Friday, June 19, 2020

வாக்கியங்களின் சாலை - நூல் அறிமுகம்


வாக்கியங்களின் சாலை - எஸ்.ராமகிருஷ்ணன்.

நூல் அறிமுகம்.


                     2003 ஆம் ஆண்டின் துவக்க காலம் - ஒரு சனிக்கிழமை, பள்ளி  விடுமுறைக்கால நாளொன்றில், நானும் எனது சகோதரர்  மிகாவேலும் சேலம் நகருக்கு வந்திறங்கினோம். ஏற்காட்டில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.   எதேனும் ஒரு திரைப்படம் பார்ப்பதும், சில புத்தகங்கள் வாங்கி வருவதும் தான், எப்போதுமே எங்களது விடுமுறை நாளின் திட்டமாக இருக்கும். ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு இறங்கி வரும்போது, அரசுப் பேருந்தைத் தான் தேர்வு செய்வோம். ஏனெனில், வாந்தி வரும் உணர்வு இல்லாமல் நிம்மதியாக, நிதானமாக மலை இறங்கி வருவதற்கு அதுவே  சிறந்த தேர்வாக இருந்தது. மீண்டும் மலை ஏறுவதற்கு தனியார் பேருந்தைத் தேர்வு செய்து கொள்ளலாம், அதில் ஏதும்  பாதகமிருக்காது.
            அப்படி, சேலம் வரும்போதெல்லாம், புத்தகங்கள் வாங்குவதற்காகவே பழைய பேருந்து நிலையம் பகுதிக்குச் செல்வோம். அன்றும் சில புத்தகக் கடைகளுக்குச் சென்றோம். சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு எதிர்புறம்,   ’புக் வோல்ட்’ (Book World) என்னும் புத்தகக் கடை ஒன்று அப்போது இருந்தது. அங்குதான், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ’வாக்கியங்களின் சாலை’ என்னும் புத்தகம் எங்கள் கண்ணில் பட்டது.  புத்தக அட்டையின் கீழ்ப் பகுதியில்,  ஜப்பானியச் சாயல் கொண்ட இரண்டு பெண்கள் தலை சாய்ந்து, சோகத்துடன் நின்றிருப்பார்கள். அட்டையின் ஏனைய பகுதிகளில் மீன்கள் சித்திரம் வரையப்பட்டிருக்கும். பார்த்தவுடன் வசீகரித்தது அந்தப் புத்தகம்.  தனக்கு விருப்பமான  புத்தகங்களைப் பற்றி, குமுதம்-தீராநதி இணைய இதழில், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்  என முன்னுரை சொல்லியது. அதனையும் வாங்கிக் கொண்டோம்.
      மாலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் சென்று, ஏற்காடு செல்வதற்காக பேருந்தில்  ஏறி, வசதியாக உட்கார்ந்து கொண்டோம். வாங்கி வந்த நூல்களில்  ஒரு நூலை எடுத்து அவர் வாசிக்க, நான் ‘வாக்கியங்களின் சாலை’, புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன்.  பேருந்து கிளம்பியதும் தெரியவில்லை; கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் தெரியவில்லை. மனம் புத்தகத்திலேயே, முழுதுமாக லயித்துக் கிடந்தது.   
                    ‘புத்தகம் என்பது ஒரு பெரிய பாலைவனம்   போன்றது. நுழையும் வாசல் எளிதானது; ஆனால் வெளியேறும் வழி சாத்தியமற்றது’  என்ற அரேபியப் பழமொழியைச் சுட்டிக் காட்டி , எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்த முன்னுரையே நூலுக்குள் என்னைக் கட்டி இழுத்தது.  படிப்பறையில் எந்தவித முணுமுணுப்புமின்றி, நமக்காகக் காத்துக் கிடக்கும் புத்தகங்கள் பற்றி எழுதப்பட்ட,  ‘நானும் எனது புத்தகங்களும்’ என்ற  முதல் கட்டுரை மனதினை எதேதோ சிந்தனைக்கு இட்டுச் சென்றது.
            அவருடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான 19 நூல்களைப் பற்றிய அவரது எண்ணங்களை, இந்த நூலில் எஸ்.ரா பதிவு செய்திருந்தார். அவை யாவும்  உலகின் மிக முக்கியமான எழுத்தாளுமைகளின் சிறந்த படைப்புகள். வாழ்வில் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக, அந்தப் புத்தகங்களை எஸ்.ரா. அறிமுகப்படுத்திய விதம் பிரமாதமாக இருந்தது. கட்டுரைகளின் அமைப்பு மற்றும் நடை,  157 பக்கங்களையும் இரண்டு மணி நேரத்திற்குள் வாசிக்க வைத்தது. அவரது அனுபவங்களும், அவர் சொன்ன புத்தகங்களும் - சொற்களால் சொல்ல முடியாத ஆறுதலை மனதுக்குத் தந்தன. 
         அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர்  ஷெல்டன் பி காப் எழுதிய ’ நீ சாலையில் புத்தரைச் சந்திக்க நேர்ந்தால் கொன்று விடு’ என்ற புத்தகத்தைப் பற்றித்தான் முதல் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. செங்கோட்டை ரயில் நிலையத்தில், தனது வருகைக்காக, தானே காத்திருக்கும் தாமோதரன் என்ற மனிதரின் கதையைச் சொல்லி, அதன் வழியே இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்கிறார் எஸ்.ரா. தன்னைத் தானே தேடி அலையும் அகப் பயணம் பற்றி இந்த நூல் பேசுகிறது. இந்தக் கட்டுரையில் வரும் , ”வழிகாட்டுதல் அல்ல, வாழ்தலே மிகவும் மிக்கியமானது” என்ற வரிகளை யாரால் எளிதில் கடந்து விட முடியும்?. இப்போதும் கூட,  ரயில் நிலையங்களில் தனிமையில் நிற்கும் மனிதர்களைக் காணும் போதெல்லாம் தாமோதரனும், ஷெல்டனின் புத்தகமும் நினைவுக்கு வந்து போகின்றன. 
        இடாலோ கால்வினோவால்,  இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட ’புலப்படாத நகரங்கள்’ புத்தகம் எனக்கு அறிமுகமானது இந்தக் கட்டுரைகளின் வழியே தான். சீன அரசன் குப்ளாய் கானுக்கும், வெனிஸ் நகரப் பயணி மார்க்கோபோலோவுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம்.  பின் நவீனத்துவ நாவல் வரிசையில் இந்தப் புத்தகம் மிக முக்கியமானது என்று சொல்கிறார் எஸ்.ரா.
       ஜாக் லண்டன் எழுதிய ‘கானகத்தின் குரல்’,  ஜார்ஜ் லூயி போர்ஹே எழுதிய ’புதிர் வழி’, பால் ராப்ஸ் மற்றும் நியோஜென் எழுதிய ‘ஜென் தசைகள்-ஜென் எலும்புகள்’, ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய ‘டீமியான்’ என இவர் அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் அனைத்தும் நம்மை ஆக்கிரமிக்கின்றன.
  லூயி பிராண்டோவின் ‘எழுத்தாளனைத் தேடும் ஆறு கதாபாத்திரங்கள்’, ஆந்த்ரே தார்க்கொவெஸ்கி எழுதிய ‘காலத்தைச் செதுக்குதல்’ , மார்க்வெஸ் படைத்த சாகாவரம் பெற்ற நாவலான ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ என தனது மனதுக்கு நெருக்கமான புத்தகங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகிறார் எஸ்.ரா. 
             கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லூயி கரோல், தனது உறவுக்காரச் சிறுமிக்காக எழுதிய நாவல் தான் ‘ஆலீஸின் அற்புத உலகம்’. குழந்தைகளுக்காகவே இது எழுதப்பட்டது. ஆனாலும்,  பெரியவர்கள் இதனை வாசிக்கலாம்; அவர்களுக்கும்  ஏற்ற வகையில்   தனித்துவமான மொழியில் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
        தான் பிறந்த மருத்துவமனையைப் பார்க்க செல்லும் எஸ்.ரா. அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த இடம் தற்போது பள்ளிக்கூடமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியைத் தனது தாயிடம் வந்து பகிர்ந்து கொள்கிறார்.  இந்த அனுபவத்தின் ஊடாக, டவ்சென்லோ எழுதிய ‘வசீகரமான டெஸ்டினா’ என்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறார். வாசிப்பவர்களும் தங்களது இளமையைத் திரும்பிப் பார்க்கிறார்கள். ’பால்யத்தின் நினைவுகள் - பச்சை இலைகளைப் போல எபோதும் இளமையானது என்பது ஒரே நேரத்தில் - ஏக்கத்தையும் இன்பத்தையும் தரக் கூடியது’ என்ற உண்மையை டவ்சென்கோ வழியாக நமக்கு உணர்த்துகிறார்.
           ரில்கே எழுதிய கவிதைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் மிக அழகானது. அதில், தனது பதின்ம வயதில் சந்தித்த நிலோபர் பெர்ட்ஸியைப் பற்றிச் சொல்லும்போது,  நமது நினைவுகளும் எங்கெங்கோ செல்கின்றன. 
      காமப்புத்தகங்கள் எழுதும் கதாசிரியரைச் சந்திக்க விரும்பும் எஸ்.ரா, நண்பரின் உதவியுடன் ஒரு மனிதரைச் சந்திக்கிறார். உரையாடல் ஏதுமற்ற நீண்ட அமைதிக்குப் பிறகு, சில சொற்களை மட்டும் அந்த மனிதர் பேசுகிறார்.  லாட்ஜ் ஒன்றின் மாடியில் காமக்கதை எழுதும் அவருக்கு, ஒரு புத்தகம் எழுதிக் கொடுத்தால், இருநூறு ரூபாய் தருவார்கள் என்றும், தனது குடும்பம் தெற்கே இருப்பதாகவும் கூறுகிறார். வெளியில் முகம் காட்ட முடியாத வேலையைச் செய்து கொண்டிருக்கும் அந்தக் கதாசிரியரின் மன உலகம் எப்படி இருக்குமோ? உண்மையில் வாழ்க்கை விசித்திரமானது தான். 
  போர்னோகிராஃபி புத்தகங்களை விரும்பிப் படித்த புதுமைப்பித்தன் பற்றியும், சரோஜா தேவி புத்தகங்கள் பற்றியும் சொல்லியபடியே,   ’லோலிதா’ என்னும் முக்கியமான நாவல், இலக்கிய உலகில் அடைந்த இடத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். லோலிதா நாவலை எழுதிய விளாடிமிர் நபகோவ் பற்றிய குறிப்புகளையும் தருகிறார். 
            மதுரைப் பல்கலைக் கழக நூலகத்தில் மழை நாளொன்றில் , ’நார்னியா’ தொகுப்பினை வாசித்த அனுபவத்தைச் சொல்லும்போது, நாமும் அந்த ஈரக்காற்றின் சுகந்தத்தை அனுபவிக்கலாம்.  இப்படியாக, முக்கியமான புத்தகங்களை எஸ்.ரா அறிமுகம் செய்யும் விதம் வாசிப்பின்பத்தை அதிகமாக்கிக் கொண்டே சென்றது. லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தி’  புத்தகத்தையும் இந்தத் தொகுப்புதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.
         எல்லாக் கட்டுரைகளுமே என்  மனதுக்கு மிக நெருக்கமானவை என்றாலும், இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும் போதெல்லாம், கடைசிக் கட்டுரையைத்தான் மனம் வாசிக்க விரும்பும். ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டாவின் ‘உள்ளங்கைக் கதைகள்’ - சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் கட்டுரை அது.
     தூத்துக்குடிக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்து வந்த கல்லூரிக் கால நண்பனை, எதேச்சையாக சென்னையில் பேருந்து ஒன்றில் சந்திக்கிறார் எஸ்.ரா. தனது திருமண அழைப்பிதழைத் தந்து, அவசியம் வர வேண்டும் என்ற நண்பனின் அழைப்பைத் தட்ட இயலவில்லை.
        திருமனத்திற்கு முதல் நாள் இரவு, நண்பனின் கிராமத்திற்குச் செல்கிறார். விளக்கு வெளிச்சம் ஏதுமில்லாத அந்த மண் சாலையில் , கொத்தமல்லிச் செடி பூத்திருப்பதன் வாசம் நாசியை நிறைக்கிறது. நண்பனின் வீடு, கல்யாணக் களையில் மினுங்கிக் கொண்டிருந்தது. முதல் நாள் சடங்குகளின் இடையில் எஸ்.ராவைப் பார்க்க மணமகன் வருகிறான். அங்கிருந்த சிறிய மர அலமாரியைத் திறந்து காட்டுகிறான். அதில், அவன் வாழ்வோடு சம்பந்தமில்லாது போன ஆங்கில இலக்கியப் புத்தகங்களும், இதழ்களும் நிறைந்து கிடக்கின்றன.
         பெட்டியின் மேலாக,  மார்லோ எழுதிய ‘டாக்டர் பாஸ்டஸ்’  புத்தகம் கண்ணில் படுகிறது. கல்லூரி விடுதியில் , சாத்தானிடம் தன்னையே  விற்றுவிட்ட பாஸ்டஸ் போல, அதன் வரிகளை, பயமூட்டும் முக பாவனையுடன் நண்பன் நடித்துக் காட்டும் கல்லூரிக் கால நினைவுகள் எஸ்.ராவுக்கு வந்து போகின்றன. அந்த பெட்டிக்குள்தான், எஸ்.ராவிடம் நண்பன் படிப்பதற்காக வாங்கியிருந்த, ‘உள்ளங்கைக் கதைகள்’ நூலும் இருக்கிறது. ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவாபட்டா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் அது.  
             அந்த நூலின் சில பக்கங்களில், ஒரு சில பெண்களின் பெயர்களும் அவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகளையும் அந்த நண்பன் எழுதி வைத்திருந்தான். இருவர் கண்ணிலும்  அவை பட்டு மறைகின்றன.  சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு, முப்பது வயதில் உதட்டில் இருந்த முத்தங்கள் யாவும் உறைந்து போய், யாராவது ஒரு பெண் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் இருப்பதாக நண்பன் கூறுகிறான். யசுனாரி கவாபட்டாவைப் போல மனதுக்கு ஆறுதல் தரக் கூடிய, வேறு யாரும் தனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு, மெதுவாக நகர்ந்து போகிறான்.
       இதே கட்டுரையில் தான்,   ’தூங்கும் அழகிகள் இல்லம்’ (House Of Sleeping Beauties - Yasunari Kavabatta) என்ற நாவலைப் பற்றிய அறிமுகத்தையும் எஸ்.ரா. எழுதுகிறார்.  மிகச் சிறிய இந்த நாவலைப் படிப்பதற்குள் காய்ச்சல் கண்டு, மனம் விதும்பித் திரிந்த நாள்களை நமது கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் எஸ்.ரா. ஏதேதோ கனவுகளோடு துவங்கும் கல்லூரிக் காலம், எங்கோ ஒரு புள்ளியில் நின்று விடுகிற போது, மனம் தாளாத வேதனை கொள்கிறது. சாத்தானிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்ட டாக்டர் பாஸ்டஸ் போல, தனது ஆசைகளை, தனது விருப்பங்களை, தான் கற்ற ஆங்கில இலக்கியங்களை - என  எல்லாவற்றையும் மெளனப் பெருவெளியிடம் ஒப்படைத்துவிட்டு, கிராமத்தில் எதிர்பாராத ஒரு புதிய வாழ்வினைத் தொடங்கும் அந்த நண்பனின் பாத்திரம் என் மனத்தை விட்டு, இன்று வரை அகலவே இல்லை. 
                 ஏற்காடு சென்று இறங்குவதற்குள் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். தூத்துக்குடி அருகில் வசிக்கும் அந்த நண்பனுக்கு , எனது மனம் ஒரு உருவத்தைத் தந்திருந்தது. எனக்கு மிகவும் பழக்கமான உருவமாக அது இருந்தது. பேருந்தில் மலை ஏறி வந்தவுடன்  வழக்கமாக ஏற்படும் அலுப்பு, அன்று ஏனோ எனக்குத்  தோன்றவில்லை. மாறாக, மனம் புத்துணர்ச்சியோடு இருந்தது.  
          எதிர்பாராத நேரங்களில் மனத்துயர் ஏற்படும் போதெல்லாம் இந்தக் கட்டுரையை நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் தேவையாயிருக்கிறது. அதிலும், ஆறுதல் தருபவன், பொறாமை கொள்ளாதவனாக, முதுகுப் பக்கம் பேசாதவனாக, வஞ்சகம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அது மாதிரியான ஓர் உண்மையான  நண்பன் இருக்கிறான் என்றால், அது புத்தகங்கள் மட்டும் தான். அப்படி, நமக்கு அறிவையும் ,ஆறுதலையும் தரக்கூடிய இனிமையான புத்தகங்களைத் தான், இந்த நூல் நமக்கு  அறிமுகம் செய்கிறது.
                     நெடுங்குருதி, யாமம், சஞ்சாரம், இடக்கை போன்ற நாவல்கள், குறிப்பிடத்தக்க சிறுகதைகள், பயண அனுபவக் கட்டுரைகள் என, தமிழ் இலக்கியச் சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் பங்களிப்பு முக்கியமானது என்றாலும், உலக இலக்கியங்களைப் பற்றி, அவர் எழுதும் அறிமுகக் கட்டுரைகள் தான் வாசகர்களுக்குப் புதிய வாசலைத் திறந்து விடுகின்றன. வாசிப்பு என்னும் தீராத பயணத்திற்கு வாசகனைத் தயார் செய்கின்றன. 
          ’வாக்கியங்களின் சாலை’, என்ற இந்தப் புத்தகமும்  வாசகர்களுக்கு அப்படி ஒரு திறப்பை நிச்சயம் ஏற்படுத்தும். இந்தத் தொகுப்பை நீங்கள் படித்தால், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பீர்கள் என்பது மட்டும் உறுதி. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களைப் படிக்க விரும்பும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.!
             ஏனெனில், துன்பமும், துயரமும் எதிர்ப்படும் நேரங்களில் எல்லாம், ஒரு நல்ல வாசகன் -  ஏதோ சில வாக்கியங்களின் சாலையில் தான்  பயணித்துக் கொண்டிருக்கிறான். நித்திய இளைப்பாறுதல் அங்கே தான் கிடைக்கும் என்று, அவன் உறுதியாக நம்புகிறான். 
  
நூலின் பெயர்:       வாக்கியங்களின் சாலை
ஆசிரியர் பெயர்:  எஸ்.ராமகிருஷ்ணன்.
வெளியீடு :      அட்சரம் வெளியீடு ( பதிப்பு ஆண்டு -2002)

           
           
          


No comments:

Post a Comment