Thursday, April 2, 2020

மானுடம் வெல்லும் 4

காலரா என்னும் கொள்ளையன்; ஹாஃப்கைன் என்னும் காவலன்.

                  'எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதே இல்லை என இறுமாப்புடன் திரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக- ஒரு புதிய எதிரி புறப்பட்டான். அவன், ஆங்கிலேயப் படை சென்ற  நாடுகளுக்கெல்லாம் கூடவே சென்றான்.  காலனி ஆதிக்க நாடுகளிலெல்லாம் தனது ஆதிக்கத்தை  நிலைநிறுத்தினான்.  பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுமைக்கும் மனித இனம் அந்த எதிரியுடன் தான் தொடர்ந்து போரிட்டது. அந்த எதிரியின் பெயர் ’விப்ரியோ காலரே’. பாக்டீரியா குடும்பத்தைச் சேர்ந்த இந்த நுண்கிருமி, ’காலரா’ என்னும் கொள்ளை நோயை உருவாக்கி,  ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா என எல்லாப் பகுதிகளிலும் ஏராளமான மக்களைக் கொன்று குவித்தது.
          1817 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  கங்கைச் சமவெளிப் பகுதியில் உள்ள ஜெஸ்ஸூர்  என்ற நகரில், நிறைய பேருக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. தண்ணீர் போல மலம் தொடர்ந்து வெளியேறியதால் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒரு சிலர் இறந்து போயினர்.  தாக்குப் பிடித்தவர்கள் ஓரிரு நாள்களில் மரணத்தைத் தழுவினர். அங்கிருந்த மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒருவர் பின் ஒருவராக இறந்து கொண்டே இருந்ததால், மக்கள் பயந்து ஓடத் தொடங்கினர். நோயுற்று இறந்த மனிதர்களை அதற்றுவதற்கும் எரிப்பதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை. பிணங்கள் சாலை ஓரங்களில் தூக்கி எறியப்பட்டன. ஒவ்வொரு ஊராக பரவிய இந்தக் கொள்ளை நோய் டெல்லி , மதுரா, கராச்சி,  பெங்களூர் என இந்தியாவெங்கும் பரவியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த விஷயத்தில் முதலில் கவனம் காட்டாமல் தான் இருந்தது.

                  ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த நோய் வேகவேகமாக இலங்கை மியான்மர் ஜாவா தீவுகள் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிரிட்டிஷ்காரர்கள் சென்ற பகுதிகளுக்கு எல்லாம் அவர்கள் கூடவே  நோயும் சென்றது. பாரசீக வளைகுடா துருக்கி ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் இந்நோய் பரவியது ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மக்களைக் கொடுமைப்படுத்திய இந்த நோய், 1824 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் மெதுமெதுவாக மறைந்துபோனது. இந்த நோய் எப்படி வந்தது எவ்வாறு பரவுகிறது என்பதை அறிந்து கொள்வதற்குள்  பல லட்சம் மக்கள் தங்கள் உயிரை இழந்திருந்தனர்.

       1826 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோய் தலைகாட்டத் தொடங்கியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் பரவிய இந்த நோய் 11 ஆண்டுகள் தன் வேலையை காட்டியது. பிறகு ஒரு சில ஆண்டுகள் இடைவெளி விட்டது. மூன்றாம் முறையாக மீண்டும் 1846 ஆம் ஆண்டும், நான்காம் முறையாக 1863 ஆம் ஆண்டும் இந்த நோய் உலகம் முழுவதையும் வாட்டி வதைக்கத் தொடங்கியது.  
          
              ஆங்கிலேய அரசுக்கு அப்போதுதான் அச்ச உணர்வு தலைக்கேறியது.  உடனே,  இங்கிலாந்து மற்றும் அதன் காலனிய நாடுகளில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கமிட்டிகளை அமைத்து இங்கிலாந்து ராணி உத்தரவிட்டார்.  வருவதும் போவதுமாக இருந்த இந்த நோயின் மூலத்தை கண்டறிவதற்காக உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் இரவு பகலாக ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    ‘நவீன கொள்ளைநோய் இயலின் தந்தை’ என்று அழைக்கப்படும் டாக்டர் ஜான் ஸ்நோ என்பவர் 1854 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டார். கெட்டுப்போன நீர் மற்றும் உணவின் வழியாகவே இந்த நோய் மனிதர்களைப் பாதிக்கிறது என்பதை ஆய்வுப் பூர்வமாக நிரூபித்தார். இந்தத் தொடர்பினை மாதிரியாக வைத்துக்கொண்டு, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள், நோய்த் தொற்றுக்கு காரணமான நுண்ணுயிரியை,  கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கினர். 1883 ஆம் ஆண்டு ராபர்ட் கோச் என்ற மருத்துவர் தனது நுண்ணோக்கியின் வழியாக ’விப்ரியோ காலரே’  என்ற புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்தார். அசுத்தமான நீரில் வளரும் இந்த பாக்டீரியா தான், மனிதர்களின் உடலுக்குள் சென்று - சிறு குடல் அழற்சியை உண்டு செய்கிறது. அதன் காரணமாகவே இடைவிடாத வயிற்றுப்போக்கும் வாந்தியும் மனிதனுக்கு ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்தினார். விப்ரியோ காலரே என்ற  பாக்டீரியாவின் பெயரைக் கொண்டே,  இந்த நோய்க்கு ’காலரா’  என்ற காரணப் பெயர் இடப்பட்டது.

     அசுத்தமான நீரில் உருவாகும் ’விப்ரியோ காலரே’ என்ற இந்த பாக்டீரியா 0.3 மைக்ரான் விட்டமும்,  1.3 மைக்ரான் நீளமும் கொண்டது . சாதாரணமாக வினாடிக்கு 80 மைக்ரான் தூரம் நகரும் திறன் பெற்ற இந்த பாக்டீரியாக்கள், மனிதனின் சிறு குடலில் தங்கி கடுமையான பாதிப்பை உருவாக்குகின்றன ஓரிரு மணி நேரங்களிலேயே உடலில் உள்ள அனைத்து நீர்ச் சத்துக்களையும் மலம் வழியாகவும், வாந்தி வழியாகவும் வெளியேற்றுகின்றன. இதன் காரணமாக, ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20 லிட்டர் அளவிற்கு நீர்ச்சத்து உடம்பில் இருந்து வெளியேற்றப்படுகிறது.   சில பேருக்கு அரிதாக காய்ச்சலும் உருவாகும். திடீரென ஏற்படும் அபரிமிதமான நீர்ச்சத்துக் குறைவு ஓரிரு நாள்களிலேயே அந்த மனிதனைக்  கொன்று விடுகிறது. 

           இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளிலும் உப்பு நீர் நிறைந்த பகுதிகளிலும் உருவாகின்றன. நொயாளியால் வெளியேற்றப்படும் நீரின் வழியாக மற்றவர்களுக்கும் பரவி மாபெரும் தொற்றுநோயாக இது உருவெடுக்கிறது. இந்நோய் பற்றிய குறிப்புகள் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே ’சுஸ்ருத சம்ஹிதை’ (Sushruta Samhitha)  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல ஹிப்போகிரேட்டஸ் தனது நூலில் இதே அறிகுறிகளுடன் கூடிய நோயினை விவரிக்கிறார். ஆனால் மாபெரும் தொற்று நோயாக உருவெடுத்து, உலகெங்கும் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த விப்ரியோ காலரே என்ற இந்த பாக்டீரியா, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தான்.

     எதிரியைக் கண்டு பிடித்தால் மட்டும் போதுமா? அதனை வெற்றி கொள்ள வேண்டாமா?  ’விப்ரியோ காலரே’ பாக்டீரியாவை ஒழித்துக் கட்டுவதற்கான அனைத்து வேலைகளும் தொடங்கின. 1885 ஆம் ஆண்டு வாக்கில் பாக்டீரியங்களுக்கு  எதிரான பொதுவான தடுப்பு மருந்து ஒன்றினை டாக்டர் ஜேம்ஸ் என்பவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் அது எதிர்பார்த்த பலன் தருவதாக அமையவில்லை. அப்போது பிரிட்டிஷ் அரசுக்குக்  கைகொடுக்க சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார் டாக்டர் வால்டெமர் ஹாஃப்கைன் - மனித குல காப்பாளர். 

       1860 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த வால்டெமர் ஹாஃப்கைன்(Waldemar Hoffkine) ஒரு யூதர். அங்கேயே மருத்துவப் படிப்பை முடித்தபிறகு வேலைக்காகக்  காத்திருந்தார். ரஷ்யாவின் பழமைவாத கிறிஸ்தவத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் தரப்பட்டன. அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. அதன் காரணமாக நிரந்தர வேலையும் அவருக்குக்  கிடைக்கவில்லை. மருத்துவ வேலை கிடைக்காததால் மியூசியம் ஒன்றில் அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்தார் வால்டெமர் ஹாஃப்கைன்.  
              
              அந்த சமயத்தில்,  நண்பரொருவர் விடுத்த அழைப்பின் பேரில் 1888 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறினார் வால்டெமர். அங்குதான் பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் கண்டறியும் ஆய்வில் தனது நேரத்தைப்  பயன்படுத்தினார். அப்போது, பல மில்லியன் மக்களின் உயிர்களைப் பறித்த ’விப்ரியோ காலரா’  என்ற நுண்ணுயிரியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் உலகம் தடுமாறிக் கொண்டிருந்தது.  அப்போதுதான் காலராவுக்கெதிரான  தடுப்பு மருந்தினை தனது ஆய்வகத்தில் உருவாக்கியிருந்தார் வால்டெமர்.

      அந்த தடுப்பு மருந்தினை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பதற்கான ’களம்’ அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், இந்தியா சென்று அவரது தடுப்பு மருந்தினை சோதனை செய்து கொள்ளும் வாய்ப்பினை பிரிட்டிஷ் அரசு அவருக்கு வழங்கியது. 1893 ஆம் ஆண்டு காலராவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளோடு இந்தியா வந்து இறங்கினார் வால்டெமர். அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தங்கி, கொள்ளை நோய்களுக்கான ஆராய்ச்சிகளை இரவு பகல் பாராமல் தொடர்ந்து மேற்கொண்டார். 

     காலராவுக்கு எதிராக, தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தினை முதலில் தனக்கு செலுத்திப் பார்த்தார். அதன்பிறகு பொதுமக்களிடம் இந்த மருந்தை சோதனை செய்து பார்க்க தயாராய் இருந்தார்.  அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முதலில் அனுமதி மறுத்தது. பிறகு பைகுல்லா  சிறைச்சாலையில் , தன்னார்வத்துடன் வருகின்ற கைதிகளிடம் மட்டும் இந்த மருந்தினை பரிசோதனை செய்து கொள்ள, ஆங்கிலேய அரசு அனுமதி வழங்கியது. மிகக் குறைந்த அளவிலான பாக்டீரியங்களை  உடலில் செலுத்தி,  அதன் மூலமாக நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்குள் உருவாக்கும் முறைப்படி (Inoculation) , சோதனைகள் தொடங்கின.

    200 நபர்கள் கொண்ட குழு ஒன்று, ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் 116 நபர்களுக்கு காலரா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. காலரா நோய் தொற்றிலிருந்து அந்த 116 பேரும் பிழைத்துக் கொண்டனர் மீதமுள்ள 84 நபர்களில் ஒன்பது பேர் இறந்து போயினர். தனது பரிசோதனை முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காலரா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வால்டெமர் விரும்பினார்.

       தேவையற்ற பயத்தில் மூழ்கிக் கிடந்த  ஆங்கிலேய அதிகாரிகளும், குறிப்பிட்ட அளவிலான பொது மக்களும் ’தடுப்பு மருந்திற்கு’ எதிராக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதத் தொடங்கினர். கடவுளின் கோபத்தால் வருகின்ற இந்த நோய்க்கு மருந்து தேவையில்லை. மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களுக்கு பலி கொடுத்து அவற்றை சாந்தப்படுத்துவதன் மூலம் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தினை பழமைவாத இந்துக்கள் முன்வைத்தனர். 

          இவற்றையும் மீறி தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முன்வரும் தொழிலாளர்களுக்கு  சின்ன  பொருளாதார பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளும் அந்த நேரத்திலிருந்து ஏறக்குறைய 24 மணி நேரம் ஏற்படும் மயக்கநிலை தொழிலாளர்களின் வேலையைப் பாதித்தது. அதனால் ஏற்படும் ஓரிருநாள் ஊதிய இழப்பைக் கருத்தில் கொண்டு,  தடுப்பு மருந்தினை ஏற்றுக்கொள்ள அவர்களும் முன்வரவில்லை.

         இவை எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பு மருந்தினை பரவலாகப் பயன்படுத்த தேவைப்படும் நிதியை ஆங்கில அரசாங்கம் தர மறுத்து இழுத்தடித்தது. மறுப்பு சொல்லாமல் காலம் கடத்தி பிரச்சனையை பெரிதாகியது. ஆனால்,  எந்தச் சூழ்நிலையிலும் டாக்டர் வால்டெமர் மனம் தளரவில்லை. தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி காலராவுக்கான  தடுப்பு மருந்தை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்தத் தடுப்பு மருந்து 100% வெற்றியைத் தராவிட்டாலும் பாதிப்பினை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் குறைத்தது. காலரா கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வரத் தொடங்கியது.
   
    காலராவில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அறிவியல் முயற்சிகளில் மிகவும் முக்கியமானது ஓ.ஆர்.எஸ். பவுடர் (ORS Powder).. ’ஹேமேந்திர நாத் சட்டர்ஜி’ என்ற இந்திய அறிவியல் அறிஞர், 1953ஆம் ஆண்டு இந்த மருந்தினைக் கண்டுபிடித்தார். உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுப்பதற்காக இந்த மருந்து வெகுவாகப் பயன்பட்டது. ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் சோடியம் குளோரைடு, 25 கிராம் குளுக்கோஸ் இதில் சேர்க்கப்படுகிறது. இந்த பவுடர் உடலில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்டி, உடலை தாக்குப்பிடிக்கச்  செய்கிறது. நோயுற்ற காலத்தில் கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொல்லிகளை விட, இந்த நீர்ச்சத்தினை உடலுக்கு ஏற்றுவது மிகவும் முக்கியமாக இருந்தது.

  தற்போது காலரா நோயைக் கண்டறிய இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. 
         1. இருள் தள நுண்ணோக்கி சோதனை அல்லது பாலிமரேஸ் மலச்
             சோதனை
        2. காலரா கட்டில் சோதனை -  பிரத்தியோகமான வடிவில்
       உருவாக்கப்பட்டிருக்கும் கட்டிலில் ஓட்டை ஒன்று இருக்கும் அதன் வழியாக வெளியேறும் மலம் ஒரு வாளியில் சேகரிக்கப்படுகிறது.  இதன்மூலம், வெளியேற்றப்படும் மலத்தின் கன அளவும் ஈடு கட்ட வேண்டிய நீர்ச்சத்தின் அளவும்  கணிக்கப்பட்டு, அதற்குரிய  மருத்துவம் செய்யப்படுகிறது.

      விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த நூற்றாண்டில்,  தற்போது காலராவுக்கு எதிராக இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
   1.Dukoral
   2.ShanChol.
         இவற்றை எடுத்துக் கொண்டாலும் பொதுவான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் மட்டுமே காலராவை விரட்ட முடியும்.
     
                    ஏனெனில் கடந்த 2016 - 2020 ஆண்டுகளில்,  தென் அமெரிக்கா மற்றும் ஏமன் நாடுகளில் காலரா தொற்று மீண்டும் வெடித்து.  சில ஆயிரம் மனித உயிர்களை பலி கொண்டது. எனவே, முழுமையான
 பாதுகாப்பைப் பெற  சுத்தமான நீரைக் குடிப்பதும் சுத்தமான நீரால் கரங்களை அடிக்கடி தூய்மை செய்வதும், உணவினைச்  சமைத்து பாதுகாப்பாக வைத்திருப்பதும் தான்,  காலரா வராமல் தடுப்பதற்கான முக்கிய வழி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

          
             இந்தியாவில் மட்டும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய காலரா நோய் , சில வரலாற்றுச்  செய்திகளை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. ஒன்று, மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்த நோய்க்கு இட்ட பெயர் 'ஏசியாட்டிக் காலரா'.  ஏனெனில் இது இந்தியாவில் இருந்து கிளம்பிய நோய் தொற்றாம். உண்மையில் இந்த நோய்த்தொற்று எவ்வாறு கிளம்பியது தெரியுமா? ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்த வியாபார கப்பல்கள் தனது கழிவுகளை எல்லாம் இங்கே வந்து கொட்டின. அத்தகைய கழிவுகளால் மாசுபட்ட நீரின் மூலமாகவே விப்ரியோ காலரே என்ற பாக்டீரியா மனிதனுக்குள் நுழைந்து மாபெரும் கொள்ளை நோயாக மாறியது. 
                  அநத நேரத்திலும்,  கப்பல்  பணியாளர்களோடு  ஐரோப்பியக் கப்பல்கள் உலகெங்கும் காலனி ஆதிக்க நாடுகளுக்குள் பறந்து சென்றன. அவர்களுக்கு வியாபாரமும் பணமும் தான் முக்கியமாக இருந்தது. கப்பல் பயணத்தின்போது பணியாளர்களை நோய் தாக்கி விட்டால் அந்தக் கப்பலில் மஞ்சள் கொடியை (Yellow Quarantine Flag)  ஏற்றுவார்கள். அத்தகைய கப்பல்கள் துறைமுகத்தில் சில காலம் தனித்து இருக்கவேண்டும் ஆனால் அதில் வந்த ஐரோப்பியர்கள் மட்டும் சுதந்திரமாக நகரங்களுக்குள் நுழைய அனுமதி இருந்தது. தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்ற விதியை தொடர்ந்து மீறிய ஐரோப்பியர்களால் தான் காலரா நோய் உலகெங்கும் கொள்ளை நோயாக மாறியது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தில் தான் அவர்கள் இந்த நோய்க்கு 'ஏசியாட்டிக் காலரா ' (Asiatic cholera) என பெயர் கொடுத்தார்கள். பெரும்பாலான நேரங்களில் ஆதிக்கமும் பணபலமும் மிக்கவர்களால் தான் நாம் படிக்கும்  வரலாறு உருவாகி வந்திருக்கிறது. அப்படி என்றால் உண்மை வரலாறு?  அது எப்போதும் மறைந்தே கிடைக்கிறது.

                இரண்டாவது,  வியாபாரத் தளமாகவும் வரிவசூல் செய்யும் இடமாகவும் இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் மீது உண்மையான அக்கறை காட்டவில்லை. ஆனால் ரஷ்யாவில் பிறந்த யூத மருத்துவர் மனமுவந்து உதவினார். சாதி மதம் இனம் போன்ற வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து , அவர்களைக்  காப்பாற்ற முழு அர்ப்பணிப்போடு செயல்பட்ட  மருத்துவர்கள் பட்டியலில் வால்டமெர் ஹாஃப்கைன் மறக்க முடியாதவர்.  தடுப்பு மருந்துகளை பரவலாகக் கொண்டு செல்வதற்காக, தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தவர். ஆனால் அவருக்குள்ளும் இன உணர்வு மேலோங்கியே  கிடந்தது.  தனது வாழ்வின் கடைசிக்  காலங்களை யூத இனத்தின் முன்னேற்றத்திற்காக  செலவு செய்தார். அதற்காக ஏராளமான நிதி உதவியையும் செய்தார். 

              அவரது வாழ்க்கை வரலாற்றை  எழுதிய பதிப்பகம் ,  ’எந்த நாட்டைச் சேர்ந்தவர் என தங்களைக்  குறிப்பிட வேண்டும்’  என  அவரிடம்  கேட்டது. அதற்கு அவர் சொன்னார், 
            ” நான் ரஷ்யனும் அல்ல, பிரெஞ்சுக்காரனும் அல்ல;  என்னை ஒரு யூதன் என்றே அழையுங்கள். வேண்டுமானால் இஸ்ரேலியன் என்றோ, ஹீப்ரு மொழி பேசுபவன் என்றோ சொல்லிக் கொள்ளுங்கள்” .
       
         'மனிதகுலக் காப்பாளர்' என்ற பட்டத்திற்கு உரிய வரலாற்று மனிதரிடம் இருந்து வந்த வார்த்தைகள் இவை என்பதால் இச்சொற்கள் சிந்தனைக்கு உரியவை ஆகின்றன. சக மனிதனின் மீதான அன்பிற்கும், இன உணர்வுக்கும்  இடையிலான இடைவெளி என்பது  மெல்லிய கோடா அல்லது மலை அளவு உயர்ந்து நிற்கும்  மதிலா அல்லது  முற்றிலும் தொடர்பற்ற இரு பண்புகளா?


(தொடரும்....)
                         


           

No comments:

Post a Comment