Sunday, May 1, 2022

மெர்க்குரி மரணங்கள்

மினமாட்டா தொற்றுநோய்!



மினமாட்டா என்பது ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரம். 1955-களின் மத்தியில், அந்நகரில் இருந்த பூனைகளிடம் விநோதமான செயல்பாடுகள் தெரிய ஆரம்பித்தன. அதீத சத்தம் எழுப்பிக் கொண்டு அலைந்து திரிந்த அப்பூனைகள் திடீர் திடீரென்று கடலுக்குள் குதித்து இறந்து போயின.  பூனைகள் ஏன் இப்படி தற்கொலை செய்து கொள்கின்றன என்பதை அறியாது மக்களும் அரசும் குழம்பிக் கிடந்தனர்.

சில மாதங்களில் மினமாட்டா நகர மக்களிடமும்  புதுமையான நோய்க் குறிகள் தெரிய ஆரம்பித்தன. சிலருக்கு கை, கால்கள் மற்றும் உதடுகள் மரத்துப் போயின. சிலருக்கு பார்வைக் குறைபாடும், செவித் திறன் இழப்பும் ஏற்பட்டன. வேறு சிலருக்கு கை, கால்களில் கட்டிகள் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப் பட்டனர். உடல் தசைகள் சுருங்குவதிலும் விரிவதிலும் சிக்கல்கள் ஏற்பட, பக்கவாதம் போல, கை, கால்கள் இழுத்துக் கொண்டன.  பூனைகளைப் போலவே, சில மனிதர்கள் நாள் முழுக்க சத்தம் எழுப்பிக் கொண்டே அலைந்து திரிந்தனர்.

1956ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, மினமாட்டா நகர மருத்துவமனையின் இயக்குநர் நோய்க்கான காரணத்தை உலகுக்கு முறையாக அறிவித்தார். உடலில் ஏற்பட்ட பாதரச நச்சின் காரணமாக மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மேற்கண்ட பிரச்சனைகள் ஏற்படுவதை உறுதி செய்தார். இது ‘மினமாட்டா நரம்பியல் கொள்ளை நோய்’ (Minamatta Epidemic Disease) எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நோய் தோன்றிய கதையும், அதன் வரலாறும் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தன; பாடமும் கற்றுத் தந்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஜப்பானில் இருந்த மிகப் பிரபலமான வேதித் தொழிற்சாலை நிறுவனம் Chisso Corporation. 1908ஆம் ஆண்டு, மினமாட்டா நகரில் இதன் கிளை நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அசிட்டிலீன், அசிட்டால்டிஹைட், வினைல் குளோரைட், அசிட்டிக் ஆசிட் போன்ற வேதிப் பொருள்களின்  தயாரிப்பு மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுக் கழிவுகள் யாவும், மினமாட்டா நதியில் கரைத்து விடப்பட்டன. மினமாட்டா நதியின் வழியாக கடலில் சேர்ந்த கழிவுகள், ஆரம்பத்தில் மீன் பிடித் தொழிலை கடுமையாக பாதித்தது.

நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அதன் மூலம் வலுவான பொருளாதார மையமாக இருந்த, இத்தொழிற்சாலையை கண்டிக்கவும், தண்டிக்கவும் அப்போது யாரும் இல்லை. ஆண்டுக்கு 200 டன் அசிட்டால்டிஹைட் உற்பத்தி என்ற நிலையில் இருந்து, 6000 டன் என்ற அளவிற்கு தேவை அதிகரித்தது. அதனைச் சமாளிக்க, தொழிற்சாலையில் புதிய புதிய வினையூக்கிகளை பயன்படுத்திப் பார்த்தனர். 1951ஆம் ஆண்டு, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,  மெர்க்குரி சல்ஃபேட்டுடன்  ஃபெர்ரிக் சல்ஃபைடையும்  இணைத்து வினையூக்கியாகப் பயன்படுத்தினர். அசிட்டால்டிஹைட் தயாரிப்பின் போது, அவர்களே எதிர்பாராத வண்ணம், மீதைல் மெர்க்குரி என்ற அதி தீவிர நச்சுச் சேர்மம் 5% அளவில் வெளிவந்தது. அவர்களும் எப்போதும்போல, அதனை மினமாட்டா வளைகுடாவில் கலந்து விட்டனர்.

  அதன் காரணமாக உருவான விளைவுகள்,அங்கிருந்த மக்களை மெல்ல மெல்ல, கொல்ல ஆரம்பித்ததை யாரும் அப்போது உணர்ந்திருக்கவில்லை. 1956, ஏப்ரல் 21ஆம் தேதி, ஐந்து வயது குழந்தை ஒன்று விநோதமான அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தது. இரண்டு நாள்கள் கழித்து, அதன் தங்கையும் அதே அறிகுறிகளுடன் மருத்துவமனை வந்தது. பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கும் இதே பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதை மினமாட்டா நகர மருத்துவமனை  கண்டுபிடித்தது. புதிரான ஒரு தொற்றுநோய் இங்குள்ள மக்களை பாதித்துள்ளது என்பதை நிர்வாகம் முறையாக  அறிவித்தது.

கடலில் மீன்கள் எல்லாம் செத்து மிதந்ததும், கடற்கரையோரம் காக்கைகள் தானாகச் செத்து விழுந்ததும், பூனைகளின் புதிரான தற்கொலையும் மருத்துவ உலகினை விழிப்படைய வைத்தன.  குமாமோட்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 4 ஆம் தேதி, ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மீன்கள் மற்றும் கடல் உணவுகளின் வழியாக, மனிதனுக்குள் சென்ற கன உலோகங்கள், நரம்பு மண்டலத்தை பாதித்ததால் தான் மினமாட்டா நோய் தோன்றியிருந்தது. தொழிற்சாலைக் கழிவு நீரோடு வெளியிடப்பட்ட மீதல் மெர்க்குரி என்ற சேர்மமே இந்த நோய்க்குக் காரணம் என்பதும் உறுதிபடுத்தப்பட்டது. தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. பாதரச நச்சால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. நிவாரண உதவியைப் பெறவேண்டி, மக்களும் உடன்படிக்கையில் அப்போது கையெழுத்திட்டனர்.  

சக உறவுகளால், பயந்து- வெறுத்து ஒதுக்கப்பட்ட இந்த நோயாளிகளுக்காக 86 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகை, Chisso நிறுவனத்தால் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், தொழிற்சாலை தொடர்ந்து நடந்தது; மீதைல் மெர்க்குரி மினமாட்டா வளகுடாவில் நாளும் கலந்து கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடினர். இறுதியாக, 1968 ஆம் ஆண்டு, மினமாட்டா நீரில் நச்சுக் கழிவுகளை வெளியிடமாட்டோம் என தொழிற்சாலை நிர்வாகம் நீதிமன்றத்திடம் உறுதி அளித்தது.

மினமாட்டா கொள்ளை நோய் காரணமாக, 1784 பேர் இறந்து போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதன்  பாதிப்புகள் இன்றைய தலைமுறை வரை தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வரலாற்றுச் சோகம். பாதிப்படைந்தவர்கள் இன்னும் நீதி மன்றத்தின் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு, நீதி மன்றத் தீர்ப்பின் படி, ஆண்டுக்கு 2.1 மில்லியன் யென் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவுகளை Chisso நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட, 50000 க்கும்  மேற்பட்ட மக்களிடம் பாதரச நச்சின் தாக்கம் காணப்படுகிறது.

மனிதனின் விஞ்ஞானம் என்பது இருபுறமும் கூர் கொண்ட கத்திதான். நாம் தான் அதனை நல்வழிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் சரிதான். இயற்கையை வதைத்தும், அழித்தும் தான் வளர்ச்சி என்பது சாத்தியமாகுமா? இங்கே கூட, பவானி ஆற்றிலும், காவிரி ஆற்றிலும் கழிவுகள் கலப்பதை நாம் முழுமையாக நிறுத்தி விட்டோமா? மினமாட்டா நகரில் வசித்தது தான் அந்த மக்கள் செய்த குற்றம் என்றால் யாரை என்ன சொல்வது?

 இயற்கையின் மரணம் என்பது - மானுட இனத்தின் மரணம் என்பதை மட்டும் நாம்  எப்போதும் மறந்துவிடக்கூடாது.

 

 

No comments:

Post a Comment