தனிமைப்படுத்திக் கொண்ட கிராமம்!
தியாகத்தின் ஞாயிறு!
காலரா மற்றும் பிளேக் நோய்களுக்கான தடுப்பு மருந்தினைக்
கண்டுபிடித்த வால்டெமர் ஹாஃப்கைன் பணிபுரிந்த ஆய்வு மையம், பிற்காலத்தில் அவரது பெயரிலேயே நிறுவப்பட்டது. மும்பையில் உள்ள ’ஹாஃப்கைன் ஆய்வு மையம்’ தற்போதும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்து, பரிசோதித்துப் பார்ப்பதற்கான ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
பாக்டீரியாக்கள் என்ற நுண்ணுயிரிகளின் வாயிலாக மனிதகுலம் கோடிக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், மனிதனுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தும் வருகின்றன. பாக்டீரியாக்கள் இந்த பூமியில் மனிதர்களை விட ’சீனியர்’ என்றே சொல்ல வேண்டும். ஆம், நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளாக பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உயிர் வாழ்ந்து வருகின்றன.
மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி இதுவரை கண்டுபிடித்துள்ள பாக்டீரியா வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? எண்ணிக்கையில் சொல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். ஏனெனில், 5 என்ற எண்ணைப் போட்டு, அதன் அருகில் 30 பூஜ்ஜியங்களைச் சேர்த்தால் என்ன மதிப்பு வருமோ, அத்தனை வகையான பாக்டீரியாக்களை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆம், இவையெல்லாம் நுண்ணோக்கிகளால் மட்டுமே சாத்தியமானது. கண்டுபிடித்த 27% பாக்டீரியங்களுக்கு மட்டுமே, விஞ்ஞானிகள் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதும் முக்கியச் செய்தி.
காச நோயை உருவாக்கும் ’மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’, நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் ’பெப்சியெல்லா நிமோனியா’, பிளேக் நோயை உருவாக்கிய ’யெர்சீனியா பெஸ்டீஸ்’, காலராவை உருவாக்கிய ’விப்ரியோ காலரே’ போன்ற முக்கியஸ்தர்கள் தான், மனித இனத்திற்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவற்றின் தீவிரத்தன்மையை மனிதன் தனது அறிவால் அடக்கி வைத்திருக்கிறான்; சில நேரங்களில் அவற்றை முற்றாக அழித்தும் இருக்கிறான்.
ஆனாலும், நாகரீக வளர்ச்சியில் புதிய புதிய பாக்டீரியங்கள் மனிதனைத் தாக்குவதற்காக கிளம்பி வருகின்றன. பாக்டீரியங்கள் மட்டுமல்ல, வைரஸ்களும் மனித இனத்தை ஆட்டிப் படைக்கின்ற மிக முக்கியமான நுண்ணுயிரிகள் தான். வைரஸ்களுக்கு எதிரான மனிதனின் போராட்டம், பாக்டீரிய நுண்ணுயிரிகளுக்கு எதிரான போராட்டத்தை விட மிகவும் கடுமையாக இருந்தது. அவை பற்றிய வரலாறு ஒரு தனிக்கதை. எப்படி இருந்தாலும், நுண்ணுயிரிகளால் உருவாகும் தொற்றுநோய்கள் மானித குலத்திற்கு கடும் சவாலையே தந்திருக்கின்றன.
ஆனாலும், நாகரீக வளர்ச்சியில் புதிய புதிய பாக்டீரியங்கள் மனிதனைத் தாக்குவதற்காக கிளம்பி வருகின்றன. பாக்டீரியங்கள் மட்டுமல்ல, வைரஸ்களும் மனித இனத்தை ஆட்டிப் படைக்கின்ற மிக முக்கியமான நுண்ணுயிரிகள் தான். வைரஸ்களுக்கு எதிரான மனிதனின் போராட்டம், பாக்டீரிய நுண்ணுயிரிகளுக்கு எதிரான போராட்டத்தை விட மிகவும் கடுமையாக இருந்தது. அவை பற்றிய வரலாறு ஒரு தனிக்கதை. எப்படி இருந்தாலும், நுண்ணுயிரிகளால் உருவாகும் தொற்றுநோய்கள் மானித குலத்திற்கு கடும் சவாலையே தந்திருக்கின்றன.
1896ஆம் ஆண்டு தீவிரமாக இருந்த பிளேக் நோயைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்குமாறு விக்டோரியா மகாராணி உத்தரவிட்டார். அதன் படி, ‘1897ஆம் ஆண்டு, ‘தொற்று நோய் தடுப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டு, இங்கிலாந்து மற்றும் அதன் காலனி ஆதிக்க நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. தொற்று நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், 144 தடை உத்தரவு போடுதல், நோய் பரப்புபவருக்கான தண்டனைகள், தொற்று நோய்க்கான மருத்துவச் சோதனைகளை யாரிடமும் நடதுவதற்கான அனுமதி,, மாநில மாவட்ட எல்லைகளை அடைத்துக் கொள்ள அனுமதி என பல்வேறு வகையான ஷரத்துகளை இந்தச் சட்டம் கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் இந்தச் சட்டத்தை எதிர்த்து, பால கங்காதரத் திலகர் போராட்டம் செய்து சிறை சென்ற சம்பவமும் நடந்தது.
எல்லாக் காலங்களிலும், சட்டங்களை விட, மாபெரும் கொள்ளை நோய்களிலிருந்து மனிதன் தப்புவதற்கு மிகவும் முக்கியமான செயல் என்னவென்றால் தனித்திருப்பதும் தனிமைப்படுத்துவதும் தான். அவ்வாறு செய்வது, வேகமாகப் பரவிவரும் கொள்ளை நோய்களின் பரவும் வேகத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது கூடவே, எண்ணற்ற உயிர்களையும் காப்பாற்றுகிறது. இதற்குச் சான்றாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தை சொல்லலாம்.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ’பிளேக் நோய்’ தனது வேலையை மீண்டும் காட்டத் தொடங்கியிருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் தொற்றுக்கிருமி, ஏதோ ஒரு வகையில் பரவிக் கொண்டே இருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த கிராமத்திற்கு தொற்றுநோய் அப்படித்தான் உள்ளே வந்தது.
இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷையர் அருகில், ஐயம் (Eyam)
என்றொரு கிராமம் இருந்தது. அங்கே, தையல்காரராகப் பணி செய்து வந்த ஜார்ஜ் விக்காஸ் என்பவருக்கு ஒரு பார்சல் வந்தது. மணப்பெண்களுக்குத் தேவையான மேலங்கியைத் தயார் செய்யும் அந்த பாரசல் துணி மூட்டை, கொஞ்சம் ஈரப்பதமாக இருந்தது. அதனை எடுத்து உலர்த்துவதற்காக ஜார்ஜ் விக்காஸ், துணிகளை விரித்து கொடியில் காய வைத்தார். அப்போது அதிலிருந்து ஏராளமான சிறு பூச்சிகள் பறந்து சென்றன. அவை வேறுயாருமல்ல. உலகம் முழுக்க பிளேக் நோயை பரப்பி வந்த தெள்ளுப் பூச்சிகள் தான்.
அந்தப் பூச்சிகளின் வழியாக ஜார்ஜ் விக்காஸ் பிளேக் நோய்க்கு ஆட்பட்டார். ப்ளேக்கால் பாதிக்கப்பட்ட 7 வது நாளிலேயே ஜார்ஜ் இறந்து போனார். அடுத்த ஓரிரு வாரங்களில், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடுத்தடுத்த தெரு மக்களுக்கும் மர்மமான முறையில் இறந்து போகத் தொடங்கினர். அதே நேரத்தில் இலண்டன் மாநகர் முழுக்க 'பிளேக்' நோய் தீவிரமாகப் பரவி வருவதை இயம் கிராம மக்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆறேழு மாதங்களில் நிறைய மக்கள் படிப்படியாக இறக்கத் தொடங்கினார்கள். 1666 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அந்த கிராமத்தில் 736 பேர் இறந்து போயிருந்தார்கள்.
அந்த சூழலில்தான், 1666 ஆம் ஆண்டு மே மாதம், அங்கு இருக்கக்கூடிய தேவாலயத்தின் பாதிரியாராக ரெக்டர். வில்லியம் மாம்பெஸான் (Rector.Rev.William Mompesson) ஊழியம் செய்ய வருகிறார். மக்கள் அனைவரும் இந்த கிராமத்தைக் காலி செய்து விட்டு, வேறு வேறு நகரங்களுக்குச் செல்வதென முடிவு செய்தார்கள். ஆனால் புதிதாக வந்த ரெக்டரின் சிந்தனை வேறுமாதிரியாக இருந்தது. மக்களை அவர் சரியான வழியில் நடத்த தொடங்கினார்.
’இங்கிருந்து கிளம்பி வேறொரு பகுதிக்கு சென்றால் அங்கு இருக்கக்கூடிய மக்களையும் இந்த நோய் தொற்றக் கூடும். அதன் காரணமாக எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்படும். நோயின் தீவிரமும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் நாம் முன்னெச்சரிக்கையுடன் நோய்த்தொற்றை குறைக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். நோய் பரவும் வேகத்தைக் குறைப்பதற்கும் நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்கும் மிகச்சிறந்த வழி ’தனித்து இருப்பதுதான்’ என்று ரெவரண்ட் வில்லியம் அறிவித்தார். அந்த இளம் பாதிரியாரின் சொற்களுக்கு, ஊரில் நல்ல மதிப்பு இருந்தது. மீதமிருந்த அனைத்து மக்களும் வில்லியம் மாம்பெஸான் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர்.
ரெக்டர் வில்லியம், தேவாலயப் பூசைகள் மற்றும் நடைமுறைகளை ஊரின் வெளிப்புறத்தில் இருந்த 'குக்லெட் டெல்ஃப்' என்ற பகுதிக்கு மாற்றினார். வீட்டில் யார் இறந்தாலும் அந்த நபர்களை அந்தக் குடும்பத்திலுள்ளவர்களே அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இயம் கிராமத்தை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது; அதேபோல நமது கிராமத்திற்குள் ஒருவரையும் அனுமதிக்கவும் கூடாது என்பன போன்ற கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஊரின் எல்லைப்பகுதியில் கற்களால் ஆன மதிற்சுவர் ஒன்று உருவாக்கப்பட்டது. கிராம மக்களுக்குத் தேவையான பொருள்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து இலவசமாகவும், குறைந்த விலைக்கும் கொடுக்கப்பட்டன. மாம்பெஸானின் கிணற்றின் சுவரில் அந்த பொருள்கள் வைக்கப்படும். அவற்றை வாங்கும் மக்கள், உரிய நாணயங்களை கிணற்றின் கைபிடிச் சுவரில் வைப்பார்கள். இவர்கள் கொடுக்கும் பணம் வினிகர் ஊற்றிக் கழுவிய பிறகு எடுத்துக் கொள்ளப்படும். இப்படி, கிராம மக்கள் அனைவரும் சுய கட்டுப்பாட்டினை தீவிரமாகவும் அமைதியான முறையிலும் பின்பற்றி வந்தார்கள்.
ஒரு சில குடும்பங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்தன. குடும்பத்திலுள்ளவர்களே இறுதிக் காரியங்களைச் செய்தனர். எலிசபெத் என்ற பெண்மணியின் வீட்டில் ஆறு குழந்தைகளும் அவரது கணவரும் தொடர்ச்சியாக இறந்து போயினர். அந்த நேரத்தில் திருமதி எலிசபெத் எல்லாச் சடங்குகளையும் தானே செய்து முடித்தார். கிராம மக்கள் தானாக முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட ’சுய தனிமைப்படுத்துதல்’ ஏறக்குறைய ஒரு ஆண்டு நீடித்தது. இறுதியில் அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பெற்றது. தனிமைப் படுத்திக் கொண்டு இருந்த நாட்களில் மொத்தம் 273 பேர் மரணத்தை தழுவியதாக, ’தேவாலயப் பதிவேடு’ கூறுகிறது. ஏனைய மக்கள் உயிர் பிழைத்துக் கொண்டனர்.
இந்த கிராமத்து மக்களின் மூலமாக, வேறொரு கிராமத்திற்கு, வேறு ஒரு மனிதருக்கு தொற்றுநோய் கடத்தப்படவே இல்லை என்பது தான் மிகவும் முக்கியமான செய்தி. பிளேக் நோய்க்கு எதிராக அவர்கள் காட்டிய தைரியம், வரலாற்றில் நிலைபெற்றது.
கிராமமே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்ட காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தானாக முன் வந்து உதவி செய்தார் ரெக்டர்.வில்லியம் அவர்களின் மனைவி கேத்தரின். இதன் காரணமாக, அவருக்கும் நோய்த் தொற்று ஏற்படுகிறது. 1666 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கேத்தரின் இறந்துபோகிறார். அந்தச் சூழ்நிலையிலும் கிராம மக்களுக்கு உறுதுணையாக, தனது பணியைத் தொடர்ந்தார் இளம் ரெக்டர்.வில்லியம். கேத்தரின் இறந்த போன ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக - தியாகத்தின் திருநாளாக மாறிப்போனது.
தீவிரமாகப் பரவும் தன்மை கொண்ட பிளேக் போன்ற ஒரு தொற்று நோயை, சுய தனிமைப்படுத்துதல் (Self Quarantine) என்ற தாரக மந்திரத்தின் மூலம் - வெற்றி கண்ட இயம் கிராமத்து மக்களின் தியாகம் - இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம்- கடைசி ஞாயிறு அன்று, ஊரின் மையத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து ஊர்வலம் ஒன்று புறப்படும். தியாகம் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே நகர்ந்து செல்லும் அந்த ஊர்வலம், குக்லெட் டெல்ஃப் பகுதியை வந்து அடையும்.
அங்கே, தனிமைப்படுத்திக் கொண்ட காலத்தில், இறந்து போன 273 பேர், பிழைத்துக் கொண்ட 183 பேர் மற்றும் கிராம மக்களை துணிச்சலுடன் வழிநடத்திய ரெக்டர். ரெவரண்ட் வில்லியம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறும் திருப்பலி நிறைவேற்றப்படும். அந்த கிராமத்திலிருந்து நோய் தீவிரமாகப் பரவி விடாமல், தங்களை எல்லாம் காப்பாற்றிய அந்த தியாகப் பெருமக்களுக்கு நன்றி சொல்வதற்காக ஐரோப்பா முழுமையில் இருந்தும் பல்வேறு மக்கள் இந்த நிகழ்வுக்கு வருவார்கள். டெல்ஃப் பகுதியில் உள்ள பழமையான கல்லறைகள், கிணற்று மேடு போன்ற இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகு செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறு, 'பிளேக் ஞாயிறு' என்று குறிப்பிடப்படுகிறது. அதனை பிளேக் ஞாயிறு என்று சொல்வதைவிட ’தியாகத்தின் ஞாயிறு’ என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்குமல்லவா?
வரலாறு என்பது நமது ஆசான். வரலாற்றுப் பக்கங்களின் ஒவ்வொரு வரியும், மானுட சமூகம் எதிர் காலத்தைக் கடந்து செல்வதற்கான ’ஊன்றுகோல்’ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் உள்ள மிகச்சிறிய ’இயம்’ கிராமத்து மக்கள், தங்களது தியாகத்தின் மூலம் ஒரு கருத்தை வலிமையாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அது என்னவென்றால், தொற்று நோய்களின் சமூகப் பரவலைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த உபாயம் - ’சுய கட்டுப்பாட்டுடன் நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்ளுதல்.’ (Self Quarantine).
தனிமைப் படுத்திக் கொள்வதும் தனித்து இருப்பதும் நிச்சயம் கடினமான செயல் தான். ஆனால் பிளேக், கரோனா போன்ற பெரிய தொற்று நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மிகச் சிறந்த மருந்தும் அதுதான். தனிமைப்படுத்திக் கொள்ளும் காலங்களில் பயனுள்ள வேலைகளைச் செய்யவும், நமது வாழ்வின் லட்சியங்களை சீர்திருத்திக் கொள்ளவும், எதிர்காலப் பாதையை திட்டமிடவும் பயன்படுத்திக்கொண்டால் - சிறைகள் கூட சிறகுகளாய் மாறிவிடும்.
***********************
(பாக்டீரியங்களால் உருவாகும் கொள்ளை நோய்கள் பற்றிய அறிமுகப் பகுதி நிறைவு பெறுகிறது)
(மானுடம் வெல்லும் - முதல் பகுதி நிறைவு )
நன்றி
ReplyDeleteInformative
ReplyDelete1666 ஆம் ஆண்டிலேயே தனித்திருந்து வென்றிருக்கின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது ஐயா
ReplyDeleteஏதோ இப்பொழுதுதான் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.
மேலும் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட பாக்டீரியா வகைகளின் எண்ணிக்கை பெருவியப்பை ஏற்படுத்துகிறது ஐயா
சிறந்த கட்டுரையினை வழங்கியமைக்கு நன்றி