பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்
நூல் அறிமுகம்.
மாயனூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விடுதியின்
மொட்டை மாடியில், யாருமற்ற பின்னிரவுப்
பொழுதுகளில் தொடங்கும் பேச்சு, விடிகாலை வரை நீண்டு செல்லும். நானும், சின்னையனும் சலிக்காமல் பேசிக் கொண்டே இருப்போம்.
எங்களுக்குப் போட்டியாக, விடுதியைச் சுற்றி
இருந்த ஆலைகள், இரவு முழுவதும் சத்தத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும். எங்களின் பேசு
பொருள் எதுவாக இருந்தாலும், பாரதியின் கவிதைகளே பேச்சினை முன்னெடுக்கும்; பிரச்சனையைத்
தீர்த்து வைக்கும். பாரதியின் கவிதை வரிகளைச் சொல்லிச் சொல்லியே இரவினைக் கடத்துவோம்.
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் கூட, இந்த ஜகத்தினையே அழித்திடச் சொன்ன பாரதியே,
அப்போதும் எங்களின் உள்ளம் கவர் நாயகனாக இருந்தார்.
எனது நண்பன் சின்னையன், பாரதியின் கவிதைகளைப்
போலவே, அவரது மீசையையும் ரசிக்கக் கூடியவனாக இருந்தான். பதினெட்டு, பத்தொன்பது வயதுகளில் இருந்த எங்களில், சின்னையனுக்கு மட்டுமே
பாரதியைப் போல முரட்டு மீசை இருந்தது. அதனைத் தனது விரல்களால், அவன் அடிக்கடி நீவி விட்டுக்
கொள்வான்.
பயிற்சி நிறுவனத்தில் இருந்த விரிவுரையாளர்
ஒருவர், என்னை அழைத்து, ‘இது படிக்கக் கூடிய இடம், இப்படியெல்லாம் மீசையை வைத்துக்
கொள்ளக் கூடாது, நாளை வரும் போது, அவன் கட்டாயம் மீசையை எடுத்திருக்க வேண்டும்’ என்று
காட்டமாகச் சொன்னார். ’என்னிடம் ஏன் இதைச் சொல்றீங்க சார், அவனிடமே சொல்லலாமே’ என்று
பதில் மொழி சொன்னேன். ‘கேள்வி கேட்காதய்யா, நான் சொன்னதை மட்டும் அவனிடம் சொல்’ என்று
மெல்லிய புன்னகையுடன் பதில் அளித்தார். இந்தத்
தகவலை நான் சின்னையனிடம் சொன்னேன். ‘பாரதி மீசையை எடுக்க முடியாதுடா…, அவரு நேரா சொல்லும்
போது, பார்த்துக்கலாம்’ என்று கம்பீரமாகச் சொல்லி விட்டான். இரண்டு ஆண்டு காலத்தில், அந்த விரிவுரையாளர் அவனிடம் இது பற்றி நேரே சொல்லவும் இல்லை; அவன் மீசையை எடுக்கவும்
இல்லை.
இருபதாம் நூற்றாண்டில், ’பாரதியின் மீசை’
என்பது ஒர் அடையாளம். அது கம்பீரத்தின் சின்னம். மீசை இல்லாத பாரதி, என் மனக்கண்ணில் கூட வர மறுக்கிறான். ஆனால், பிரெஞ்சு அரசின் ஆளுகைக்குக் கீழ் இருந்த புதுச்சேரியில், பாரதியார் தங்கியிருந்த போது, ஒரு பதினைந்து நாள்கள்
தாடி, மீசையை மழித்துக் கொண்டு, மாறுவேடத்தில் தமிழகம் உட்பட சில இடங்களுக்கு வந்து
போயிருக்கிறார். மனைவி செல்லம்மா மற்றும் நண்பர்கள்
பலர், அவரைக் காணாது தவித்திருக்கின்றனர். ரகசியப் பயணம் முடிந்த பின்னர், பாரதியார் மீண்டும் புதுச்சேரி திரும்பிய நாளில், உடன் பழகிய
நபர்களாலேயே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீசையில்லாத பாரதியை யாருக்குத்தான் தெரியும்? ’மீசையும் தாடியும் இல்லாமல் வந்திருந்த பாரதியை எனக்கு, சுத்தமாக அடையாளம் தெரியவில்லை’,
என்கிறார் யதுகிரி அம்மாள். ’மாறுவேடத்தில் பயணித்த போது, ரயிலில் ஒரு பிச்சைக்காரப் பெண் ஹிந்துஸ்தானி பாடல் ஒன்றைப் பாடினார். அதே தாளத்தில் நான் ஒரு பாடல் பாடுகிறேன் கேள்..’ என்று மீசையில்லாத பாரதி பாடத் தொடங்குகிறார்.
‘ பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு’.
தனது கம்பீரமான குரலால் பாரதி பாடும் போது, அனைவரும் சமாதானமாகி விடுகிறார்கள்.
‘ பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு’.
தனது கம்பீரமான குரலால் பாரதி பாடும் போது, அனைவரும் சமாதானமாகி விடுகிறார்கள்.
1912 முதல் 1918 வரை, புதுச்சேரியில்
பாரதியின் மகள் போல் (அபிமான புத்திரி) இருந்தவர் தான் யதுகிரி அம்மாள். இவர், பாரதியின் நண்பரும், இந்தியா பத்திரிக்கையின்
முதலாளியுமான மாண்டயம் ஸ்ரீ ஸ்ரீநிவாசனின் மூத்த மகள். அப்போது
தனது பதின்ம வயதுகளில் இருந்த யதுகிரி அம்மாள், பாரதியாரோடு தனக்கு இருந்த நினைவுகளை,
ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில்
(1938-1939) கட்டுரைகளாக எழுதியிருந்தார்.
அவற்றின் தொகுப்பு தான் ‘பாரதி நினைவுகள்’ என்னும் இந்தப் புத்தகம்.
யதுகிரி அம்மாளின் மீது, பாரதிக்கு மிகுந்த
பிரியம் இருந்தது. அவரைத் தனது மூத்த மகளாகவே எண்ணினார். தனது கவிதைகளைப் பாடச் சொல்லிக்
கேட்பது, எழுதிய கவிதையின் மூலப்பிரதியை யதுகிரிக்குக் கொடுத்துவிடுவது, உலக வழக்கங்கள்,
வேதங்கள், அரசியல் பற்றி உரையாடுவது என, யதுகிரியின்
மீது, பாரதிக்கு உயர்ந்த அன்பு இருந்தது. அச்சாகி வரும் நூலின் முதல் பிரதியில், “செளபாக்கியவதி யதுகிரி தேவிக்கு அன்புடன் கொடுத்தேன் - சி.சுப்பிரமணிய பாரதியார்” என்று எழுதிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பாரதியார்.
பாரதி வீட்டில் இல்லாத நேரங்களில், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு உற்ற தோழி போலவும் யதுகிரி இருந்திருக்கிறார். பாரதியோடு ஏற்படும் கருத்து மோதல்களை, யதுகிரியிடம் பேசிப்பேசியே மன ஆறுதல் அடைவார் செல்லம்மாள். வயது வேறுபாடு இருந்தாலும், செல்லம்மாளின் உற்ற தோழியாக இருந்தார் யதுகிரி அம்மாள்.
பாரதி வீட்டில் இல்லாத நேரங்களில், பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு உற்ற தோழி போலவும் யதுகிரி இருந்திருக்கிறார். பாரதியோடு ஏற்படும் கருத்து மோதல்களை, யதுகிரியிடம் பேசிப்பேசியே மன ஆறுதல் அடைவார் செல்லம்மாள். வயது வேறுபாடு இருந்தாலும், செல்லம்மாளின் உற்ற தோழியாக இருந்தார் யதுகிரி அம்மாள்.
’இந்தியா’ பத்திரிக்கையில் அரசுக்கு எதிராக,
கடுமையான கட்டுரைகளையும், கருத்துப் படங்களையும் வெளியிட்டதால்,இவரைக் கைது செய்ய ஆங்கில
அரசு முடிவு செய்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரிலும், இதழ்களில் தொடர்ந்து
எழுதுவதற்காகவும் சென்னையிலிருந்து தப்பித்து, புதுச்சேரிக்குச் செல்கிறார் பாரதியார்.
அங்கே, வ.வே.சு ஐயர், அரவிந்தர், மாண்டயம் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் ஆகியோரோடு சுமார் பத்து
ஆண்டுகள் வாழ்கிறார். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும், கவிதைகள் பற்றியும், வேதங்கள்
பற்றியும் இவர்களோடு நாளெல்லாம் உரையாடிக் கொண்டே இருக்கிறார் பாரதியார். சிறுமியாக
இருந்த யதுகிரிக்கு, இவற்றை எல்லாம் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
நாள் தவறாமல், காலை மற்றும் மாலை வேளைகளில்,
மூன்று குடும்பத்தாரும் புதுவைக் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செய்யச் செல்கிறார்கள்.
உடன் வரும் குழந்தைகள் மணலில் விளையாட, பாரதி கவிதைகள் எழுதி பாடிக் கொண்டே இருக்கிறார்.
செம்படவர்கள் பாடும் மெட்டில் ஒரு பாட்டு, குடுகுடுப்பைக்காரன் பாடும் மெட்டில் ஒரு
பாட்டு என கவிதைகள் பிறந்தவண்ணம் இருக்கின்றன. மூத்த மகள் தங்கம்மாவுக்காக கும்மிப்
பாட்டு, இளைய மகள் சகுந்தலாவுக்காக விட்டு விடுதலை ஆகும் சிட்டுக் குருவியின் பாட்டு
என கவிதைகளாலேயே காலத்தைக் கடத்துகிறார் பாரதியார்.
ஒருமுறை
கடலுக்குச் செல்லும் போது, பாம்பாட்டி ஒருவன் மகுடி ஊதியபடியே ஏதாவது தானம் கேட்க,
தன்னிடமிருந்த காலணாவைத் தர மறுக்கிறார் யதுகிரி. ’சமுத்திர ஸ்நானம் செய்யும் போது,
கடலில் தான் இந்தக் காலணாவை எறிய வேண்டும்’ என்று சொல்லி விடுகிறார். பாரதியாரோ, தனது புத்தம்
புதிய வேட்டியை அவனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு, வெறும் துண்டைக் கட்டிக் கொண்டு
வீட்டுக்கு வந்தாராம். ’அந்தக் காலத்தில் குளங்களைத்
தூர் வாரும் போது, அந்தப் பணியாளர்களை ஊக்கப்படுத்தவே, குளிக்கும் குளத்தில் காசு போடும்
வழக்கம் இருந்தது. ஆனால், கடலில் காசு போடும் வழக்கம் முட்டாள்தனமானது. கடல் ராஜனுக்குக்
காசு போடும் மூட நம்பிக்கையை விட, இப்படிப்பட்ட
ஆள்களுக்கு உதவுவதே உண்மை மகிழ்ச்சி’ என்று சொல்லியிருக்கிரார். யதுகிரியும் தனது தவற்றினை
உணர்ந்து, இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார். வீட்டுக்கு வந்தவுடன், பாம்பாட்டி
மகுடி ஊதிய மெட்டில்,
‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்-மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்’
என்ற பாடலை எழுதிப்
பாடுகிறார் பாரதியார்.
சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு,
எழுதி அனுப்பும் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலமாகவே, அப்போது பாரதியாருக்கு வருமானம்
வந்து கொண்டிருந்தது. அவர் தொந்தரவு ஏதுமின்றி எழுதுவதற்குத் தோதாக, மைப்புட்டி, தாள்,
பென்சில் என எல்லாவற்றையும் செல்லம்மாள் பார்த்துப் பார்த்துச் செய்வாராம். ஒருநாள்
வீட்டில் அரிசி குத்தும் பெண் ஏற்படுத்தும் ஒலியால், பாரதி எழுத முடியாமல் தவிக்கிறார்.
’அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாளை வரச் சொல்கிறேன், நீங்கள் தொந்தரவின்றி எழுதுங்கள்’ என செல்லம்மாள் சொல்ல, ‘ இல்லை செல்லம்மாள்,
அவள் உலக்கை உருவாக்கும் ஹூம் ஹூம் என்னும் ஒலி, என்னை கவிதை எழுதச் சொல்கிறது. அந்த ஒலி, ’வேண்டும் , வேண்டும்’ என என்று என் காதில்
விழுகிறது’ என்கிறார் பாரதியார். கட்டுரைக்குப் பதிலாக ஒரு கவிதை எழுதுகிறார்.
‘மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்..” - என்ற அந்தப் பாடலை, யதுகிரியிடம் சத்தமாகப் பாடிக்
காட்டுகிறார்.
1916 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் புதுச்சேரியை, கடும் புயல் காற்று தாக்குகிறது. திக்குகள் எட்டும் சிதறி விழுவது போல, மழை கொட்டித் தீர்க்கிறது. பாரதியும் அவரது நண்பர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்போது, நூறு மரங்களுக்கும் குறைவாக இருந்த ஒரு தென்னந்தோப்பு அதிக சேதாரமின்றி தப்பியிருந்தது. உடனே, ’பிழைத்த தென்னந்தோப்பு’ என்ற தலைப்பில் அங்கேயே கவிதை ஒன்றைப் படைக்கிறார். அதே நாளில், ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் நிலங்கள் சமமாக பங்கிட்டுத் தரப்பட்டதாக செய்தி வருகிறது. பாரத பூமியிலும் அதனை எப்படிச் செய்வது என்று யோசனை செய்து,
‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்.’ - என பட்டியல் கவிதை ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்.
1916 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் புதுச்சேரியை, கடும் புயல் காற்று தாக்குகிறது. திக்குகள் எட்டும் சிதறி விழுவது போல, மழை கொட்டித் தீர்க்கிறது. பாரதியும் அவரது நண்பர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். அப்போது, நூறு மரங்களுக்கும் குறைவாக இருந்த ஒரு தென்னந்தோப்பு அதிக சேதாரமின்றி தப்பியிருந்தது. உடனே, ’பிழைத்த தென்னந்தோப்பு’ என்ற தலைப்பில் அங்கேயே கவிதை ஒன்றைப் படைக்கிறார். அதே நாளில், ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் நிலங்கள் சமமாக பங்கிட்டுத் தரப்பட்டதாக செய்தி வருகிறது. பாரத பூமியிலும் அதனை எப்படிச் செய்வது என்று யோசனை செய்து,
‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்.’ - என பட்டியல் கவிதை ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்.
தனது மகள்கள் தங்கம்மாள் மற்றும் சகுந்தலா இவர்களோடு
யதுகிரி அம்மாளையும் சேர்த்து வைத்துக் கொண்டு எந்த நேரமும் பாரதியார் உரையாடிக் கொண்டே
இருக்கிறார். தேவையற்ற ஆசாரங்களைத்
தூர எறிய வேண்டும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். விவாதங்களுக்குப்
பொறுமையாக பதில் சொல்கிறார். ஆங்கில மோகம் தேவையில்லை என்பதை விளக்கிக் கூறுகிறார்.
பிஜித்தீவில் தமிழர்கள் மாட்டிக் கொண்ட கதையை
யதுகிரிக்குச் சொல்லும் போது, நமது கண்களும்
கண்ணீரில் நிறைகின்றன. யதுகிரியின் வீட்டு மாடியில்தான், ’கரும்புத் தோட்டத்திலே..’
என்று தொடங்கும் பாடலை எழுதி, உரத்த குரலில் பாடிக் காட்டுகிறார். யதுகிரிக்கு கண்கள்
கலங்கி விடுகின்றன. பிறகு, பாரதியே ஆறுதலும் சொல்கின்றார்.
பால்ய
வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை கடுமையாக எதிர்க்கிறார் பாரதியார்.
யதுகிரி அம்மாளுக்கு திருமணம் நடக்கும் நாளில், புக்ககம் செல்லும் யதுகிரிக்கு அவர் சொல்லும் அறிவுரைகள், இந்தப் புத்தகத்தின் சிறப்பான
பகுதிகளில் ஒன்று எனச் சொல்லலாம்.
‘நீ இரண்டு வீட்டுக்கும் விளக்கைப் போல பிரகாசிக்க
வேண்டும். அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உன்னை அவர்கள் விலை கொடுத்து வாங்கவில்லை.
அவர்கள் வீட்டில் உனக்கு பூரண உரிமை உண்டு. பணம் காசு விஷயங்களில் தலையிடாதே. வேலை
செய்யப் பின்வாங்காதே. உன் தாய் தகப்பனார் கற்றுத் தந்த விஷயங்களை முடிந்தால் அபிவிருத்தி
செய்; முடியாவிட்டால் இருப்பதை மறக்காதே. தலை நிமிர்ந்து நட. நேர்ப்பார்வையில் பார்.
கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் மட்டுமே. தைரியமாகப் பேசு. இதனால் கற்பு
கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.’ – பாரதியின் இந்த வார்த்தைகள் தான், துன்பமான நேரங்களில் தன்னை மீட்டெடுத்ததாக யதுகிரி
அம்மாள் பெருமையோடு பதிவு செய்திருக்கிறார். யதுகிரிக்கு மட்டுமல்ல, திருமணத்திற்குத் தயாராகும்
எல்லாப் பெண்களுக்கும், எல்லாக் காலத்திற்கும் - இது பொதுவான செய்தி அல்லவா?
இரண்டாவது மகள் சகுந்தலா பிறந்த போதே
பூணூல் போடுவதை பாரதியார் நிறுத்திக் கொண்டு விட்டார். ’யாகம், யக்ஞம் செய்கிறவர்களுக்குத்தான் இது வேண்டும், எனக்கு எதற்கு’ என்று, வாத்தியாரிடமே
திருப்பிக் கொடுத்து விட்டார் என்ற குறிப்பும் இதில் வருகிறது. மடியாய் இருப்பது, தேவையற்ற
ஆசாரங்களைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களில் பாரதிக்கும் செல்லம்மாவிற்கும் இடையே நிகழ்ந்த
கருத்து மோதல்களும் இந்த நூலில் உண்டு. பாரதியார் எல்லாருடைய வீட்டிலும் சாப்பிடுவார்,
எல்லாரையும் சாப்பாட்டிற்கு அழைத்து வருவார். எந்தச் சூழலிலும், யாரிடத்திலும் பேதங்கள் பார்க்காத மேதை அவன் என்பதை
இந்த நூலும் உறுதி செய்கிறது.
யதுகிரிக்குத் திருமணம் ஆகி, மைசூர் சென்று
விடுகிறார். பிரசவ காலம் மற்றும் விசேஷ காலங்களில்
வீட்டிற்கு வரும்போது, பாரதியைத் தவறாது காண்கிறார். பாரதியின் செயல்களில் பெரிய மாறுபாடு
தோன்றி இருந்தது. ’சாகா வரம் தரும் மந்திரச் சொற்களைக் கண்டுபிடிப்பதற்காக, அடிக்கடி
மெளன விரதம் இருக்கிறார். யாரோடும் பேசுவதில்லை. இரவெல்லாம் கடற்கரையில் நின்று கொண்டு,
பராசக்தியை வேண்டிக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கே வருவதில்லை. ’எள்ளத்தனைப் பொழுதும் - பயனின்றி இராதென் நாவினிலே’ என்று பாடிய இவர், இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது’ எனப் புலம்பும்
செல்லம்மாவின் சொற்கள், நமக்கும் வலியை ஏற்படுத்துகின்றன.
பண்டாரங்கள் மற்றும் சில சாமியார்களோடு ஏற்பட்ட
தொடர்பால், போதை வஸ்துகளின் பழக்கம் பாரதிக்கு உண்டாகிறது. எலும்பும் தோலுமாய், விழிகள் மட்டும்
கூர்ந்திருக்கும் பாரதியைப் பற்றி, யதுகிரி அம்மாள் சொல்லிச் செல்லும் இடங்களைப் படிக்கையில் - மனம்
தாளாத துயரத்தில் வீழ்கிறது. பாரதி, 1918ல் சென்னை திரும்புகிறார். அதற்குள், நண்பர்களால் திருத்த
முடியாத எல்லைக்கு அவர் போய்விடுகிறார்.
ஒருமுறை, சிவந்த விழிகளுடன் புதுவைக் கடற்கரையில் இரவு முழுக்கத் தனித்து அமர்ந்திருந்த பாரதியிடம், தனது அப்பா கோபமாக ஆங்கிலத்தில் பேசியதையும் யதுகிரி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மரணத்திற்கு முந்தைய கணங்களில் கூட, செல்லம்மாளிடம் யதுகிரியைப் பற்றி நலம் விசாரித்திருக்கிறார். பாரதி எதிலும் தீவிரத்தன்மை கொண்டவன். ஆம், எதையும் செய்து பார்த்து விடும் துணிச்சல், மானுட சிந்தனைக்கும் மேற்பட்ட கற்பனை, குழந்தைத் தன்மை மாறாத மனம் – இவைதானே நமது பாரதி.
ஒருமுறை, சிவந்த விழிகளுடன் புதுவைக் கடற்கரையில் இரவு முழுக்கத் தனித்து அமர்ந்திருந்த பாரதியிடம், தனது அப்பா கோபமாக ஆங்கிலத்தில் பேசியதையும் யதுகிரி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மரணத்திற்கு முந்தைய கணங்களில் கூட, செல்லம்மாளிடம் யதுகிரியைப் பற்றி நலம் விசாரித்திருக்கிறார். பாரதி எதிலும் தீவிரத்தன்மை கொண்டவன். ஆம், எதையும் செய்து பார்த்து விடும் துணிச்சல், மானுட சிந்தனைக்கும் மேற்பட்ட கற்பனை, குழந்தைத் தன்மை மாறாத மனம் – இவைதானே நமது பாரதி.
அதிகம் படித்திராத, வீட்டிலேயே தந்தையிடம் பயின்ற
- ஒரு சிறுமியின் பார்வையில், நடந்த நிகழ்வுகள்
யாவும், 26 கட்டுரைகளாக இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசிக்கும் நாம், அவற்றை இணைத்துப் பார்க்கும் போது, பாரதி என்னும்
மகாகவியின் ஆளுமையை நமக்குள் வரைந்து கொள்ள முடியும். மேலும், பாரதியோடு நடந்த பேச்சுகள் யாவும், நூல் முழுவதும்
உரையாடல் முறையிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அவற்றை வாசிக்கும் போது, இயல்பாகவே
நாமும் அந்தச் சூழலுக்குள் நுழைந்து விடுகிறோம். வார்த்தை ஜாலங்கள் எதுவும் இன்றி,
இயல்பான சொற்களில் இருப்பதே இந்த நூலின் உயரத்தைக் கூட்டுகிறது.
இந்த நூலில் வெளிப்படும் பாரதியின் பரிமாணங்கள்
மிக முக்கியமானவை. ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, குழந்தைகளுக்கு ஓர் ஆசானாக, ஒரு நண்பனாக
– பாரதியின் அழகான உண்மை முகம், இந்த நூலில் வார்த்தைகளால் வடிக்கப்பட்டிருக்கிறது.
பாரதி பற்றி அறிய நினைப்பவர்கள் இதனை அவசியம் படிக்க வேண்டும்.
மகாகவி
பாரதியார் - வண்ண வளையல்கள் நிரப்பப்பட்ட ஒரு
கலைடாஸ்கோப். யார் வழியாக, எப்படிப் பார்த்தாலும் - வண்ணங்கள் நிரம்பிய அழகிய வடிவமாய் - அவன் உருவம் பெறுகிறான். பார்க்கும் தோறும் - புதிய பாரதி, வந்து கொண்டே இருக்கிறான்.
ஆம், நண்பர்களே, சொல்லும் பொருளும் புதிதாக்கி - சோதி மிக்க புதுக்கவிதை தந்தவனின் வாழ்வும் - எப்போதும் புதிதாகவே இருக்கிறது.
நூலின் பெயர்: பாரதி நினைவுகள்
ஆசிரியர் : யதுகிரி அம்மாள்
வெளியீடு : சந்தியா பதிப்பகம்.
ஆம், நண்பர்களே, சொல்லும் பொருளும் புதிதாக்கி - சோதி மிக்க புதுக்கவிதை தந்தவனின் வாழ்வும் - எப்போதும் புதிதாகவே இருக்கிறது.
நூலின் பெயர்: பாரதி நினைவுகள்
ஆசிரியர் : யதுகிரி அம்மாள்
வெளியீடு : சந்தியா பதிப்பகம்.
அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்பதனை தங்களது அருமையான விமர்சனம் உணர்த்துகிறது.
ReplyDeleteநன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா..
Delete