Sunday, June 14, 2020

மணவை முஸ்தஃபா



அறிவியல் தமிழின் தந்தை – மணவை முஸ்தஃபா

ஜூன் 15.. இன்று!


                 ஆறாம் விரல் கொண்டு, நான்காம் தமிழை நானிலம் அறியச் செய்தவர்; கலைச்சொல் அகராதிகளை சீரிளமைத் தமிழுக்குச் சீரெனத் தந்து அழகு பார்த்தவர்;  மேற்திசை ஓங்கிய கலைக் களஞ்சியங்களை - காலம் கரைக்காத கன்னித் தமிழின் மகுடத்தில், மணியெனப் பொருத்தி அணி செய்தவர்; செம்மாந்த தமிழ் மொழியே, ’செம்மொழித் தகுதிக்கு’  முதன்மையானது என்பதை,  சாகும் வரைக்கும் சுவாசமாகக் கொண்டவர்;  பிற மொழிச் சார்பின்றி தனித்தியங்கும் வல்லமை, தன்னேரிலாத தமிழுக்கு உண்டு என்பதை உறுதி செய்யவே எண்பத்து இரண்டு ஆண்டுகள் இயங்கிக் கிடந்தது அவர் இதயம். ஆம், தமிழால் செய்யப்பட்டது அவரது இதயமும், உயிரும்.
              தன் ஆயுள் முழுக்க, அறிவியல் தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்த மணவை முஸ்தஃபா, இருபதாம் நூற்றாண்டின் முதன்மை அறிஞர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பணிகள் பெரிதும் பேசப்பட்டன. அதன் பயனே - மணப்பாறை என்றால் மாடும் முறுக்கும் கேட்போர்  மனதில் எழுவது போல, கற்றறிந்தார் உள்ளங்களில் மணவை முஸ்தஃபா என்ற பெயரும் கல்வெட்டானது. மணவை நகரில், நண்பர்களோடு இணைந்து ‘மணவைத் தமிழ் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து நடத்தினார். இன்றளவும் அந்த அமைப்பு, தமிழ்ப் பணியைத்  தொடர்ந்து செய்து வருகிறது.  அதே போல, அவர் உருவாக்கிய ‘அறிவியல் தமிழ் மன்றம்’ –  அவரது புதல்வர் மருத்துவர்.செம்மல் அவர்களால், இன்றளவும் செழுமையாய்ச் செயல்பட்டு வருகிறது.
          1935 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி மீராசா ராவுத்தரின் மகனாகப் பிறந்தார் முஸ்தஃபா. திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து என்ற சிறிய கிராமம் தான் இவரது சொந்த ஊர். தந்தை மீராசா ராவுத்தரின் சர்க்கஸ் பார்க்கும் ஆர்வத்தால், பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த செல்வம் கரையத் தொடங்கியது. கடன் கொடுத்தவர்கள் மீதமிருந்த சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ள- தனம் நிறைந்திருந்த குடும்பம்  தவிப்பிற்குள்ளானது. மனம் கலங்கிக் கிடந்த மீராசா ராவுத்தர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் சொந்த ஊரை விட்டு விலக விரும்பினார். பிலாத்தினை இவர்கள் கை கழுவினர். சிலுவைகள் உடைந்தன; சிகரங்கள் நெருங்கின.  தந்தையின் விரல் பிடித்துக் கொண்டே,  இளம் முஸ்தஃபாவின் பிஞ்சுப் பாதங்கள் மணப்பாறை மண்ணில் அடியெடுத்து வைத்தன.  அப்போது அவருக்கு வயது ஐந்து.           
                       இளம் பருவம் வறுமையிற் கடந்தாலும் – முஸ்தஃபாவிடம்  செம்மையும் அறிவும் செழித்து வளர்ந்தன. விடுமுறை நாள்களில் கடலை மிட்டாய் விற்பனைக்கும் போனார் முஸ்தஃபா. ஆனால் எல்லா நேரங்களிலும் அறிவுப் பசிக்கும் ஆற்றுதல் செய்தார். பள்ளிப் படிப்போடு சேர்ந்து, எழுத்து, பேச்சு, இலக்கிய ஆர்வம் என எல்லா   தளங்களிலும் சிறப்போடு இயங்கினார். அறிவின் உலகத்தில் தன்னை வலுவாக ஊன்றிக் கொண்டார். செழிப்பும் சிறப்பும் உயர்ந்து வளர்ந்தது.  அதற்குப் பேருதவி புரிந்த மணவை நகரையே தனது பெயரின் முன்னொட்டு ஆக்கினார். முஸ்தஃபா என்ற பெயர் மணவை முஸ்தஃபா என்றானது.
                     அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான், இவரது கல்லூரிப் படிப்பு தொடங்கியது. இவருக்கு தமிழாசானாக அமைந்தவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரானார் அவர்கள். இந்தத் தமிழ் விதைக்கு சரியான நிலம் கிடைத்தது. கல்லூரிக் காலம் முழுதும் தமிழ்ச் சாறு பருகி, தமிழுக்காகவே வளர்ந்தார். ஒருமுறை,  மாணவர்கள் – ஆசிரியர்கள் பட்டிமன்றத்தில் இவர் தலைமையிலான மாணவர் அணி வெற்றி பெற்றது. அதில் இவர் எடுத்து வைத்த வாதம், ஆசிரியர்கள் உள்ளங்களையும் வெற்றி கொண்டது. தெ.பொ. மீ அவர்கள், மணவை முஸ்தஃபாவிற்கு ’நச்சினார்க்கினியர்’ என்ற பட்டத்தினை புனைப் பெயராக வழங்கினார். முஸ்தஃபாவும் சில காலம் அந்தப் பெயரிலேயே இயங்கினார். பிறகு ஒருநாள், ”இனி, நச்சினார்க்கினியர் என்ற புனைப்பெயர் வேண்டாம், முஸ்தஃபா என்ற பெயரே இருக்கட்டும்” என பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்கள் கேட்டுக் கொள்ள, மணவை முஸ்தஃபா என்ற பெயர் மீண்டும் வந்தது.  
                  கல்லூரிப் படிப்பு வெற்றிகரமாய் நிறைவடைந்தது. இவரது திறமைக்கு உடனடிப் பலனும் கிடைத்தது.  சேலம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கான நியமன ஆணை கிடைக்கப் பெற்றார். பணி நியமன ஆணையை தனது குருநாதர் தெ.பொ.மீ அவர்களிடம் காட்டி, வாழ்த்துப் பெறச் சென்றார் முஸ்தஃபா. குருவும் மனம் நெகிழ்ந்து வாழ்த்தினார். கூடவே, கல்லூரியில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ‘பயிற்சி மொழி கருத்தரங்கில்’ கலந்து கொள்ளுமாறும் பணித்தார். முஸ்தஃபாவும் அந்தக் கருத்தரங்கத்திற்குச் சென்றார்.  விதியின் விளையாட்டு அங்குதான் வீரியம் கொண்டது.           
                  தமிழ்நாட்டில் ஆங்கிலமே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும்; ஏனெனில் அறிவியல் கலைச் சொற்கள் யாவும் இங்கே ஒலிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. தமிழில் அவற்றுக்குப் பொருத்தமான கலைச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. எனவே , அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் படிப்பதே உகந்தது. தமிழில் படித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல , உலகில் எங்குமே வேலை வாய்ப்ப்ய் கிடைக்காது என ஒரு பேராசிரியர் வீர ஆவேசமாகப் பேசி, பலத்த கர ஒலிக்கு மத்தியில் பெருமிதத்தோடு இருக்கையில் அமர – மனம் தாளாமல் கடுங் கோபத்தோடு இருக்கையை விட்டு எழுந்தார் மணவை முஸ்தஃபா.
              மேடையேறிய முஸ்தஃபா அவர்கள், கருத்தரங்கப்  பேராசிரியர்களின் பேச்சை மறித்துவிட்டு, ஒலி பெருக்கியின் முன்னால் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசத் தொடங்கினார். ’எந்தத் துறையானாலும் அதனை தாய்மொழியாம் தமிழிலேயே கற்பிக்க முடியும். எப்படிப்பட்ட அறிவியல் கலைச் சொல்லையும் சொற்செட்டு, பொருட்செறிவு மற்றும் இலக்கிய நயத்தோடு தமிழிலேயே சொல்ல முடியும். தமிழில் அதனைக் கற்க முடியாது என்று சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை, ஆனால், அறிவியல் துறையை தமிழிலேயே கற்க முடியும், கற்பிக்க முடியும் என்று சொல்ல - தமிழில் கற்று, தமிழில் சிந்தித்து தமிழோடு வாழும்  எங்களுக்கு முழு உரிமையும் உண்டு. அதனை வெறும் மேடைச் சொற்களால் அல்ல, எனது வாழ்வின் செயலால் நிரூபிப்பேன்’ என்று கூறிய முஸ்தஃபா அவர்கள், தனது கையிலிருந்த – கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான பணி நியமன ஆணையை மேடையிலேயே கிழித்தெறிந்தார். ‘இனி எனது வாழ்நாளை அறிவியல் தமிழுக்காகவே அர்ப்பணம் செய்வேன்.” என்று சொல்லி, ‘கருத்தரங்கம் நிறைவு பெற்றது, அனைவரும் செல்லலாம்’ என்று சத்தமாகக் கூறி மேடையை விட்டு கீழே இறங்கினார். அந்த நொடியே, தமிழன்னை அவரை உயரே தூக்கி நிறுத்தினாள். கருத்தரங்கப் பார்வையாளர்கள் கண்ணிமைக்க மறந்தனர்.
         வியப்பின் உச்சத்தில், கலக்கத்தின் தவிப்பில் இருந்த குருநாதர் தெ.பொ.மீ அவர்களை , சமாதானம் செய்தார் மணவை முஸ்தஃபா. அறிவியல் தமிழை எங்கிருந்து தொடங்குவது என்று சிந்திக்கத் தொடங்கினார். அறிவியலுக்கான கலைச் சொற்களை உருவாக்குவதே முதன்மையான பணி என்பதை உணர்ந்து கொண்டார். அதற்கென உழைக்கத் தொடங்கினார்.  
        சென்னை வானொலி நிலைய இயக்குநர் திரு.ஹக்கிம் மற்றும் சாகித்திய அகாடமி தென்னகச் செயலாளர் திரு ஜார்ஜ் ஆகிய இருவரின் உதவியால், தென்னாட்டு மொழிகள் புத்தக நிறுவனத்தில் பகுதி நேரப் பதிப்பாளராக பணியில் சேர்ந்தார். ஆறு அறிவியல் நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணி அப்போதுதான் தொடங்கியிருந்தது. மணவை முஸ்தஃபாவின் கடும் உழைப்பு அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது.  அதன் தலைவர் முனைவர் இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் விருப்பப்படி, முழுநேரப் பதிப்பாளராக பணிசெய்யத் தொடங்கினார். பிறகு ‘புத்தக நண்பன்’ என்னும் மாத இதழுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
           “Law For Lay-man” என்னும் புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் போது, தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை திரு கோவிந்தராஜுலு என்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறுகிறார். சட்டம் படித்திருந்தால் மட்டுமே, சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பது எளிமையாக இருக்கும் என்று முன்னாள்  சட்டத்துறை இயக்குநராகப் பனியாற்றிய கொவிந்தராஜுலு சொன்னவுடன் மாலை நேர சட்டக் கல்லூரியில் சேர்ந்தார் முஸ்தஃபா. மூன்று ஆண்டுகளில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். பின்னாளில் கெளரவ மாகாண மாஜிஸ்டிரேட் பதவியையும்(J.P.) மூன்று ஆண்டுகள் வகிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 
             1988 ஆம் ஆண்டு, இவர் மேற்கொண்ட மலேசியப் பயணம் மிகவும் முக்கியமானது. டத்தோ சாமிவேலு அவர்களின் கோரிக்கையை ஏற்று, மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பை ஏற்றார் முஸ்தஃபா. இவர் போலவே சட்டம் படித்திருந்த இரா.நடராசனுடன் இணைந்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மலேசியாவின் அரசியல் சட்டம் தமிழிலும் உருவாக்கப்பட்டது. இங்கே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நீதியரசர் மகாராசன் மற்றும் திரு மா.சண்முக சுப்பிரமணியன் ஆகிய இருவர் தலைமையிலும் தனித்தனியாக தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆனால்,  பரஸ்பரம் கண்டறியப்பட்ட குறைகள் மற்றும்   அரசியல் காரணங்களால் அவை நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
           ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமாக இருந்த யுனெஸ்கோ அமைப்பு, அப்போது மாத இதழ் ஒன்றை வெளியிட்டு வந்தது.  உலகம் முழுவதும் 44 மொழிகளில் வெளியிடப்பட்ட ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக யாரை நியமிக்கலாம் என்னும் பேச்சு எழுந்தது.  குருநாதர் தெ.பொ.மீ மற்றும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் இருவர் மனதிலும் மணவை முஸ்தஃபாவின் பெயரே தோன்றியது. கலை, இலக்கியம் , அறிவியல் மற்றும் பண்பாட்டு இதழான யுனெஸ்கோ கூரியர் இதழின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் மணவை முஸ்தஃபா. இதழ் வெளியிடுவது நின்று போகும் காலம் வரையிலும், சுமார் 35 ஆண்டுகள் அந்த மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இதழின் விற்பனை,  ஆசிய மொழிகளில் முதலாவதாகவும், உலக அளவில் நான்காவது இடத்திலும் இருந்தது.
       ஏனைய மொழிகள், கலைச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து இதழினை வெளியிட, முஸ்தஃபா அவர்கள் கலைச் சொற்களை தமிழில் உருவாக்கினார். ஒவ்வொரு மாத இதழிலும் சுமார் இருபது புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்புக் கூட்டத்தில், மணவை முஸ்தஃபா சிறப்பிக்கப்பட்டார். இந்தியாவின் தென் பகுதியில் இருக்கும் சிறிய நகரமான மணவையில் இருந்து புறப்பட்ட முஸ்தஃபாவின் பயணம், ஐ.நா.சபையில் சிறப்பு பெற்றதோடு நிறைவடையவில்லை.
              மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என பல்வேறு தலைப்புகளில் எட்டு கலைச் சொல் அகராதிகளை உருவாக்கி, அவற்றைப் பதிப்பித்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக் களஞ்சியத்தை  தமிழில் வெளியிட விகடன் இதழ் முடிவு செய்த போது, அந்தக் குழுவுக்கு தலைமைப் பொறுப்பாசிரியராக இருந்து வழிநடத்தினார்.  தமிழ் நாடு பாட நூல் கழகத்திற்கு, ‘அறிவியல் தமிழ்’ என்னும் நூல் வரிசையை உருவாக்கிக் கொடுத்தார். இவர் உருவாக்கிய சிறுவர்களுக்கான கலைக் களஞ்சிய நூல் வரிசை மிக முக்கியமானது.
              கலைமாமணி விருது, திரு.வி.க. விருது என இவர் பெற்ற விருதுகள் ஏராளம். தமிழின் பெருமையையும், செழுமையையும் உலகெங்கும் பரப்பியதற்காக, காஞ்சி சங்கர மடம் இவரை அழைத்து, சிறப்பு செய்து பாராட்டியது. 1996ஆம் ஆண்டு, ’மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்’  நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசினைப் பெற்றார். அதே ஆண்டு வெளிவந்த ‘இசுலாமும் சமய இலக்கியமும்’ என்னும் நூலும் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்றது. மொத்தத்தில் 31 நூல்கள், 10 மொழிபெயர்ப்பு நூல்கள், 3 தொகுப்பு நூல்கள் என தமிழுக்கு இவரது பங்களிப்பு -  காலம் கடந்து நிற்கும். தமிழைப் போலவே, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் இவருக்கு நல்ல மொழிப் புலமை இருந்ததும் இங்கே  கவனிக்கத்தக்கது. அவரது வாழ்நாள் உழைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து நூல்களும்,  தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 
         1968-சென்னை, 1982 – மதுரை, 1987- மலேசியா என உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்களில் எல்லாம் இவரது பங்களிப்பும் இருந்தது.     அகில இந்திய வானொலியில் ஏறக்குறைய 40ஆண்டுகள் தமிழ் சார்ந்த உரைகள் ஆற்றியிருக்கிறார்.  Rare Personality Of India என்னும் தலைப்பில் இவரைப் பற்றிய காணொலிப் படம் ஒன்று, நடுவண் அரசால் தயாரிக்கப்பட்டு, ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
               
       வாழ்வின் கடைசிக் காலங்களில் பர்க்கின்சன் நோயால் துன்பப்பட்ட வேலையிலும் தமிழ்ப் பணியை விரும்பிச் செய்தார். 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி மண்ணுலகை நீங்கினார்.  ஆனால் அவர் உருவாக்கிய கலைச் சொற்கள் பெரும்பாலானவை இன்று புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. கணினியிலும் அலைபேசியிலும் இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கலைச் சொற்கள், மணவை முஸ்தஃபா அவர்கள் உருவாக்கியதே. அந்தச் சொற்களின் வழியே, அவரது பெயரும் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குத் தொண்டு செய்பவனுக்கு மரணம் என்பது கிடையாதல்லவா?
        அறிவியல் தமிழில் மட்டுமல்ல, இல்லத்திலும் தூய தமிழ்ச் சொற்களே புழங்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். தனது பிள்ளைகளுக்கு அண்ணல், செம்மல், தேன்மொழி என அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார் மணவை முஸ்தஃபா. தொன்மை மிகு தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பெரு முயற்சி எடுத்தார். அப்போதைய நடுவண் அரசு, செம்மொழி தகுதிக்கான கால வரம்பை 1000ஆண்டுகள் என்று முதலில் அறிவித்தது. மணவை முஸ்தஃபா உள்ளிட்ட பெருமக்களின் கடும் முயற்சியால் அதற்கான வரம்பு 1500 ஆண்டுகள் என்று மாற்றியமைக்கப்பட்டது. தமிழ் மொழி செம்மொழி என்றும் அறிவிக்கப்பட்டது.
         மணவை முஸ்தஃபா இதன் பொருட்டு மகிழ்ந்தாலும், உண்மையில் மன நிறைவு அடையவில்லை. ஏனெனில் தமிழுக்கான செம்மொழித் தகுதி, பண்பாடு மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, குறைவான நிதியே மொழியின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது. மாறாக, தமிழை செம்மொழித் தகுதியுடன் கல்வித்துறையின் பட்டியலில் சேர்க்கும்போதுதான், உரிய அங்கீகாரம் கிடைக்கும், போதுமான நிதி வசதியும் வாய்க்கும் என்பதை உணர்ந்த முஸ்தஃபா, அந்நாளில் மத்திய அரசில் அங்கம் வகித்த,  தமிழக  கட்சிகளிடம் வலியுறுத்தினார். கல்விப் பட்டியலில் செம்மொழித் தகுதியுடன் தமிழ் இணைக்கப்படும் என்று  நம்பினார். அவர் வாழ்நாளில் நிறைவேறாத அந்தக் கனவு, இன்னும் கனவாகவே நீடிப்பதுதான் தாள இயலாத துன்பம்.
          புதுப் புனல் சேர்த்து - துள்ளலுடன் நகர்ந்து கொண்டே இருக்கும் வற்றாத  நதி போல, நம் தமிழ் மொழியும் இளமை மாறாது, வளமை குன்றாது நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமானால் – புதிய புதிய கலைச்சொற்கள் மொழியில் கலந்து கொண்டே இருக்க வேண்டும்; பிற நாட்டு நல்லறிஞர் நூல்களெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திட வேண்டும்; அறிவியல் வளர வளர - தமிழ் மொழியின் அகராதியும் அதற்கொப்ப வளர்தல் வேண்டும் என்றெல்லாம் எண்ணி – அதன்பொருட்டு தமிழுக்குத்  தன்னையே ஒப்புக் கொடுத்த மணவை முஸ்தஃபாவின் செம்மொழிக் கனவு என்று நிறைவேறும்? 
           அரசியல் வேறுபாடுகள் அழித்து – மதத்தின் பூசல்கள் மறந்து -  சாதியின் விலங்குகள் துறந்து – மொழியின் பெயரால் தமிழன் எப்போது ஒன்றுபடுகிறானோ -  அன்று தான், காலத்தால் முற்பட்ட நம்  செம்மாந்த தமிழ் மொழி, அண்ணாந்து பார்க்கும் உயரத்தை எட்டும்; அப்போது உண்மையான செம்மொழித் தகுதியையும் அது அடையும். அந்த நாள் கைகூடும் போது, மணவை முஸ்தஃபாவை தமிழும் தரணியும் நிச்சயம்  நினைவு கொள்ளும்.
       ஆனால், தமிழ் மொழி என்னும் ஒரே குடையின் கீழ் நாம் ஒன்றுபடும் காலம் எப்போது வரும்?
   

          
        
       
        

3 comments:

  1. மணவை முஸ்தபா அவர்களுடன் ஓரிரு முறை பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா..
      அவர் உருவாக்கிய நூல்கள் வைத்திருக்கிறேன்;எட்டி நின்று அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், உரையாடும் வாய்ப்பு வாய்க்கவே இல்லை.

      Delete
  2. ஐயா, ஐயாவின் நினைவு நாள் அடுத்த வாரம் வருகிறது. ஐயாவிற்கு இணைய வழியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த முயற்சி செய்து வருகிறேன். உங்களால ஐயாவைப் பற்றியும் அவரின் பணிகள், ஆக்கங்கள் பற்றியும் பேச இயலுமா?

    ReplyDelete