நூல் அறிமுகம் – ”சுப்பிரமணிய பாரதி - ஒரு பாட்டுக்கு ஒரு கதை.”
பூமியில் இருந்து எழுந்து, மேலே செல்லும் இலேசான காற்று, கருத்துப் பெருத்து, திரண்டு நிற்கிற மேகங்களைத் தட்டி, மழையை தருவிப்பது மாதிரி – ஒவ்வொரு விடியலின் போதும், புத்தொளி கொண்டு புதிதாய்ப் புறப்பட்டு வரும் பொன்னொளிக் கிரணங்கள் விழும் அடுத்த விநாடி, மென்மை மிகுந்த தாமரை இதழ்கள் விரிவு கொள்வது மாதிரி – எந்தச் சூழ்நிலையில் ஒரு மகாகவியின் சிந்தனைகள் கவிதைகளாக வந்து விழுகின்றன என்பதும் முக்கியமானது. அந்த ரகசியத்தை அறிந்து கொள்வது என்பது கவிதையைப் போலவே சுவையானது. அதனையும் அறிந்து கொள்ளும் போது, கவிதையின் வீரியம் இன்னும் அதிகமாகிறது; கவிதை - மனதுக்கு மேலும் நெருக்கமாகிறது.
கவிதை பாடுவோரை ஆசுகவி, சித்திரக்கவி, மதுர கவி, வித்தாரக் கவி என நான்கு வகைகளில் அடக்குவர். நினைத்த மாத்திரத்தில் , கொடுத்த பொழுதில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றவர்களை ஆசுகவி என்று அழைப்போம். இவர்கள் பாடப் பாட, நாம் தான் அவற்றை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். நினைக்கிற மாத்திரத்தில் இவர்களுக்கு சொற்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். அத்தகைய ஆசு கவிகளுள் ஒருவர் தான், நமது மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இன்பம், துன்பம் என எல்லாச் சூழ்நிலையிலும் கவிதைகள் பாடியே அவற்றை கடக்க நினைத்தவர் மகாகவி பாரதியார். அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எந்தெந்தச் சூழ்நிலையில் உருவாயின என்பதை, வ.ரா, செல்லாம்மாள் பாரதி, யதுகிரி அம்மாள், பாரதிதாசன் போன்றோர் வழியே நாம் அறிந்து வந்திருக்கிறோம். அப்படி, ஒரு 18 கவிதைகளுக்கான, பாடல் பிறந்த கதையினையும் அந்தப் பாடல்களையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள் பாரதி புத்தகாலயத்தினர். நூலின் பெயர் - ‘சுப்பிரமணிய பாரதி- ஒரு பாட்டுக்கு ஒரு கதை’. 40 பக்கங்கள் கொண்ட இந்த மிகச் சிறிய நூலினை திரு. என்.ராமகிருஷ்ணன் அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார்.
வீட்டில் அரிசியே இல்லாத சூழலில், செல்லம்மாள் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்து அரிசியைப் புடைத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது, பாரதியார் எழுதுவதில் மும்முரமாய் இருக்கிறார். இளைய மகள் சகுந்தலா விளையாடிக் கொண்டிருந்தாள். புடைத்து முடித்தவுடன், அடுப்பைப் பற்ற வைக்க, செல்லம்மாள் வீட்டிற்குள் சென்ற நொடிப் பொழுதில், சில குருவிகள் பறந்து வந்து அரிசியைக் கொத்தித் தின்ன முயன்றன. இதனை கண்ட பாரதியார் உற்சாகமானார். மகள் சகுந்தலாவும், இவருமாக கை நிிறைய அரிசியை அள்ளி அள்ளி குருவிகளுக்குத் தின்னக் கொடுத்தனர். மகள் வீசும் அரிசியும், பறந்து வந்து உண்ணும் குருவிகளும் மகாகவியின் கவி உள்ளத்தைத் திறந்து விட, மகளிடத்தில் பாட ஆரம்பிக்கிறார் பாரதி.
எட்டுத் திசையும் பறந்து திரிந்து, காற்றில் விரையும் அந்தச் சிட்டுக் குருவியைப் போல, நீயும் தளைகளை விட்டு நீங்கி – விடுதலையாகி - உயரப் பறக்க வேண்டும் என மகிழ்ந்து பாடும் போது - உருவான பாடல் தான் இது.
“விட்டு விடுதலையாகி
நிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியை போலே
எட்டுத் திசையும் பறந்து
திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு
நீந்துவை..”
அடுப்படியிலிருந்து வந்து பார்த்த செல்லம்மாள், வழக்கம் போல், அதிர்ச்சியே அடைகிறார். மதிய உணவுக்கு வைத்திருந்த அரிசியெல்லாம் சிட்டுக் குருவிகளின் பசியை மட்டுமே போக்கியிருந்தது. சமைப்பதற்கு அரிசி ஏதும் மீதமிருக்கவில்லை. நமக்கோ ‘சிட்டுக் குருவியின் விடுதலை’ என்னும் இறவாக் கவிதை கிடைத்தது.
மகள் சகுந்தலாவுக்குச் சமாதானம் சொன்ன ‘ பாப்பா பாட்டு’, திருவல்லிக் கேணி யானை தாக்கிய போது அருகிருந்த குவளைக் கண்ணன் பற்றி எழுதிய ‘எங்கிருந்தோ வந்தான்’ பாடல், காந்தியடிகள் , லாலா லஜபதி ராய் மற்றும் சகோதரி நிவேதிதை பற்றிய பாடல்கள் பிறந்த கதை, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடல் உருவான விதம் , வீட்டில் செல்லம்மாவுக்குத் துணையாக இருந்த அம்மாக் கண்ணு என்பவருக்கு எழுதிய பாடல் என சுவையான பாடல்கள், உருவான விதம் இந்நூலில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில், மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு- மூன்றாம் பரிசு பெற்ற பாடலும் கதையும் இந்த நூலில் உண்டு. மூன்றாம் பரிசு பெற்ற பாடல் என்றாலும் ’செந்தமிழ் நாடென்னும் போதினிலே..’ பாடலை தமிழ் அறிந்த யாவரும் அறியக்கூடும். ஆனால், முதலிரண்டு இடங்களைப் பிடித்த பாடல்கள் என்னவாயின என்பது பலருக்கும் தெரியவில்லை.
தனது அன்பு மனைவி செல்லம்மாள் மீது, அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் பாரதியார். அவளையே ரதியென நினைத்து, அவளிடத்தில் சரணடைந்த ஒரு பொழுதில் பாடிய பாடல் தான்,
”நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி –
செல்லம்மா
தன்னையே சகியென்று
சரணமெய்தினேன்..”
பாரதியின் மறைவுக்குப் பின் அவரது பாடல்களை வெளியிட்டவர்கள் ’செல்லம்மா’ என்பதை ’கண்ணம்மா’ என மாற்றியதோடு, ‘செல்லம்மா பாட்டு’ என்பதை ’கண்ணம்மா பாட்டு’ என்று மாற்றி விட்டதாக, நூலாசிரியர் குறிபிடுகிறார். அப்படி என்றால், ’கண்ணம்மா பாடல்கள்’ முழுவதும் தனது மனைவி செல்லம்மாவுக்காக பாரதி எழுதிய ’செல்லம்மா பாடல்கள்’ தானா எனத் தெரியவில்லை.!
இந்நூலில், பாடல் உருவான கதை தெளிவுற இல்லாத போதிலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கிறன. உதாரணத்திற்கு, ‘பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’. இதன் பிண்னணி பொத்தாம் பொதுவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் வாசிக்கும் போது களைப்பு வரவில்லை. பாரதியின் கவிதைச் சொற்களில் நாம் சிக்கிக் கொள்கிறோம். சுவையாகவே வாசிக்க முடிகிறது. இந்தச் சிறு புத்தகத்தை, நம் வீட்டுக் குழந்தைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும்.
பாரதியின் பாடல்களே சுவை மிகுந்த மலைத்தேன் என்றால், அவை உருவான கதைகளோடு, அந்தக் கவிதைகளை மறு வாசிப்பு செய்வது என்பது அமுதம் கலந்த தேனைப் புசிப்பது போலாகும் அல்லவா?
ஆம், பாரதியின் பாடல்களை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும், மனம் நிறைவு கொள்கிறது. ஏகாந்தம் வந்து உட்கார்ந்து விடுகிறது. விட்டு விடுதலையாகி அந்தச் சிட்டுக்குருவியைப் போல, காற்றில் வட்டமிடத் தோன்றுகிறது.
நூலின் பெயர்: ”சுப்பிரமணிய பாரதி – ஒரு பாட்டுக்கு
ஒரு கதை”
தொகுப்பு : என்.ரமகிருஷ்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பாரதியின் மறைவுக்குப் பின் அவரது பாடல்களை வெளியிட்டவர்கள் ’செல்லம்மா’ என்பதை ’கண்ணம்மா’ என மாற்றியதோடு, ‘செல்லம்மா பாட்டு’ என்பதை ’கண்ணம்மா பாட்டு’ என்று மாற்றி விட்டதாக, நூலாசிரியர் குறிபிடுகிறார்.
ReplyDeleteதகவல் வியப்பினை அளிக்கின்றது
ஆம் ஐயா..
Deleteஇந்தத் தகவலை பாரதி ஆய்வாளர்களுள் ஒருவரான கடற்கரய் (மத்தவிலாச அங்கதம்) சாரிடமும் உறுதி செய்து கொண்டேன்.
மிக்க நன்றியுடன்...