Sunday, February 7, 2021

எந்நாளும் ‘நினைக்கப்படும்’ - எழுத்தாளர் ஜெயந்தன்

 

எந்நாளும் ’நினைக்கப்படும்’ – ஜெயந்தன்

  ஜெயந்தன் நினைவு நாள் - பிப்ரவரி 7.      

          இந்த உலகில், சமரசங்கள் அற்ற நேர்மை என்பதே ஒரு மனிதனின் பலமும் பலவீனமுமாக மாறிவிடுகிறது. தேவைக்காக வளைந்து கொடுக்காமல், தனது கொள்கைகளோடு நிமிர்ந்தே நிற்பவர்கள் - வாழும் காலத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களது செயல்களை, யாரும் அவ்வளவு எளிதில்  ஒதுக்கி விட முடியாது. தார்மீகமான கோபத்துடன் சமூகச் சிக்கல்களைப் பேசிய, அத்தகைய ஆளுமைகளுள் ஒருவர் தான் எழுத்தாளர் ஜெயந்தன்.  சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் , கட்டுரைகள் என இலக்கியப் பரப்பின் எல்லாத்  தளங்களிலும் ஈடுபாட்டோடு இயங்கிய ஜெயந்தனின் படைப்புகள் , தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.

        திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில்,  பெருமாள் – ராஜம்மாள் தம்பதியினரின் மூன்றாவது மகனாக, 1937ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15ஆம் தேதி,  ஜெயந்தன் பிறந்தார்.  இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கிருஷ்ணன். தனது மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்தார். தந்தையில்லாத குடும்பம், பொருளாதார ரீதியில் தடுமாறத் தொடங்கியது. குடும்பத்தின் முழுச் சுமையையும் தனது தோள்களில் ஏற்றுக் கொண்டார் தாய் ராஜம்மாள்.  இட்டலிக் கடை நடத்தி, அதில் வரும் வருமானத்தில் பிள்ளைகளை வளர்த்தெடுத்தாள்.

               தந்தையின் விரல் பிடித்து, இந்த உலகினைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஜெயந்தனுக்கு வாய்க்கவில்லை. ஆனால், மூத்த அண்ணன் திரு.ரங்கராஜன், இவருக்குத் தந்தையென மாறினார். வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நேர்மை, எளிமை, சமூக அக்கறை போன்ற பண்புகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார். அந்நாளைய அரசியல், நாத்திகம் மற்றும் பத்திரிக்கைகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் அண்ணன் வழியாகவே, ஜெயந்தன் கற்றுக் கொண்டார்.  மணப்பாறையில் இருந்த அரசுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்த ஜெயந்தன், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். காமராஜர் காலத்தில், கிராமங்கள் எங்கும் உருவாக்கப்பட்ட ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போதே, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பயனாக,  தமிழ்நாடு வேளாண் துறையில் இளநிலை  உதவியாளராக நியமனமும் பெற்றார். அந்த வேலையிலும் அவருக்கு மனநிறைவு வரவில்லை. பெரும்பாலும் இலக்கிய மனம், வேறெதிலும் நிறைவு கொள்வதில்லை அல்லவா?

               அதன் பிறகுதான், கால்நடைத் துறையில் கிராம கால்நடை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கான உரிய பயிற்சியை சென்னையில் முடித்திருந்தார்.  இளநிலை உதவியாளராக அலுவலகக்  கோப்புகளோடு உரையாடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தினம் தினம் கிராமங்களுக்குச் சென்று மனிதர்களோடு பழகுவது - இவருக்கு ஆனந்தத்தைத் தந்திருக்கக் கூடும். பலதரப்பட்ட மனிதர்களையும், அவர்களது வாழ்வினையும் கூர்ந்து கவனித்த ஜெயந்தன், அவற்றைக் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

                 தான் எழுதிய கதைகளை ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பெரிய வாசகப் பரப்பைக் கொண்ட பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, இவர் எழுதி அனுப்பிய நிறைய கதைகள் பிரசுரம் ஆகத் தொடங்கின. ஒரு கட்டத்தில், பத்திரிக்கைகள் இவரது கதைகளைக் கேட்டு வாங்கி பிரசுரிக்க ஆரம்பித்தன. அடித்தட்டு மக்களைப் பற்றியும், அவர்களது வாழ்வின் நீள அகலங்களைப் பற்றியும் இவர் எழுதிய கதைகள் வாசக உலகில் இவருக்கென தனித்த இடத்தை உருவாக்கித் தந்தன.

ரத்தமும் சதையுமாக எதார்த்த பாணியில் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், மனித மனத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சமரசம் ஏதுமின்றி வெளிச்சமிட்டுக் காட்டின. இக்கதைகளை எல்லாம், தீவிர இலக்கிய இதழ்களில் எழுதாமல், வெகுஜன இதழ்களிலேயே தொடர்ந்து எழுதினார். அவ்வாறு எழுதி வெற்றி பெற்றவர்களுள் ஜெயந்தன் முக்கியமானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெகுஜன இதழ்கள் என்பதற்காக தனது எழுத்தில் எந்த சமரசத்தையும் அவர் செய்து கொண்டதே இல்லை.   

          ‘துப்பாக்கி நாயக்கர்’, ‘பாஷை’ ,  ‘வாழ்க்கை ஓடும்’ , ’சம்மதங்கள்’, ‘பாவப்பட்ட ஜீவன்கள்’ போன்ற இவரது கதைகள் தனித்துவமானவை. இவர் தாமரை இதழில் எழுதிய ‘ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது’ சிறுகதைக்கு,  கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா. அவர்கள் எழுதிய விமர்சனம் குறிப்பிடத்தக்கது. கதையை படித்ததும் நிலை கொள்ளாத அனுபவம் கி.ரா.வுக்கு ஏற்படுகிறது. இந்தக் கதையைப் பற்றி, யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, தனது நண்பன் ஒருவனுக்கு கடிதம் எழுதிகிரார். அதில், இந்தக் கதையை மிகவும் சிலாகித்து எழுதிகிறார். ஜெயந்தன் என்ற பெயரில் அடுத்த கதை எப்போது வரும் எனக் காத்திருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார் கி.ரா.

               ஜெயந்தன் எழுதிய கதைகளில் சில உரிய அனுமதியோடு, படமாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பாலுமகேந்திராவால் படமாக்கப்பட்ட ‘பாஷை’ சிறுகதையைச் சொல்லலாம். அதேநேரம், முறையான அனுமதி பெறாமல் இவரது கதைகளில் பல, திரை வடிவம் பெற்றுள்ளன. சிறுகதைகளைப் போலவே, நாட்டுப்புறக் கலைச்சொற்களைக் கொண்டு, இவர் எழுதிய கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபலமான ஒன்றாகும். புதிய வடிவத்தில், மொழியின் பாய்ச்சலோடு இருந்த இந்தக் கவிதைகள், ‘காட்டுப்பூக்கள்’ என்னும் தலைப்பில் வெளிவந்தது.

                    தனது வாழ்வின் பிற்பகுதியில், எதார்த்த பாணியிலான கதைகளைத் தவித்து விட்டு, தத்துவார்த்த பின்புலத்தில், வாழ்வினை ஆராயும் அழுத்தம் மிகுந்த கதைகளை எழுதத் தொடங்கினார் ஜெயந்தன். ‘ஞானக் கிறுக்கன் கதைகள்’ என்ற பெயரில் அவை யாவும் தனியே  தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில்,  வெகுஜன இதழ்களில் இவரது கதைகளின் வருகை குறையத் தொடங்கி, பின் முற்றாக நின்று போயின. ஜெயந்தனும் தீவிர இலக்கிய வடிவத்திலான கதைகளையே விரும்பி எழுதினார்.

            கணையாழி இதழில் இவர் எழுதிய நாடகங்கள் மிகவும் முக்கியமானவை. ‘நினைக்கப்படும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய நாடக வரிசை, இலக்கியச் சிந்தனை பரிசினை வென்றது. அதே போல, ‘சிறகை விரி, வானம் உனது’ என்னும் நாடகம், அகில இந்திய வானொலியின் பரிசினைப் பெற்ற படைப்பாகும். பிற்பாடு, இவரது நாடகங்கள் யாவும் தொகுக்கப்பட்டு, ‘ஜெயந்தன் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வந்துள்ளது.

           சில காலம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். ஒரு கட்டத்தில் மீண்டும் அதிலிருந்து விலகினார். அரசுப் பணியில் இருந்த காலத்தில், ஊழியர்களுக்கான சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாகவே இருந்தார். அதன் பொருட்டு வரும் சங்கடங்களையும், துயரங்களையும் கடந்த படியே, இதயத்திற்கு இணக்கமான இலக்கியப் பணியிலும் ஈடுபட்டார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ‘கம்ப்யூட்டர் பார்க்’ என்னும் கணினிப் பயிற்சி மையத்தைத் தொடங்கி, சில காலம் நடத்தினார்.

             இலக்கிய உலகம் என்பது எப்போதுமே சச்சரவுகள், காழ்ப்புணர்வுகள் நிறைந்த  ஓரு மாய உலகமாகவே இவருக்குத் தோன்றியது. இலக்கிய உலகில் சில  நண்பர்கள் மூலமாக, அவருக்கு உண்டான காயங்கள், மனதினை சோர்வடையச் செய்திருக்கக் கூடும். பணிக்காலத்திலும், ஓய்வுக் காலத்திலும் மதுரை, சென்னை என பல இடங்களில் உலாவிய ஜெயந்தனின் மனமும் உடலும், ஒரு கட்டத்தில் தனது சொந்த மண்ணான மணப்பாறையைத் தேடத் தொடங்கின.      

அப்போதுதான், தனது சொந்த மண்ணில் தான் ஆற்ற வேண்டிய  பணிகள் குறித்த எண்ணங்கள் அவருக்கு மேலோங்கத் தொடங்கின. 1956ஆம் ஆண்டு, தனது இளமைப் பருவத்தில், நண்பர்கள் மணவை முஸ்தபா, புலவர் காசிநாதன் போன்றோரோடு இணைந்து உருவாக்கிய , ’மணவைத் தமிழ் மன்றத்தை’  மீண்டும் விரிவான செயல்பாட்டுக்குக் கொண்டுவர விரும்பினார். நாடகங்கள்  எழுதி, அவற்றில் தானே நடித்த இளமை நாள்களின் நினைவுகள் அவருக்கு உற்சாகமூட்டின.

            தனது வாழ்வின் இறுதிக் காலத்தை மீண்டும் மணப்பாறையில் - தான் விரும்பியவாறே அமைத்துக் கொள்ளும் பொருட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பினார் ஜெயந்தன். இலக்கியம் சார்ந்து செய்ய வேண்டிய புதிய புதிய திட்டங்கள் நிறைய அவரிடமிருந்தன. ’நித்யா’என்னும் பெயரில் பிரம்மாண்டமான அறிவியல் புனை கதை எழுதும் திட்டமும் அவருக்கு இருந்தது. தயார் செய்து வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் கதையை எழுதத் தொடங்கினார். இந்தப் படைப்பு, காலம் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்பினார். ஆனால், காலம் அதனை அனுமதிக்கவில்லை.  2010ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி , எழுதி முடிக்கப்படாத தனது நாவல் வரிகளோடு, காலத்தில் கரைந்து போனார் ஜெயந்தன்.

 

        ’கோடு’ என்னும் பெயரில் சிற்றிதழ் தொடங்கி, 11 இதழ்கள் வரை வெளியிட்டது; ’மணவைத் தமிழ் மன்றம்’ என்னும் அமைப்பை மணப்பாறையில் உருவாக்கியது; தனது இறுதிக் காலத்தில் ‘சிந்தனைக் கூடல்’ என்னும் அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது – இப்படி இவர் தனது வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டே இருந்தார். அதைவிட முக்கியமானது எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையே சுவாசமாகக் கொண்டிருந்தது தான்.

             தனது படைப்பு ஒன்றின் செழுமைக்காக, சட்டம் பற்றிய தகவல்கள் அவருக்குத் தேவைப்பட்டன. அதற்காக, மணப்பாறையில் இருந்த இளம் வழக்குரைஞர் தமிழ்மணி அவர்களிடம் பல தகவல்களைக் கேட்டுப் பெறுகிறார். அதனோடு தொடர்புடைய  பல நூல்களையும் அவரிடம் கேட்டு வாங்கிப் படித்திருக்கிறார். வாசித்து முடித்த நூல்களை, முறையாக மீண்டும் திரும்ப ஒப்படைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் அவர் சரிகளை அல்ல, துல்லியத்தையே நாடினார்.

            இலக்கியக் கூட்டங்களுக்குச் செய்யும் செலவுகளை ஆடம்பரம் என்றே அவர் கருதினார். எளிமையான முறையில், அதிகபட்சம் ஒரு தேநீரோடு கூட்டம் நடந்தால் போதும் என்றே விரும்பினார். இலக்கியப் பேச்சே அதில் பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும்  வலியுறுத்தினார். அவர் உருவாக்கிய ’சிந்தனைக் கூடல்’ என்னும் இலக்கிய அமைப்பு, இப்படியான  பல பயன் மிகு விதிகளைக் கொண்டிருந்தது. கூட்டங்களும் அப்படித்தான் நடத்தப்பட்டன.

            ஜெயந்தனின் படைப்புகள் இன்று மீண்டும் வாசிப்பு வளையத்தில், கவனம் பெறத் தொடங்கியுள்ளன. அவை, இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிந்தனைகளுக்கு  புதிய வெளிச்சம் காட்டுகின்றன. அவரது மகனும், எழுத்தாளருமான சீராளன் அவர்கள், ஜெயந்தனின்  சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், நாடகங்கள் யாவற்றையும் தனித்தனி தொகுப்பு நூல்களாகக் கொண்டு வந்துள்ளார். ’கோடு’ என்ற பெயரில் ஓவியப் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சீராளன் அவர்கள், அதில் ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி , தந்தையின் கனவினை முன்னெடுத்துச் செல்கிறார்.

            இலக்கியம் தான் ஜெயந்தனின் வாழ்க்கைப் பாதை. அதில் அவர் அடைந்த அக ஆனந்தத்தை, அருகில் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியாததில் வியப்பு ஒன்றுமில்லை. சக எழுத்தாளர்கள், உறவுகள், நண்பர்கள் வழியே அவ்வப்போது எழும்  தடைகளை  எல்லாம், ’புகையென’ ஊதித்தள்ளி, இலக்கியத் தடத்தில் பயணித்துக் கொண்டே இருந்தார். ஏனெனில், இலக்கிய மனம், ’இலக்கியம்’ என்ற ஒன்றில் மட்டும் தானே ஆறுதலும் நிறைவும் பெறும்!

            ஜெயந்தன் - வாழ்வின் சரி-தவறுகளின் இரு முனைகளையும் கண்டுணர்ந்தவர்; இங்கே, தார்மீகக் கோபமும் அறச்சீற்றமும் மிக்க ஓர் எழுத்தாளனாக வாழ்வதில் உள்ள குடும்பச் சிக்கல்களையும், சமூகத் தடைகளையும் துணிந்து எதிர்கொண்டவர்; இப்படி, வாழ்நாள் முழுவதும் தான் விரும்பிய வாழ்க்கையையே தனது வாழ்க்கைப் பயணமாகக் கொண்டிருந்த ஜெயந்தனிடம், அவரது விருப்பத்தைக் கேட்ட பிறகே, மரணமும் தழுவியிருக்கக் கூடும்

            உண்மையில், எழுத்தாளனுக்கு மரணம் என்பது இல்லை. ஏனெனில், எழுத்தாளனின் உயிர் என்பது அவன் எழுத்துக்களில் அல்லவா உள்ளது. ஆதலால், காலம் உள்ளவரை அவன் குரலும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். ஆம், தமிழ் இலக்கிய வானில், ஜெயந்தனின் குரலும் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

     

 

 

No comments:

Post a Comment