Sunday, May 19, 2019

குருதி வாய்க்கால்


அழித்தல்- பார்த்தல் - வேண்டல்!

          (1)
சூடான குருதியில் - சுடு
காடாக ஆனது - ஓர்
இனம் வசித்த வனம்.

பாராத முகத்துடன் - பார்
தேராது சுழன்றிட - நல்
மனம் அழுதிட்ட தினம்.

ஆறாத ரணத்துடன் - ஆழி
தாளாது துடித்திட - ஊழி
உயிர் குடித்திட்ட துயர்.

நந்திக் காதிடையே
எந்தை ஈசனைப்
பார்ப்பது போலே,
நந்திக் கடல் வழியே
நடந்தவை யாவும்
பார்த்துத்தான்
கிடந்தோம்.
சாபம் அன்றி
வரம் ஏதும்
வாய்க்கவில்லை!

மாய்ந்த உறவுகள் மேல்
காய்ந்த சுள்ளியிட்டு - நீர்
தோய்ந்த விழிகளுடன்
ஓய்ந்து கொள்ளியிட,

யாருமற்றுப் போனது
முள்ளிவாய்க்கால்!   

அவ்விடம்
வாய்க்கரிசி இடவில்லை -
சடலங்களை
சடங்குகள் தொடவில்லை.

             (2)
மண்ணுக்காய் மரித்தவர்கள்
மண்ணிலே புதைந்துவிட
கண்ணிருந்தும் குருடர்களாய் - இங்கே
எண்ணிறந்த நடைபிணங்கள்.

தாவி வந்து
உதவவில்லை,
தள்ளி நின்றும்
உதவியில்லை!
ஆவி போகுமட்டும்
பாவிகளாய்ச்  சிலர்!

பாவனை உறக்கம் - பின்
ஆலாபனை இசைக்கும்
வீணர்களாய்ப்  பலர்!


நெடு மரம்
வளர் கன்று
குறுஞ் செடி
தளிர் கொடி
முளை விதை
கரு விதை
என
யாவும்
ஆதிக்கத் திமிரில்
இனவாத நெருப்பில்
பொசுக்கப்பட்டன.

வதைத்தும் மீந்தவை
வதை முகாம்களின்
தனலில்
நீந்தவிடப் பட்டன.

நித்திய உறக்கத்தில்
சத்தியத்தைத் தவறவிடுகிறது
சர்வதேச சமூகம்..

           (3)

பிதாவே,
தாங்கள் செய்வது
இன்னதென்று
அறிந்தே செய்ததால்,
இவர்களை
ஒருபோதும்
மன்னிக்காதீர்!

மூன்றிலோ,
முப்பதிலோ,
முந்நூறிலோ...
நியாயத்தின் பொருட்டு
சிலுவை சுமந்திருப்பதால்
உயிர்த்தெழுதல்
நிச்சயம் உண்டு!

சுதந்திரக் கிளிகளே,
இலவு பழுக்காமல் போகலாம்,
இலந்தை நிச்சயம் பழுக்கும்.!




No comments:

Post a Comment