Saturday, January 2, 2021

ஜனவரி 2 - ஐசக் அசிமோவ்



அறிவியல் புனைகதைகளின் அரசன் - ஐசக் அசிமோவ்.

ஜனவரி 2... 

              எழுத்துச் சூரன்; அறிவியல் புனை கதைகளின் முன்னோடி; கல்லூரிப் பேராசிரியர்; மேடைப் பேச்சாளர்; திரைக்கதை ஆசிரியர்; நாடக எழுத்தாளர்; அபுனைவு எழுத்திலும் மன்னன் – அவர் தான்,   டாக்டர்.ஐசக் அசிமோவ். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்களுள் ஒருவர்.

             அவர் எழுதிக் குவித்த புனைகதைகளைப் போலவே அவரது பிறப்பு மரணம் பற்றிய இரண்டு நிகழ்வுகளுமே மிகவும் சுவாரசியமானவை. கதைகளின் போக்கினைத் தான் விரும்பியபடியே அமைத்துக் கொண்ட அசிமோவ், தனது பிறந்த தேதியினையும் தானே தீர்மானித்துக் கொண்டார். 1919 அக்டோபர் 4 முதல் 1920 ஜனவரி 2 க்குள் ஏதோவொரு நாளில் பிறந்தவர் தான் ஐசக் அசிமோவ். ஆனால், எந்தத் தேதியில் பிறந்தார் என்பது பெற்றோருக்கும் தெரியாத சூழலில், தனது பிறந்த நாளை ஜனவரி 2 என கொண்டாடத் தொடங்கினார்.

             ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவில், பெட்ரோவிச்சி நகரத்தில் ஒரு யூதக் குடும்பத்தில்  ஐசக் அசிமோவ் பிறந்தார். ஜூடா அசிமோவ் - அன்னா ரச்சேல் பெர்மன் தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அப்போது, ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் போதாதென்று,  double pneumonia என்னும் கொள்ளை நோய் பெட்ரோவிச்சி நகர மக்களை வதைக்கத் தொடங்கியது. அந்நகரில் மட்டும் 17 குழந்தைகளை அந்த நோய் தாக்கியது. அதில் 16 குழந்தைகள் இறந்துவிட, ஐசக் அசிமோவ் மட்டும் தப்பிப் பிழைத்தார். இவ்வாறாக பல சிக்கல்களின் காரணமாக, இவரது குடும்பம் மொத்தமும் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தது.

              மூன்று வயதில் அமெரிக்காவுக்குச் சென்று விட்ட ஐசக் அசிமோவிற்கு யிட்டிஷ் மொழியும், ஆங்கிலமும் நன்கு தெரியும்.  ரஷ்ய மொழி இவருக்குத் தெரியாது. ஆனால், இவரது பெயர் ரஷ்ய மொழியின் உச்சரிப்பினை அடிப்படையாகக் கொண்டது. தனது பெயருக்கான காரணத்தை,  பின்னாட்களில் வேடிக்கையாக விளக்கினார் அசிமோவ்.  ஐந்து வயதிலேயே நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது குடும்பம், அமெரிக்காவில் சாக்லெட்டுகள் மற்றும் செய்தித் தாள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தனர். அசிமோவிற்கு இது மிகவும் வசதியாக இருந்தது.  கண்ணில் படும் நாளிதழ்கள், வார,மாத  இதழ்கள், புத்தகங்கள் என கண்ணில் பட்ட யாவற்றையும் வாசிக்கத் தொடங்கினார். பதினோராம் வயதிலேயே சொந்தமாக கதைகளை எழுதவும் தொடங்கினார்.

                      ஆரம்பத்தில் அவரது தந்தைக்கு சற்றுத் தயக்கம் இருந்தது. பாடப்புத்தகங்களைப் படிக்காமல் இப்படி கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறானே என வருந்தினார். ஆனால், அசிமோவ் படிக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த கதைகள் என்பதால் அவருக்குள் ஒரு வகை திருப்தி ஏற்பட்டது. பத்தொன்பதாவது வயதிலேயே, இவரது அறிவியல் புனைகதைகள், தேர்ந்த மூத்த எழுத்தாளரின் எழுத்துக்களை விஞ்சத் தொடங்கின. அறிவியல் சார்ந்த இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. தான் வசித்து வந்த ப்ரூக்ளின் நகரில், இதே போன்று ஆர்வம் கொண்ட நண்பர் குழுவினையும் கண்டு கொண்டார். இங்கே தான் ஏ.எஸ்.எஃப். பத்திரிக்கையின் ஆசிரியர் கேம்பலை நண்பராகப் பெற்றார். இவர்கள் நட்பு வெகுகாலம் நீடித்தது. கேம்பல் இவருக்கு பதிப்புத் துறையில் வழிகாட்டியாகவும் இருந்தார்.

       ப்ரூக்ளின் நகரில் ஆரம்பப்படிப்பை முடித்த அசிமோவ், மேற்படிப்புகளை சேத் லோ ஜூனியர் கல்லூரி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். உயிரியல் பாடத்தில் பட்டம் பெறவே முதலில் விரும்பினார். முதல் பருவத்தில், ஒரு பூனையின் உடலைத் துண்டாக்கி உடற்கூறியல் ஆய்வு செய்ய வேண்டிய சூழல் வந்தது. அதனைச் செய்ய விரும்பாததால், முதல் பருவத்தின் முடிவில், வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். 1938ஆம் ஆண்டு, எதிர்பாராத சூழலில் ஜூனியர் கல்லூரி மூடப்பட்டதால், பட்டப் படிப்பினை கொலம்பிய பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். வேதியியலில் 1939ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டமும், 1941ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

         இரண்டாம் உலகப் போரில், வேதியியலாளர் என்ற அடிப்படையில் இவருக்கும் பணி ஒதுக்கப்பட்டது. பிலடெல்பியா நகரில் சில காலம் பணியாற்றினார். போர் முடிவுற்ற பிறகு, 1945ஆம் ஆண்டு, அமெரிக்க இராணுவத்திற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டார். இராணுவத்தில் இவரது தட்டச்சுப்பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. துல்லியமும் வேகமும் நிறைந்த தட்டச்சுத் திறன், அசிமோவுக்கு கூடுதல் பதவி உயர்வினைப் பெற்றுத்தந்தது. ஆயினும், சில காரணங்களால்,1946ஆம் ஆண்டு இராணுவத்தைவிட்டு வெளியேற வேண்டி இருந்தது. பிறகு, பாதியில் நின்று போயிருந்த முனைவர் பட்ட ஆய்வினைத் தொடர்ந்தார். 1949ஆம் ஆண்டு, உயிர்-வேதியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வினை சிறப்பாக முடித்தார்.

                போஸ்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், உயிர்-வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1958 வரை கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த அசிமோவ், அதன் பிறகு கெளரவப் பேராசிரியராகப் பணியில் தொடர்ந்தார். அப்போது, அறிவியல் சார்பான கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதுவதே இவரது தலையாய பணியாக இருந்தது. Marooned off Vesta என்ற கதை, 1939ல் முதன் முதலாக  ’Amazing Stories’ இதழில் பிரசுரமானது. தொடர்ந்து அறிவியல் சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதிக் கொண்டிருந்த அசிமோவ், 1957ல் The naked Sun என்ற அபுனைவு நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டார். அதன் பிறகான காலகட்டத்தில், நாவல்களை விடவும் அபுனைவு நூல்களையே நிறைய எழுதினார்.

              1941ல் அசிமோவ் வெளியிட்ட ‘Nightfall’ என்ற அறிவியல் புனைகதை, இலக்கிய உலகிலும், அறிவியல் பரப்பிலும் இவருக்கு நல்ல அறிமுகத்தைத் தந்தது. அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான், வானில் நட்சத்திரங்கள் வரும் என்றால், அதனை மனிதன் எப்படியெல்லாம் எதிர்கொள்வான், என்னென்ன நடக்கும் என தன் அதீதக் கற்பனையை அழகாக எழுதியிருப்பார்.  பிறகு,  1950களில் வெளிவந்த ‘I, Robot’ வரிசைக் கதைகள் இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.  இயந்திர மனிதனை உருவாக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளை அக்கதைகளில் இவர் விவரித்திருந்தார். அறிவியலாளர்களையும் அது சிந்திக்கத் தூண்டியது.  அந்த மூன்று விதிகளையே, இன்றைய அறிவியல் உலகமும் இயந்திர மனிதன் உருவாக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது அசிமோவின் திறமைக்குச் சான்றாகும். இவரது Foundation Series கதைகள் தனித்துவம் பெற்றவையாகும்.

             நியாண்டர்தால் காலத்துக் குழந்தை ஒன்று, வழிதவறி எதிர்காலத்திற்குள் நுழைந்து விடுகிறது. அக்குழந்தையுடன் செவிலியர் ஒருவருக்கு உண்டாகும் அன்பையும், நட்பையும் பேசும் The Ugly Little Boy (1958) என்ற கதை, இன்றளவும் வாசிப்பில் இன்பம் தரும் அற்புதக் கதையாகும். அதன் பிறகான காலத்தில், அசிமோவ் அபுனைவு எழுத்துக்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

            A Great Adventure, The Egyptians, The Roman Empire, The Near East- 10000 Years Of History என வரலாறு தொடர்பாக இவர் எழுதிய 14 நூல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அதே போல, பைபிளின் வாசிப்புக்காக இவர்  இரண்டு பெரும் தொகுதிகளை எழுதினார். பழைய எற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் தனது  பார்வையுடன் இணைத்து விரிவாக எழுதப்பட்ட இந்த இரண்டு நூல்களும் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் புத்தகங்களுக்கும் நீண்ட விளக்கவுரை எழுதியிருக்கிறார்.

           தனது 15ஆவது வயதில், வீட்டில் இருந்த  பழைய தட்டச்சு இயந்திரத்தில் கதைகளை அடிக்கத் தொடங்கிய அசிமோவ், இறுதி வரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தார். 500க்கும் மேற்பட்ட நூல்கள், தொகுப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் என இவரது விரல்கள் இயங்கிக் கொண்டே இருந்தன. தனது மூளையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, தன்னால் மட்டுமே விரைவாக இயங்க முடியும் என்பதால், உதவியாளர் என யாரையும் இவர் வைத்துக் கொள்ளவில்லை. இவரது புத்தகங்களுக்கு இவரே பிழைதிருத்தமும், வடிவமைப்பும் செய்வார். அறையின் கதவுகளை முழுவதுமாக மூடிக் கொண்டு, இடைவிடாது எழுதுவார். காலையில் இருந்து, இரவு படுக்கப் போகும் வரை எழுதிக் கொண்டே இருப்பார். இவர் எழுதாத நேரங்களில் மட்டுமே, அறையின் சன்னல் கதவுகள் திறக்கப்படும். இவருக்கு வெய்யில் ஒவ்வாமை இருந்ததாகவும் சொல்வார்கள்.

          எழுதுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தினார். ஆய்வரங்குகள், கருத்தரங்கங்கள், பொது மேடைகள் என எல்லா இடங்களிலும் இவரது உரைக்காக, எண்ணற்ற செவிகள் காத்துக் கிடந்தன. தத்துவவியல் தவிர ஏனைய எல்லா துறைகளிலும் இவர் பேசவும் எழுதவும் செய்தார். அறிவியல் புனைகதைகளை எழுதும் போது, அதில் வரும் நுண்ணிய தகவல்கள் கூட, சரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதற்கான தகவல்களை தேடித் தேடி சேகரிப்பார். அப்போதுதான், புனைகதைகளை வாசிக்கும் வாசகனின் உள்ளத்தை வெல்ல முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பது பற்றிய அசிமோவின் கற்பனை பெரும்பாலும் துல்லியமாக இருந்தது. அதே நேரம் சுவையாகவும் இருந்தது.

         ஆகாய நட்சத்திரங்களையும், அண்ட வெளிகளையும் தனது கதைகலில் விவரித்த அசிமோவிற்கு விமானப் பயணம் என்பது சுத்தமாகப் பிடிக்காது. மொத்தமே இரண்டு முறைகள் மட்டுமே விமானத்தில் ஏறியிருக்கிறார். அதுவும் இராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் மட்டும். மாறாக, கப்பலில் இருந்து கொண்டு எழுதுவதும், வானம் பார்ப்பதும் இவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. தரைவழி வாகனங்கள் ஓட்டுவதிலும் இவருக்கு அதிக விருப்பம் இருந்ததில்லை. எழுத்தையே தியானமாகக் கொண்ட அசிமோவ் உண்மையில்  ஒரு வித்தியாசமான மனிதர் தான்.

          ஒருமுறை, 1984ஆம் ஆண்டு, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வி, அசிமோவிடம்  கேட்கப்பட்டது. இன்றிலிருந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2019ல், மனித இனம் கணிப்பொறிகளையும், நகரும் பேசிகளையுமே முழுவதுமாக நம்பியிருக்கும். நவீன அறிவியல் நமது வீட்டில் எல்லா அறைகளையும் ஆக்கிரமித்திருக்கும். விண்வெளியையும் தொழிற்சாலைக் கழிவுகள் நிரப்பத் தொடங்கியிருக்கும் என அநாயசமாகப் பதில் அளித்தார் ஐசக் அசிமோவ். அதுதானே இன்றைய நிதர்சனம்.!

              முக்கியமாக, 1958ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு பிரபலமான இதழ் ஒன்றில் கதைகள் அல்லாத கட்டுரைத் தொடர் ஒன்றை எழுத ஆரம்பித்தார். ஏறக்குறைய அவர் மரணிக்கும் வரை , பல்வேறு இதழ்களில் அந்தக் கட்டுரைத் தொடரை எழுதி வந்தார் அசிமோவ். அறிவியல் புனைகதைகளுக்காக வழங்கப்படும் Hugo விருது, நெபுலா விருது என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். உலகெங்கும் உள்ள பல்கலைகழகங்கள் இவருக்கு 14 முறை மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கி மகிழ்ந்தன. இவரது நிறைய கதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

        1992 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி –பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்த விரல்கள் அசைவை நிறுத்திக் கொண்டன.  நுண்ணறிவு மிக்க மூளை தனது சிந்தனைப் பயணத்தை முடித்துக் கொண்டது.  பிறந்த தேதியை ஜனவரி 2 என, தானே முடிவு செய்த அசிமோவிற்கு மரணம் நெருங்குவதும் தெரிந்திருந்தது. ஆனால், அதனை வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. அவரது சுயசரிதையின் மூன்றாம் பாகம் வெளிவந்த போதுதான், மரணத்திற்கான காரணத்தை அவரது மனைவி வெளியிட்டார்.

         1983 ஆம் ஆண்டு, இதயத்தின் இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட  அடைப்பினைச் சரிசெய்ய அசிமோவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அசிமோவிற்கு வழங்கப்பட்ட இரத்தத்தில் ஹெச்.ஐ.வி. வைரஸ் இருந்தது சற்று பிந்தியே தெரிய வந்தது.  இத்தகவல் வெளியில் தெரிய வந்தால், ஏனைய பிற நோயாளிகளையும் , குடும்பத்தாரையும் பாதிக்கும் என்பதால் இச்செய்தியை வெளியிட நாங்கள் விரும்பவில்லை என அசிமோவின் இரண்டாம் மனைவி ஜென்னெட் ஜெப்சன் தனது நினைவுக் குறிப்புகளில் தெரிவித்தார். வைரஸ் தொற்றின் காரணமாகவே சிறுநீரகமும், இதயமும் பாதிக்கப்பட்டு, 1992ல் அசிமோவ் இறந்து போனார்.

        ஹெச்.ஐ.வி.  வைரஸால் பாதிக்கப்பட்டதை அறிந்த பிறகும் அவரால் கட்டுரைகள் எழுதப்பட்டன. விருதுக்குரிய நூல்கள் வெளிவந்தன. கூட்டங்களிலும் கலந்து கொண்டார். எழுத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மனிதனால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும். ஆம், எந்தச்  சூழ்நிலையிலும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைப் பயணத்தில்,  தன்னையே  கரைத்துக் கொண்ட மனிதர்களால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும்.! 

ஆம், ஐசக் அசிமோவ் - ஒரு சரித்திரம்.

               

       

      

 


2 comments:

  1. கதைகளின் அரசன் அசிமோவ் அவர்களின் கற்பனை திறன் துல்லியமான மதி நுட்பம் வெளியிட்ட புத்தகங்கள் இயந்திர மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்த இவர் கற்பனை படிக்க படிக்க அவரை பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

      Delete