Monday, June 24, 2019

கவிஞர் ஜீவபாரதிக்கு வாழ்த்துகள்!


கவிஞர் ஜீவபாரதிக்கு வாழ்த்துகள்!    



                     சமூகத்தின் கண்ணாடியாகச் செயல்படும் கட்டுரை, நாவல், சிறுகதை, கவிதை என்ற வகையிலான  படைப்பு நூல்களும், உள்ளூர் கண்களுக்கு உலகப் பார்வையை வழங்கி, மொழிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு நூல்களும் சேர்ந்தது தான், ஒரு மொழியின்  இலக்கிய உலகம்.  அதே வேளையில், இவற்றை பல்வேறு தலைப்புகளில் பகுத்து,   ஆளுமைகளின் பணிகளை கால வரிசைப்படி தொகுத்து -உருவாக்கப்படும் தொகுப்பு நூல்கள்,  மொழிக்கும், மொழி சார்ந்த சமூகத்திற்கும் கிடைத்த வரங்கள். ஏனெனில், முறையாக உருவாக்கப்பட்ட தொகுப்பு நூல்கள், எதிர்கால ஆய்வறிஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக அமைகின்றன. அவை குறிப்பிட்ட ஒரு பரப்பின் மீது ஒட்டுமொத்த பார்வையை வழங்குகின்றன. மொத்தத்தில், மொழியின் பாய்ச்சலுக்கும், சமூக முன்னெடுப்புக்கும் தொகுப்பு நூல்கள் அவசியமான ஒன்றாக இருக்கின்றன.  
   பழந்தமிழ் இலக்கியங்களில் பல நூல்கள், தொகுப்பு நூல்கள் தான் என்பதையும்  நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.    உருத்திர சன்மன் இல்லையென்றால் அகநானூறு வடிவம் பெற்றிருக்காது.  பூரிக்கோ  இல்லையென்றால், இன்றுள்ள வடிவத்தில் குறுந்தொகை வாய்த்திருக்காது. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார், நல்லந்துவனார் என சங்க இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் பெயர் பட்டியல் போலவே,  பெயர் தெரியாத தொகுப்பாளர்களின் தொகுப்பு நூல்களும் தமிழில் நிறைய உண்டு.

                      மேற்குல நாடுகளிலும் ஆங்கில மொழியிலும் உள்ள  தொகுப்பாசிரியர்களுக்கு, உரிய - உயர்ந்த இடம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்ப் பொதுவெளியில், தொகுப்பு நூல்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. தொகுப்பாசிரியர்களும் உரிய வகையில் அங்கீகரிக்கப்படுவதில்லை.   தொகுப்பு நூல்களை உருவாக்குபவர்களும் மிக முக்கியமான படைப்பாளிகளே. மொழிக்கும் , சமூகத்திற்கும் அவர்களின் பங்களிப்பு எந்த வகையிலும் எதற்கும், யாருக்கும்  குறைந்ததல்ல.
                     தொகுக்கும் பணியைச் செய்பவர்கள் பெரும்பாலும் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கிடப்பதில்லை. அதனை அவர்கள் உணர்வுப் பெருக்கில் செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன். காலம் தனக்கிட்ட கட்டளை இது என எண்ணி உழைக்கிறார்கள்.  அதனை தவம் போலச் செய்து, தன்னுள்ளம் நிறைகிறார்கள். அவர்களது பணியைப் பாராட்டுவதும், படைப்பைப் பயன்படுத்துக் கொள்வதும் மொழிக்குச் செய்தாக வேண்டிய கடமை என்பதை, நாம் தான்  உணர வேண்டும்.
               கடந்த வாரம்,  சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில், 2019ஆம் ஆண்டுக்கான,  வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் – கவிஞர் ஜீவபாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.  அன்பும் எளிமையும் நிறைந்த அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 
            அவரது பெயரைக் கேட்ட உடனேயே, அவர் தொகுத்தளித்திருக்கும் நூல்கள் தான், எப்போதும் என் நினைவுக்கு வருகின்றன.  இதுவரை, கவிஞர் ஜீவபாரதி வெளியிட்டுள்ள 103 நூல்களுள், 57 நூல்கள் தொகுப்பு நூல்கள்.   வாழ்நாள் சாதனையாளர் விருது பற்றிய செய்தி அறிந்தவுடனேயே, அவர் தொகுத்துத் தந்திருக்கும் நூல்கள் தான் என் மனக் கண்ணில் வந்து நின்றன.  
                    பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டையார், கவிஞர்கள் நெஞ்சில் மக்கள் கவிஞர், காலமறிந்து கூவிய சேவல், பட்டுக்கோட்டையார் பாடல்கள் என்பன   பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பற்றி இவர் தொகுத்திருக்கும் நூல்களில் சில.
                    புதுமைப்பென்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள், ஜீவாவின் பார்வையில் அறிஞர்களும் கவிஞர்களும் ,   ஜீவா பார்வையில் பாரதி,  ஜீவா பார்வையில் கலை இலக்கியம், சட்டப்பேரவையில் ஜீவாவின் உரைகள் என தோழர் ஜீவாவைப் பற்றிய தொகுப்பு நூல்கள் பல.
     சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர், தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர், தேவரின் கட்டுரைகள், மேடை முழக்கங்கள், பசும்பொன் தேவரும் கம்யூனிசமும், தேவர் பற்றிய சதி வழக்கு என முத்துராமலிங்கத் தேவர் பற்றி இவர் தொகுத்தளித்திருக்கும் நூல்கள் யாவும் காலப் பொக்கிஷங்கள்.
                    சட்டப்பேரவையில் எம்.கல்யாண சுந்தரம், சட்ட மன்ற மேலவையில்  ப. மாணிக்கம், குமாரமங்கலம் – தியாக தீபங்கள், எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, தோழர் நல்லக்கன்ணுவின் கட்டுரைத் தொகுப்பு,  உலகப்பன் காலமும் கவிதையும் – இப்படி பல்வேறு ஆளுமைகளின் சிந்தனைகளை தெளிவாகத் தொகுத்து தந்திருப்பவர்தான் கவிஞர் ஜீவபாரதி.
                       இவரது நூறாவது புத்தகமாக வெளிவந்த , ’கண்ணோட்டம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல், அரிய பல வரலாற்று  நிகழ்வுகளைக் கொண்டிருப்பதாகவும், அதனை தான் விரும்பி வாசித்து வருவதாகவும்  தோழர் நல்லக்கண்ணு  கூறிய வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன. 
                   கவிஞர் ஜீவபாரதி தொகுபாசிரியர் மட்டுமல்ல. மிகச் சிறந்த படைப்பாளியும் ஆவார். இவரது “வேலுநாச்சியார்“ என்ற வரலாற்றுப் புதினம் தமிழ் உலகில் பல்வேறு விவாத அலைகளை உருவாக்கி நிற்கிறது. மேலும்,  லெனின், கேப்டன் லெட்சுமி, கல்பனா சாவ்லா பொன்றோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
               மாணவர்களுக்காக இவர் எழுதிய, 15 விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வினை, பயணக் கட்டுரை வடிவில்  சொல்லும் , ’பொன்விழாச் சுற்றுலா’  என்னும் நூல், பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்.  இவை தவிர  , இவரது கவிதைகள் யாவும் , ’ஜீவபாரதி கவிதைகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
                   ஜீவாவின் மீதும், பாரதியின் மீதும் கொண்ட காதலால், ராமமூர்த்தி என்ற தனது இயற்பெயரை , ஜீவபாரதி என மாற்றிக் கொண்ட இவர் , ஜனசக்தி நாளிதழின் கட்டுரைப் பகுதியின் ஆசிரியராக சில காலம் பணியாற்றி உள்ளார்.
                  நேர்மையும், கூர்மையும் நிறைந்த பத்திரிக்கையாளர்  சின்னக்குத்தூசி  அவர்களின் பெயரிலான, வாழ்நாள் சாதனையாளர்   நினைவு விருதினைப் பெற கவிஞர் ஜீவபாரதி முற்றிலும்  பொருத்தமானவர்.
                      விருது விழா நிறைவு பெற்று, ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  கவிஞர் ஜீவபாரதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி, விழாவினைச் சிறப்பித்தவர் கவிஞர் வைரமுத்து அவர்கள்.  அங்கு அவர் ஆற்றிய உரையின் காணொளியை இணையத்தில் கண்டேன். சின்னக் குத்தூசி பற்றிய தனது பார்வையை, அரிய தகவல்களை மேடையில் பகிர்ந்து கொண்டார். வழக்கம் போல சிறப்பான உரை.
              ஆனால், ஒரு நெருடல். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவரைப் பற்றி, கவிஞர் வைரமுத்து எந்த ஒரு சொல்லும் சொல்லவில்லை. அவரது படைப்புகளைப் பற்றி எக்கருத்தும் இயம்பவில்லை. ஆச்சரியமாக இருந்தது.    உரைவீச்சின் ஓட்டத்திலோ அல்லது நேரம் கருதியோ இவை விடுபட்டிருக்கலாம். அல்லது இணையத்தில் உள்ள காணொளி ’எடிட்’ செய்யப்பட்டிருக்குமா என்றும் எனக்குத் தெரியவில்லை. எப்படியிருப்பினும், மூத்த கவிஞர் என்ற முறையில், விழா மேடையில் விருது பெறுபவரைப் பற்றி நிச்சயம் அவர் பேசியிருக்க வேண்டும்.                     
                தொகுப்பு நூல்கள் எழுதுவது என்பது அத்தனை சுலபமல்ல. இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும், நிகழ்வோடு தொடர்புடைய களங்களுக்குச் செல்ல வேண்டும், தொடர்புடைய நபர்களை தேடிப் பிடிக்க வேண்டும், ஆவணக் காப்பகங்களில் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும். அத்தகைய நூல்கள் தான், காலம் கடந்து நிற்கும்.   இத்தனை சிரத்தையுடன்,  தொகுக்கும்  பணியைச் செய்து கொண்டிருப்பவர்கள், தமிழில் வெகு  சிலரே இருக்கிறார்கள்.  அந்த மிகச்  சிலருள் கவிஞர் ஜீவபாரதியும் ஒருவர்.