் தரத்துடன்
கூடிய முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1893ஆம் ஆண்டு, முனைவர் பட்டத்திற்கான படிப்பிலும்
முதல் தர மாணவனாக வெற்றி பெற்றார்.
சிறப்பான அறிஞரும், பின்னாளில் நோபல்
பரிசு பெற்றவருமான பேயர் அவர்களின் ஆய்வுக் கூடத்தில், 1894ஆம் ஆண்டு, வேதியியல் ஆய்வறிஞராகப் பணியில் சேர்ந்தார். இவரது
அறிவும் ஆற்றலும் பேயருக்கு தெரிய வந்தது. அதனால், இவர் மீதான மதிப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
எல்பெர்ஃபெல்ட் நகரில் புதிதாக
உருவாக்கப்பட்டிருந்த பேயரின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் இவர் தீவிர ஆராய்ச்சியில்
ஈடுபட்டார். புதிய புதிய வேதிக் கலவைகள் மூலம் புதிய மருந்துகளை உருவாக்குவதில்
ஆர்வம் காட்டினார். அந்த சமயத்தில், காஃப்மன் தந்தைக்கு ஆர்த்ரிட்டிஸ் காரணமாக உடல்
மற்றும் மூட்டு வலி மிக அதிகமாக இருந்தது. காஃப்மனின் தந்தை எடுத்துக் கொண்ட, தூய சாலிசிலிக்
அமிலத்தாலான வலி நிவாரணிகள் அதிகமான பக்க விளைவை உண்டாக்கி இருந்தன. அதற்கு தீர்வு
காணும் முயற்சியில் தனது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தார் ஃபெலிக்ஸ் காஃப்மன்.
சாலிசிலிக் அமிலத்துடன் அசிட்டிக்
அமிலத்தைச் சேர்த்து, பயன்பாட்டுக்கு உகந்த புதிய மருந்தை (அசிட்டி சாலிசிலிக் அமிலம்)
உருவாக்கினார். பக்க விளைவுகளை மட்டுப்படுத்திய
இம்மருந்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டினை,1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று காஃப்மன் வெளியிட்டார்.
பேயர் மருந்துக் கம்பெனியின் அப்போதைய தலைவர் ஹெயின்ரிச் ட்ரெஸ்ஸர் மருந்தை தானே உட்கொண்டு, உலகின் சந்தேகக்
கண்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பேயர் கம்பெனியின் அந்த மருந்திற்கு
ஆஸ்பிரின் என்ற பெயர் வைக்கப்பட்டது. அசிட்டிக் அமிலம் இருப்பதாலும் (A), ஸ்பைரியா
(Spirea) என்ற குறுஞ்செடியிலிருந்து சாலிசிலிக்
பெறப்பட்டதாலும், இவை இரண்டையும் இணைத்து, Aspirin என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.
இன்று , ஆஸ்பிரின் பல நோய்களுக்கு மருந்தாக தரப்படுகிறது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் மாரடைப்பு வராமல் தடுக்க, இதனைப் பயன்படுத்துகிறார்கள். விண்வெளி செல்லும் வீரர்களின்
முதலுதவிப் பெட்டியிலும் கூட, ஆஸ்பிரின் கட்டாயம் இருக்கும்.
ஆஸ்பிரின் மருந்துத் தயாரிப்பில்
ஈசென்க்ருன் என்ற யூத விஞ்ஞானியும் இடம் பெற்றிருந்தார். பேயர் கம்பெனி ஹிட்லரின் நாஜிக்
கொள்கைக்கு ஆதரவு தந்ததால், யூதரான ஈசென்க்ரூன் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலும் ஆஸ்பிரின்
மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றில் உண்டு.
அதேபோல, ஓபியத்திலிருந்து பெறப்பட்ட
கோடைனும் (Codeine) வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டது. அதற்கும் பக்க விளைவுகள் இருந்தன.
பேயர் கம்பெனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , ஆஸ்பிரின் பாணியிலேயே மார்ஃபைனுடன் அசிட்டிக்
அமிலம் சேர்த்து, புதிய பொருளை உருவாக்கினார்.
அதற்குப் பெயர் தான் ”ஹெராயின்”. 1870ஆம் ஆண்டிலேயே
அது கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், இவரது முறை, எளிமையாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய
உதவியது.
போரில் காயமடைந்த வீரர்கள்,
கர்ப்பிணிகள், மன நல பாதிப்புகள், அதிக வலி
உண்டாக்கும் இருமல், அறுவை சிகிச்சையின் போது என பல வலிகளுக்கு மருந்தாக ஹெராயின் பயன்படுத்தப்பட்டு
வந்தது. தற்போது, ஹெராயின் உண்டாக்கும் பாதிப்புகள் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில்
அது தடை செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படும் ஹெராயினைத் தயாரித்து வழங்கியதும் காஃப்மன் தான்
என்பது நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
ஆஸ்பிரின், ஹெராயின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கும்
காஃப்மன் பெயரைப் பயன்படுத்துவதில் உள்ள சர்ச்சை இன்று வரை நீடிக்கிறது. ஆனாலும், இரண்டு
மருந்துகளையும் எளிமைப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வந்த மூலக்கூறு காஃப்மனுடையதுதான்
என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, 2002ஆம் ஆண்டில் Hall of Fame அரங்கில் , காஃப்மன் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1928ஆம் ஆண்டு,பேயர் கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்ற காஃப்மனின் மனம் ஏதோ ஒன்றுக்காக தனிமையை நாடியது. சுவிட்சர்லாந்து நாட்டில், தனிமையில் தனது பொழுதுகளைக் கழித்த அவர், 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இறந்து போனார். இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. ஆய்வுகளை நிறுத்தி விட்டு, சுவிட்சர்லாந்து சென்று, தனிமையில் இருந்த காரணமும் தெரியவில்லை.
விதிகளை மீறி, ஹெராயின் பயன்படுத்தியதால் , சராசரியாக ஓர் ஆண்டில் 118000 பேர் இறப்பதாக WHO (2015-Statistics) அறிவித்துள்ளது. அதே வேளையில், ஆண்டுக்கு 40000 டன் ஆஸ்பிரின் மாத்திரைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி வருகின்றன. நியாயத் தராசில் இரண்டு பொருள்களையும் வைத்து, காஃப்மனை நாம் மதிப்பிடப் கூடாது. ஏனெனில், மனித குலத்தின் வலியைக் குறைக்க வந்த வலி நிவாரணி ஃபெலிக்ஸ் காஃப்மன்.
வலிகளைக் குறைக்கும் வழிகள் இங்கே ஆயிரம் இருக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் - மனிதனாகப் பிறந்து விட்டால், வலிகளைச் சுமந்து தான் ஆக வேண்டுமோ?
1928ஆம் ஆண்டு,பேயர் கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்ற காஃப்மனின் மனம் ஏதோ ஒன்றுக்காக தனிமையை நாடியது. சுவிட்சர்லாந்து நாட்டில், தனிமையில் தனது பொழுதுகளைக் கழித்த அவர், 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இறந்து போனார். இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. ஆய்வுகளை நிறுத்தி விட்டு, சுவிட்சர்லாந்து சென்று, தனிமையில் இருந்த காரணமும் தெரியவில்லை.
விதிகளை மீறி, ஹெராயின் பயன்படுத்தியதால் , சராசரியாக ஓர் ஆண்டில் 118000 பேர் இறப்பதாக WHO (2015-Statistics) அறிவித்துள்ளது. அதே வேளையில், ஆண்டுக்கு 40000 டன் ஆஸ்பிரின் மாத்திரைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி வருகின்றன. நியாயத் தராசில் இரண்டு பொருள்களையும் வைத்து, காஃப்மனை நாம் மதிப்பிடப் கூடாது. ஏனெனில், மனித குலத்தின் வலியைக் குறைக்க வந்த வலி நிவாரணி ஃபெலிக்ஸ் காஃப்மன்.
வலிகளைக் குறைக்கும் வழிகள் இங்கே ஆயிரம் இருக்கலாம். ஆனால், யாராக இருந்தாலும் - மனிதனாகப் பிறந்து விட்டால், வலிகளைச் சுமந்து தான் ஆக வேண்டுமோ?