வலியோடும் வலையோடும்!
என் கசடுகள் தின்று
கொழுத்த மீனே...!
இன்று..
கடலாடும் அதீதத்தில்,
காமத்தீயின் பெருநெருப்பில், கண்காணும் குளங்களோடு குதூகலித்துக் கொண்டிருக்கிறாய்.!
ஒரு நாள்...
அலையும் திரைகளில்
நிறையும் நரைகளில்
உறைந்த மனத்துடன்
உறைவிடம் தேடுவாய்!
அந்நாள்..
எத்திசையும் கரையிருக்கும்.
அத்தனையும்
கதவடைக்கும்.
பத்து விரல் தொட்டதெல்லாம்
பத்திரமாய்
முகம் மறைக்கும்.
ஆலைச்சக்கையென
ஆளாய் நீயிருப்பாய்!
வேலை நிறையுமொரு
வேளை பார்த்திருப்பாய்!
அன்று...
விருப்பத்தில் நெருப்பிட்டு
வருத்தத்தில் சிரிப்பிட்டு
என் கரை கணக்கிட்டு
முடிவுரை நாடுவாய்!
என் கசடுகள் தின்று
கொழுத்த மீனே...,
கரையில் தான் நானிருக்கிறேன்.
வலையோடு தானிருக்கிறேன்.!
நீ...
விழுந்த அடுத்த நொடி
விருப்பமுடன்
உனை அணைப்பேன்.
அணைத்த மறுநொடியே,
அழுதவிழி நீர் கொண்டு -
மீந்தவுன் உயிரொளியை
சடுதியில் அணைப்பேன்.
பிறகு உன்னை
விரும்பி உண்டு,
மகிழ்ந்து செரித்து
பெரும் நிறைவுடன்
கழிவென நீக்குவேன்.
அன்று தானெந்தன்
கவலைகள் போக்குவேன்.
காலம் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறது -
உன் குதூகல
வேடிக்கைகளை!
ஆடும் வரை ஆடு!!
No comments:
Post a Comment