ஆலகாலம் – கலைச்செல்வி.
(1)
”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்தது இவ்வுலகு.”
3 இலட்சம் ஆண்டுகளாய், மனிதனின்
பார்வையில் மாறாதிருப்பது நிலையாமை மட்டுமே. வாழ்ந்து முடித்த அத்தனை கோடி மனிதர்களின்
கண்களையும் ஒன்றாக இணைத்து, கூட்டுக் கண்களாக்கி, முழுமைக் காலத்தையும் ஒற்றைப் பார்வையில்
பார்க்க முடிந்தால், இரண்டு உண்மைகளை நம்மால் உணர முடியும். ஒன்று, மரணம் ஏற்படுத்தும்
நிலையாமை. இரண்டு, அதனில் இருந்து மீண்டெழ - இலட்சிய மனங்கள் கைக்கொண்ட வழிகள்.
ஆறுகளும், கடல்களும் மலைகளும் அழிந்து அழிந்து, புதிது
புதிதாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதைப் போலவே, மனிதர்களும் விலங்குகளும் காலச்
சக்கரத்தில் சுழன்று கொண்டே இருக்கிறார்கள். இங்கே சாஸ்வதமானது என்ற ஒன்று இல்லவே இல்லை.
சிந்திக்கும் பழக்கத்தின் ஆரம்ப காலத்தில் மனிதனின் கவலை
என்பது அன்றாடங்களாகத்தான் இருந்திருக்கும். நாகரீகம் தனது முடிவற்ற நீண்ட பயணத்தைத்
தொடங்கியபோதுதான், நிலையாமையின் துயரப் பிடி, மானுட மனத்தினை இறுக்கத் தொடங்கியிருக்கும்
. இனி எந்தச் சூழ்நிலையிலும் மாண்டவர் மீளப் போவதில்லை என்னும் ரணம், எத்தகைய மனிதனையும் கலைத்துப் போட்டு விடுகிறது
.
மனைவி இறந்ததால்
தன்னை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள், உளமார உடன்கட்டை ஏறும் மனைவிகள், பெற்ற பிள்ளைகளின் இழப்பினைத் தாங்கிக் கொள்ள இயலாமல்
மூச்சை நிறுத்திக் கொள்ளும் பெற்றோர்கள், உற்ற நண்பனின் உயிரோடு, தனது உயிரையும் சேர்த்துப்
பிரியும் நண்பர்கள் என பிரிவினைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தன்னையே காலத்தில் கரைத்துக் கொள்ளும் மனிதர்கள்
நிலையாமை அலைகளுக்குள் மூழ்கிப் போனவர்கள். வரலாற்றில் அவர்கள் ஒருபிரிவினர்; பெருந்
திரளானவர்கள்.
இரண்டாவது வகை, பிரிவின் துயர விசையை, வாகாக மடை மாற்றி-
பெருஞ்செயல்களுக்குள் அதனைச் செலுத்தி நிலைத்திருப்பதே
நிலையாமையை எதிர்கொள்ளும் மிகச் சிறந்த வழி என்பதைக் கண்டுணர்ந்த மானுடர்கள். இவர்கள்
எண்ணிக்கையில் சொற்பமானவர்கள். இதற்கான சன்றுகளை மானுட வரலாறு முழுமைக்கும் காண முடியும்.
மரணம் போலக் கற்றுத்தரும்
மிகச் சிறந்த ஆசான் இங்கே யாருமில்லை. நெருங்கிய உறவுகளின் துயரம், மரணம் - மனிதனது
சிந்தனைகளின் புதிய சாளரத்தினைத் திறந்து விடுகிறது. ’நிரந்தரமின்மைதான் இந்த உலகில் நிரந்தரமான ஒன்று’
என்பதை உணர்ந்து விட்டால் வாழ்வின் பூரணத்துவம் பிடிபட்டு விடுகிறது.
நம் மண்ணில்- பல்வேறு காலக்கட்டங்களில் பிரிவின்
வாதையில் இருந்து விடுபட்டு, தன் மனத்தினை நிறைவின் பொருட்டு ஒப்புக் கொடுத்து – அதன்
வழி, மீட்சி அடைந்த ஐந்து மனிதர்களின் வாழ்வினையும் இணைத்து ’வாழ்வதன் பேருண்மை’ பற்றி
விவாதம் செய்கிறது கலைச்செல்வியின் ’ஆலகாலம்’
என்ற இந்த நாவல்.
(2)
”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப்
பிணமென்று பெயரிட்டு
சூரையன் காட்டிடைபோய்ச்
சுட்டிட்டு
நீரினில் மூழ்கி
நினைப்பொழிந்தார்களே!”
-பட்டினத்தார்.
சேந்தமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அலையும்
பாணர் கூட்டத்தின் வாழ்வினப் பேசுகிறது நாவலின் முதல் பகுதி. தன் மீது, அளவற்ற நேசம் கொண்டிருந்த சகோதரி குழலியின் கரங்களுக்குள் தான்- அறிவுடை நம்பி என்ற பாணனின் வாழ்வு நகர்ந்து கொண்டிருநதது.
சேந்தமலையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சேந்தமனைக் காதலிக்கும் குழலி, துள்ளிக்
குதிக்கும் இளமானைப் போல, மகிழ்ந்து திரிகிறாள். அவளது காதலனைக் கண்டு, இருவரையும்
இணைத்து வைக்கும் பயணத்தில் இருக்கும் போதுதான், சங்ககாலப் புலவன் மாங்குடி மருதனாரைச்
சந்திக்கிறான் நம்பி. சேந்தமலையும், அதன் தலைவன் சேந்தமனும் இந்நேரம் சிதறிப் போயிருப்பார்கள்
என்ற செய்தியைப் பகிர்கிறார் மருதனார். இனி
எந்நாளும் நிறைவேறவே இயலாத குழலியின் காதல் வாழ்வு, அத்தனை சீக்கிரத்தில் சுருங்கிப்
போனதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தனது தமக்கையின் வாழ்வு, மீட்டப்படாத யாழினைப் போல, பயன் அற்றுப் போய்விட்டதை
எண்ணிக் கலங்குகிறான் பாணன். தன்னிடம் இருந்த
யாழில் இசை மீட்டத் தொடங்குகிறான். அந்தக் கானகம் இசையால் நிரம்பத் தொடங்குகிறது. நிறைவு
தரும் இசையின் கரங்களுக்குள் குழலியும் அவனும் நுழைகிறார்கள். மனம் ததும்பி, நிறைவில்
நிறைந்து வழிவதாக முதல் காலக்கட்டம் முடிகிறது.
ததும்பி வழிந்த மனத்தினை, கண்கள் மூடி அடக்கிக் கொண்ட மணிமங்கலத்துச்
சிற்பி விக்கிரமனின் வழியாக இரண்டாம் காலக்கட்டம்
துவங்குகிறது. எதிர்பாராத துயரங்களால், மனம்
துவண்டு, வட தேசம் வரை அலைந்து திரிந்த விக்கிரமன், மீண்டும் பல்லவ தேசம் வருகிறான்.
கடற்கரையில் நிலைத்து நிற்கும் பாறைகள் வழியே, காலத்தைக் கடந்து நிற்கும் மாபெரும்
ஓரு சிற்பத்தொகுதியை உருவாக்குகிறான். அவனது
வாழ்வில் உண்டான இழப்பின் வலியை, விசையென மாற்றி – காலம் கரைத்துவிட முடியாத மாமல்லபுரச்
சிற்பங்களை உருவாக்குகிறான். நிலையின்மையே நிஜம் என்பதை உணர்ந்த விக்கிரமன், மீண்டும்
வட திசை நோக்கி நடக்க, அவன் வடித்த சிற்பங்கள் அவனையே நோக்கி நிற்பதாக, இரண்டாம் காலக்கட்டம்
முடிகிறது.
மகாமண்டபத்தில் இருந்த இராசாதித்தனின் சிற்பம், முதலாம் பராந்தகச்
சோழனையே பார்த்துக் கொண்டிருப்பதாகத் தொடங்குகிறது மூன்றாம் பகுதி. தக்கோலப் போரில்
தனது ஆசை மகன் இராசாதித்தனை இழந்த பராந்ததகன், தனது வெறுமையில் இருந்து மீள முயற்சி
செய்கிறான். மறைந்து போன தனது தந்தையிடம் மரணம்
குறித்து விசாரணை மேற்கொள்கிறான். அந்தப்புரத்தில் இராசாதித்தனின் தாயிடம் விடை தேடுகிறான்.
உலகில் மிகக் கொடுமையான புத்திர சோகத்தில் இருக்கும், பராந்தகனின் மனம் சுமக்க முடியாத
பாரமாக இருக்கிறது. இறுதியாக, பொன்னி நதியின் வடகரையில் வீற்றிருக்கும் சாட்சி நாதேஸ்வரரின்
ஆலயக் கருவறையில் ஈசனின் புன்னகையில் மனம் கரைந்து நிற்கிறார் பராந்தகன். லிங்கத் திருமேனியில்
அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கு போது, ஈசனும் பராந்தகனும் மானசீகமாக உரையாடிக் கொள்கிறார்கள். நிலையாமை குறித்தும், மரணம்
குறித்தும் விசாரணை தீவிரம் கொள்கிறது. தில்லை வாழ் நடராசனுக்கும், அம்மைக்கும் பொன்னால்
கூரை வேய்ந்து, அதன் நிழலிலேயே இளப்பாறுகிறான் பராந்தகன். ஈசன் வீற்றிருக்கும் கனக
சபையில் ஏனைய நாட்களைக் கழிக்கிறார். காலத்தாலும் தொடவியலாத அசைவின்மை எது என பராந்தகச்
சோழன் உணர்ந்து கொள்கிறார்.
கால்கள் நகர்ந்தும் அசைவின்மையை உணரும் முத்துலெட்சுமி, தனது
மகன் சுப்பையாவை நாடகக் கம்பெனியில் விட்டுச் செல்லும் காட்சியில் தொடங்குகிறது நான்காம்
காலக்கட்டம். சுப்பையாவின் மனம் வழியாக இந்தப் பகுதி நகர்கிறது. விடுதலைப் போராட்ட
வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட சுப்பையா, வங்காளப் பகுதிக்குச் செல்கிறார். காந்தியின்
மீதான அபிமானம் மேலெழும்பி வர, வார்தா ஆசிரமம்
சென்று தங்குகிறார். அங்கே, மகாத்மா காந்தி, மகாதேவ் தேசாய் என பெரும் மனிதர்களோடு
உரையாடுகிறார். வங்காளப் பெண் கோத்ரி உடனான காதலும் கடந்து போகிறது. கஸ்தூரி பாவின் மரணத்தினை
மகாத்மா எப்படிக் கடந்து போகிறார் என்பதை சுப்பையா உடனிருந்தே பார்க்கிறான். பற்றற்ற
வாழ்வும், ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கர்ம யோகமும் தான், வாழ்வின் துயரங்களைக் கடந்து
செல்லும் மீட்சிக்கான வழி என்பதை காந்தியோடு உரையாடுவதன் வழியே சுப்பையா உணர்ந்து கொள்கிறான்.
பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியில், அவன் மனம் நிறைவு கொள்கிறது.
பிரார்த்தனைக் கூடத்தில் ஒளிரும் சிறு ஒளியைப் பார்த்துக்
கொண்டே அந்த இரவினைக் கடத்திக் கொண்டிருந்த அமுதனின் வாழ்வினைக் குறித்த கதைதான் நாவலின்
ஐந்தாம் பகுதி. எதிர்பாராமல் தனது தாயை இழந்துவிட்ட அமுதனின் உள்ள அலைகழிப்புகளைச்
சுற்றி நகர்கிறது இப்பகுதி. தாயின் பொருட்டு, துறவு நிலை என்பதையும் மீறி, இறுதிக் காரியங்கள் செய்த பட்டினத்தார், ஆதி சங்கரர் போல் அல்லாது, தாயின் நினைவுகளில் கங்கைக் கரையில்
துறவு கொள்கிறான் அமுதன். பருப்பொருளாகவும்,
மனத்தின் இருப்பாகவும் இங்கே இருப்பவை யாவும் சுமையென அமுதன் அறிகிறான். யதியின் கவிதைகளும், மணிக்கர்ணிகா ஆற்றுத் துறையும் அவனுள் ஏதேதோ சிந்தனைகளை உருவாக்குகின்றன.
நானும்
உனக்குச் சுமையா எனக் கேட்டபடியே அமுதனின் மனத்தோடு உரையாடுகிறாள் தேவி. கம்பிக் கதவுகளில்
இருந்து வெளியே வந்த தேவி, இயற்கையால் நிறைவு கொள்வதே வாழ்வு எனக் கூறுகிறாள். அமுதன்,
வெகுதூரம் நகர்ந்து சென்ற பிறகு, படித்துறையில் ஒரு சிதை எறிந்து கொண்டிருந்தது. அது,
தேவியின் மூக்குத்தியென ஒளி கொண்டிருந்ததைப் பார்க்கிறான். ஆக, ஒளி என்பது ஒன்றுதான்
எனப் புரிந்து கொள்கிறான் அமுதன்.
(3)
” நிலம் தானே உடலைத் தாங்குகிறது?
உடல் அத்தனை பாரமா?
மனத்தின் பாரம் உடலில்
அல்லவா இறங்குகிறது!”
- நாவலில் இருந்து…
சங்க காலம்,
பல்லவர்களின் காலம், பிற்காலச் சோழர்களின் காலம், இந்திய விடுதலைப் போராட்டக் களத்தின்
உச்சக் கட்டக் காலம், தற்போதைய காலக்கட்டம் என்ற ஐந்து காலக்கட்டங்களையும் அதனதன் வடிவங்களில்
அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர். மொழிநடை, வர்ணனை, கதை மாந்தர்களின் உளவியல்
சார்ந்த பகுதிகள் ஆகியன மிகச் சிறப்பாக வந்துள்ளன.
அந்தாதி போல, பொருள் பொதிந்த தனது அழகிய சொற்களால் ஐந்து
காலக்கட்டங்கலையும் முடிச்சிட்டு – ஒரு சரடென மாற்றியிருக்கிறார். தான் உருவாக்கிய பாத்திரங்களை வரலாற்று மனிதர்களோடு
விவாதம் செய்ய வைத்திருக்கும் பகுதிகள் அபாரம்.
பகத்சிங்கைக் காப்பாற்றும் விஷயம், தாழ்த்தப்பட்டோருக்கான தனிதொகுதி விவகாரம்
போன்றவற்றில் காந்தி அடிகளின் தரப்பும், அவரது எதிர் தரப்பின் வாத பிரதிவாதங்களும்
சரிசமமாக வந்து போகின்றன.
மகாபலிபுரச் சிற்பங்களை, கலையில் தோய்ந்த ஒரு மனிதனால் மட்டுமே
உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் இரண்டாம் பகுதி நன்றாக வந்திருக்கிறது. அவனது
பயணத்தில் அவன் கண்ட காட்சிகள் பாறையினுள் புகுந்து சிற்பமென வளரும் பகுதிகள் அபாரம்.
சாட்சிநாதேஸ்வரரின் அபிஷேக ஆராதனையின் போது, ஈசனுக்கும் பராந்தகச்
சோழனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பகுதிகள் அழகியல் உச்சங்களில் ஒன்றெனக் கொள்ளலாம்.
அபிஷேகம் தொடங்கி சட்ட நாதர் அணி கொள்ளும்
வரை, வர்ணனையும் உரையாடலும் பேரழகு. தொடர்ந்து
வரும் பகுதியான, தில்லையில் பொற்கூரை உருவாகும் விவரணைப் பக்கங்கள் - வாசிப்பவனின்
முன்னே, பராந்தகச் சோழனின் உள்ளத்தை நிரப்பி விடுகின்றன. நின்று நிதானித்தே கடக்க முடிகிறது.
கங்கைக் கரையில் வீற்றிருக்கும் தேவியிடம் அமுதன் பேசிக்
கொள்ளும் உரையாடல்கள் அடர்த்தி மிகுந்தவை. தேவியின் மூக்குத்தி ஒளி – மணிக்கர்ணிகா படித்துறையில்
எரியும் சிதையின் ஒளி – வாழ்வின் மீதான குரு
யதியின் கவிதைகள் என நாவலின் இறுதிப் பகுதி , மனத்தின் ஆழத்தைத் தொட்டு எழுப்புகின்றன.
மெய்யியல்
உண்மைகளைத் தேடி அலையும் முதன்மைப் பாத்திரங்களின் விவாதப் பகுதிகள், மனதினால் அடிக்கோடிட்டு
வாசிக்க வேண்டியவை.
(4)
”விடாய் கொள்வதும்
விடாய் தீர்ப்பதுமன்றி
வாழ்க்கை என்பது
வேறொன்றுமில்லை.”
-
நாவலில் இருந்து…
இந்த உலகில்
ஈடு செய்ய இயலாத துயரம் என்பது பிரிவுத் துயர் தான். துயர நேரத்தில் மட்டும் வார்த்தைகள்
பொருள் இழந்து, மதிப்பு இழந்து போகின்றன. காலம் உறைந்து போய்விட்டதாக, மனம் பிரம்மை
கொள்கிறது. ஆனால், காலம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மானுட வாழ்வு, காரியங்களையே எதிர்நோக்கி நிற்கிறது. காரியங்களுக்கான
காரணங்கள் அறிய முடியாமற் போனாலும், இங்கே காரியம் ஆற்றுவதே முதன்மையானது. அதுவே பூரணத்துவ
வாழ்வு என்பதை ’ஆலகாலம்’ நாவல் அழுத்தமாகச் சொல்கிறது. இந்த நாவல் பேசுவது, இழப்பினால்
வரும் நம்பிக்கையின்மையை அல்ல; மாறாக, ஏதோ ஒரு வகையில், வாழ்வினைப் பற்றிக் கொண்டு,
பூரணம் அடைவதைப் பற்றியே விசாரணை மேற்கொள்கிறது.
செயலின்மையை உருவாக்கும் எந்தத் தடையையும் மீறிட எத்தனிக்கும் மானுட மனத்தின் இடைவிடாத தேடலே வாழ்வின்
சாரம். அது சார்ந்த மெய்ஞ்ஞானத் தேடலை - இந்த நாவல், வாசிப்போர் உள்ளங்களில் நிச்சயம்
ஏற்படுத்தும்.
நூல்: ஆலகாலம்
ஆசிரியர்: கலைச்செல்வி
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம், சென்னை-42. 9841643380.
தளம்: www.be4books.com
நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம், நன்றி
ReplyDelete